Published:Updated:

வெற்றியைத் தடுக்கும் பண பயம்... வெளிவரும் வழிமுறைகள்..!

நிதி நிர்வாகம்
பிரீமியம் ஸ்டோரி
நிதி நிர்வாகம்

நிதி நிர்வாகம்

வெற்றியைத் தடுக்கும் பண பயம்... வெளிவரும் வழிமுறைகள்..!

நிதி நிர்வாகம்

Published:Updated:
நிதி நிர்வாகம்
பிரீமியம் ஸ்டோரி
நிதி நிர்வாகம்

நம்மில் பலருக்கும் பணம் குறித்த பல்வேறு பயங்கள் (Fears) இருக்கின்றன. பணத்தைக் கண்டு பயப்படுவதைக் குரோம்டோ போபியா (Chrometophobia) என்கிறார்கள். இந்த பயங்களே அவர்களை வாழ்க்கையில் முன்னேறவிடாமல், வெற்றிபெற விடாமல் தடுத்துக் கொண்டிருக்கின்றன. அதுபோன்ற பண பயங்களிலிருந்து வெளியேறி வெற்றி பெறுவது எப்படி?

சிவகாசி மணிகண்டன் 
நிதி ஆலோசகர், 
Aismoney.com
சிவகாசி மணிகண்டன் நிதி ஆலோசகர், Aismoney.com

பண பயம் 1: என் வேலை போய்விடும்..?

தீர்வு: பணம் தொடர்பான அதிக பேரிடம் இருக்கும் பயம் இதுவாகும். கோவிட் 19 வைரஸ் பரவல் காலத்தில் தொழில் முடக்கம் காரணமாகப் பல நிறுவனங்கள் பலருக்கும் சம்பளத்தைக் குறைத்தன; பலரை வேலையை விட்டு நீக்கின. திறமையானவர்களுக்கு வேலை என்பது எப்போதும் சிக்கலாக இருந்தது இல்லை. எனவே, கூடியவரைக்கும் உங்கள் வேலை, தொழில் தொடர்பான திறமைகளை வளர்த்துக்கொள்வது அவசியமாகும். அடுத்து நிதி ரீதியாக வலிமையாக இருந்தவர்கள், போதிய அளவுக்கு அவசர கால நிதியைச் சேமித்து வைத்திருந்தவர் கள் வேலை இழப்பு குறித்து அதிகம் கவலைகொள்ளவில்லை. சிறிது ஓய்வுக்காலம் என நினைத்துக்கொண்டு திறமையை வளர்த்துக்கொண்டு அடுத்த வேலையை விரைவிலேயே தேடிக்கொண்டனர். எனவே, வேலை போனாலும் ஆறு மாத காலம் நிலைமையைச் சமாளிக்க முடிகிற அளவுக்கான பணத்தைச் சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள்.

பண பயம் 2: சம்பளம் அதிகரித்துக் கேட்க பயம்

தீர்வு: பலரும் சிறப்பாக, நேரம் காலம் பார்க்காமல் வேலை பார்ப்பார்கள். ஆனால், அதிக சம்பளம் கேட்கத் தயங்குவார்கள். ‘தட்டினால்தான் கதவு திறக்கப்படும்’ என்கிற மாதிரி, இன்றைக்கு நிறுவனங்களில் நேரடியாக அல்லது மறைமுகமாக சம்பளம் அதிகரித்துக் கேட்பவர் களுக்குதான் அதிக சம்பளம் உயர்த்தப்படுகிறது. இல்லா விட்டால், சம்பளம் குறைவாகத் தந்தாலும் தொடர்ந்து வேலை பார்ப்பார் என்கிற கணக்கில் குறைவான சம்பள உயர்வே தரப்படும். கார்ப்பரேட் நிறுவனங்களில், அதிக திறமையானவர்தான் அதிக சம்பள உயர்வு கேட்பார் என்ற எண்ணம் இருக்கிறது. அதைப் பயன்படுத்திக் கொள்வது உங்கள் சாமர்த்தியத்தில் இருக்கிறது.

பண பயம் 3: நான் என் பணம் முழுவதையும் இழந்துவிடுவேன்

தீர்வு: நம்மில் பலர் மோசமான முதலீடுகள், தவறான முதலீடுகள் போன்றவற்றால் மூலதனத்தை இழக்கிறோம். கூடவே, பணவீக்க விகிதத்தால் பணத்தின் மதிப்பையும் இழக்கிறோம். இதைத் தவிர்க்க, ஒழுங்குபடுத்தப்பட்ட முதலீட்டுத் திட்டங்களைப் புரிந்துகொண்டு முதலீடு செய்ய வேண்டும். பணவீக்க விகிதத்தைவிட அதிக வருமானம் தருகிற, வருமான வரி குறைவாகக் கட்ட வேண்டிய நவீன முதலீடுகளான பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் அஸெட் அலொகேஷன்படி முதலீட்டைப் பிரித்து செய்ய வேண்டும். முதலீட்டில் உங்களால் சரியான முடிவு எடுக்க முடியவில்லை எனில், அதற்கென இருக்கும் நிதி ஆலோசகர்கள், நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவதில் தவறு ஒன்றும் இல்லை.

வெற்றியைத் தடுக்கும் பண பயம்... வெளிவரும் வழிமுறைகள்..!

பண பயம் 4: பணத்தை நிர்வகிப்பதில் நான் தவறு செய்துவிடுவேன்

தீர்வு: நம்மில் பலர் வங்கிச் சேமிப்புக் கணக்கு அல்லது எஃப்.டி-யில் பணம் இருப்பது பாதுகாப்பு என நினைக்கிறோம். மேலும், நமக்குப் பணத்தை நிர்வகிக்கத் தெரியாது. அப்படி ஏதாவது திட்டத்தில் பணத்தை முதலீடு செய்தால் தவறாகி விடும் எனப் பணத்தை வளரவிடாமல் ஆண்டுக்கு சுமார் 2.5-3% வருமானத்திலேயே விட்டுவைத்திருக்கிறார்கள். நமது நிதி சார்ந்த அடிப்படை அறிவை அதிகரித்துக் கொள்ளும் முயற்சியில் களமிறங்க வேண்டும். இதற்கு நிதி ஆலோசகர் களின் யோசனையைப் பெற்று, அவர்களின் உதவியுடன் பல்வேறு முதலீட்டுத் திட்டங்களில் உள்ள நன்மை, தீமைகளைப் புரிந்துகொண்டு முதலீடு செய்யலாம்.

பண பயம் 5: ஆன்லைனில் என் பணத்தைத் திருடிவிடுவார்கள்

தீர்வு: நகர்ப்புறத்தில் வசிக்கும் படித்தவர்களிடமும்கூட இந்த பயம் நிறையவே இருக்கும்போது, சிறு நகரம் மற்றும் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். பலரும் வங்கி எஃப்.டி-யில் பணத்தைப் பதுக்கி வைக்கக் காரணம், இதுதான். இப்போதெல்லாம் வங்கிகள், நிதி நிறுவனங்கள், கிரெடிட் கார்டு நிறுவனங்கள் நம் பணத்தை அவ்வளவு சீக்கிரமாக யாரும் ஏமாற்றி எடுத்துக்கொள்ள முடியாத அளவுக்கு பாதுகாப்பு அம்சங்களைப் பலப்படுத்தி இருக்கின்றன. மேலும், பணப் பரிவர்த்தனைக்கு பாஸ்வேர்டு, பதிவு செய்யப்பட்ட செல்போன் விவரம் அளித்தல் மற்றும் அந்தப் பதிவு செய்யப் பட்ட செல்போன் நம்பருக்கு ஒருமுறை பாஸ்வேர்டு அனுப்பி உறுதி செய்தல் எனப் பல வகையில் பாதுகாப்பு அம்சங்களைப் பல வங்கிகள் வைத்திருக்கின்றன.

நம்முடைய செல்போன் அல்லது லேப்டாப்பைக்கூட நாம் மட்டுமே திறந்து பார்க்கிற மாதிரி பாதுகாப்பு வசதிகள் வந்து விட்டன. புதிய சாதனத்தில் வேறு யாராவது நுழையும் பட்சத்தில், அந்த விவரத்தை உடனடியாகப் பதிவு செய்யப்பட்ட செல்போன் நம்பருக்கு எஸ்.எம்.எஸ், பதிவு செய்யப்பட்ட இ-மெயில் முகவரிக்கு மெயில் அனுப்பி தகவல் தெரிவிக்கிறது. எனவே, ஆன்லைன் பணப் பரிவர்த்தனை முன்பைவிட பாதுகாப்பானதாக மாறியிருக்கிறது. ஆன்லைன் பரிவர்த்தனை தொடர்பாக அடிப்படையான விஷயங்களை நமக்கு நம்பிக்கை யானவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதுதான் சரியான விஷயமே தவிர, அதற்கு பயந்து ஒதுங்கி நிற்பது சரியான விஷயமல்ல.

பண பயம் 6: பணம் பற்றிப் பேசுவது பாவம்

தீர்வு: பணம் பற்றி நம்மிடைய நிறைய மூடநம்பிக்கைகள் இருக் கின்றன. பணம் பற்றிப் பேசினால் நம் பணம் நம்மை விட்டு போய் விடும். நம்மிடம் பணம் இருப்பது தெரிந்தால் மற்றவர்கள் கண் போட்டுவிடுவார்கள். இதனால், பணம் நம்மை விட்டுப் போய் விடும் என்கிற எண்ணம் நம் அனைவரிடமும் இருக்கிறது. இதில் படித்தவர், படிக்காதவர் வேறுபாடு எதுவும் இல்லை.

திருமணமானவர்கள் தங்களுக்குள் பணத்தைப் பற்றி பேசிக் கொள்ளாமல் இருந்து விடுகிறார்கள். பிற்பாடு கடன், அதிகம் செலவு செய்வது போன்ற விஷயங்கள் தெரியவரும்போது தேவை இல்லாத மனவருத்தம் ஏற்பட்டு, பிரியும் நிலைமை உருவாகிறது. நம்மிடம் மொத்தமாக எவ்வளவு பணம் இருக்கிறது, செலவுக்கு எவ்வளவு பணம் தேவை, எதிர்காலத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள எப்படி சேமிப்பது அல்லது முதலீடு செய்வது என்பது பற்றியெல்லாம் மனம்விட்டுப் பேசினால்தான், நிதி தொடர்பான பிரச்னை எதுவும் வராமல் இருக்கும்.

பண பயம் 7: என் கடன் பிரச்னைக்கு ஒருபோதும் தீர்வு கிடைக்காது

தீர்வு: சிலர் எப்போதும் கடன் சிக்கலிலேயே இருப்பார்கள். ரூ.30,000 சம்பளம் வாங்கும்போதும் கடன் சுமையில் இருப்பார்கள். சம்பளம் ரூ.50,000 ஆக உயர்ந்திருக் கும்போதும் அதே கடன் சிக்கலில் இருப்பார்கள். காரணம், அவர் களின் வரவுக்கு மீறிய செலவு பழக்கமாகும். மேலும், கிரெடிட் கார்டில் கடன் கிடைக்கிறது, தனிநபர் கடன் சுலபமாகக் கிடைக்கிறது என்பதற் காகத் தொடர்ந்து கடனை வாங்கித் தேவையில்லாத பொருள்களை வாங்கி நிரந்தரக் கடனாளியாக இருப்பார்கள். இவர்கள் மிகவும் அவசியமான பொருள்களை மட்டுமே வாங்க ஆரம்பித்தால், கடன் பிரச்னை தானாகவே தீர்ந்து விடும்.

பண பயம் 8: கடைசி வரைக்கும் எனக்கு வாடகை வீடுதான்

தீர்வு: நடுத்தர வருமானப் பிரிவினரின் பெரும்பாலா னோரின் புலம்பல் இதுதான். காரணம், அவர்கள் சரியாகத் திட்டமிடாததுதான். நகரத்துக்குள்ளே வீடு தேடி கொண்டிருப்பார்கள். அதன் விலை அவர்களின் பட்ஜெடுக்குள் பக்கத்தில்கூட வராமல் இருக்கும். அடுத்து தகுதிக்கு மீறி இரண்டு படுக்கை அறை வீடு, மூன்று படுக்கை அறை வீடு, பிரதான சாலையையொட்டியே வீடு இருக்க வேண்டும் என்கிற நிபந்தனைகளுடன் வீடு தேடுவார்கள். இவையும் அவர்களால் வாங்க முடியாத விலையாக இருக்கும். இப்போதெல்லாம் புறநகர்களுக்கு ரயில், பஸ் போக்கு வரத்து அதிகரித்துவிட்டது என்பதால், அந்தப் பகுதிகளில் தங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற வீட்டை வாங்க திட்டமிட்டால் அது நிச்சயம் நடக்கும்.

இன்னும் பலர், இடத்தை வாங்கிய உடனே வீடுகட்டும் திட்டத்துடன் இருக்கிறார்கள். இதுவும் அவர்களின் பட்ஜெட்டுக்குள் வராமல் சொந்த வீடு வாய்க்காமலே போய்விடுகிறது. அதற்குப் பதில், முதலில் மனை, அதன் பிறகு சில ஆண்டுகளில் வீடு என்கிற திட்டம் நிறைவேறக்கூடியதாக இருக்கும். மேலும், மனை வாங்கி 2 அல்லது 3 ஆண்டுகளில் வீடு கட்டுவதுபோல் குறைந்த வட்டியில் வீட்டுக் கடனும் கிடைக்கிறது.

பணம் மட்டுமல்ல, பல பிரச்னைக்கு பயம்தான் முக்கிய காரணமாக இருக்கிறது. வரவுக்குள் செலவு செய்தல், பட்ஜெட் போட்டு செலவு செய்தல், அவசரகால நிதி, ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடு பாலிசி எடுத்திருத்தல், கடன் மேலாண்மை, ரிஸ்க்கைக் குறைக்க முதலீட்டைப் பிரித்து செய்தல் போன்றவற்றை நிதித் திட்டமிடல் முறையில் செய்துவரும் பட்சத்தில் உங்களை விட்டு அனைத்து பண பயங்களும் விலகி ஓடிவிடும்.

பெண்களும் பண நிர்வாகத்தைப் புரிந்துகொள்வது அவசியம்..!

பல குடும்பப் பெண்கள் குறிப்பாக, வேலைக்குச் செல்லாத குடும்பத் தலைவிகள் பண நிர்வாகத்தில் விலகியே இருக்கிறார்கள். இதற்கு முக்கியமான காரணம், பணம் குறித்த பயம்தான். இந்தப் பயத்தைப் போக்குவது ஒன்றும் பெரிய விஷயமில்லை. உங்கள் கணவர் வங்கிக்குப் போகும்போது ஓரிரு முறை உடன் செல்லுங்கள். பணம் போடும் மற்றும் பணம் எடுக்கும் செலானை நீங்களே நிரப்புங்கள். இதே போல், ஆன்லைன் மூலம் அனுப்புவது, இன்ஷூரன்ஸ் பிரீமியம் கட்டுவது போன்ற விஷயங்களைச் செய்தால் பணப் பரிமாற்றத்தில் கைதேர்ந்தவராக மாறிவிடுவீர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism