Published:Updated:

உங்கள் சொத்துகள்... உங்கள் வாரிசுகள்... சிக்கல் இல்லாமல் பிரித்துத் தர சிறப்பான யோசனைகள்!

வாரிசுகள்...
பிரீமியம் ஸ்டோரி
வாரிசுகள்...

கவர் ஸ்டோரி

உங்கள் சொத்துகள்... உங்கள் வாரிசுகள்... சிக்கல் இல்லாமல் பிரித்துத் தர சிறப்பான யோசனைகள்!

கவர் ஸ்டோரி

Published:Updated:
வாரிசுகள்...
பிரீமியம் ஸ்டோரி
வாரிசுகள்...

சொத்து. இந்த வாழ்க்கையை வளமாக வாழ எல்லோருக்கும் அவசியம் தேவையான ஒன்று. ரஜினியின் முத்து படத்தில் ஒரு டயலாக் வரும். ‘‘வரும்போது எதுவும் கொண்டு வரல... போகும்போது எதுவும் கொண்டு போகப் போறதில்ல... நடுவுல என்னயா என்து.. என்து.’’

சொத்து சேர்ப்பதில் எல்லோரும் ஆர்வமுடன் இருக்கிறோம். ஏற்கெனவே ஏழு தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிட சொத்து இருந்தாலும், இன்னும் பத்து தலைமுறைக்குத் தேவையான சொத்துகளைக் குவிக்கிறோம்.

இந்த சொத்துகள் சேர்க்கும்போது எவ்வளவு கஷ்டப்படுகிறோமோ, அதைவிட அதிக கஷ்டம் இந்த சொத்துகளை வாரிசுகளுக்குப் பிரித்துத் தரும்போது வருகிறது. நம் நாட்டின் மிகப் பெரிய பணக்காரரான திருபாய் அம்பானி சொத்துப் பிரிக்கத் தயங்கியதால், பிற்பாடு அம்பானி சகோதரர்கள் பெரும் சச்சரவில் ஈடுபட வேண்டியிருந்தது. சமீபத்தில் நடிகர் திலகம் சிவாஜியின் மகள்கள் நடிகர் பிரபு மீதும், ராம்குமார் மீதும் சொத்துப் பிரிப்பு தொடர்பாக வழக்கு தொடுத்த செய்திகள் பரபரப்பாகப் பேசப்பட்டது.

அம்பானி சகோதரர்கள், சிவாஜி குடும்பம் என்பததெல்லாம் சில உதாரணங்கள் மட்டுமே. அனைத்துக் குடும்பங்களிலும் இன்றைக்கு சொத்துப் பிரிப்பு தொடர்பான சண்டை என்பது சகஜமாகிவிட்டது. இந்த சொத்துகளை எப்படி உறவுகளுக்குள் சிக்கல் இல்லாமல் பிரிப்பது எப்படி, என்னென்ன விஷயங்கள் எல்லாம் சொத்து பிரிக்கும்போது கவனிக்க வேண்டும் என்பது சில முக்கியமான நிபுணர்களுடன் பேசினோம். நாம் முதலில் பேசியது நிதி ஆலோசகர் சா.ராஜசேகரனிடம். அவர் சொன்னதாவது...

உங்கள் சொத்துகள்... உங்கள் வாரிசுகள்... சிக்கல் இல்லாமல் பிரித்துத் தர சிறப்பான யோசனைகள்!

உயிருடன் இருக்கும்போதே...

“சொத்துகளை நமக்குப் பிறகு நம்முடைய சந்ததியினருக்குப் பகிர்ந்துக் கொடுப்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. அதில் பல விஷயங்களை யோசிக்க வேண்டியிருக்கிறது. நாம் இருக்கும் போதே சொத்துகளை வாரிசுகளுக்குப் பிரித்துத் தந்துவிட்டால் அதன்பிறகு நம்மைப் பார்த்துக்கொள்வார்களா என்கிற சந்தேகம் பெரும்பாலானோருக்கு இருக்கிறது. சொத்துகளைப் பிரித்துவிட்டால், குடும்பம் பிரிந்துவிடுமோ என்ற பயமும் அந்த வேலையைச் செய்யவிடாமலே தடுத்து விடுகிறது. ஆனால் பின்னாளில் பிரச்னைகள் வராமல் தடுக்க வேண்டும் எனில், சொத்தினைச் சேர்த்தவர்கள் எந்தச் சொத்து யாருக்கு என்று பிரித்துவிடுவதே சிறந்த தீர்வு.

சொத்துப் பிரிப்பு என்று வரும்போது, ஒருவரது குடும்பச் சூழல், உறவுகளின் நிலை, எவ்வளவு சொத்து இருக்கிறது, எத்தனை வாரிசுகள் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து முடிவுகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். தவிர, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் உங்களுடைய கட்டுப்பாட்டில் இருந்தால், உங்கள் விருப்பப்படி அவர்களுக்கான சொத்துகளைப் பிரித்துக் கொடுக்கலாம். அது தொடர்பாக நீங்கள் எடுக்கும் முடிவில் ஆட்சேபனை ஏதும் இருக்கிறதா என்பதை அனைவரிடமும் கேட்டுவிட்டு முடிவு எடுக்கலாம்.

சரிசமமாகப் பிரித்துத் தருவது...

சொத்துகள் எளிதில் பிரிப்பதற்கேற்ப இருந்தால், அவற்றை வாரிசுகளுக்குச் சமமாகப் பிரித்து கொடுக்கலாம். எளிதில் பிரிக்கும் வகையில் இல்லை எனில், அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் சொத்துகளைப் பிரிக்கும் முடிவை எடுக்கலாம். அதாவது, சொத்துகளை வேறு நபருக்கு விற்றுவிட்டு வரும் பணத்தைப் பிரித்து கொடுக்கலாம். இல்லாவிட்டால் குடும்பத்திலேயே ஒருவர் அந்தச் சொத்தை வாங்கிக்கொண்டு அதற்கான பணத்தை மற்றவர்களுக்குக் கொடுக்கலாம்.

உதாரணமாக, ஒருவருக்கு ஒரே ஒரு வீடுதான் இருக்கிறது ஆனால், இரண்டு மகன்கள் இருக்கிறார்கள் எனில், ஒருவர் அந்த வீட்டை வைத்துக்கொண்டு மற்றவருக்கு அந்த வீட்டின் மதிப்பில் பாதியை வழங்கலாம். ஒருவேளை, இரண்டு வீடு இருந்தால், ஆளுக்கொரு வீட்டைத் தந்துவிடலாம். அப்போதும், வீட்டின் மதிப்பு எவ்வளவு என்பதைப் பார்த்து பிரிக்கப்பட்டு இருக்கிறதா என்கிற கேள்வி எழ வாய்ப்பு இருக்கிறது. அப்போது, நீங்கள் சொல்லும் முடிவுதான் இறுதியான முடிவாக இருக்க வாய்ப்புண்டு.

தனி வீடு இல்லை, அடுக்கு மாடி வீடுதான் இருக்கிறது எனில், வாரிசுகளின் விருப்பங்களைக் கேட்டு அவர்களுடைய சம்மதத்தின் பேரில் யாருக்கு எந்த தளத்தைக் கொடுக்கலாம் என்று முடிவெடுக்கலாம். பொதுவாக, என்ன சொத்து, என்ன சூழல் என எப்படி இருந்தாலும் வாரிசுகளிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லி, அவர்களுக்குப் புரியவைத்தால் சொத்து பிரிப்பு நடவடிக்கை ஓரளவுக்கு சுமுகமாக முடிவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

உங்கள் சொத்துகள்... உங்கள் வாரிசுகள்... சிக்கல் இல்லாமல் பிரித்துத் தர சிறப்பான யோசனைகள்!

உங்களுக்கென்று வைத்துக்கொள்ளுங்கள்...

பொதுவாக, சொத்து பிரிப்பு என்று வரும்போது சொத்துகள் எல்லாவற்றையும் பிள்ளை களுக்கு எழுதித் தந்துவிட்டு, அவர்களை எதிர்பார்த்து வாழும் நிலைக்கு ஆளாகாமல் இருக்கும் சொத்தில் ஒரு பகுதியை உங்கள் பெயரிலேயே வைத்துக் கொள்வது நல்லது. இதற்கு யார் தங்களைப் நன்றாகப் பார்த்துக் கொள்வார்கள் என்று நினைக்கிறீர்களோ, அவர்களுக்கு அந்தச் சொத்தை வழங்கலாம். அல்லது இப்போது சொத்தினைப் பிரித்துத் தந்தாலும், உங்கள் காலத்துக்குப் பிறகுதான் அதை அடையும் உரிமை உண்டு என்பதைத் தெளிவாக சொல்லிவிடலாம்’’ என்றார்.

சட்டரீதியான வழிமுறைகள்...

அடுத்ததாக, சொத்து பிரிப்பின்போது சட்ட ரீதியில் தெரிந்துகொள்ள வேண்டிய அணுகுமுறைகள் என்னென்ன என்பது குறித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அழகுராமனிடம் கேட்டோம். அவர் சொன்னதாவது...

“பரம்பரையாக ஆண்டு அனுபவித்து வரும் குடும்பச் சொத்து, குடும்ப வியாபாரம், காடு, வயல்வெளி என ஆரம்பித்து, பங்குச் சந்தை முதலீடு, வங்கி இருப்பு, தங்கம், வைரம் வரை அனைத்தையும் குடும்ப உறவுகளுக்குள் பிரித்துக் கொள்ளும் நிகழ்வுதான் சொத்து பிரிப்பு அல்லது பாகப்பிரிவினை ஆகும்.

பாகப்பிரிவினையின் அம்சங்கள், நுணுக்கங்கள் பற்றி தெரிந்துகொள்வதற்கு முன், அடிப்படையில் சில விஷயங்களை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு குடும்பத்தில் தலைவராக இருந்து வழிநடத்தும் ஒருவரின்கீழ் மொத்தக் குடும்பமும் கட்டுப்பட்டு சுமுகமாக குடித்தனம் நடத்தி வருவார்கள். தலைமையாக இருப்பவர் யாருக்கு என்ன சேரவேண்டும் என்பதைப் பார்த்து வருவார். ஆனால் குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகத்தான் இருப்பார்கள். ஒருவருக்குப் பணத்தின் மீது, சொத்தின் மீது அவ்வளவு ஆர்வம் இருக்காது. மற்றொருவர் எப்போதும் பணம், பணம் என்றுதான் இருப்பார். ஒருவருக்கு பொருளீட்டும் அதாவது, பணம் சம்பாதிக்கும் திறமை இருக்கும். மற்றொருவருக்கு அந்தத் திறமை இருக்காது.

எனவே, குடும்பம் சண்டை சச்சரவுகள் இல்லாமல் நன்றாக இருக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து குடும்பத்தின் தலைமை நிலையில் இருப்பவர் தான் நன்றாக இருக்கும்போதே அனைவரையும் கலந்து ஆலோசித்து, குடும்ப உறவுகளின் நிலை அறிந்து சுமுகமாக பாகப் பிரி வினையைச் செய்துவிடுவது நன்மை பயக்கும்.

பாகப்பிரிவினை என்பது குடும்பச் சொத்து உடன்படிக்கை பத்திரமாகும். இதன் மூலம் பெற் றோர்கள் வழி சொத்தில் வாரிசுகளுக்கு சொத்துரிமை கிடைக்கும். பாகப்பிரிவினையை அனைவருக்கும் மதிப்பின் அடிப்படையிலோ, அளவின் அடிப்படையிலோ சமமாகப் பிரிக்கலாம். அல்லது சொத்தில் உரிமை உள்ளவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விதமாகவும் பிரித்துக்கொள்ளலாம்.

சில நேரங்களில் பாகப்பிரிவினையின்போது மைனராக இருக்கும் வாரிசு அல்லது கட்டிக் கொடுத்துவிட்ட பெண் பிள்ளைகள், வெளிநாட்டில் வசிப்பவர்கள் போன்றவர்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் பாகப்பிரிவினை செய்யப்பட்டிருந்தால் அவர்கள் பாகப்பிரிவினையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கும் நிலை ஏற்படும்.

உங்கள் சொத்துகள்... உங்கள் வாரிசுகள்... சிக்கல் இல்லாமல் பிரித்துத் தர சிறப்பான யோசனைகள்!

தான செட்டில்மென்ட் பத்திரம்

சொத்து உரிமை தருவதில் தான செட்டில்மென்ட் பத்திரம் எழுதுவது ஒருவகை. பொதுவாக, பணம் பெற்றுக்கொண்டு ஒருவருக்கு சொத்து உரிமை மாற்றம் செய்வதை சொத்து விற்பனை என்போம். அதுவே நெருங்கிய உறவுகளுக்குள் எந்தவித பணப்பலன்களும் பெறாமல், இயற்கையான அன்பினாலும் பாசத்தாலும் சொத்து உரிமை மாற்றம் செய்ய விரும்பி, எழுதித் தருவதே தான செட்டில் மென்ட் பத்திரம். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கோ, சகோதரர்கள், தங்கள் சகோதரர் மற்றும் சகோதரி களுக்கோ, கணவன் மனைவிக்கோ, மனைவி கணவனுக்கோ சொத்துகளை தான செட்டில்மென்ட் பத்திரம் மூலம் வழங்கலாம். இவர்கள் சொத்துகளை மாற்றும் போது அதை விற்பனை யாக மேற்கொள்ளாமல் தான பத்திரம் மூலம் வழங்கினால், பத்திர செலவு மிச்சமாகும். சொத்தின் வழிகாட்டு மதிப்பு அதிகம். ஆனால் தான பத்திரம் மூலமாக சொத்து வழங்கும்போது பத்திரத்தைப் பதிவதற்கான கட்டணத்துடன் அரசு நிர்ணயம் செய்துள்ள முத்திரைக் கட்டணம் செலுத்தினால் போதும்.

உயில் எழுதவேண்டியதன் அவசியம்....

ஒருவேளை, பாகப் பிரிவினையை முன்னெடுக்க விரும்ப வில்லை, அப்படி முன்னெடுத்தால் சிக்கல்கள் உண்டாகும், அந்த சூழ்நிலையை எதிர்கொள்ளும் சக்தி உங்களுக்கு இல்லை எனில், உங்களுடைய விருப்பத்தின்படி யாருக்கு என்ன சொத்து சென்று சேரவேண்டும் என்பதை உயிலாக எழுதி வைக்கலாம்.

இதற்கு நாம் முதலில் உயில் எழுதுவதன் அவசியத்தை உணர வேண்டும். நாம் நமக்காகவும், நம்முடைய சந்ததி களுக்காகவும்தான் சொத்துகளைச் சேர்க்கிறோம். ஆனால் அவை நமக்குப் பின்பு நம்முடைய சந்ததியினருக்கு எந்தச் சிக்கலும் இல்லாமல் சென்று சேர்வது அவசியம். அதற்காக எழுதுவதுதான் உயில் (Will).

ஒருவர் உயில் எழுதாத பட்சத்தில் அவர் இறந்தபிறகு சொத்துகளைப் பகிர்ந்து கொள்வதில் குடும்ப உறவு களுக்கிடையே பெரும் சண்டை உருவாகும். இது அவர்கள் வாழ்நாள் முழுவதும் துயரமாகவும் வாய்ப்புள்ளது.

சொத்துகளுக்காக சண்டை போட்டு பலர் பல ஆண்டு களாக வழக்கு நடத்தி வருகிறார்கள். இன்னும் சிலரோ, குற்றச் செயல்களில் ஈடுபட்டு தண்டனை அனுபவிக் கிறார்கள். இதுபோன்ற சண்டை சச்சரவு துயரங்கள் ஏற்படாமல் தடுக்க உயில் எழுதுவது அவசியம். இதன் மூலம் குடும்ப உறவுகள் சீராக இருக்கக்கூடிய சூழ்நிலை அமையும்.

உங்கள் சொத்துகள்... உங்கள் வாரிசுகள்... சிக்கல் இல்லாமல் பிரித்துத் தர சிறப்பான யோசனைகள்!

இந்து வாரிசுரிமைச் சட்டம்...

ஒருவர் உயிருடன் இருக்கும் போதே பாகப்பிரிவினை செய்யவில்லை; இறந்தபிறகு அவரது சொத்துகளைப் பிரித்துக்கொள்வதற்கான உயிலையும் எழுதவில்லை எனில், இறந்தவரின் சொத்துகள் அவருடைய வாரிசுகளுக்கு இந்து வாரிசுரிமைச் சட்டத்தின்படி சென்றடையும். குடும்பத்தில் தலைமகன் இறந்தபிறகு சொத்துகளைப் பிரிப்பதாக இருந்தாலோ, விற்பதாக இருந்தாலோ குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களிடம் தெரிவிப்பது அவசியம்.

ஒரு குறிப்பிட்ட வாரிசுக்குத் தெரியாமல் பிரிக்கப்படும் பாகப்பிரிவினை செல்லாமல் போகலாம். அதேபோல், குறிப்பிட்ட ஒரு வாரிசுக்குத் தெரியாமல் சொத்துகளை விற்றாலும் பின்னாளில் பிரச்னைகளைக் கொண்டு வரும் என்பதையும் மறந்துவிடக் கூடாது. சொத்துப் பிரிவினையில், சொத்து விற்பனையில் வாரிசுகள் ஆட்சேபனை தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தால், பாகப்பிரிவினையோ, சொத்து விற்பனையோ ரத்து செய்யப்படலாம்.

பெண்களுக்கு சொத்துரிமை...

1956 இந்து வாரிசு உரிமை சட்டத்தின்படி பரம்பரை சொத்தில் ஆண் வாரிசுகளுக்கு மட்டுமே உரிமை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 2005-ம் ஆண்டில்தான் இதில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டது. இந்தச் சட்டத் திருத்தத்தின்படி, தந்தை வழி பரம்பரை சொத்தில் பெண்களுக்கும் உரிமை உண்டு எனக் கொண்டுவரப்பட்டது.

ஆனால், இந்தச் சட்டத்திலேயே பல குழப்பங்கள் இருந்தன. தந்தை உயிரோடிருந்தால்தான் பெண் வாரிசுகள் பங்கு கோர முடியும் என்றிருந்தது. முன்பே பாகப்பிரிவினை செய்தாகிவிட்டது என்று வாய்மொழியாகச் சொல்லி ஏமாற்றுவது போன்ற சிக்கல்கள் முட்டுக்கட்டையாக இருந்தது. பின்னர் பல வழக்குகள், அதில் வந்த தீர்ப்புகள் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவந்தன. பெண் வாரிசுகள் சொத்தில் பங்கு வேண்டாம் என்று கூறுகிறபட்சத்தில் அதை எழுத்துப் பூர்வமாகப் பதிவு செய்துவிட்டு, அந்த சொத்துகளை ஆண் வாரிசுகள் பிரித்துக் கொள்ளலாம்.

தமிழகத்தில் 1989-ல் அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி கொண்டுவந்த சட்டத் திருத்தத்தின்படி, பெண்கள் அனைவருமே பரம்பரை சொத்தில் உரிமை கோரலாம் என்ற நிலை வந்தது. ஆனால், இதில் 25.3.1989-க்குமுன் திருமணம் ஆன பெண்கள் பரம்பரைச் சொத்தில் உரிமை கோர முடியாது. அதே போல, அதே தேதிக்கு முன்னர் பாகப்பிரிவினை செய்யப்பட்ட சொத்திலும் பெண்கள் உரிமை கோர முடியாது.

வாரிசுச் சான்றிதழ் அவசியம்...

குடும்பத் தலைவரின் மறைவுக்குப் பிறகு சொத்து களைப் பிரிப்பதில் உள்ள சிக்கல்களுக்குத் தீர்வு காண வாரிசு சான்றிதழ் மிகவும் அவசியமாகும்.

வங்கி வைப்புநிதி, பங்குச் சந்தை முதலீடு, மியூச்சுவல் ஃபண்ட், இன்ஷூரன்ஸ் போன்றவற்றில் அவற்றை வைத்துள்ள நபர் இறக்கும்பட்சத்தில் நாமினி குறிப்பிட்டிருந்தால் நாமினியிடம் அவை ஒப்படைக்கப்படும். நாமினி குறிப்பிடப்படவில்லை எனில் அல்லது நாமினி விஷயத்தில் வாரிசுகள் ஆட்சேபனை தெரிவிக்கும் பட்சத்தில் வாரிசு சான்றிதழ் அடிப்படையில் சொத்துகள் மீதான உரிமையைக் கோர முடியும். இறந்தவருக்கு வாரிசு என்று வாய்மொழியாகச் சொன்னால் எடுபடாது. வாரிசுச் சான்றிதழ் மிகவும் முக்கியம்.

இந்த வாரிசு சான்றிதழை வட்டாட்சியரிடம் விண்ணப்பித்து வாங்கலாம். இறந்தவருடனான உறவு நிலை, குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட வற்றை ஆராய்ந்து சான்றிதழ் வழங்கப்படும். சில நேரங்களில் யார் வாரிசு, யாருக்கு முன்னுரிமை என்ற குழப்பம் உண்டாகும்போது நீதிமன்றம் மூலம் இறங்குரிமை சான்றிதழ் (Succession Certificate) பெறப்பட வேண்டும். நீதிமன்றம் வழங்கும் இறங்கு ரிமை சான்றிதழ் அடிப்படையில் நிதி சார்ந்த சொத்துகள் இறந்த நபரின் வாரிசுகளுக்கு ஒப்படைக்கப்படும்.

குடும்பத்தின் தலைவர் இறந்துவிட்டால் அவரது தாய், தந்தை, மனைவி மற்றும் குழந்தைகள் வாரிசுகளாக கருதப்படுவார்கள். இறந்தவருக்கு இரண்டாவது மனைவி இருந்தால், அவரின் குழந்தைகளும் வாரிசாக கருதப்படுவார்கள். முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது இரண்டாவது திருமணத்தை இந்து திருமணச் சட்டம் அங்கீகரிக்கவில்லை என்பதால், இரண்டாவது மனைவிக்கு கணவரின் பூர்வீக சொத்தில் உரிமையில்லை. ஆனால் கணவரின் தனிப்பட்ட சொத்தில் உரிமை கோரமுடியும். ஒருவேளை இறந்தவருக்கு நேரடி வாரிசுகள் யாரும் இல்லை எனில், இறந்தவரின் நெருங்கிய ரத்த உறவு குடும்ப உறுப்பினர்கள் வாரிசு உரிமை கோரி நீதி மன்றத்தில் விண்ணப்பிக்கலாம்.

ஆவணங்கள் பத்திரம்...

சொத்துகளின் அசல் ஆவணங்கள் சொத்தின் மீதான உரிமையை ஒருவருக்கு வழங்கு கிறது. அதனால் அதை அதற்கு உரிமை உள்ளவர் அதனை பத்திரமாக வைத்திருப்பது நல்லது. அதைப் பிறரிடம் கொடுக்கும்போது உங்களுடைய உரிமையை இன்னொருவருக்கு வழங்குகிறீர்கள் என்று அர்த்தம். அதை வைத்து அவர் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். சொத்து ஆவணங்களை குடும்ப உறுப்பினர்கள் அல்லாத மற்றவர்களிடம் கொடுக்க வேண்டாம். குடும்ப உறுப் பினர்களிடமேகூட அவசியம் எனில் மட்டும் நம்பகமானவர்கள் எனில் மட்டும் கொடுக்கலாம். மற்றபடி வீட்டில் ரகசியமாகவோ, வங்கி லாக்கரிலோ பாதுகாப்பாக வைத்திருப்பது நல்லது. அசல் ஆவணங்களை வைத்து கடன் வாங்கலாம் என்பதால், கவனமாக இருக்க வேண்டும். சொத்தின் மதிப்பு அதிகம் எனில், நகல் ஆவணங்களைக் கூட அவசியமில்லாமல் யாரிடமும் தர வேண்டாம். ஆவணங்களைத் தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்புள்ளது” என்று முடித்தார்.

சொத்துப் பிரிப்பின்போது இந்த விஷயங்களை எல்லாம் கணக்கில் கொண்டு செயல்பட்டால், குடும்பத்தில் சச்சரவுகள் ஏற்படுவதைத் தடுக்கலாமே!

சுரேஷ் பார்த்தசாரதி
சுரேஷ் பார்த்தசாரதி

யாருக்கு, எந்த சொத்து என்பதைத் திட்டமிட வேண்டும்!

- சுரேஷ் பார்த்தசாரதி, நிதி ஆலோசகர், Myassetsconsolidation.com

“நிதி சார்ந்த சொத்துகள் விஷயத்தில் எந்த ஒரு முதலீட்டைத் தொடங்கும்போதும் அதற்கு நாமினியைப் பரிந்துரை செய்வது கட்டாயம். அந்த நபர் மறைவுக்குப் பிறகு நாமினிக்கு அந்த சொத்துகள் சென்று சேரும். நாமினி மைனராக இருந்தால், அதற்கு ஒரு கார்டியன் நியமிக்க வேண்டும். மைனர், மேஜரானபிறகு அந்த சொத்து போய் சேருகிறது. ஆனால், ரியல் எஸ்டேட் முதலீட்டில் அவ்வாறு நடப்பதில்லை. ரியல் எஸ்டேட் சார்ந்த சொத்துகளில்தான் பெரும்பாலான பிரச்னைகள் உருவாகின்றன. நடிகர் சிவாஜி குடும்பத்தில் தற்போது எழுந்துள்ள பிரச்னையும் அப்படிப்பட்டதுதான். அதாவது, சொத்து சரியாக பிரித்துத் தரப்படவில்லை; சொத்துகளை விற்றபோது தெரிவிக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுப்பி இருக்கிறார்கள்.

இவ்வாறு நன்றாக வாழ்ந்த குடும்பத்திலேயே சிக்கல் வரும் சூழலில், சாதாரண குடும்பங்களின் சூழல் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். ஒவ்வொரு குடும்பத்தின் பெற்றோரும் சொத்துகளை முன்கூட்டியே யாருக்கு செல்லவேண்டும் என்பதைத் திட்டமிடுவது அவசியம். அப்படி செய்தால், அவர்களின் காலத்திற்குப்பிறகு சந்ததியினருக்கு எந்தச் சிக்கலும் உருவாகாது. சொத்துகளை வாங்கும்போதேகூட ‘சேல் டீட்’ பத்திரத்தில் யாருக்கு அந்த சொத்து சேர வேண்டுமென்று நினைக்கிறீர்களோ, அவரது பெயரையும் சேர்த்துவிடலாம். உங்களுக்குப் பிறகு அந்தச் சொத்து அவருக்கு சென்று சேர்ந்துவிடும். பிர்லா குழுமத்தில் பிரியம்வதா தேவி, பிர்லாவின் உயில் உருவாக்கிய சிக்கலால் நீதிமன்ற வாசலை மிதிக்க வேண்டியிருந்தது. இந்த விவகாரம் பல ஆண்டுகளாக நீடித்தது. இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்க வேண்டுமெனில் சரியாக உயில் எழுத வேண்டியது அவசியம்.”