Published:Updated:

சீட்டுக் கட்டி பணம் சேர்ப்பது... யாருக்கு லாபம், யாருக்கு நஷ்டம்?

சீட்டுத் திட்டம்
பிரீமியம் ஸ்டோரி
சீட்டுத் திட்டம்

சீட்டுத் திட்டம்

சீட்டுக் கட்டி பணம் சேர்ப்பது... யாருக்கு லாபம், யாருக்கு நஷ்டம்?

சீட்டுத் திட்டம்

Published:Updated:
சீட்டுத் திட்டம்
பிரீமியம் ஸ்டோரி
சீட்டுத் திட்டம்

சீட்டுக் கட்டி பணம் சேர்ப்பது நம்மில் பெரும்பாலானவர்களின் சேமிப்பு முறையாக இருக்கிறது. சீட்டுக் கட்டுவது உண்மையில் லாபம் தரும் சேமிப்பு முறையா, ஒரு சீட்டுத் திட்டத்தில் சேரும்போது நாம் எதையெல்லாம் கவனிக்க வேண்டும் என அகில இந்தியா சீட்டு சங்கத்தின் பொதுச் செயலாளர் அ.சிற்றரசுவிடம் கேட்டோம்.

சீட்டுத் திட்டம் என்பது..?

‘‘சீட்டுத் திட்டம் என்பது குறிப்பிட்ட தொகையை, குறிப்பிட்ட இடைவெளியில் கட்டி, அந்தப் பணத்தை மொத்தமாகப் பெறுவதே. நினைத்த நேரத்துக்கு நம்மால் பணம் எடுத்து, கடன் வாங்காமல் நம்மைத் தற்காத்துக்கொள்ள முடியும். மத்திய அரசு சீட்டு நிறுவனங்களுக்கான ‘சிட் ஃபண்ட் ஆக்ட் 1982’ என்கிற சட்டத்தை நிறுவியுள்ளது. இந்தச் சட்டத்தை மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களில் நடைமுறைப்படுத்துகின்றன. ‘சிட் ஃபண்ட்ஸ் ஆக்ட் 1982’ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் மட்டுமே பணம் செலுத்துவது சீட்டுத் திட்டமாகும்.

சீட்டுக் கட்டி பணம் சேர்ப்பது...
யாருக்கு லாபம், யாருக்கு நஷ்டம்?

நகைச் சீட்டுத் திட்டங்கள்....

பொதுவாக, நகைக் கடைகளில் நடத்தப்படும் சீட்டு, தீபாவளிச் சீட்டு, குலுக்கல் சீட்டு, எனப் பல வகையான சீட்டுகள் நடைமுறையில் உள்ளன. ஆனால், இவற்றை சீட்டுத் திட்டம் என்று குறிப்பிடுவது தவறு. இந்த வகையான சீட்டுகள் எந்த விதிமுறைகளும் இல்லாமல், நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே நடத்தப்படுகிறது. இந்தச் சீட்டுத் திட்டத்தில் சேரும்முன் கவனமாக இருக்க வேண்டும்.

நகைக்கடைகளில் நடத்தப்படும் நகைச் சீட்டுத் திட்டத்தின் மூலம் செய்கூலி, சேதாரம் இல்லாமல் நகை வாங்கலாம். அல்லது முதல் சீட்டுக்கான தொகையை நகைக்கடை நிறுவனங்களே கட்டும் எனப் பல சலுகைகள் இருக்கிறது. ஆபரணங்கள் வாங்க வேண்டிய தேவை இருப்பவர்கள் அந்தக் கடையின் தங்கத்தின் தூய்மைத் தன்மையைச் சோதித்தும், நகைக்கடை எத்தனை ஆண்டுகளாகச் செயல் படுகிறது என்பதைத் தெரிந்துகொண்டும் நகைச்சீட்டுத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறுவது நல்லது.

ஏமாற்றத்தைத் தவிர்க்க...

சீட்டுத் திட்டத்தில் ஏமாறாமல் இருக்க ‘சிட் ஃபண்ட்ஸ் ஆக்ட் 1982’-ன்படி செயல்படும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் சேர வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட சீட்டு நிறுவனம் ஒன்று, ஒரு குறிப்பிட்ட தொகைக்குப் புதிய சீட்டுத் திட்டத்தைத் தொடங்க முடிவு செய்துவிட்டால், அந்தச் சீட்டு மூலம் ஒரு மாதம் பெறப்படும் மொத்தத் தொகையை வங்கியில் டெபாசிட் செய்து அதற்கான ஆவணத்தைச் சீட்டு நடத்தும் பகுதியில் உள்ள மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். அதன்பிறகு, மாவட்ட பதிவாளர் அலுவலகத்திலிருந்து சீட்டுக்கான எண், உறுப்பினர்களுக்கான எண் தருவார்கள். இந்த விவரங்களை சீட்டு நடத்தும் நிறுவனம் சீட்டுத் திட்டத்தில் சேர்பவர்களுக்குத் தரும் பில்லில் கட்டாயம் குறிப்பிட வேண்டும். சீட்டு நிறுவனம் சீட்டு சம்பந்தமான ஒவ்வொரு தகவலையும் மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

சீட்டுத் திட்டத்தின் ஆரம்பக் காலத்திலேயே தனக்கு அந்த மாதத்தின் சீட்டு வேண்டும் என்று சொல்லி பணம் எடுப்பவர்கள், அடுத்தடுத்த மாதங்களில் பணம் கட்டுவதை உறுதி செய்வதற்காக, அந்தப் பணத்துக்குத் தகுந்த சொத்து மதிப்பு ஆவணங்களை சீட்டு நிறுவனங் கள் வாங்கி வைத்துக்கொள்வது வழக்கம். அதனால் உங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும்.

நீங்கள் ஒரு சீட்டுத் திட்டத்தில் சேர்ந்து உங்கள் பணத்தைக் கொடுக்கும்முன், அந்த நிறுவனம் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமா என்பதை அவர்களின் இணைய பக்கத்தில் செக் செய்ய வேண்டும். சீட்டு எண், உறுப்பினர் விவரங்கள் அனைத்தும், அவர்களின் இணைய பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளதா என்பதைக் கவனியுங்கள்.அரசால் அங்கீகரிப்பட்ட நிறுவனத்தின் பெயர்களில் ‘சிட்’ என்ற வார்த்தை அவசியம் இருக்க வேண்டும். அதன் மூலமும் நீங்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் தெரிந்துகொள்ளலாம். சீட்டு நடத்தும் நிறுவனங்கள் 40 சதவிகிதத்துக்கு அதிகமான தொகையைக் கழிவு செய்யக் கூடாது என்ற சட்டம் அமலில் உள்ளது. அதிகமான தொகையைக் கழிவு செய்கிறார்கள் எனில், நீங்கள் அதை ஆட்சேபிக்கலாம் அல்லது மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் புகார் தரலாம். சீட்டு நிறுவனங்கள் உரிய நேரத்தில் பணம் கொடுக்காமல் இழுத்தடிக்கிறார்கள் எனில், உடனே அருகில் இருக்கும் மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் புகார் தெரிவியுங்கள். முக்கியமாக, அரசிடம் பதிவு செய்யப்படாத சீட்டுத் திட்டங்களில் சேர்வதைக் கூடுமானவரை தவிர்ப்பது சிறப்பான முடிவாக இருக்கும்.

 அ.சிற்றரசு
அ.சிற்றரசு

அரசால் அங்கீகரிக்கப்பட்ட சீட்டுத் திட்டங்கள்...

பொதுவாக, அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் ஏலச்சீட்டுகளே நடத்தப்படுகிறது. ஏலச்சீட்டு என்பது எத்தனை நபர்கள் சேர்கிறார்களோ, அத்தனை மாதங்கள் நடத்தப்படும். உதாரணமாக, 10 பேர் சீட்டுத் திட்டத்தில் சேர்கிறார்கள் எனில், அந்த சீட்டுத் திட்டம் 10 மாதங்கள் மட்டுமே நடத்தப்படும். ஒவ்வொருவரும் மாதம் 10,000 ரூபாய் கட்டுகிறார்கள் எனில், சீட்டுத் திட்டத்தின் மூலம் அவர்கள் பெறும் தொகை ரூ.1,00,000. இந்தப் பணத்தில் சீட்டு நிறுவனத் தின் கமிஷன், கழிவுத் தொகை போக மீதித் தொகையை ஏலச் சீட்டு எடுத்தவருக்கு தரப்படும்.

கழிவு என்ற பெயரில் குறைத்த சீட்டுப்பணம், அந்த சீட்டுத் திட்டத்தில் உள்ள மற்ற நபர் களுக்கு பிரித்துக்கொள்வார்கள். கழிவுத் தொகை அவர்களின் கையில் நேரடியாகத் தரப்படாது, மாறாக அவர்கள் செலுத்த வேண்டிய தொகை குறைக்கப் படும். ஒரு மாதத்தில் யாருமே சீட்டு பணம் கேட்காதபட்சத்தில் இதுவரை சீட்டுப் பணம் எடுக்காதவர்களின் பெயர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, பணம் தரப்படும்.

ஏலச்சீட்டு லாபகரமானதா?

சீட்டு மூலம் சேமிப்பு என்பது எல்லாருக்கும் அதிக பயன் தரும் என்பதைவிட, உடனடியாகப் பணம் தேவைப்படுபவர்களுக்கு உதவிகரமாக இருக்கும். உடனடிப் பணத்தேவை இருப்ப வர்கள், கடனாக வட்டிக்கு பணம் வாங்கும்போது, வட்டியாக அதிக பணம் கட்ட வேண்டியிருக்கும். சீட்டுத் திட்டத்தில் வட்டியில்லாமல் நாம் பணம் பெற்றுக்கொள்ள முடியும். ஏலச்சீட்டை இறுதி மாதம் வரை காத்திருந்து பணம் எடுப்பவர்களுக்கு ஏலச்சீட்டு லாபகரமானது. ஏலச்சீட்டைப் பொறுத்தவரை சீட்டுப் பணத்தை எடுத்து நீங்கள் வேறு எதிலாவது முதலீடு செய்தால் நிச்சயம் லாபம்தான். பீரோவில் வைத்து பத்திரப்படுத்துவது, வங்கி எஃப்.டி-யில் போட்டு வைத்திருப்பது நஷ்டத்தையே தரும்! ஏலச்சீட்டைப் பொறுத்தவரை, சீட்டுப் பணத்தை எடுத்து நீங்கள் வேறு எதிலாவது முதலீடு செய்தால் நிச்சயம் லாபம்தான். சீட்டுப் பணத்தை பீரோவில் வைத்துப் பத்திரப்படுத்துவது, வங்கி எஃப்.டி-யில் போட்டு வைத்திருப்பது நஷ்டத்தையே தரும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism