Published:Updated:

அனைவருக்கும் நிதிக் கல்வியே நம் இலக்கு!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

அனைவருக்கும் நிதிக் கல்வியே நம் இலக்கு!

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

இப்போது உங்கள் கைகளில் தவழும் இந்த இதழ் நாணயம் விகடன், வாசகர்களின் நல்லாதரவுடன் 16 ஆண்டுகளை நிறைவுசெய்து, 17-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது! வாசகர்களாகிய நீங்கள் மட்டுமல்லாது, விளம்பர தாரர்கள், தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள், நிதிஆலோசகர்கள் என்று பலதரப்பட்டவர்களும் நினைவுகூர்ந்து பாராட்டும் வகையிலேயே இந்த 16 ஆண்டுகளை நாணயம் விகடன் கடந்திருக்கிறது என்பதில், உங்களுடன் சேர்ந்து நாணயம் விகடனும் பெருமைகொள்கிறது!

தனிமனித நிதி சார்ந்த விஷயங்கள் எல்லாம் நன்கு படித்தவர்களுக்குத்தான். அதை ஆங்கிலத்தில் படித்துதான் தெரிந்துகொள்ள முடியும் என்கிற நிலையை மாற்றி, எளிய தமிழில் சாமானியனுக்கும் புரியும் வகையில் சொல்ல ஆரம்பித்ததுதான் உங்கள் நாணயம் விகடனின் முதல் வெற்றி! சேமிப்பில் நம் மக்கள் எப்போதும் சிறந்து விளங்குபவர்கள். ஆனால், சேமித்தால் மட்டும் போதாது... அதைச் சரியான வகையில் முதலீடு செய்தால்தான், பணவீக்கத்தைத் தாண்டிய வருமானத்தை ஈட்ட முடியும் என்கிற உண்மையை, சாமானியர்களுக்கு புரிய வைப்பதிலும் வெற்றி கண்டிருக்கிறது நாணயம் விகடன்!

பங்குச் சந்தையும் மியூச்சுவல் ஃபண்டும் பெரும் பணக்காரர்களுக்கானது என்கிற கருத்தை மாற்றி, யார் வேண்டுமானாலும் களத்தில் இறங்கலாம் என்று எளிய மனிதர்களுக்கும் வழிகாட்டி வருவதுடன், இவற்றில் எங்கெல்லாம் இடறிவிழ வாய்ப்பு இருக்கிறது; எவ்வளவு கவனமாக இருந்தால், நீண்ட காலத்தில் நல்லதொரு வருமானத்தைச் சம்பாதிக்க முடியும் என்கிற எச்சரிக்கைகளையும் வழங்கத் தவறியதில்லை நாணயம் விகடன்.

ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு மற்றும் டேர்ம் இன்ஷூரன்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதுடன், ஓய்வுக்காலத் திட்டமிடல்களையும் தந்துவருகிறது நாணயம் விகடன்! அதிக வருமானம் என்ற ஆசையைக் காட்டி மோசடி செய்யும் ‘சதுரங்க வேட்டை’ நிறுவனங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவது, அதீத ரிஸ்க்கான முதலீடு என்று பார்க்கப்படும் கிரிப்டோகரன்சியில் பணம் போடும்முன் எந்த அளவுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று எடுத்துரைப்பது எனத் தன் பொறுப்புகளையும் உணர்ந்தே செயல்படுகிறது நாணயம் விகடன்! நிதி நிர்வாகம் என்பதைத் தாண்டி, பிசினஸ் சூட்சுமங் களையும் எல்லோருக்கும் புரியும் வகையில் சொல்லிவருகிறது!

அச்சு இதழாக மட்டுமல்லாமல், காலத்தின் தேவைக்கேற்ப ஆன்லைன், சமூக ஊடகங்கள், வீடியோ எனப் பரிணாமம் அடைந்து, எல்லாத் தளங்களிலும் 360 டிகிரியில் இயங்கி, நிதி நிர்வாகம் தொடர்பான அறிவை அனைவருக்கும் அளிப்பதிலும் தன்னை பட்டைத் தீட்டிக்கொண்டிருக்கிறது நாணயம் விகடன்! இவை மட்டுமா... பள்ளி, கல்லூரி தொடங்கி, சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் நிதிக் கல்வியைக் கட்டாயம் அளித்தாக வேண்டிய மாபெரும் பொறுப்பு நம் நாணயம் விகடனுக்கு இருக்கிறது. வாசகர்களின் ஆதரவுடன் இலக்கை நோக்கிய இந்தப் பயணம், என்றென்றும் தொடரும்!

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism