நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

தமிழக அரசு ஊழியர் ஜி.பி.எஃப் பராமரிப்பு... தவிர்க்க வேண்டிய தப்புக் கணக்குகள்..!

ஜி.பி.எஃப்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜி.பி.எஃப்

ஜி.பி.எஃப்

முதலீட்டு விதியை முழுமையாகக் கடைப் பிடிக்கும் ஓர் அற்புதமான நிதியம்தான் (corpus) அரசு ஊழியர்களுக்கான, ‘ஜி.பி.எஃப்’ எனப்படும், ஜெனரல் பிராவிடன்ட் ஃபண்ட் (பொது வருங்கால வைப்பு நிதி) என்பதன் சுருக்கம்தான் ஜி.பி.எஃப். அதாவது, ‘வருமானம் அதிகரிக்கும்போதெல்லாம் அதற்குத் தகுந்தாற் போல் முதலீட்டையும் அதிகரித்துக்கொள்ள வேண்டும்’ என்பது முதலீட்டுக்கான முதன்மை விதி. இந்த விதியானது ஜி.பி.எஃப்பில் அச்சு பிசகாமல் அப்படியே நடைமுறைப்படுத்தப் படுகிறது.

ப.முகைதீன் ஷேக் தாவூது
ப.முகைதீன் ஷேக் தாவூது

ஜி.பி.எஃப் திட்ட விதிகளின்படி, ஊழியர் ஒருவர் வாங்கும் சம்பளத்தில் 12% தொகையை அவரிடம் இருந்து கட்டாயமாகப் பிடித்தம் செய்ய வேண்டும். இதற்கேற்ப ‘சம்பளம் எப்போதெல்லாம் உயர்கிறதோ, அப்போ தெல்லாம் 12% தொகையைப் பிடித்தம் செய்யும்படி’ உருவாக்கப்பட்டுள்ளது தமிழக அரசு ஊழியர்களின் ஜி.பி.எஃப் திட்டத்துக்கான கணிணி மென்பொருள்.

இன்னும் 23 ஆண்டுகளுக்கு...

01.04.1935-ல் தொடங்கப்பட்டு, நடைமுறையில் இருந்துவரும் தமிழக அரசு ஊழியர்களுக்கான ஜி.பி.எஃப் திட்டம், இன்னும் 23 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கக்கூடும். காரணம், 01.04.2023 முதல் பணியில் சேரும் ஊழியர்களுக்கு சி.பி.எஸ் (Contributory Pension Scheme) நடைமுறைக்கு வந்துவிட்டது. பழைய பென்ஷன் திட்டம் மீண்டும் வந்தால் ஒழிய, ஜி.பி.எஃப் நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை.

அந்த வகையில், 01.04.2002 முதல் 31.03.2003 வரை பணியில் சேர்ந்த தமிழக அரசு ஊழியர்கள்தான், தற்போதைய நிலையில், ஜி.பி.எஃப்பின் கடைசி உறுப்பினர்களாக இருப்பார்கள். இவர் களுக்கும் இவர்களுக்கு சீனியராக உள்ள அனைத்து ஜி.பி.எஃப் சந்தாதாரர்களுக்கும் 31.03.2022 வரை இவர்களது ஜி.பி.எஃப். கணக்கில் உள்ள இறுதித்தொகை (Balance at the end of the last financial year) எவ்வளவு என்ற விவரம், மாநிலக் கணக்காயரின் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஜி.பி.எஃப் சந்தாதாரர்கள் அனைவரும் அந்த வலைதளம் பார்த்து, தமது ஜி.பி.எஃப் கணக்கில் உள்ள பணம் எவ்வளவு என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

கணக்குச்சீட்டு...

மாநிலக் கணக்காயரின் வலைதளத்தில் வெளியிடப்பட்டு உள்ள சந்தாதாரரின் கணக்குச் சீட்டில் (Account slip) நிதி ஆண்டின் தொடக்கத்தில் உள்ள இருப்பை (Balance) நிதி யாண்டு முழுவதும் செலுத்தப்பட்ட சந்தா மற்றும் திருப்பிச் செலுத்திய முன்பணத் தொகையுடன் சேர்த்துக் கூட்டி, நிதியாண்டில் பெற்றுக்கொண்ட தற்காலிக முன்பணம், பகுதி இறுதி வரைவு (Part final withdrawl) ஆகியவற்றைக் கழித்து, வட்டி சேர்த்து, இறுதி இருப்புத் தொகையாக வெளியிடப்பட்டிருக்குமே தவிர, ஊழியர் ஒருவர் பணியில் சேர்ந்தது முதல் நாளது தேதி வரை அவரது கணக்கில் எவ்வளவு தொகை இருக்க வேண்டும் என்ற விவரமெல்லாம் குறிப்பிடப்பட்டிருக்காது.

எவ்வளவு தொகை இருக்க வேண்டும்?

ஜி.பி.எஃப் சந்தாதாரர்களில் பெரும்பகுதியினர் தன்னுடைய ஜி.பி.எஃப் கணக்கில் எவ்வளவு இருக்கிறது என்பதைத்தான் பார்க்கிறார்கள். எவ்வளவு இருக்க வேண்டும் என்று கணக்கிட்டு பார்ப்போர் மிகவும் குறைவானவர்களே. ஓர் உதாரணத்தின்மூலம் இதைப் பார்ப்போம்.

27-வது வயதில் பட்டதாரி ஆசிரியராக, ஏப்ரல் 2022-ல் அரசுப் பணியில் சேர்கிறார். இவருக்கு, வருடாந்தர ஊதிய உயர்வுகளுடன்கூட (Annual Increment) தனது இரண்டு பட்ட மேற்படிப்புத் தகுதிகளுக்காக இரண்டு ஊக்க (Incentive) ஊதிய உயர்வும் தேர்வு நிலை-சிறப்பு நிலைக்கான கூடுதல் (Additional) ஊதிய உயர்வுகளும் பெற்றுள்ளார் எனில், இவரது ஜி.பி.எஃப் கணக்கில், தற்போதைய நிலையில் ரூ.22 லட்சம் இருக்கும் எனில், இவரது ஜி.பி.எஃப் கணக்கு முறையாகப் பராமரிக்கப்படுவதாகக் கொள்ளலாம். இவரது ஜி.பி.எஃப் கணக்கில் இதைவிட அதிகமான தொகைதான் இருக்க வேண்டுமே தவிர, குறைவாக இருக்கக் கூடாது.

தமிழக அரசு ஊழியர் ஜி.பி.எஃப் பராமரிப்பு... தவிர்க்க வேண்டிய தப்புக் கணக்குகள்..!

பணம் குறைவாக இருந்தால்..?

ஜி.பி.எஃப்பில் இருக்க வேண்டிய தொகையைவிட கணக்குச் சீட்டின்படி இருப்பில் உள்ள தொகை குறைவாக இருக்கிறது எனில், அதற்குக் காரணம் ஆறு மாதத்துக்கு ஒருமுறை ஊழியரால் பெறப்படும் முன்பணமும், ஓராண்டுக்கு ஒரு முறை எடுக்கப்படும் பகுதி இறுதி பணவரைவும்தான். முன்பணம் திருப்பிச் செலுத்தத்தக்கது. பகுதி இறுதி வரைவு பெற்றால் அதைத் திரும்பச் செலுத்த வேண்டியதில்லை.

திருப்பிச் செலுத்தப்போகும் முன்பணம் பெறும்போதும் சரி, திரும்ப செலுத்தத் தேவையில்லாத பகுதி இறுதி வரைவு பெறும்போதும் சரி, சந்தாதாரர் போடும் தப்புக்கணக்குகள் ஜி.பி.எஃப் வளர்ச்சியை பாதிக்கக்கூடும். அந்த வகையில், அரசு ஊழியர்கள் போடும் தப்புக் கணக்குகள் பல. அந்தக் கணக்குகள் என்னென்ன?

தப்புக்கணக்கு - 1

ரூ.1.8 லட்சத்தை ஜி.பி.எஃப் முன்பணமாகப் பெறும் ஊழியர் அதை 36 சம தவணை களில் செலுத்தலாம். அதாவது, மாதம் ரூ.5,000 வீதம் செலுத்த வேண்டும். ‘முன்பணமாக வாங்கிய பணத்தைதான் திரும்பச் செலுத்துகிறோமே’ என்று, ஊழியர் தன்னைத் தானே சமாதானப்படுத்தியும் கொள்ளலாம். ஆனால், ரூ.1.8 லட்சத்தை முன்பணமாகப் பெற்ற வகையில் அவருக்கு ஏற்படும் வட்டி இழப்பு ரூ.40,714-ஆக இருக்கும். ஆனால், முன்பணத்தை 36 தவணையில் திருப்பிச் செலுத்து வதன் மூலம் ஈடுசெய்யப்படும் வட்டி ரூ.19,703 மட்டுமே. இந்த வகையில், நிகர இழப்பு ரூ.21,011. இது, ஒரு முறை பெறும் முன்பணத்துக்கு மட்டுமான கணக்கு. ஆறு மாதத்துக்கு ஒரு முறை முன்பணம் பெற முடியும் என்கிறபோது, இந்த இழப்பு ஆண்டுதோறும் ஏற்பட்டால், எவ்வளவு இழப்பு ஏற்படும்?

தப்புக் கணக்கு - 2

தமிழக அரசு தனது ஊழியர் களுக்கு ரூ.40 லட்சம் வரை வீட்டுக் கடன் வழங்குகிறது. அதே சமயம், ஊழியர் ஒருவர் தனது ஜி.பி.எஃப் கணக்கில் இருந்தும் வீடு கட்ட (திரும்பச் செலுத்தத் தேவையில்லாத) பகுதி வரைவாகவும் ரூ.9 லட்சம் பெறலாம். இவ்வாறு ஜி.பி.எஃப் ரூ.9 லட்சம் பெற்று விட்டால், வீட்டுக் கடன் ரூ.31 லட்சம் மட்டுமே கிடைக்கும்.

அதாவது, வீட்டுக் கடனைக் குறைக்க ஜி.பி.எஃப்பில் பணம் வாங்கினால், கடன் தொகை குறையும் என்பது சிலரது கணக்காக இருக்கக்கூடும். ஆனால், அதன்மூலம் ஏற்படும் இழப்பு, இரண்டு வகையாக இருக்கலாம்.

1. வீட்டுக் கடனாகவே ரூ.40 லட்சத்தையும் ஒட்டு மொத்தமாக வாங்கிவிட்டால், அதில் உள்ளடங்கிய ரூ.9 லட்சத்துக்கு உரிய வட்டி ரூ.1,05,781-ஆக மட்டுமே இருக்கும். அந்த ரூ.9 லட்சத்தை ஜி.பி.எஃப்பில் இருந்து எடுத்ததால், ஜி.பி.எஃப்பில் ஏற்படும் வட்டி இழப்பு ரூ.1,32,336-ஆக இருக்கும். இதனால் ரூ.27,000 நிகர இழப்பு ஏற்படும்.

2. அது மட்டுமல்ல, வீட்டுக் கடன் வாங்கியவர் இறந்து போகும் நேர்வில் அசல் மற்றும் வட்டி ரூ.31 லட்சம் மட்டும் தள்ளுபடி செய்யப் பட்டுவிடும். அப்போது ஜி.பி.எஃப்பில் எடுத்த ரூ.9 லட்சம் இழப்பாக இருக்கும்.

தப்புக் கணக்கு – 3

ஓய்வு பெற ஒரு வருடம் முன்பே இருப்புத்தொகையில் 90% தொகையை எந்தக் காரணமும் சொல்லாமல் பெறலாம். பெறப்போகும் பணத்துக்கு நிதி நிர்வாகக் கணக்கு போட்டுக்கொள்ளாமல் பணத்தை வாங்கி ஓராண்டுக்கு சும்மா (Idle) வைத்திருந்தால், வட்டியில் பெரிய அளவு நஷ்டம் ஏற்படும். அதாவது, 50 லட்சம் தொகை உள்ளவர் ரூ.45 லட்சத்தை ஓய்வு பெற ஓராண்டுக்கு முன்பே பெறலாம். திட்டமிடாமல் ரூ.45 லட்சம் பணத்தைப் பெற்று வைத்திருந்தால், வட்டி இழப்பு ரூ.3,19,500-ஆக இருக்கும். இது மிகவும் கவனத்துக்குரிய ஒன்று.

தப்புக் கணக்கு – 4

20 வருட பணி நிறைவு செய்த ஆசிரியர் ஒருவரின் தற்போதைய ஜி.பி.எஃப் இருப்பு ரூ.22 லட்சம் இருக்கும் என்று ஏற்கெனவே பார்த்தோம் அல்லவா? 27 வயதில் பணிக்கு வந்த இவரின் தற்போதைய வயது 47. இவருக்கு இன்னும் 13 வருட சர்வீஸ் உள்ளது. எனவே, மேற்கண்ட ரூ.22 லட்சம் (பணம் எடுக்காமல் விட்டு வைத்தால்) ஓய்வு பெறும்போது, அது சுமார் ரூ.89 லட்சமாக இருக்கக்கூடும். அதாவது, தற்போது உள்ள சம்பளம் 10% வருடாந்தர வளர்ச்சி யுடன் 7% வட்டியும் பெற்று வளரும்பட்சத்தில்.

தப்புக் கணக்கு – 5

கல்வி, மருத்துவம் நிச்சயதாம்பூலம் ஆகிய ஏதேனும் ஒரு நோக்கத்துக்கு முன்பணம் பெற்ற ஊழியர், முன்பணத்தை வேறு தேவைக்குப் பயன் படுத்துவது அதிகாரிக்கு தெரியவந்தால், ஊழியருக்கு மெமோ தரப்படும். ஊழியரின் எழுத்து பூர்வமான பதில் திருப்தியாக இல்லை எனில், முன்பணத்தை உடனே திருப்பிச் செலுத்த வேண்டி யிருக்கும்.

ஓய்வுக்காலத்துக்கு முதன்மை ஊன்றுகோல்

பழைய பென்ஷன் சார்ந்தவர்களுக்குதான் ஜி.பி.எஃப் உறுப்பினராகும் வாய்ப்பு உண்டு. பென்ஷன், கிராஜுவிட் டியைவிட ஓய்வுக்காலத் துக்கு முதன்மை ஊன்று கோல் ஜி.பி.எஃப் என்பதே சரி. ஏனெனில், கால ஓட்டத்தில் பென்ஷன் கணக்குகள் மாறுபடலாம். பணி ஓய்வு தருணத்தில் பணியிடை நீக்கம் (Suspension) செய்யப்பட்டால் பென்ஷன் தாமதமாகலாம்; நிறுத்தப்படலாம். ஆனால், ஜி.பி.எஃப் அப்படி அல்ல.

மனைவியின் ஜி.பி.எஃப் பணத்துக்குக் கணவர் உரிமை கோர முடியாது. கணவரின் ஜி.பி.எஃப்-க்கு மனைவி உரிமை கொண்டாடவும் தடுக்கப்படலாம். ஊழியர் பட்ட கடனுக்கு ஜி.பி.எஃப்பில் பிடித்தம் செய்ய நீதிமன்ற ஆணை பிறப்பிக்கப்படாது. இயற்கை இடர்ப்பாடுகள் ஜி.பி.எஃப் பெறுவதைத் தடுக்க முடியாது. எனவே, ஜி.பி.எஃப்-ல் இயன்ற வரை பணத்தைச் செலுத்தலாம். முடிந்தவரை பணம் எடுப்பதைத் தவிர்க்கலாம். நிம்மதியான ஓய்வுக்காலத்தை உறுதி செய்து கொள்ளலாம்.