Published:Updated:

அவசரகால செலவு... எந்தெந்த வழிகளில் பணம் திரட்டலாம்?

எமெர்ஜென்சி ஃபண்ட்
பிரீமியம் ஸ்டோரி
எமெர்ஜென்சி ஃபண்ட்

எமெர்ஜென்சி ஃபண்ட்

அவசரகால செலவு... எந்தெந்த வழிகளில் பணம் திரட்டலாம்?

எமெர்ஜென்சி ஃபண்ட்

Published:Updated:
எமெர்ஜென்சி ஃபண்ட்
பிரீமியம் ஸ்டோரி
எமெர்ஜென்சி ஃபண்ட்

மாதச் சம்பளக்காரர்கள், தொழில் செய்ப வர்கள் என யாருக்கு வேண்டுமானாலும் அவசரச் செலவு வரலாம். கோவிட் 19 பாதிப்பின்போது பலருக்கு வேலை இழப்பு அல்லது சம்பள இழப்பு ஏற்பட்டபோது பலரும் செலவுக்குப் பணமில்லாமல் மிகவும் தவித்துப்போனார்கள். கடன் வாங்கி அல்லது கையில் உள்ள தங்க நகையை விற்று பலரும் நிலைமையைச் சமாளித்தார்கள். இது மாதிரி யான ஒரு நெருக்கடி மீண்டும் வராது என்று உறுதியாகச் சொல்ல முடியாது. அப்படி ஒரு நிலை வந்தால், அதைச் சமாளிக்க எந்த வகை அடமானக் கடனைப் பயன்படுத்தலாம் என்பது குறித்துப் பார்ப்போம்.

என்.விஜயகுமார் 
நிதி ஆலோசகர் 
https://www.vbuildwealth.com/
என்.விஜயகுமார் நிதி ஆலோசகர் https://www.vbuildwealth.com/

1. தங்க நகை அடமானக் கடன்...

நம்மில் பலருக்கும் அவசரச் செலவுக்குக் கைகொடுக்கும் சொத்தாக தங்கநகை இருக்கிறது. இப்போது பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் விரைவாகத் தங்க நகைக் கடன்கள் தருவதால், இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தங்க நகைகளைப் பிரித்து அடமானம் வைப்பது மூலம் நகைகளை விரைந்து மீட்க முடியும். தங்கத்தை 18 வயதுக்கு மேற்பட்ட யாரும் அடமானம் வைத்து கடன் பெற முடியும். பொதுவாக, 18 காரட் முதல் 22 காரட் நகைகளுக்குத்தான் கடன் கிடைக்கும். இதற்குக் கீழ் தரம் குறைந்த நகைகளுக்குக் கடன் கிடைக் காது. அதேபோல், தங்கக் கட்டிகள், தங்க நாணயங்களுக்கு கடன் கிடைப்பதில்லை. இவற்றில் வளையம் பொருத்தப்பட்டிருக்கும்பட்சத்தில் கடன் தருகிறார்கள். இந்தக் கடனுக் கான வட்டி வங்கிகளில் 7.5% - 12% ஆகவும் தனியார் நிதி நிறுவனங்களில் 9% - 16% வரைக் கும் உள்ளது. தங்கத்தின் மதிப்பில் சுமார் 75% கடன் கிடைக்கும். கடன் மதிப்பில் 1% - 2% பரிசீலனைக் கட்டணம் செலுத்த வேண்டும்.

ஆதார் மற்றும் பான் இருந்தால்தான் தங்க நகைக் கடன் கிடைக்கும். இந்தக் கடனையும் சரியாகப் பணம் கட்டி திரும்பவில்லை எனில், கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தங்க நகைக் கடன் மாதத் தவணை (இ.எம்.ஐ) முறையில் கட்ட ஆரம்பித்து விரைந்து அடைப்பது வட்டியைக் கணிசமாக மிச்சப்படுத்தவும், நகை ஏலத்துக்கு வருவதையும் தடுக்கும்.

2. ஆயுள் காப்பீட்டு பாலிசிகள்...

இன்ஷூரன்ஸைப் பொறுத்தவரை, நம் மக்கள் அதிக அளவில் எண்டோவ்மென்ட் பாலிசியை எடுத்திருக்கிறார்கள். இந்த பாலிசிகளை அடமானம் வைப்பது மூலம் விரைந்து கடன் பெறமுடியும். பாலிசியின் சரண்டர் மதிப்பில் 75% - 80% தொகையானது கடனாகக் கிடைக்கும். கடனுக்கான வட்டி 10 - 14 சதவிகிதமாக இருக்கிறது.

பாலிசி எடுத்த நிறுவனத்திலோ, வங்கி அல்லது நிதி நிறுவனத்திலோ பாலிசி அடமானக் கடன் பெற முடியும். அவசரச் செலவுக்குக் கடன் எடுத்திருக்கும் நிலையில், பாலிசிக்கான பிரீமியத்தை பலரும் ஒழுங்காகக் கட்டாமல் விட்டுவிடுகிறார்கள். இதனால் பாலிசி காலாவதி ஆகிவிடும் அபாயம் இருக் கிறது. எனவே, முடிந்தவரைக்கும் வட்டி மற்றும் அசலில் ஒரு பகுதியை இடையிடையே கட்டி கூடியசீக்கிரத்தில் கடனை முடிப்பது நல்லது. பாலிசியின் முதிர்வுக் காலத்துக்குள் கடனை முடிக்க வேண்டும். இடையில் பாலிசி தாரருக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் கடன் மற்றும் வட்டி கழிக்கப்பட்டு, மீதித் தொகை மட்டுமே குடும்பத்தினருக்கு இழப்பீடாகக் கிடைக்கும்.

அவசரகால செலவு... எந்தெந்த வழிகளில் பணம் திரட்டலாம்?

3. ஃபிக்ஸட் டெபாசிட்

நம்மில் ஃபிக்ஸட் டெபாசிட் போடாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அவர்கள் அவசரச் செலவுக்கு அந்த ஃபிக்ஸட் டெபாசிட் பத்திரத்தை அடமானம் வைத்து கடன் பெறலாம். அதன் மதிப்பில் சுமார் 80% கடன் பெறலாம்.எஃப்.டி-க்கு வங்கி என்ன வட்டி வழங்குகிறதோ, அதைவிட 1% - 2% கூடுதலாக எஃப்.டி அடமானக்கடனுக்கு வட்டி விதிக்கப்படும். இந்தக் கடனை எஃப்.டியின் முதிர்வுக் காலம் வரைக்கும்தான் எடுக்க முடியும். இந்தக் கடனைப் பெற பொதுவாக, பரிசீலனைக் கட்டணம் மற்றும் கடனை முன்கூட்டியே அடைப்பதற்கான அபராதம் கிடையாது.

4. நிறுவனப் பங்குகள் அடமானக் கடன்

ஒருவர் முதலீடு செய்திருக்கும் நிறுவனப் பங்கை அடமானம் வைத்துக் கடன் பெறலாம். பங்கின் மதிப்பில் அதிகபட்சம் 50% தொகை கடனாகக் கிடைக்கும். பங்குகளை டீமேட் மூலம் வாங்கியிருப்பது முக்கியமாகும். அனைத்து பங்குகளுக்கும் அடமானக் கடன் கிடையாது. பெரும்பாலும் மிகப்பெரிய நிறுவனப் பங்கு களுக்குதான் கிடைக்கும். வங்கிகள் மற்றும் நிதி நிறு வனங்கள், அவை கடன் தரும் நிறுவனப் பங்குகளின் பட்டியலை வைத்திருக்கும். அந்தப் பட்டியலில் இருக்கும் பங்குகளை வைத்திருப்பவர் களுக்குதான் கடன் கிடைக்கும். கடனை அடைக்கும் வரைக்கும் பங்குகளை விற்க அனுமதி இல்லை. அந்தப் பங்குகளுக்கு வழங்கப்படும் டிவிடெண்ட் தொகை முதலீட்டாளருக்கு கிடைக்கும். கடனுக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 9.5% முதல் 14 சதவிகிதமாக உள்ளது. பரிசீலனைக் கட்டணம் உண்டு. பங்கின் மதிப்பு மிகவும் குறைந்து விட்டால், கடன் தொகையில் ஒரு பகுதியைக் கட்ட வங்கி அல்லது நிதி நிறுவனங்கள் நெருக்கடி தரக்கூடும்.

5.மியூச்சுவல் ஃபண்ட் அடமானக் கடன்

பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள், கடன் ஃபண்டுகளை அடமானம் வைத்து அவசரச் செலவுக்கு கடன் வாங்க முடியும். ஈக்விட்டி ஃபண்டுகள் என்கிறபோது மதிப்பில் 50%, கடன் ஃபண்டுகள் என்றால் 80% வரைக்கும் கடன் கிடைக்கும்.

நிறுவனப் பங்குகள் போலவே, வங்கிகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் பட்டியல் வைத்திருக்கும். அவற்றுக்குதான் அடமானக் கடன் கொடுக்கும். முதலீடு செய்திருக்கும் நிறுவனத் தின் மூலமும் அடமானக் கடன் பெற முடியும். இதை ஆன்லைன் மூலம் சுலபமாகப் பெறலாம்.மேலும், ஓவர் டிராஃப்ட் முறையில் பயன்படுத்திய தொகைக்கு மட்டும் வட்டி கட்டினால் போதும்.

டீமேட் வடிவில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு இருந்தால், சுலபமாகக் கடன் கிடைக்கும். குறைந்தபட்சம் ரூ.50,000 அதிக பட்சம் ரூ.20 லட்சம் என இந்த அடமானக் கடனைப் பெற முடியும். வட்டி விகிதம் ஆண்டுக்கு 10% - 15% ஆகும்.

6. சம்பளக் கடன்

சம்பளத்தின் அடிப்படையில் வங்கிகள், நிதி நிறுவனங்கள் தாராளமாகக் கடன் தருகின்றன. இந்தக் கடன் ஒருவரின் சம்பளம் மற்றும் அவரின் கடந்த 3 - 6 மாத வங்கிக் கணக்கு அறிக்கையின் அடிப்படையில் இந்தச் சம்பளக் கடன் வழங்கப்படுகிறது.

மாதச் சம்பளம் குறைந்தது ரூ.12,000 - ரூ.15,000 இருக்க வேண்டும். மாதச் சம்பளத்தைப் போல் சுமார் 3 முதல் 6 மடங்கு கடன் கிடைக்கும். இந்தக் கடனை அதிகபட்சம் ஓராண்டுக்குள் திருப்பிக் கட்ட வேண்டும். ஆண்டு வட்டி 12% தொடங்கி 24% வரைக்கும் செல்லும்.

சம்பளத்தின் அடிப்படையில் ஆப்கள் மூலம் கடன் வழங்கும் நிறுவனங்கள் இப்போது அதிகம் வந்துவிட்டன. ஆனால், வட்டி விகிதம், இதரக் கட்டணங்கள் இவற்றில் மிக அதிகமாக இருக்கும்.

7. கார் கடன்

சொந்தமாக கார் வைத்திருப் பவர்கள் ஓர் அவசரத்துக்கு அவர் களின் காரை அடமானம் வைத்து கடன் பெறமுடியும். இதற்கு காரின் வயது ஐந்து ஆண்டு களுக்குள் இருக்க வேண்டும். மேலும், நல்ல நிலையில் இருந்தால்தான் கடன் கிடைக்கும். காரின் மதிப்பில் 50%-75% வரை கடன் கிடைக்கும். பரிசீலனைக் கட்டணம் 1%-2%, ஆவணக் கட்டணம், அடமானக் கட்டணம் எனப் பல கட்டணங்கள் இருக் கின்றன. கடனுக்கான வட்டி 12-18 சதவிகிதமாக இருக்கும். கடனை 1-7 ஆண்டுகள் வரை அடைக்கும் வசதி இருக்கிறது.

கவனிக்க வேண்டிய விஷயங்கள்..!

 எவ்வளவு தொகை வேண்டுமோ, அவ்வளவுக்கு மட்டுமே கடன் வாங்குங்கள். அதிக தொகை வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொன்னால், மறுத்துவிடுங்கள்.

 அதிக தொகை தேவைப்படுகிறது; ஒரே கடனாக எடுத்துக்கொள்ளலாம் என்று அதிக வட்டியிலான தனிநபர் கடன் போன்றவற்றை வாங்க வேண்டாம். குறை வான வட்டியில் கிடைக்கும் கடன்களைத் திரட்டிவிட்டு, பாக்கித் தொகைக்கு அதிக வட்டியிலான கடன்களைக் கவனிக்கலாம்.

 அவசரத் தேவைக்கு ஒருவரிடம் பெரிய தொகையை கடனாகக் கேட்டால் கிடைப்பது கஷ்டம். முடிந்தவரைக்கும் பலரிடமிருந்து முடிந்த தொகையைத் திரட்ட முயற்சி செய்யுங்கள். எவ்வளவு தொகை தேவை, இதுவரைக்கும் எவ்வளவு கிடைத்திருக்கிறது என்பதை வெளிப்படையாகச் சொல்லும்போது நண்பர்கள், உறவினர்களிடம் கடன் சுலபமாகக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

சொத்து அடமானக் கடன்!

உங்களின் அவசரச் செலவுக்கு சொத்தை அடமானம் வைத்து உடனடியாகக் கடன் பெற முடியுமா என்பது சந்தேகம்தான். கடன் கிடைக்க எப்படியும் ஒரு வாரம், 10 நாள்கள் ஆகிவிடும். அது வரைக்கும் உங்களின் அவசரப் பணத் தேவையை வேறு வழிகளில் சமாளிக்க முடியும் எனில், சமாளித்துவிட்டு, அதன்பிறகு சொத்து அடமானக் கடன் அல்லது ஏற்கெனவே வீட்டுக் கடன் வாங்கி இருந்தீர்கள் எனில், டாப்அப் கடனை வாங்கி அந்தக் கடனை அடைப்பது லாபகரமாக இருக்கும். காரணம், இந்த சொத்து அடமானக் கடனுக்கான வட்டி விகிதம் (9%-11%) குறைவாக இருக்கும். மேலும், கடனை அடைக்க அதிக அவகாசமும் (அதிகபட்சம் 15 ஆண்டுகள்) தரப்படும். சொத்தின் சந்தை மதிப்பில் 60% - 70% கடன் கிடைக்கும்.

தனிநபர் கடன், கிரெடிட் கார்டு கடன்... எப்போது பயன்படுத்த வேண்டும்?

இருப்பதிலே மிக அதிக வட்டி உள்ள கடன் கிரெடிட் கார்டு கடன் ஆகும். ஆண்டு வட்டி 36% - 42% வரை இருக்கிறது. இதற்கு அடுத்த இடத்தில் தனிநபர் கடன் இருக்கிறது. இதற்கு ஆண்டு வட்டி 16% - 24% வரை இருக்கும். வேறு எந்தக் கடன்களையும் வாங்க முடியவில்லை; மிகவும் அவசரம் எனில் மட்டுமே இந்த இரு கடன்களையும் வாங்க வேண்டும். அப்படியே வாங்கிவிட்டீர்கள் எனில், எவ்வளவு விரைவாக அடைக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரமாக அடைப்பது நல்லது. இந்தக் கடன்களை அடைக்க வேறு வட்டி குறைவான கடன்களை வாங்குவதில் தவறு ஒன்றும் இல்லை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism