நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

தீபாவளி ஷாப்பிங்... வலைவிரிக்கும் விதவிதமான ஆஃபர்ஸ்… சிக்காமல் லாபம் பார்க்கும் சூப்பர் டிப்ஸ்!

தீபாவளி ஷாப்பிங்...
பிரீமியம் ஸ்டோரி
News
தீபாவளி ஷாப்பிங்...

கவர் ஸ்டோரி

தீபாவளிக்கு முந்தைய நாள் இரவு 11 மணி வரை அப்பாவின் வருகைக்காகக் காத்திருந்து, காத்திருந்து கடைசியில் அழுத முகத்துடனேயே தூங்கிப்போன குழந்தைப் பருவ அனுபவம் 30 வயதைக் கடந்த பலருக்கும் கட்டாயம் இருக்கும். தொளதொள ஆடையும், ஒரே ஒரு கைத்துப்பாக்கியும், கொஞ்சம் ரோல் பட்டாசும் மட்டுமே கிடைத்தால்கூட போதும் என்ற மனநிலை ஒரு காலத்தில் பெரும்பாலான குடும்பங்களில் இருந்தது.

அடியோடு மாறிப்போன தீபாவளி ஷாப்பிங்...

ஆனால், இன்று தீபாவளி ஷாப்பிங் அடியோடு மாறியிருக்கிறது. சிறு சிறு நகரங்களில்கூட பெருநகரங்களில் இருப்பதுபோல ஷாப்பிங் மால்கள் வந்துவிட்டன. நகரங்களில் மட்டுமே காணப்படும் கடைகள், பிராண்டுகள்கூட இப்போது மூலை முடுக்கெல்லாம் திறக்கப்பட்டு விட்டன. எங்கு பார்த்தாலும் ஆஃபர்கள், பரிசுகள் என விளம்பரங்கள் கண்களைப் பறிக்கின்றன. இதுபோக, ஆன்லைன் ஷாப்பிங் கலாசாரம் ஒருபக்கம் கொடிகட்டிப்பறக்கிறது. பிக் பில்லியன் டே, கிரேட் இண்டியன் சேல் என மக்களைக் கவர்ந்திழுப்பதில் குறியாக இருக்கின்றன.

இன்றைய சமூக வலைதளக் கலாசாரத்தில், முன்பு போல ஏதோ ஒரு சட்டைத் துணி, கொஞ்சம் பட்டாசு என்று இருந்துவிடாமல் கடன் வாங்கியாவது நன்றாகச் செலவு செய்யும் அளவுக்கு அப்கிரேட் ஆகிவிட்டன நம்முடைய கொண்டாட்டங்கள். அதற்கு 0% இ.எம்.ஐ, ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம், கிரெடிட் கார்டுகளுக்கு 10% தள்ளுபடி, எந்த ஆவணமும் தேவையில்லை; ஒரே க்ளிக் உடனே கடன் எனப் புதிய புதிய உத்திகளைக் கையாள்கின்றன ஃபைனான்ஸ் நிறுவனங்கள். இவற்றில் இருந்தெல்லாம் தப்பித்து தீபாவளி யைக் கொண்டாடுபவர்கள் மிக மிக சொற்பம் தான்.

இப்படி எந்தப் பக்கம் திரும்பினாலும் ஆசையைத் தூண்டும் விளம்பரங்கள் இருக்கும் நிலையில் எப்படி நம்முடைய நிதிநிலையை நெருக்கடிக்கு உள்ளாக்காமல் ஸ்மார்ட்டாக திட்டமிட்டு இந்தத் தீபாவளியை மகிழ்ச்சியாகக் கொண்டாடுவது என்பது குறித்த வழிகாட்டுதல் அனைவருக்கும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. அதற்காக நிதி ஆலோசகர்களை அணுகிப் பேசினோம். தீபாவளி செலவுகளை எப்படித் திட்டமிடுவது என்பது பற்றி விரிவாக எடுத்துச் சொன்னார் நிதி ஆலோசகர் லலிதா ஜெயபாலன்.

தீபாவளி ஷாப்பிங்... வலைவிரிக்கும் விதவிதமான ஆஃபர்ஸ்… சிக்காமல் லாபம் பார்க்கும் சூப்பர் டிப்ஸ்!

கையில் காசு நிற்காத நான்கு மாதங்கள்...

“தீபாவளி இந்தியாவின் மிகப் பெரிய பண்டிகை. இந்தியர்கள் அனைவருமே கொண்டாடும் பண்டிகை இது. தீபாவளி என்னவோ ஒரு நாள்தான். ஆனால், பண்டிகை கொண் டாட்டமும், அதையொட்டிய செலவுகளும் அடுத்த நான்கு மாதங்களுக்கு நீடிக்கும். இதனால் அடுத்த நான்கு மாதங்களுக்குக் கையில் காசு நிற்கவே நிற்காது.

பண்டிகைக் காலத்தை மகிழ்ச்சியாகக் கொண்டாட நிச்சயம் கணிசமான பொருளாதாரம் அவசியம். ஆனால், அந்த விஷயத்தில்தான் பெரும்பாலான குடும்பங்களில் பிரச்னையே இருக்கிறது. ஆனால், ஸ்மார்ட்டாகத் திட்டமிட்டால் பொருளா தாரப் பிரச்னைகளை எளிதில் சமாளித்துவிடலாம்.

தீபாவளி ஷாப்பிங் செய்யத் தயாராகும் முன் நம்முடைய செலவுகளைப் பட்டியலிட்டு அவற்றை வகைப்படுத்திக்கொள்ள வேண்டும். பண்டிகைகள் என்றாலே முதலில் எல்லோரும் வாங்க ஆசைப்படுவது ஆடைகள்தான். ஆடைகளில் ஆரம்பித்து ஏசி, ஃப்ரிட்ஜ் போன்ற வீட்டுக்குத் தேவையான பொருள்கள் முதல் வாகனங்கள் வரை தீபாவளி போன்ற பண்டிகை நாளில் வாங்க வேண்டும் என்ற விருப்பம் பலருக்கும் இருக்கும். அதுபோக, கேட்ஜெட்டுகள் புதிது புதிதாக வந்திருக்கின்றன. ஸ்மார்ட் டிவைஸ்கள் அதிகம் இப்போது அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறது. அதோடு விடுமுறைக் காலம் என்பதால், சுற்றுலா செல்வதற்கான திட்டங்களும் நிறைய பேருக்கு இருக்கும். இது தவிர பார்ட்டி, கெட்-டுகதர், மீட் அவுட் போன்ற திட்டங்களும் இன்றைய இளைஞர்களின் பட்டியலில் அடங்கும்.

கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாகக் கொண்டாட்டங்களை எல்லாம் பெரும்பாலானோர் தள்ளிப் போட்டிருப்பார்கள். அதற்காக இந்த வருடமாவது மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டுமென்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். பரபரப்பான, அழுத்தம் நிறைந்த இந்த வாழ்க்கையில் அவ்வப் போது நம்மை ரிலாக்ஸ் செய்துகொள்ள கொண்டாட்டங்கள் கட்டாயம் தேவை. அதே சமயம், அந்தக் கொண்டாட்டங்கள் நம்மை வருந்தும்படி ஆக்கிவிடக் கூடாது. அதாவது, நம்முடைய நிதிநிலைக்கு ஏற்றவாறு கொண்டாட்டங்களை வைத்துக்கொள்ள வேண்டும். வருமானத்துக்கு மீறி செலவு செய்துவிட்டு வாழ்க்கை முழுவதும் கஷ்டப்படவும் கூடாது.

தீபாவளி ஷாப்பிங்... வலைவிரிக்கும் விதவிதமான ஆஃபர்ஸ்… சிக்காமல் லாபம் பார்க்கும் சூப்பர் டிப்ஸ்!

எது தேவை, எது தேவையில்லை?

தீபாவளி முதல் பொங்கல் வரை படையெடுக்கும் பண்டிகை களுக்கு நாம் என்னென்ன செலவு செய்யப்போகிறோம் என்பதை முதலில் பட்டிய லிட்டுக்கொள்ள வேண்டும். குடும்பத்தில் உள்ள அனை வரும் கலந்து பேசி பட்ஜெட் என்ன, என்னென்ன செலவு கள் என்பதை முடிவெடுக்க வேண்டும். என்னவெல்லாம் வாங்கப் போகிறோம் என்பதைப் பட்டியலிட்டு, அவற்றை ஆடைகள், வாகனம், வீட்டுக்குத் தேவை யான பொருள்கள் என வகைப்படுத்திக்கொள்ள வேண்டும். அப்படி வகைப் படுத்திய பிறகு, அதில் தேவையானது எது தேவை யில்லாதது எது என்பதைப் பிரித்துப் பார்க்க வேண்டும். எதற்கு முன்னுரிமை தருவது, எது வேண்டும் வேண்டாம் என்பதை முடிவு செய்ய வேண்டும்.

உதாரணமாக, ஏற்கெனவே வீட்டில் ஓர் அறையில் ஏசி இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இன்னொரு அறையிலும் ஏசி மிகவும் அவசியம் எனில் மட்டுமே வாங்கலாம். இப்போது மின் கட்டணங்கள் கடுமையாக உயர்ந்துவிட்டன. எனவே, கூடுதலாக வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்குவது குறித்து கவனமாக முடிவெடுக்க வேண்டும். அதுவே வீட்டில் வாஷிங் மெஷினே இல்லை எனில், அதற்கு முன்னுரிமை தரலாம்.

உங்களுக்குப் பிடித்த ஆடைகள் உங்கள் பட்ஜெட் டில் வராதபட்சத்தில் பொறுமையாக இருங்கள். பண்டிகைக் கால விற்பனை முடிந்தவுடன் ஆஃபரில் கிளியரன்ஸ் சேல் கண்டிப் பாக வரும். அப்போது உங்களுக்குப் பிடித்த ஆடை கள் விலை குறைவாகவே கிடைக்கும். ஆடைகளுக்குக் குறைவாகச் செலவிடுங்கள். ஆடைகள் வாங்கும்முன் ஒருமுறை உங்களுடைய அலமாரியைப் பாருங்கள். எத்தனை ஆடைகள் உள்ளன, அவை எல்லாம் பயன்படுத் தும் தரத்தில் இருக்கிறதா என்றெல்லாம் பார்த்தாலே என்ன வாங்க வேண்டும், வாங்க வேண்டாம் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

அதேபோல்தான் கேட் ஜெட். புதிய புதிய வடிவமைப் புகளில், அட்வான்ஸ் திறன்களுடன், கேட்ஜெட் டுகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இன்றைய டிஜிட்டல் உலகில் எல்லோருக்கும் கேட்ஜெட் டுகள் மீது அலாதி ஆர்வம் இருக்கிறது. ஆனால், அவற்றை வாங்கும்முன், அதன் பயன்பாடு எப்படி, நாம் அதை எப்படி பயன் படுத்துகிறோம் என்பதைப் பாருங்கள். எல்லோரும் வைத்திருக்கிறார்கள் என்று வாங்காதீர்கள். ஐபோன் மீது அனைவருக்கும் ஆசை இருக்கும். ஆனால், அதை வாங்குவதன் மூலம் நீங்கள் பெறப்போவது என்ன, இழக்கப்போவது என்ன என்பதைப் பாருங்கள். மேலும், இப்போது கேட்ஜெட்டுகளுக்கு அதிக தேவை இருப்பதால், விலையும் சற்றுக் கூடுதலாகவே இருக்கின்றன. மொபைல் வந்த பிறகு, பெரும்பாலானோர் வாட்ச் வாங்குவதையே மறந்துவிட்டார்கள். ஆனால், இப்போது ஸ்மார்ட் வாட்ச் வந்தபிறகு எல்லோருமே வாங்க விரும்புகிறார்கள். எனவே, கேட்ஜெட்டுகள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

பண்டிகைகளுக்கு தங்க ஆபரணங்கள் வாங்குவது சிலருக்கு வழக்கமாக இருக்கும். நல்ல நிதிவளம் உள்ளவர்கள் வாங்கலாம். பண்டிகைக் காலங்களில் ஆபரணங்கள் விலை சற்றுக் கூடுதலாகவே இருக்கும் என்பதால் ஏழை, நடுத்தர மக்கள் ஆபரணங்கள் வாங்குவது குறித்து யோசித்து முடிவெடுக்க வேண்டும். ஏனெனில், ஆபரணங்களுக்கு அதிக தொகை ஆகும் என்பதால், கையிலிருக்கும் பணத்தை நகைகள் வாங்கிவிட்டு, பின்னர் அவசரத் தேவைக்குப் பணம் இல்லாமல் கடன் வாங்க வேண்டிய நிலை உண்டாகலாம். எந்த செலவு என்றாலும் ‘முதலில் அவசியம், பிறகுதான் ஆடம்பரம்’ என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

சரி, பணத்துக்கு என்ன வழி?

என்ன வாங்கலாம், எதற்கு செலவு செய்யலாம் என்பதை முடிவு செய்த பிறகு, அதற்கான நிதி ஆதாரம் குறித்து யோசிக்க வேண்டும். நீங்கள் நிதி சார்ந்து ஸ்மார்ட்டாக முடிவெடுப்பவர் எனில், ஏற்கெனவே தீபாவளி செலவுகளுக்கென ஒரு தொகையைச் சேமித்து வைத்திருப்பீர்கள். அந்த சேமிப்பை எடுத்து, அந்த பட்ஜெட்டுக்குள் செலவுகளைத் திட்ட மிட்டு செய்யலாம்.

சிலருக்கு தீபாவளி போனஸ் கிடைக்கும். அந்தத் தொகையை வைத்து செலவுகளைத் திட்டமிடலாம். ஆனால், பெரும்பாலானவர்கள் கடன் வாங்கி செலவு களைச் செய்யும் நிலை யில் இருப்பார்கள். அவர்கள் இது போன்ற கொண்டாட்ட மனநிலையின்போது மிக மிகக் கவனமாக இருக்க வேண்டும். ஏற்கெனவே கடனில் இருப்பவர்கள் மேலும் கடன் வாங்கி செலவு களைச் செய்யாமல் இருப்பது நல்லது.

ஏற்கெனவே இ.எம்.ஐ கட்டுபவர்கள் எக்காரணம் கொண்டும் மீண்டும் இ.எம்.ஐ-யில் பொருள்களை வாங்க வேண்டாம். BNPL என்கிற ‘பை நவ் பே லேட்டர்’ வகையில் இப்போது கடன்கள் கொடுக்க நிறைய நிறுவனங்கள் உள்ளன. இப்போது வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டு வருவதால், எல்லாவற்றுக்குமே வட்டியும் அதிகமாக இருக்கும். மாத சம்பளக்காரர்களை குறிவைத்துதான் இ.எம்.ஐ, பர்சனல் லோன், கிரெடிட் கார்டு போன்றவற்றை நிதி நிறுவனங்கள் செயல்படுத்தி வருகின்றன. இவற்றில் 24% அளவுக்கு அதிக வட்டி விதிக்கப்படும். உங்களுடைய கிரெடிட் நிலை எப்படி இருக்கிறது என்பதை யெல்லாம் இவர்கள் பார்ப்பதில்லை.

உங்கள் நிதிநிலைக்கு மீறி நீங்கள் செலவு செய்யும்பட்சத்தில் கொண்டாட்டங்கள் எல்லாம் முடிந்த பிறகு, குழந்தைகளின் பள்ளிக் கட்டணம், இன்ஷூரன்ஸ் பிரீமியம் போன்ற செலவுகள் வரும். அப்போது கையில் காசு இல்லாமல் நிதி நெருக்கடிக்கு ஆளாகும் நிலை உண்டாகும்.

கிரெடிட் கார்டை சரியாக நிர்வாகம் செய்யத் தெரியுமா?

நீங்கள் கிரெடிட் கார்டை சரியாக நிர்வகிப்பவராக இருந்தால், அதைப் பயன்படுத்தி செலவுகளை மேற்கொள் ளலாம். இஷ்டத்துக்கு செலவு செய்பவர் எனில், கிரெடிட் கார்டில் செலவை வங்கியில் சொல்லி ஸ்பெண்டிங் லிமிட் செட் செய்துகொள்ளலாம்.

இப்போது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஆசிய நாடுகள் உட்பட பல நாடுகள் பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கும் நிலையில் உள்ளன. அவ்வாறு ஒரு நெருக்கடி வரும்பட்சத்தில் இந்தியா அதன் விளைவுகளைச் சந்திக்கும். இது போன்ற சூழலில் ஏற்றுமதித் தொழில்கள் வெகுவாகப் பாதிக்கும். ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஏற்கெனவே ஊழியர்களை வேலை நீக்கம் செய்துவருகின்றன. ஐ.டி துறையிலும் மூன்லைட்டிங் போன்ற பிரச்னைகள் தலைதூக்கி இருப்பதால், யாருக்கு எப்போது வேலை பறிபோகும் என்று சொல்ல முடியாது. எனவே, நல்ல வேலையில் இருக்கிறோம், நன்றாக சம்பாதிக்கிறோம் என்பதற்காக செலவுகளை இஷ்டத்துக்கு செய்துவிடக் கூடாது. இரண்டு வருமானம் உள்ள குடும்பங்கள், நிதி சார்ந்த திட்டமிடல் இருந்தால் இது போன்ற நெருக்கடிகளை ஓரளவுக்கு சமாளிக்கலாம். ஆனால், ஒரு சம்பளம் மட்டுமே இருக்கும் குடும்பங்கள் செலவுகளை கவனமாக மேற்கொள்ள வேண்டும். கொண்டாட்டங் களும் செலவுகளும் படை எடுக்கும் இந்தக் காலத்தில்தான் அதிகமான மருத்துவச் செலவுகளும் வரும். எதிர் பாராமல் வரும் மருத்துவச் செலவுகளையும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். எனவே, பொறுப்புடன் இந்த வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும்” என்றார் அவர்.

தீபாவளி செலவுகளை எளிதில் திட்டமிட்டு சமாளிக் கும் உத்திகள் பற்றி மியூச்சுவல் ஃபண்ட் நிபுணரும், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் நிறுவனருமான சொக்கலிங்கம் பழனியப்பனிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்து சொன்னார் அவர்.

தீபாவளி ஷாப்பிங்... வலைவிரிக்கும் விதவிதமான ஆஃபர்ஸ்… சிக்காமல் லாபம் பார்க்கும் சூப்பர் டிப்ஸ்!

தீபாவளி சீட்டில் சேரும்முன்...

‘‘தீபாவளி போன்ற பண்டிகைக்கான செலவுகள் தவிர்க்க முடியாதவை எனும்போது முன்கூட்டியே அதற்கான நிதியைத் தயார் செய்துவைத்துக்கொண்டால், தீபாவளி சமயத்தில் பணத்துக்கு என்ன செய்வது என்ற கவலையே இருக்காது.

தீபாவளி செலவுக்கான பட்ஜெட்டை போட்டு மொத்த தொகையை 12-ல் வகுத்து மாதம்தோறும் அதை சேமித்து வரலாம். பெரும்பாலான மக்கள் தீபாவளி சீட்டு என்ற திட்டத்தில் சேர இதுதான் காரணம். ஆனால், இந்தத் திட்டங்களில் சிலர் பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றி விடுகிறார்கள். எனவே, இது போன்ற திட்டங்களில் சேரும்முன் உஷாராக இருக்க வேண்டும். ஆர்.டி, அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்ட், கடன் ஃபண்டுகள் போன்ற வற்றில் இந்தப் பணத்தை சேமித்து வரலாம். இதில் 5 - 6% வரை வருமானம் கிடைக்கும்.

மொத்தமாகப் பணம் சேமிக்க முடிந்தவர்கள் ஃபிக்ஸட் டெபாசிட்டில் சேமிக்கலாம். ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள் நல்ல வட்டி தருகின்றன. இது போன்ற குறுகிய கால சேமிப்பு களுக்கு ஆர்.டி என்கிற ரெக்கரிங் டெபாசிட் சேமிப்பு சரியாக இருக்கும். மியூச்சுவல் ஃபண்டிலும் சேமிக்கலாம் ஆனால், வருமானம் என்பது சந்தையின் செயல்பாட்டைப் பொறுத்தே இருக்கும்.

குடும்பத்தின் வருமானத்தை உயர்த்தும் பொருள்கள்...

தீபாவளியின்போது பலர் வீட்டு உபயோகப் பொருள் கள், வாகனங்கள் வாங்குவது வழக்கம். அப்படி வாங்கும் போது பட்ஜெட், கையில் இருக்கும் பணம், கடன் எவ்வளவு என்பதைக் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். குடும்பத்தில் எல்லோருக்கும் பயன்படக் கூடியதாக இருக்கும் பொருளுக்கு முதலில் முக்கியத்துவம் தரலாம். பிள்ளைகளின் படிப்புக்கு உதவுகிற அல்லது குடும்பத்தின் வருமானத்தை உயர்த்த பயன் படுகிற பொருள்களுக்கு முக்கியத்துவம் தரலாம். கைவசம் பணம் இல்லை எனில், பணத்தைச் சேமித்து பின்னர் வாங்கிக்கொள்ளலாம் என்ற தீர்மானத்துக்கு வருவது நல்லது.

அப்படியும் வாங்கித்தான் ஆக வேண்டும். தவிர்க்க முடியாது எனில், குறைந்த தொகை எனில், அதை 0% இ.எம்.ஐ மூலம் வாங்கிக்கொள்ளலாம். புராசஸிங் கட்டணம் இருக்கும் என்றாலும், கையில் பணமில்லாதபட்சத்தில் இந்த வசதியைப் பயன் படுத்திக்கொள்ளலாம்.

இப்போது ஃபைனான்ஸ் நிறுவனங்கள் உற்பத்தி யாளர்களுடன் சேர்ந்து கடன் வசதிகளை வழங்கு கின்றன. அவசிய தேவை, தவிர்க்க முடியாத பொருள் எனில், கடன் வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். பெரிய தொகை எனில் வங்கிகள் மூலமாகவே கடன் வாங்கிக்கொள்ளுங்கள். தண்டல் போன்ற கடன் வசதிகளில் மாட்டிக்கொள்ள வேண்டாம்.

பொருள்களை வாங்கும்முன் நான்கைந்து கடைகளிலும், இ-காமர்ஸ் தளங்களிலும் விலையை ஒப்பிட்டுப் பாருங்கள். எங்கெல்லாம் என்னென்ன ஆஃபர்கள் கிடைக்கின்றன, சலுகைகள் கிடைக் கின்றன என்று பார்த்து, பின்னர் வாங்கினால் கணிசமான பணத்தை மிச்சப்படுத்தலாம். பணமாகத் தந்து வாங்குவதற்கும், இ.எம்.ஐ-யில் வாங்குவதற்கும் உள்ள விலை வித்தியாசத்தைப் பாருங்கள்; எது லாபகரமாக இருக்குமோ, அந்த வசதியைப் பயன் படுத்திக்கொள்ளலாம். இ.எம்.ஐ, கடன் மூலம் பொருள்களை வாங்கினால் தவறாமல் தவணைத் தேதியில் பணத்தை செலுத்திவிட வேண்டும். இல்லாவிட்டால் அபராதம் செலுத்த வேண்டிவரும். பிறகு, ஆஃபரில் பொருள் வாங்கியும் பயனில்லாமல் போய்விடும். ஆஃபர், சலுகை என்பதற்காக அதிக செலவுகளை இழுத்துப் போட்டுக் கொள்ளாதீர்கள்.

கையில் பணமிருக்கிறது ஆனாலும் இ.எம்.ஐ மூலம் பொருள்களை வாங்க விரும்புபவர்கள், கையிலிருக்கும் தொகையைக் கடன் ஃபண்டுகளில் முதலீடு செய்து ஒவ்வொரு மாதமும் அதிலிருந்து பணத்தை எடுத்து இ.எம்.ஐ-ஆக செலுத்தலாம். இவ்வாறு செய்வதன் மூலம் பொருளுக்கான தொகை மற்றும் வட்டி போக 3% அளவுக்கு வருமானமும் கிடைக்கும். இது 3% அளவுக்கு தள்ளுபடியில் பொருள் வாங்குவதற்கு ஒப்பாகும்.

தீபாவளி ஷாப்பிங்... வலைவிரிக்கும் விதவிதமான ஆஃபர்ஸ்… சிக்காமல் லாபம் பார்க்கும் சூப்பர் டிப்ஸ்!

பயன்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்...

வீட்டு உபயோகப் பொருள்களை வாங்கும்போது பயன்பாட்டின் அடிப்படையில் வாங்க வேண்டும், அழகாக இருக்கிறது என்பதற்காகவோ, தேவைக்கு அதிகமான வசதிகள் இருப்பது போலவோ வாங்க வேண்டாம். குறிப்பாக, வீட்டுக்கு ஃபர்னிச்சர்கள் வாங்கும்போது இந்தத் தவறு அதிகம் நடக்கிறது. பார்க்கும்போது ஆசையில் வாங்கிவிட்டு, வீட்டுக்குக் கொண்டு சென்றால் வீட்டில் அதற்கு இடமே இருக்காது. இப்போதெல்லாம் எந்த ஒரு பொருளும் கடையிலிருந்து வெளியே கொண்டு வந்த அடுத்த நிமிடம் அதன் விலை பாதியாகக் குறைந்துவிடும். எனவே, வாங்கும்முன் சாதக, பாதகங்கள் அனைத்தையும் அலசிப் பார்த்து வாங்குங்கள்.

ஆன்லைன், ஆஃப்லைன் டீல்கள் இரண்டையும் பார்த்து ஒப்பிட்டு பின்னர் எங்கு வாங்குவது என்று முடிவெடுக்கலாம். சில நேரங்களில் ஆன்லைன் விலையைச் சொல்லி தெரிந்த கடைகளில் பேரம் பேசினால் விலையைக் குறைத்துத் தருகிறார்கள். எனவே, எல்லா நேரமும் ஆன்லைனிலேயே வாங்க வேண்டியதில்லை. பிராண்ட் ஆடைகளை ஆன்லைனில் வாங்கலாம். ஆனால், சாதாரண பிராண்ட் அல்லாத ஆடைகள் பெரும்பாலும் ஆன்லைனில் வாங்குவது வாடிக்கையாளர் களுக்கு அதிருப்தியைத் தருவதாக இருக்கிறது. எனவே, உஷாராக இருக்க வேண்டும்.

கார் வாங்க விரும்புபவர்கள் அது அவசியமா என்பதை முதலில் பார்க்க வேண்டும். பார்க்கிங் செய்ய வசதி இல்லாத வர்கள் தயவு செய்து கார் வாங்காமல் இருப்பதே சரி. பெரும்பாலானவர்கள் கடனில் தான் கார்களை வாங்குகிறார்கள். இப்போதுகூட தீபாவளிக்கு 10 லட்சம் மோட்டார் வாகனங்கள் புக் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 90% கடனில்தான் வாங்கப்படுகின்றன. வாகனங் களின் விலை இரண்டு மடங்கு உயர்ந்திருக்கிறது. இந்தச் சூழலி லும் வாகனங்கள் விற்பனை அதிகமாக நடக்கிறது. கடனில் கார் வாங்கிவிட்டு நிறுத்தவும் இடமில்லாமல், பயன்படுத்தவும் செய்யாமல் வீணாக்குபவர்களின் எண்ணிக்கை அதிகம்’’ என்றார் அவர்.

திட்டமிட்டு செலவு செய்தால் தினமும் தீபாவளி...

என்னதான் நிறுவனங்கள் ஆஃபர்கள், சலுகைகள் என விளம்பரங்களால் நம் ஆசை யைத் தூண்டினாலும் நமக்கு என்ன வேண்டும், வேண்டாம் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும். நம்முடைய நிதிநிலைக்கேற்ப நம்முடைய செலவுகளைத் திட்டமிட்டு செய்பவர்கள் அனைவருக்கும் தினமும் தீபாவளிதான்!