Published:Updated:

கல்விக் கடன்... வரமா, சுமையா..?

கல்விக் கடன்
பிரீமியம் ஸ்டோரி
கல்விக் கடன்

கல்விக் கடன்

கல்விக் கடன்... வரமா, சுமையா..?

கல்விக் கடன்

Published:Updated:
கல்விக் கடன்
பிரீமியம் ஸ்டோரி
கல்விக் கடன்

இந்தியாவில் பணவீக்க விகிதம் சுமார் 6% என்று கூறப்பட்டாலும், இரண்டு முக்கியமான துறைகளில் மட்டும் பணவீக்கம் 15 முதல் 18 சதவிகிதத்தைத் தாண்டுகிறது. ஒன்று, மருத்துவத்துறை; மற்றொன்று, கல்வித்துறை. ‘ஒவ்வொரு இந்தியனுக்கும் வீடு’ என்பது அரசின் கனவாக இருக்கலாம்; ஆனால், ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி என்பதே பெற்றோரின் கனவாக உள்ளது. அது கனவாகவே போய் விடுமோ என்று அஞ்சும் அளவுக்கு கல்விச் செலவுகள் கைக்கெட்டாமல் உயர உயரப் பறக்கின்றன.

சுந்தரி ஜகதீசன்
சுந்தரி ஜகதீசன்

கல்விக் கடன் ஏன்?

அரசின் இலவசக் கல்வி முயற்சிகள் பள்ளிக் கல்வி அளவில் நின்றுவிடுகின்றன. கல்லூரி என்று வரும்போது நன்கு படிக்கும் மாணவர்களுக்கும், பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கும் ஓரளவு அரசின் உதவி கிடைக்கிறது. இவர்கள் ஒரு 20% எனில், தாய், தந்தையர் உதவியால் உயர்கல்வி பெறும் மாணவர்கள் 40%. மீதி 40% மாணவர்கள் தங்கள் கல்விக் கனவை நிறைவேற்ற நம்பியிருப்பது வங்கிகள் தரும் கல்விக் கடனையே.

‘காலேஜ் ஃபீஸ் கட்டப் பணமில்லையா? இருக்கவே இருக்கிறது எஜுகேஷன் லோன்’ என்று எளிதாகக் கூறிவிடுகிறோம். பிள்ளை களின் கல்வி குறித்த முயற்சிகளைத் தொடர்வதையே வாழ்க்கையாக நடத்தி வரும் வசதி குறைந்த பெற்றோரும் கல்விக் கடனைக் கடவுள் தந்த வரமாக எண்ணி பெருமுயற்சி செய்து அதைப் பெறுகின்றனர். ஆனால், கடனுடன் கல்லூரியில் சேரும் எத்தனை மாணவர்களால் அதை வெற்றிகர மாகக் கட்டி முடிக்க முடிகிறது? அதிலும் இந்தக் கொரோனா காலத்தில் கல்லூரிப் படிப்பை முடித்த தலைமுறையின் நிலைமை மிக மோசமாகியுள்ளது.

கல்விக் கடன்... வரமா, சுமையா..?

கொரோனாவுக்குப் பின்னர்...

வங்கிகள் ரூ.4 லட்சம் வரை பிணை ஏதுமின்றிக் கல்விக் கடன் தருகின்றன. பிணை இல்லாத கடன்களில் வங்கிகளுக்கு ரிஸ்க் அதிகம் என்பதால், வட்டி விகிதமும் மிக அதிகம். நான்கு வருடங்களுக்கு முன்பு தனியார் வங்கி ஒன்றில் 13.25% வட்டி விகிதத்தில் கல்விக் கடன் பெற்று, இன்று இன்ஜினீயரிங் படிப்பை முடித்து ‘அப்பாடா’ என்று வெளியே வந்து ‘இனி வேலையில் சேர்ந்து கடனைக் கட்டி முடித்து விட வேண்டும்’ என்ற முனைப்புடன் இறங்கும் மாணவர்கள் எதிர்கொள்வது கொரோனாவால் ஏற்பட்ட வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் சம்பளக் குறைப்பு. நாம் இன்று வரவேற்றுக் கொண்டாடும் ஆட்டோ மேஷன்களும், டெக்னாலஜிகல் முன்னேற்றங் களும் ஐ.டி துறையில் மட்டுமன்றி வேறு பல துறைகளிலும் வேலைவாய்ப்புகளைக் கணிசமாகக் குறைத்துவிட்டது.

சிறந்த உழைப்பும் ஆர்வமும் நிறைந்த இளம் இன்ஜினீயர்கள்கூட குறைந்த சம்பளம் தரும் சிறு கம்பெனிகளில் வேலை பார்க்க நேர்ந்துள்ளது. ரூ.2.5 லட்சம் கடன் வாங்கிய இளம் இன்ஜினீயர் ஒருவர் அடுத்த ஏழெட்டு வருடங்களுக்கு மாதம் ரூ.6,300 கட்ட வேண்டி யுள்ளது. அதைவிடக் குறைந்த சம்பளம் பெற்று உணவு, உறைவிடம், போக்குவரத்து போன்ற செலவுகளைச் சமாளிக்க முடியாமல் திணறும் அவர், இந்த இ.எம்.ஐ-யை மாதம்தோறும் கட்டாவிட்டால் வட்டியும் அபராதமும் ஒருபக்கம் சுமையை அதிகரிக்கிறது. அத்துடன் கடன் வரலாறும் (credit history) பாதிக்கப்பட்டு வருங்காலத்தில் நல்ல கடன்களைக் குறைந்த வட்டி விகிதத்தில் பெறும் வாய்ப்பையும் இழக்க நேரிடுகிறது. ஏற்கெனவே கல்விக் கடன் பெற்றவர்கள் இந்த நிலைமையை எப்படிச் சமாளிப்பது?

கடன் மறுசீரமைப்பு (Loan Restructuring)

ஆகஸ்ட் 2020 மற்றும் மே 2021-ல் ரிசர்வ் வங்கி கல்விக் கடன்களை மறுசீரமைக்க வங்கிகளுக்கு அனுமதி தந்துள்ளது. ஆகவே, நாம் கடன் பெற்ற வங்கியை அணுகி, நம் நிலைமையை விளக்கி, அதற்கான சான்றுகளையும் சமர்ப்பித்தால், கடன் மறுசீரமைப்பு பெறலாம். அதன் மூலம் 1. இதுவரை விதிக்கப்பட்ட வட்டி, கடன் முதலுடன் சேர்க்கப்பட்டு அபராதங்கள் விதிக்கப்படுவது குறையலாம். 2. திருப்பிக் கட்ட வேண்டிய தொகையும் காலமும் மறுநிர்ணயம் செய்யப்படலாம். 3. இ.எம்.ஐ கட்டவே வழியில்லாத சிலருக்கு இரண்டு வருட சலுகைக் காலம் (Moratorium) கிடைக்கலாம். இவற்றின் மூலம் நம் கடன் வாராக்கடனாக மாறி நம் கடன் வரலாறு பாதிப்படைவதைத் தடுக்க இயலும். இவற்றில், ‘கூடிய சீக்கிரம் நல்ல நிலைமையை அடைய முடியும்’ என்ற நிலையில் இருப்பவர்கள் இ.எம்.ஐ மறுநிர்ணயத்தைத் தேர்ந்தெடுக்கலாம். ‘நிலைமை மாற அதிக காலம் பிடிக்கும்’ என்ற நிலையில் உள்ளவர்கள் இரண்டு வருட கடன் சலுகைக்கு விண்ணப்பிக்கலாம்.

கல்வித் துறை அமைச்சகம் (Ministry of Education) தரும் மானியம்

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் கல்விக் கடன் பெற்றிருந்தால், கல்வித்துறை அமைச்சகம் அவர்களுக்கு மானியம் வழங்குகிறது. இதைப் பெற மொத்தக் குடும்பத்தின் வருட வருமானம் ரூ.4.5 லட்சத்துக்குக் குறைவாக இருக்க வேண்டும். தகுந்த சான்றுகளுடன் விண்ணப்பித்தால், படிப்புக் காலத்திலும் மற்றும் ஒரு வருட மொரொடோரியத்தின் போதும் இவர்களுக்கு விதிக்கப்பட்ட வட்டியை மத்திய அரசு வங்கிக்குச் செலுத்திவிடுகிறது.

கல்விக் கடன் பெற விரும்புவர்கள் செய்ய வேண்டியது என்ன?

பிணை இல்லாத கடன் வாங்கினால் அதிக வட்டிவிகிதம் விதிக்கப்படும் என்று பார்த்தோம். ஆகவே, சற்று வசதி யுள்ளவர்கள் வீடு, நிலம், ஃபிக்ஸட் டெபாசிட் போன்ற வற்றைப் பிணையாக வைத்து சற்றுக் குறைந்த வட்டி விகிதத்தில் கல்விக் கடன் பெறலாம். படிப்புக் காலத்தில் விதிக்கப்படும் சிம்பிள் வட்டியை அவ்வப்போது கட்டி விட்டால், கடன் முதல் அதிகரிப்பதைத் தடுக்கலாம். அந்த அளவுக்கு இ.எம்.ஐ சுமை குறையும். கல்விக் கடனை முன்கூட்டி கட்ட அபராதம் எதுவும் கிடையாது என்பதால், கல்விக் கடன் வட்டி விகிதத்தை விடக் குறைந்த விகிதத்தில் கிடைக்கும் கடனை வாங்கி கல்விக் கடனை முன்கூட்டி கட்டலாம். அல்லது ஒரு பகுதி யையாவது குறைக்கலாம்.

வசதி படைத்தவர்களே உயர் கல்வி பெறமுடியும் என்பதை உடைத்தமைக்கு கல்விக் கடனுக்கு நன்றி செலுத்தலாம். ஆனால், கல்வி தர வேண்டிய அரசும் பெற்றோரும் தாங்கள் சுமக்க இயலாத கல்விக் கடனை மாணவர்களின் இளம் தோள் களுக்கு மாற்றியுள்ளனர் என்பதே உண்மை. இந்த இருவரில், பெற்றோர், ‘கல்விக் கடன் அவன்/அவள் சம்பாதித்துக் கட்டிக்கொள்ளட்டும்’ என்று இருக்காமல் படிப்புக் காலத்திலேயே வட்டியைக் கட்டும் பொறுப்பையாவது ஏற்கலாம். வீட்டுக் கடன், தங்க நகைக் கடன் போன்றவற்றுக்கு 7% அளவுக்கு வட்டி குறைப்பை ஊக்குவிக்கும் அரசு, மாணவர்களின் கல்விக் கடனுக்கு 13.25% வட்டி விதிப்பதை சற்று குறைக்கும்படி உத்தரவிடலாம்.

வாழ்க்கைப் பந்தயத்தில் ஓடத் தயாராக நிற்கும் இளம் தலைமுறையின் கால்களைச் சுற்றும் கயிறாக, சுமையாகக் கல்விக் கடன் மாறிவிடக் கூடாதல்லவா?