Published:Updated:

ஃபேமிலி பென்ஷன்... தங்கு தடையின்றி கிடைக்க தவிர்க்க வேண்டிய தவறுகள்! நீங்களும் அறிந்துகொள்ளுங்கள்...

ஃபேமிலி பென்ஷன்
பிரீமியம் ஸ்டோரி
ஃபேமிலி பென்ஷன்

F A M I L Y P E N S I O N

ஃபேமிலி பென்ஷன்... தங்கு தடையின்றி கிடைக்க தவிர்க்க வேண்டிய தவறுகள்! நீங்களும் அறிந்துகொள்ளுங்கள்...

F A M I L Y P E N S I O N

Published:Updated:
ஃபேமிலி பென்ஷன்
பிரீமியம் ஸ்டோரி
ஃபேமிலி பென்ஷன்

காலமெல்லாம் கஷ்டப்பட்டு உழைத்ததற்குக் கிடைக்கும் குடும்ப ஓய்வூதியத்தை, பெற வேண்டிய குடும்பத்தினர் விழிப்புணர்வு இல்லாததன் காரணமாக, அதை உடனடியாகப் பெற முடியாமல் தவிப்பதை இன்றைக்கு பல குடும்பங்களில் பார்க்க முடிகிறது. ஓய்வூதியம் தவறாமல் கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை அறிவதும், ஊழியர் காலமானபின் குடும்ப உறுப்பினர்கள் அந்த ஓய்வூதியத்தைத் தொடர்ந்து பெற என்ன செய்ய வேண்டும் என்பதை எடுத்துச் சொல்லி புரிய வைக்க வேண்டியதும் ஊழியர்களின் கடமை. அதற்கு என்ன செய்ய வேண்டும்?

ப.முகைதீன் 
சேக் தாவூது
ப.முகைதீன் சேக் தாவூது

யாருக்கெல்லாம் ஓய்வூதியம்..?

மத்திய, மாநில அரசு ஊழியர்கள், ரயில்வே, மின் வாரியம், அஞ்சல் துறை போன்ற துறை ஊழியர்களின் குடும்பம் குடும்ப ஓய்வூதியம் பெறும். அதாவது, ஓர் ஊழியரின் பணிக் காலம் முடிந்த பிறகு, அகவை முதிர்வு ஓய்வூதியம், இயலாமை ஓய்வூதியம் (Invalid Pension), விருப்ப ஓய்வு ஓய்வூதியம் (Retiring pension), ஈடுசெய் ஓய்வூதியம் (Compensation Pension) மற்றும் கட்டாய ஓய்வு ஓய்வூதியம் (Compulsory Retirement Pension) ஆகிய ஏதேனும் ஓர் ஓய்வூதியத்தைப் பெறத் தகுதி உண்டு எனில், அந்த ஊழியர் பணியில் உள்ளபோது இறந்து போனாலும், ஓய்வுபெற்ற பிறகு இறந்துபோனாலும், அந்த ஊழியரின் குடும்பம், குடும்ப ஓய்வூதியம் பெறும் தகுதி கொண்டதாகும்.

1.1.2004-க்குப் பிறகு, பணியில் சேர்ந்து, பணியாற்றி வரும் மத்திய அரசு ஊழியர் பணிக் காலத்தில் இறந்துவிட்டால், என்.பி.எஸ் (National pension system) திட்டத்தின்கீழ் அவரது குடும்பமும் குடும்ப ஓய்வூதியம் பெறும்.

யாருக்கு பென்ஷன் கிடைக்கும்?

இறந்துவிட்ட ஊழியர் ஆண் எனில், அவரின் மனைவிக்கும், பெண் எனில், அவரின் கணவருக்கும் குடும்ப ஓய்வூதியம் தரப்படும். இதற்கு வேறு நிபந்தனை கிடையாது. மரணம் அல்லது மறுமணம் வரை குடும்ப ஓய்வூதியம் பெறலாம்.

ஆனால், இறந்துபோன ஆண் ஊழியருக்கு முன்பே அவரின் மனைவி இறந்துபோயிருந்தாலும், இறந்துபோன ஊழியர் பெண் என்ற நிலையில், அவருக்கு முன்பே அவரின் கணவர் இறந்துவிட்டிருந்தாலும், அவர்களின் மகனுக்கு 25 வயது வரை, மகள் எனில் 25 வயது அல்லது மணமாகும் வரை குடும்ப ஓய்வூதியம் தரப்படும். இறந்துபோனவரின் மகன்/மகள் மனவளர்ச்சி குன்றியவர் என்றாலோ, உழைத்துச் சம்பாதிக்க இயலாதவர் என்றாலோ, வாழ்நாள் முழுவதற்கும் குடும்ப ஓய்வூதியம் கிடைக்கும். 

இந்த உறவுமுறைகள் மட்டுமன்றி, விதவை மகள், கணவரால் கைவிடப்பட்ட மகள், முதிர் கன்னியாய் உள்ள மகள்கூட (உரிமை வரிசைப்படி) குடும்ப ஓய்வூதியம் பெறலாம். இறந்து போனவர் மணமாகாத ஊழியர் எனில், அவரின் பெற்றோருக்கும் குடும்ப ஓய்வூதியம் கிடைக்கும்.

ஃபேமிலி பென்ஷன்... தங்கு தடையின்றி கிடைக்க தவிர்க்க வேண்டிய தவறுகள்! நீங்களும் அறிந்துகொள்ளுங்கள்...

எப்போது பென்ஷன் கிடைக்காது?

கணவர் / மனைவி தவிர, இதர குடும்ப உறவுகள் குடும்ப ஓய்வூதியம் பெற இரு நிபந்தனைகள் உண்டு. அதாவது,

1. மேற்கண்ட குடும்பத்தவரில் பெண்களாக இருப்பவர் திருமணம் / மறுமணம் செய்தால் குடும்ப ஓய்வூதியம் பெற முடியாது.

2. மாதமொன்றுக்கு குறைந்த பட்ச குடும்ப ஓய்வூதியத்துக்கு மேல் வருமானம் உள்ளவரும் குடும்ப ஓய்வூதியம் பெற முடியாது. (குறைந்தபட்ச குடும்ப ஓய்வூதியம் என்பது மத்திய அரசு மற்றும் அது சார்ந்த வாரியம் முதலானவற்றின் ஊழியர் குடும்பத்துக்கு 9,000 ரூபாயாகவும், தமிழக அரசு மற்றும் அதன் வாரியம் முதலானவற்றின் ஊழியர்களுக்கு 7,850 ரூபாயாகவும் உள்ளது. (இத்துடன் அகவிலைப்படி) 

தவிர்க்க வேண்டிய தவறுகள்...

ஓய்வு பெற்றவுடன் ஓர் ஊழியர் ஓய்வூதியம் பெற வேண்டுமெனில், சில விஷயங் களைக் கட்டாயம் செய்ய வேண்டும். அவை என்ன?

 பணிக்கு வந்து ஓராண்டு ஆனதும் ஊழியர், தன் குடும்ப உறுப்பினர் விவரத்தை (Detail of family) இதற்கென நிர்ணயிக்கப் பட்டுள்ள படிவம் 3-ல் பூர்த்தி செய்து, அலுவலகத் தலைவர் /மாநில கணக்காயருக்குச் சமர்ப்பிக்க வேண்டும். இதில் தாமதம் கூடவே கூடாது.

 படிவம் 3-ல் தரப்பட்டுள்ள குடும்ப உறுப்பினர் விவரம் எந்தத் தேதியின்படி (As on what date) என்பதைக் குறிப்பிடுவது அவசியம். (ஏனெனில், அதைத் தொடர்ந்து பிறப்பு, இறப்புக்கான சேர்க்கை மற்றும் மாற்றத்தின் போது குழப்பம் ஏற்படக்கூடும்). 

 சமர்ப்பிக்கப்பட்ட படிவம் 3-க்கான ஒப்புதலை அலுவலகத் தலைவரிடம் பெற்று வைப்பது அவசியம்.

 திருமணம் ஆகாமல் இருந்த ஊழியர், தனக்குத் திருமணமான உடனேயே கணவர் அல்லது மனைவியின் பெயரை படிவத் தில் இடம்பெறச் செய்வது அவசியம். (பணிக்காலத்தில் இறந்துபோன சில ஊழியர்களின் குடும்ப விவரத்தில் பெற்றோர் பெயரே உள்ளது).

 ஊழியரின் மகன்/ மகள் மனநிலை குன்றியவராகவோ, ஒட்டுமொத்த உடல்திறன் இழந்தவராகவோ இருந்தால், அதுபற்றிய விவரத்தைக் குறிப் பிட்டு, இதற்கான மருத்துவச் சான்று ஒன்றைத் தகுதி பெற்ற சிவில் சர்ஜன் ஒருவரிடம் பெற்று, பணிப் பதிவேட்டுடன் இணைத்துவிடுவது அவசியம்.

 பணிக்காலத்தில் மனைவி/கணவர் இறந்துபோய் மறுமணம் செய்து கொண்டால், புதிய மனைவி / கணவர் பெயரைக் குடும்ப உறுப்பினர் படிவத்தில் பதிவு செய்து செய்வது முக்கியம்.

 இதேபோல், முந்தைய மனைவி /கணவரை விவாகரத்து செய்துவிட்டு, மறுமணம் செய்துகொண்டாலும், புதிய வாழ்க்கைத் துணையின் பெயரை குடும்ப உறுப்பினர் படிவத்தில் சேர்த்து முந்தைய மனைவி / கணவரின் பெயரை நீக்கம் செய்ய வேண்டும். இதில் கவனம் தேவை.

 இவற்றுக்கெல்லாம் மேலாக, ஓய்வு பெறும்போது ஓய்வூதிய விண்ணப்பம் சமர்ப்பிக்கும்போது, குடும்ப உறுப்பினர் அனைவரையும் பெயர் பிழை, எழுத்துப் பிழை இன்றி குறிப்பிடுவது அவசியம்.

 இறப்பு தவிர, ஊழியரான ஆணோ, பெண்ணோ  காணாமல் போய்விட்டால் உடனடியாகக் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்து, முதல் தகவல் அறிக்கையைப் பெற்றுவிட வேண்டும். இவ்வாறு காணாமல் போன நிலையிலும் குடும்பத்தினர் குடும்ப ஓய்வூதியம் பெறலாம். எப்போது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டதோ, அதிலிருந்துதான் இரண்டு வருடக் காலக்கெடு கணக்கிடப்பட்டு,குடும்ப ஓய்வூதியம் அனுமதிக்கப்படும் என்பதால், தாமதமின்றி புகார் பதிவு செய்வது அவசியமாகிறது. குடும்ப ஓய்வூதிய தாமதத்தைத் தவிர்க்க இது முக்கியம்.

 பணியில் உள்ள ஊழியர் இறந்து போய், அவரின் மனைவி அல்லது கணவர் குடும்ப ஓய்வூதியம் பெற்று வருவார். அவரும் இறந்துவிடும் நிலையில், இறப்புச் செய்தியை கருவூலம் / சம்பளக் கணக்கு அலுவலகம்/வங்கிக்கு உடனடியாகத் தெரிவிப்பதும் மரணச் சான்று பெற்று சமர்ப்பிப்பதும் இறந்து போனவருக்கு அடுத்துள்ள குடும்ப உறுப்பினர் குடும்ப பென்ஷன் விரைந்து பெற உதவும்.

விவாகரத்தான மனைவிக்கும் பென்ஷன்!

 சட்டபூர்வம் இல்லாத மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் கிடையாது. ஆனால், அத்தகைய மனைவிக்குப் பிறந்த பிள்ளைக்கு குடும்ப ஓய்வூதியம் உண்டு.

 முன்னதாக விவாகரத்து செய்யப்பட்ட அல்லது இறந்துபோன மனைவி மூலம் பிறந்த குழந்தைக்கும் குடும்ப ஓய்வூதியம் உண்டு. அதாவது, இதுபோன்ற சூழலில் குடும்ப ஓய்வூதியம் பகிர்ந்து வழங்கப்படும். (பிந்தைய மனைவிக்கும் முந்தைய மனைவியின் பிள்ளைக்கும் அல்லது சட்டபூர்வ மனைவிக்கும், சட்டபூர்வம் அல்லாத மனைவியின் குழந்தைக்கும்)

 கணவர் / மனைவி என்பது சட்டபூர்வமாகப் பிரித்து வைக்கப்பட்டுள்ள கணவர் மற்றும் மனைவியையும் குறிக்கும்.

 சட்டபூர்வமாகப் பிரிந்து உள்ள கணவன் / மனைவியரிடையே கணவர் / மனைவி இறந்துவிட்டால் உயிருடன் உள்ள மனைவி / கணவர், அவர்களின் பிள்ளைக்கு பாதுகாவலர் என்ற முறையில் குடும்ப பென்ஷன் பெறுவார்.

 இதேபோல், குடும்ப ஓய்வூதியம் பெற்றுவரும் கணவர் / மனைவி மறுமணம் செய்துகொள்ளும் நிலையில், குழந்தை இருப்பின் அந்தக் குழந்தையின் பாதுகாவலர் என்ற முறையில் மறுமணம் செய்து கொண்ட கணவர் / மனைவி குடும்ப ஓய்வூதியம் பெறலாம். தற்கொலை செய்துகொண்ட ஊழியரின் குடும்பமும் குடும்ப ஓய்வூதியம் பெறும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism