பங்குச் சந்தை
நடப்பு
தொடர்கள்
Published:Updated:

குடும்ப பென்ஷன்... குடும்ப உறுப்பினர்கள் யாருக்கெல்லாம் கிடைக்கும்..?

குடும்ப பென்ஷன்
பிரீமியம் ஸ்டோரி
News
குடும்ப பென்ஷன்

குடும்ப பென்ஷன்

மத்திய அரசு ஊழியர்களுக்கு பென்ஷன் விதிமுறைகள் வெகுவாக மாறியிருக் கின்றன. மத்திய அரசு ஊழியர்களுக்கான (பழைய பென்ஷன் திட்டத்தின்படி) பென்ஷன், பணிக்கொடை, பென்ஷன் கம்யூடேசன் குடும்ப பென்ஷன் முதலானவற்றை வழங்கு வதற்கான ‘மத்திய குடிமைப் பணிகள் (பென்ஷன்) விதிகள் 1972’ சீரமைக்கப்பட்டு, மத்திய குடிமைப் பணிகள் (பென்ஷன்) விதிகள் 2021 (central civil services (pension) rules 2021) தற்போது நடைமுறைக்கு வந்துவிட்டது. பென்ஷன் மற்றும் குடும்ப பென்ஷன் விதிகள் பல சீரமைக்கப்பட்டிருப்பதுடன், பல புதிய துணை விதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றைப் பார்க்கலாம். (தமிழக அரசு ஊழியர்களைப் பொறுத்த வரை, தமிழ்நாடு பென்ஷன் விதிகள் (Tamil nadu Pension Rules) 1978-தான் தற்போது நடைமுறையில் உள்ளது.)

ப.முகைதீன் ஷேக் தாவூது
ப.முகைதீன் ஷேக் தாவூது

குடும்ப உறுப்பினர் படிவம்-4

மத்திய அரசு ஊழியர் ஒருவர் பணியில் சேர்ந்ததும் அலுவலகத் தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டியது படிவம் 4. வரிசை எண், பெயர், பிறந்த தேதி, ஆதார் எண் (விரும்பினால் தெரிவிக்கலாம்) குடும்ப உறுப்பினரின் உறவுமுறை, மணமானவரா, ஆகாதவரா ஆகிய விவரங்களுடன்கூடிய இப்படிவத்தில் குடும்ப பென்ஷன் பெறத் தகுதியுடையவரா, தகுதி இல்லாதவரா என்ற பாகுபாடு பார்க்காமல் ஊழியரின் மனைவி/கணவர் (சட்டபூர்வமாகப் பிரித்து வைக்கப்பட்டுள்ள மனைவி/கணவர் உட்பட), மகன், மகள் (இறந்துபோன கணவர்அல்லது மனைவி பிரிந்த, விவாகரத்தான கணவர்/மனைவியின் பிள்ளைகள், தத்தெடுத்த பிள்ளைகள், சட்டபூர்வமில்லாத முறையில் பிறந்த பிள்ளைகள் உட்பட)பெற்றோர், தந்தையையோ தாயையையோ பொதுவாகக்கொண்ட மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகள் போன்றவர்களின் பெயர் விவரங்கள் எழுதி தேதியுடன்கூடிய கையொப்பமிட்டு கைபேசி எண், மின்னஞ்சல் முகவரியுடன் சமர்ப்பித்துவிட வேண்டும். சமர்ப்பித்த பிறகு, ஏற்படும் பிறப்பு, இறப்பு, விவாகரத்து, மறுமணம், திருமணம் ஆகிய நிகழ்வுகளை அவ்வப்போது அலுவலகத் தலைவருக்கு தெரிவித்து, அலுவலகத் தலைவரின் தேதியுடன்கூடிய கையொப்பம் பெற வேண்டும்.

குடும்ப பென்ஷன்... குடும்ப உறுப்பினர்கள் யாருக்கெல்லாம் கிடைக்கும்..?

சிறப்பம்சம் என்ன?

இதில் சிறப்பம்சம் என்னவென்றால், பணியில் சேர்ந்தபோது சமர்ப்பித்த (Original Form-4) படிவத்தில்தான், மேற்கண்ட பிறப்பு, இறப்பு உள்ளிட்ட விவரங் களைப் பதிவு செய்ய வேண்டுமே தவிர, (முன்பு போல்) ஒவ்வொரு முறையும் புதிய படிவம் சமர்ப்பிக்கக் கூடாது. இந்தப் புதிய நடைமுறையால் கிடைக்கும் நன்மைகள் பல.

 அதாவது, புதிது புதிதாக படிவம் சமர்ப்பிக்கும்போது முன்னதாகக் குறிப்பிடப் பட்டிருந்த குடும்ப உறுப்பினர் பெயர் புதிய படிவத்தில் விடுபட வாய்ப்புண்டு. கவனக்குறைவு காரணமாக இப்படி நேர்ந்துவிட வாய்ப்புண்டு. தவிர, மகன்/மகளுக்குத்தான் திருமணமாகி விட்டதே என்ற நினைப்பிலும் மகன்/மகள் பெயரை விட்டுவிடக் கூடும். மகன்/மகளுக்குத் திருமணமாகிவிட்டது அல்லது இறந்துவிட்டார் என்ற விவரம் பென்ஷன் ஏற்பளிப்பு (sanction) செய்யும் கணக்கு அதிகாரிக்குத் தெரிந்தால்தான், ஊழியர் மறைவுக்குப் பின் ஏற்படும் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையிலான சச்சரவுகளைத் தவிர்க்க முடியும். எனவே, இந்த நடைமுறை மிகவும் சிறந்த ஒன்று.

 மனைவி/கணவர் அல்லது பிள்ளைகள் மீதான தனிப்பட்ட வெறுப்பு காரணமாகவும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களைத் தவிர்த்துவிட்டு, புதிய படிவம் 4 சமர்ப்பிக்கவும் வாய்ப்புண்டு. இதன் அடிப்படையிலும், ஒரே படிவத்தில்தான் கடைசி வரை பிறப்பு, இறப்பு, திருமண நிலை மாற்றம் முதலானவற்றைப் பதிவு செய்ய வேண்டும் என்பது மிகச் சிறந்த நடைமுறையாக இருக்கும்.

ஓய்வு பெறும்போது...

இவ்வாறு அப்டேட் (update) செய்யப்பட்டு, ஊழியர் தன்வசம் வைத்துள்ள படிவம்-4-ஐ ஓய்வுக்காலப் பணப்பலன் பெறுவதற்கான படிவம் 6-ஐ சமர்ப்பிக்கும்போது இணைத்துச் சமர்ப்பிக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் பெயர்கள் அனைத்தும் ஓய்வூதியப் பட்டு வாடா ஆணையில் இடம்பெறும். ஓய்வுபெற்ற ஊழியர் மரண மடைந்த பிறகு, அப்போதைய நிலையில் குடும்ப உறுப்பினர் யார் தகுதி படைத்தவராக உள்ளாரோ, அவருக்கு குடும்ப பென்ஷன் அளிக்கப்படும்.அல்லது தகுதி உள்ளவர் பென்ஷ னுக்காக விண்ணப்பிக்க வேண்டும்.

இத்தனையும் மீறி...

இத்தனை தூரம் விதிகளைச் செம்மைப்படுத்திவிட்ட நிலை யிலும், குடும்ப உறுப்பினர் எவர் பெயராவது விடுபட்டுப் போயுள் ளது என்ற காரணத்துக்காக, பெயர் விடுபட்ட குடும்ப உறுப்பினருக்கு குடும்ப பென்ஷன் மறுக்கப்படக் கூடாது. விண்ணப்பம் வரப் பெற்றால் இறந்துபோன ஊழியரின் அலுவலகத் தலைவர், பெயர் விடுபட்டுப் போயுள்ளவர் குடும்ப பென்ஷன் பெறத் தகுதி யுள்ளவர் என்பதை ஆவண அடிப் படையில் உறுதி செய்துகொண்டு ‘குடும்ப பென்ஷன்’ வழங்கலாம் என்பதே தற்போதைய விதி 15 (h)(i)-ன் படியான புதிய நடைமுறை.

படிவம்-5

மேற்கண்ட நடைமுறைகள் அனைத்தும் ஊழியர் ஓய்வு பெறும் முன் செய்யப்படுபவை. ஊழியர், ஓய்வு பெற்ற பிறகு மணம் புரிந்தாலோ, மறுமணம் செய்து கொண்டாலோ, அவ்வாறு மணம் அல்லது மறுமணம் மூலம் கணவர்/மனைவியாகிவிட்டவரின் பெயரை யும் ஆவண ஆதாரத்துடன் அலுவலகத் தலைவருக்குத் தெரி விக்கலாம். இதற்காக ஏற்படுத்தப் பட்டுள்ளது புதிய படிவம்-5. ஓய்வு பெற்ற பிறகு, மணந்துகொண்ட மனைவி மற்றும் பிறக்கும் குழந்தை களின் பெயரையும், பிறந்த தேதி மற்றும் ஆவண ஆதாரத்துடன் இதே படிவம் 5-ல் சமர்ப்பிக்க வேண்டும். இவர்களும் குடும்ப பென்ஷன் பெறுவர்.

யாரெல்லாம் பென்ஷன் பெறுவார்கள்?

குடும்ப உறவுகளைப் பொறுத்து பென்ஷன் தொகை, பென்ஷன் பெறும் காலம் மாறுபடுமா, இதற்கு நிபந்தனை உண்டா என்ற சந்தேகங் கள் பரவலாக உண்டு. அவற்றுக்கான சில விளக்கங்கள் இனி....

 பணியில் உள்ள ஊழியர் இறந்துவிட்டால், அவர் இறந்த மறுநாள் முதல் இறந்தவரின் மனைவி/கணவர் குடும்ப பென்ஷன் பெறலாம். உரிய படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இறந்து போனவர் கடைசியாக வாங்கிய அடிப்படை சம்பளத்தில் 50% குடும்ப பென்ஷ னாக, 10 வருடங்களுக்குக் கிடைக் கும். 10 வருடங்களுக்குப் பிறகு, குடும்ப பென்ஷன் என்பது இறந்த ஊழியரின் சம்பளத்தில் 30% ஆக இருக்கும். வருமான நிபந்தனை கிடையாது. மறுமணம் அல்லது மரணம் வரை பென்ஷன் பெறலாம். மறுமணம் செய்த குடும்ப பென்ஷனருக்கு மைனர் பிள்ளை இருந்தால், மைனருக்கான குடும்ப பென்ஷனை மறுமணம் செய்து கொண்டவரின் பிள்ளை 18 வயது வரை பெறலாம்.

குடும்ப பென்ஷன்... குடும்ப உறுப்பினர்கள் யாருக்கெல்லாம் கிடைக்கும்..?

 பணியில் இருந்து ஓய்வு பெற்று பென்ஷன் வாங்கிக் கொண்டிருந்த ஒருவர் இறந்துவிடும் நேர்வில் அவரின் மனைவி/கணவர் குடும்ப பென்ஷன் பெறலாம். விண்ணப்பம் சமர்ப்பிக்கத் தேவையில்லை. இறந்துபோன வரின் கடைசி சம்பளத்தில் 50% குடும்ப பென்ஷனாகக் கிடைக்கும். இறந்துபோன மறுநாள் முதல் ஏழு வருட முடிவில் அல்லது இறந்துபோனவரின் வயது என்றைக்கு 67 ஆகுமோ அதுவரை 50% சம்பளம் பென்ஷனாக இருக்கும். அதன்பின் 30 சதவிகிதமாகக் குறைந்துவிடும்.

 பணியில் இருக்கும்போது இறந்துபோன ஊழியரின் மனைவிக்கு குழந்தை இல்லாதபட்சத்தில், அத்தகைய மனைவி (விதவை) மறுமணம் செய்துகொண்டாலும் குடும்ப பென்ஷன் கிடைக்கும். ஆனால், விதவையானவர் மறுமணம் செய்தால் மறுமணத்தின்போது தனது வருமானமாகக் குறைந்தபட்ச பென்ஷனுக்கும் (ரூ.12,420) அதிகமாக வருமானம் பெறுபவர் எனில் குடும்ப பென்ஷன் நிறுத்தப்படும்.

 மகனுக்கு 25 வயது வரை அல்லது மணமாகும் வரை அல்லது குறைந்தபட்ச பென்ஷனுக்குமேல் வருமானம் பெறும் வரை (50% அல்லது 30% கடைசி சம்பள அடிப் படையில்) குடும்ப பென்ஷன் கிடைக்கும். மகளுக்கு திருமணம் ஆகும் வரையிலும், விதவை அல்லது விவாக ரத்து பெற்றவருக்கு மறுமணம் ஆகும் வரையிலும் குடும்ப பென்ஷன் உண்டு.

 ஊழியர் ஓய்வு பெற்ற பிறகு தனது பிள்ளைகளுக்கு மூளை செயல்பாடின்மை, உடல் செயல்பாட்டின்மை ஏற்பட்டாலும், உரிய மருத்துவச் சான்றுடன் விண்ணப்பம் செய்து அந்த பிள்ளை வாழ்நாள் முழுவதும் பென்ஷன் பெற ஏற்பாடு செய்து கொள்ளலாம்.

ஊழியர் மற்றும் அவரது மனைவி (அல்லது) கணவர் இருவருமே இறந்துபோனாலும், மேற்கண்ட இயலாமைக்கு உட்படுவோர் விண்ணப்பித்து பென்ஷன் பெறலாம். இதேபோல், மணமாகாத/விதவையான, விவாகரத்து பெற்ற மகள்களும், தாய்-தந்தையர் இறந்து போன நிகழ்வில், தாமே விண்ணப்பித்து பென்ஷன் பெறலாம்.

இவ்வாறு பென்ஷன் பெற மேற்சொன்ன படிவம் 4 அல்லது படிவம் 5-ல் தன் பெயர் இடம்பெற்றிருந்தால் தான் குடும்ப பென்ஷன் கிடைக்கும் என்ற நிலை இப்போது இல்லை. இதற்காக மத்திய குடிமைப் பணிகள் (பென்ஷன்) விதிகள் 2021-ல் இடம் பெற்றுள்ள விதி 15 (h) (i) என்கிற புதிய விதி உருவாக்கப்பட்டுள்ளது!