பங்குச் சந்தை
நடப்பு
தொடர்கள்
Published:Updated:

தொடர்ந்து வட்டி உயர்வு... வீட்டுக் கடன் வாங்கியவர்கள் என்ன செய்ய வேண்டும்?

வட்டி உயர்வு
பிரீமியம் ஸ்டோரி
News
வட்டி உயர்வு

வட்டி உயர்வு

வீட்டுக் கடன் வாங்கியவர்கள் செய்வதறியாது திகைத்து நிற்கிறார்கள். காரணம், இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ) ரெப்போ வட்டி விகிதத்தை (Repo Rate) அண்மைக் காலத்தில் ஐந்து மாதங்களில் நான்கு தடவைகளில் மொத்தம் 190 அடிப்படை புள்ளிகள் அதாவது, 1.9% அதிகரித்துள்ள தாகும். இதனால், வீட்டுக் கடனுக்கான வட்டி கணிசமாக எகிறி இருக்கிறது.

சௌ.சிவகுமார் 
நிறுவனர், 
www.bestservicerealty.in
சௌ.சிவகுமார் நிறுவனர், www.bestservicerealty.in

வீட்டுக் கடன் வட்டி உயர்வு...

இந்த ஆண்டில் 2022 மே மாதம் 4-ம் தேதி ரெப்போ விகிதத்தை முதன்முதலாக ஆர்.பி.ஐ அதிகரித்தது. நாட்டில் அதிகரித்துள்ள பணவீக்க விகிதத்தைக் கட்டுக்குள் கொண்டு வர, இப்படி ஆர்.பி.ஐ தொடர்ந்து வட்டி விகிதத்தை அதிகரித்து வருகிறது. ஆகஸ்ட் மாத நுகர்வோர் பணவீக்க விகிதம் 7 சதவிகித மாக உள்ளது. ஆர்.பி.ஐ பணவீக்க விகிதம் 4 சதவிகிதமாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறது.

செப்டம்பர் 30-ம் தேதி வெள்ளிக்கிழமை ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா, ரெப்போ வட்டி விகிதத்தை 0.5% அதிகரித்தது. இதை அடுத்து ரெப்போ விகிதம் 5.9 சதவிகிதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனால், மூன்று மாதத்துக்குமுன் 7 சதவிகிதமாக இருந்த வீட்டுக் கடன் வட்டி இப்போது 8.9 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

இந்த வட்டி அதிகரிப்பால், மாறுபடும் வட்டியில் (ஃப்ளோட்டிங் ரேட்) வீட்டுக் கடன் வாங்கியவர்களின் கடனைக் கட்டும் காலம் மிகவும் அதிகரித்துள்ளது. பலருக்கு அவர்களின் பணி ஓய்வுக் காலத்தைத் தாண்டி 60 வயதுக்கு மேலும் வீட்டுக் கடனைக் கட்ட வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது.

பொதுவாக, வீட்டுக் கடன் வட்டி அதிகரிக்கப்பட்டதும், கடன் வழங்கிய வங்கி, வீட்டுவசதி நிறுவனம், நிதி நிறுவனம் எதுவும் கடனுக்கான மாதத் தவணையை (இ.எம்.ஐ) அதிகரிக்காது. அதே இ.எம்.ஐ தொகையைத்தான் வசூலிக்கும். ஆனால், தானாகவே கடனைக் கட்டி முடிக்கும் காலம் அதிகரித்துவிடும்.

ஏற்கெனவே ஃப்ளோட்டிங் விகிதத்தில் வீட்டுக் கடன் வாங்கிய வர்களுக்கு வீட்டுக் கடனுக்கான வட்டி உயர்ந்துள்ள நிலையில் புதிதாக வீட்டுக் கடன் வாங்குபவர்களும் அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இதனால், இந்திய வீட்டுக் கடன் துறையும் ரியல் எஸ்டேட் துறையும் தள்ளாடிக்கொண்டு இருக்கிறது.

தொடர்ந்து வட்டி உயர்வு... வீட்டுக் கடன் வாங்கியவர்கள் என்ன செய்ய வேண்டும்?

ரெப்போ வட்டியுடன் இணைப்பு...

தொடர்ந்து வீட்டுக் கடன் வட்டி அதிகரித்துவரும் நிலையில், புதிதாக வீடு வாங்கும் பலர், மாறுபடும் வட்டிக்கு பதில் நிலையான வட்டியைத் தேர்வு செய்யத் தொடங்கி இருக் கிறார்கள். வீட்டுக் கடனுக்கான மாறுபடும் வட்டியே ரெப்போ வட்டியுடன் இணைக்க வேண்டும் என ஆர்.பி.ஐ சொல்லி யிருக்கிறது. இதனால், ரெப்போ வட்டி உயர்த்தும்போது வீட்டுக் கடன் மாறுபடும் வட்டியும் தானே அதிகரித்துவிடுகிறது.

இப்போது வீட்டுக் கடனுக்கான மாறுபடும் வட்டி விகிதம் ஒற்றை இலக்கத்தில் இருக்கிறது. அது விரைவில் இரட்டை இலக்கத்துக்குச் சென்றாலும் ஆச்சர்யப்படத் தேவையில்லை. 2000-ம் ஆண்டு வாக்கில் வீட்டுக் கடனுக்கான வட்டி 12% - 14% என்கிற அளவில் அதிகமாக இருந்தது. அந்த அளவுக்கு வட்டி அதிகரிக்குமா என்பது போகப்போகத்தான் தெரியும்.

மாதத் தவணை, கடன் காலம்: என்ன பாதிப்பு..?

ரெப்போ வட்டி அதிகரிப்புக்கேற்ப வீட்டுக் கடன் வட்டி அதிகரித்துள்ளது. உதாரணமாக, ஒருவர் ரூ.10 லட்சம் கடனை 20 ஆண்டுகளில் (240 மாதங்கள்) 7% வட்டியில் கடனைத் திரும்பக் கட்டுவதாக வீட்டுக் கடன் வாங்கியிருப்பதாக வைத்துக்கொள்வோம். ரூ.10 லட்சம் கடனுக்கு இவரின் இ.எம்.ஐ ரூ.7,750 ஆகும்.

மூன்று மாதத்தில் வீட்டுக் கடன் வட்டி 1.9% அதிகரித்து, 8.9 சதவிகிதமாக உயர்கிறது எனில், அதே ரூ.7,750-ஐ மாதத் தவணையாகக் கட்டிவந்தால், 237 மாதத் தவணைக்குப் பதிலாக 410 மாதங்கள் (சுமார் 34 ஆண்டுகள்) கடனைக் கட்டி னால்தான் வீட்டுக் கடன் முடிவுக்கு வரும். அதாவது, கூடுதலாக 173 மாதங்கள் (சுமார் 14.5 ஆண்டுகள்) கடனைக் கட்ட வேண்டும்.

அதே நேரத்தில், மாதத் தவணை போல் 17 மடங்கு தொகையை உடனடியாகப் பகுதித் தொகையாக கட்டினால் கடனைக் கட்டி முடிக்கும் காலம் 236 மாதங் களாகக் குறைந்துவிடும்.

இந்த உதாரணத்தின்படி, ரூ.10 லட்சம் கடனுக்கு கிட்டத்தட்ட ரூ.1,31,750-ஐ உடனடியாகக் கட்ட வேண்டும். இதுவே இ.எம்.ஐ-யின் 4.5 மடங்கு தொகையான ரூ.34,880-ஐ, மீதிக் கடன் காலத்தில் ஆண்டுதோறும் கூடுதலாகக் கட்டிவந்தால், கடன் 236 மாதங்களில் முடிந்துவிடும். இது, மேற் கொண்டு வட்டி உயரவில்லை என்கிற கணிப்பின் அடிப் படையில்தான்.

0.5% வட்டி விகித உயர்வால் என்ன பாதிப்பு?

ஒருவருக்கு ரூ.10 லட்சம் வீட்டுக் கடன் பாக்கியுள்ளது. அவருக்கான வட்டி 8.5%, இந்தக் கடனுக்கான காலம் 20 ஆண்டுகள். இந்த நிலையில் வட்டி 0.5% உயர்ந்தால், வட்டி விகிதம் 8.5% என்கிற அளவுக்கு உயர்ந்து, மாதத் தவணை ரூ.8,678 ஆகும். இதுவே வட்டி 9 சதவிகிதமாக உயரும்போது மாதத் தவணை ரூ.8,997-ஆக அதிகரிக்கும். அதாவது, ரூ.10 லட்சத்துக்கு ரூ.319 அதிகரிக் கிறது. ரூ.1 லட்சம் கடனுக்கு இ.எம்.ஐ அதிகரிப்பு ரூ.31.90 அதிகரிக்கிறது.

தொடர்ந்து வட்டி உயர்வு... வீட்டுக் கடன் வாங்கியவர்கள் என்ன செய்ய வேண்டும்?

வீட்டுக் கடன் வாங்கியவர்கள் இப்போது என்ன செய்ய வேண்டும்?

மாறுபடும் வட்டி விகிதத் தில் வீட்டுக் கடன் வாங்கிய வர்கள் இப்போது என்ன செய்ய வேண்டும் என்பது முக்கியமான விஷயம். அதற்கான பதிலைப் பார்ப்போம்.

வீட்டுக் கடன் வட்டி அதிகரிக்கும்போது கடன் வழங்கிய நிறுவனங்கள் மாதத் தவணையை அதிகரிக் காது; கடனை திரும்பக் கட்டும் காலம் அதிகரிக்கும் என்பதால், கடன் வழங்கிய நிறுவனங்களுக்கு லாபமாக இருக்கும்; வீட்டுக் கடன் வாங்கியவர் களுக்கு வட்டி இழப்பாக இருக்கும்.

வீட்டுக் கடன் ஒரு சுமையாகத் தெரிந்தால், கூடிய வரையில் இடையிடையே பணம் கட்டி அசல் தொகையைக் குறைக்கலாம். ஆண்டுக்கு ஒருமுறை பெரிய தொகையைக் கட்டி அசலைக் குறைக்கலாம்.வாய்ப்பு இருக்கும்பட்சத்தில் மாதத் தவணையை அதிகரித்து கட்டி வரலாம்.

தற்போதைய நிலையில், வீட்டுக் கடனுக்கான வட்டி ஒற்றை இலக்கத்தில் இருக்கிறது. வீட்டுக் கடன் நீண்ட காலத்துக்கானது. நிறுவனப் பங்குகள், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் மூலம் இரட்டை இலக்க லாபம் பெற வாய்ப்புண்டு என்கிற நிலையில், கடனை விரைந்து அடைப்பதற்குப் பதில் முதலீடு செய்து, குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு பகுதி வீட்டுக் கடனை அடைத்தால், கடன் வேகமாகக் குறையும்.

மேலும், வீட்டுக் கடனில் திரும்பக் கட்டும் அசல் மற்றும் வட்டிக்கு நிதி ஆண்டில் ரூ.3.5 லட்சம் வரைக்கும் வரிச் சலுகை இருப்பதாலும் வட்டி விகிதம் குறைவாக இருப்பதாலும் கடனை விரைந்து அடைப்பது லாபகரமாக இருக்காது.

உங்களின் வயது, வருமானம் ஆகியவற்றின் அடிப்படையில் மாதத் தவணையை அதிகரிப்பதாக, பகுதி பணம் கட்டி அசலைக் குறைக்க முடி வெடுப்பதே சரியாக இருக்கும்.

விரைவில் தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் எனப் பல பண்டிகைகள் வருகின்றன. இந்த சமயத்தில், பலரும் வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்க முடிவெடுக்கலாம். அவர்கள் இப்போது உயர்ந்துள்ள வட்டி விகிதத்தை ஒரு பெரிய பிரச்னையாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை!

இதர கடன்களுக்கும் வட்டி அதிகரிப்பு..!

ரெப்போ வட்டி விகித உயர்வால் மாறுபடும் வட்டி விகிதத்தில் வாங்கப்பட்ட அனைத்து வகையான கடன்களுக்குமான வட்டி உயர்ந்துள்ளது. குறிப்பாக, மாறுபடும் வட்டியில் வாங்கப்பட்ட வாகனக் கடன்கள் (இரு சக்கரம் மற்றும் கார்), தனிநபர் கடன், கல்விக் கடன் ஆகியவற்றுக்கான வட்டியும் உயர்ந்துள்ளது. இந்த வகை கடன்களை புதிதாக வாங்குபவர்களும் அதிக வட்டி கொடுக்க வேண்டியிருக்கிறது.

ஒருவர் ரூ.10 லட்சம் கார் கடனை 11% வட்டியில் ஏழு ஆண்டுகளில் திரும்பக் கட்டுவதாக வாங்கியிருக்கிறார் எனில், மாதத் தவணை ரூ.17,122 கட்ட வேண்டும். இந்த நிலையில், வட்டி 0.5% உயர்கிறது எனில், மாதத் தவணை ரூ.17,386-ஆக உயரும். அதாவது, தவணை ரூ.264 உயரும். ரூ.1 லட்சம் கடனுக்கு ரூ.26.4 அதிகரிக்கிறது. ஒருவர் ரூ.10 லட்சம் தனிநபர் கடனை 15% வட்டியில் ஐந்து ஆண்டுகளில் திரும்பக் கட்டுவதாக வாங்கியிருக்கிறார் எனில், மாதத் தவணை ரூ.23,790 ஆகும். இந்த நிலையில், வட்டி 0.5% உயர்கிறது எனில், மாதத் தவணை ரூ.24,053-ஆக உயரும். அதாவது, தவணை ரூ.263 உயரும். ரூ.1 லட்சம் கடனுக்கு ரூ.26.3 அதிகரிக்கும்!