தொடர்கள்
பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

வீட்டுக் கடன்: மாதத் தவணை கட்டத் தவறினால் அபராதம் விதிக்கப்படுமா?

வீட்டுக் கடன்
பிரீமியம் ஸ்டோரி
News
வீட்டுக் கடன்

கைகொடுக்கும் வீட்டுக் கடன்! - 20

வீட்டுக் கடன் என்பது ஒருவர் தன் வாழ்நாளில் வாங்கும் மிகப் பெரிய கடன் மற்றும் மிக நீண்ட கடன் ஆகும். இந்தக் கடனை முழுமையாகக் கட்டி முடித் தால்தான் அடமானத்தில் இருக்கும் சொத்துப் பத்திரம் மீட்கப்பட்டு வீடு முழுமை யாக சொந்தமாகும். வீட்டுக் கடன் தவணையைக் கட்டத் தவறினால் என்ன நடக்கும்?

எஸ்.கார்த்திகேயன்,  நிதி ஆலோசகர், 
https://winworthwealth.com/
எஸ்.கார்த்திகேயன், நிதி ஆலோசகர், https://winworthwealth.com/

ஒரு தவணையைக் கட்டத் தவறினால்...

வீட்டுக் கடனுக்கான தவணையைத் தொடர்ந்து சரியாகக் கட்டிவரும் நிலை யில், ஒரு தவணையைக் கட்டத் தவறினால் வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனத்திடம் இருந்து கட்டாமல் விட்ட தவணை யைக் கட்டச் சொல்லி எஸ்.எம்.எஸ் மற்றும் இ-மெயில் வரும். இதுவே தனியார் நிதி நிறுவனமாக இருந்தால், போன் செய்துகூட கடனைக் கட்டச் சொல்லலாம்.

இந்தத் தகவலுடன், விடுபட்ட தவணை கட்டுவதற் கான ஆன்லைன் இணைப்பு (Online Payment Link) இணைக் கப்பட்டிருக்கலாம். அதை க்ளிக் செய்வது மூலம் சுலப மாக விடுபட்ட தவணைக் கான பணத்தைக் கட்ட முடியும். தாமதமாகக் கட்டு வதற்கான அபராதம் என்பது மாதத் தவணையில் 1 - 2 சதவிகிதமாக இருக்கும். இதுவும் மாதத் தவணைத் தொகையுடன் சேர்க்கப்பட்டு இருக்கும். இந்த லிங் மூலம் அல்லது வழக்கமான முறை யில் கடனைக் கட்டி விட்டால் பிரச்னை எதுவும் இல்லாமல் முன்போல் கடன் தொடரும்.

இரு தவணையைக் கட்டத் தவறினால்...

முதல் தவணை கட்டாத நிலையில், இரண்டாவது தவணையும் தவறினால், வங்கியின் நடவடிக்கை சற்றுத் தீவிரமாகும். தவறிய இரு தவணைகளுக்கான தொகையைக் கட்டச் சொல்லி தகவல் வரும். உங்களின் நிதி நிலையை அனுசரித்து தவணைக்கான பணம் கட்ட ஓரிரு வாரம் கால அவகாசம் அளிக்கப்படலாம். அதற்குள் இரு தவணை பாக்கி மற்றும் அபராத்தைக் கட்டிவிட்டால், வீட்டுக் கடன் சிக்கல் எதுவும் இல்லாமல் வழக்கம்போல் தொடரும்.

வீட்டுக் கடன்: மாதத் தவணை 
கட்டத் தவறினால் அபராதம் விதிக்கப்படுமா?

மூன்றாவது மாதம் தவணை கட்டத் தவறினால்...

தொடர்ந்து மூன்று மாதம் தவணை கட்டவில்லை எனில், வங்கியானது சட்டப் படியான நடவடிக்கைகளை (Legal Proceedings) எடுக்கத் தொடங்கும். தவறிய தவணை களுக்கான தொகை மற்றும் அபராதத் தொகையை கட்டச் சொல்லி நினைவூட் டல்களை எஸ்.எம்.எஸ், இ-மெயில் மூலம் அனுப்பும். மேலும், வங்கி ஊழியர் அல்லது அதிகாரி தொலைபேசி மூலமும் பேசுவார்.இதற்குமுன் இது போன்ற சூழ்நிலை ஏற்பட்டால், வங்கிகள் கடனை வசூலிப்பதிலும் மற்றும் வீட்டை விற்று கடனுக்கான பணத்தைப் பெறுவதிலும் மிகவும் கடினமான காரியமாக இருந்தது. இப்போது சர்ஃபாசி சட்டம் (SARFAESI Act - Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act) மூலம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதாவது, 90 நாள்கள் அல்லது மூன்று தவணைகளுக்குமேல் ஒருவர் தொடர்ந்து வீட்டுக் கடனைக் கட்டவில்லை எனில், அந்தக் கடன் வாராக்கடனாக (Non Performing Asset -NPA) மாற்றப்படும். அதன்பிறகு, அந்த வீட்டை வங்கி அதன் பொறுப்பில் எடுத்துக் கொள்ளும்; ஏலத்துக்கு விட்டு, மொத்தக் கடன் தொகையைக் கழித்துக்கொண்டு, மீதித் தொகை இருந்தால், வீட்டுக் கடன் வாங்கியவருக்குத் தரும். வீட்டுக் கடன் பாக்கியுள்ள தொகைக்குக் குறைவாக வீடு ஏலம் போனால் மீதித் தொகையைக் கடன் வாங்கியவர்தான் கட்ட வேண்டும்.

பொதுவாக, வங்கிகள் அல்லது வீட்டுவசதி நிறுவனங்கள் வீட்டை அதன் பொறுப்பில் எடுக்கப் போகிறது எனில், முன்கூட்டியே அறிவிப்பை (Notice) வெளியிடும். இதே போல, வீட்டை ஏலம் விடப் போகும் விஷயத்தையும் முன்கூட்டியே வீட்டுக் கடன் வாங்கியவருக்கு முறையாகத் தெரிவிக்கும். வாராக் கடனாக மாறிய பிறகு 60 நாள்கள் அவகாசம் தரும். மேலும், வீட்டை ஏலம் விடுவதற்கான நடவடிக் கைகள் சுமார் 30 நாள்கள் நடக்கும். ஆக மொத்தம், முதல் தவணை தவறியதிலிருந்து சுமார் ஆறு மாதக் காலத்துக்குப் பிறகுதான் வீடு ஏலத்துக்கு வரும். அதற்குமுன் எப்போது வேண்டுமானாலும் ஒருவர் அவரின் வீட்டை மீட்க முடியும். அதாவது, தவறிய தவணைகளைக் கட்டுவதன்மூலம் ஏலம்விடுவது நிறுத்தப்படும். வீடு ஏலத்துக்கு வரும் நிலையில் அவர் முழுக் கடன் தொகையைக் கட்டும்பட்சத்தில் வீட்டை சொந்தமாக்கிக்கொள்ள முடியும்.

மூன்றாம் தரப்பு ஏஜென்டுகள்...

வீட்டுக் கடன் இரு மாதம் கட்டவில்லை எனில், கடன் வழங்கிய நிறுவனங்கள் மூன்றாம் தரம்பு ஏஜென்டுகள் (Third-Party Agents) மூலம் கடனை வசூலிக்க முயற்சி செய்யும். வீட்டுக் கடன் வாங்கியவர், அதே வங்கியில் வேறு ஏதாவது கடன் வாங்கி அதைச் சரியாகச் செலுத்தி வந்தாலும், அதுவும் வாராக்கடன் பட்டியலில் வர வாய்ப்பிருக்கிறது. எனவே, வீட்டுக் கடனை வாராக்கடனாக மாறாமல் பார்த்துகொள்வது மிக முக்கியமாகும்.

வங்கிகள் சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்குச் செல்லும் முன், கடன் தொகையை எப்படியாவது வசூலிக்க முடியுமா என்பதில்தான் குறியாக இருக்கும். வீட்டை ஏலத்தில் விடுவதற்கு நீண்ட காலம் எடுத்துகொள்ளும். ஆகவே, ஒரு சில வங்கிகள் குறிப்பாக, தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடனை வசூலித்துக் கொடுக்கும் ஏஜென்டுகள்மூலம் நெருக்கடி தந்து கடனை வசூலிக்க முயலும். அதன் பின்பே சட்டப்படியான நடவடிக்கைகளுக்குச் செல்லும்.

கடன் வசூலிக்கும் ஏஜென்டுகள் நெருக்கடி கொடுக்கும் போது கடன் வாங்கியவர்களுக்கு சில உரிமைகள் இருக்கின்றன. கடனை வசூலிக்க வருபவர்கள் யார் என்பதை அவர்களின் அடையாள அட்டையைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். சரியான நபர்கள்தானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் கடன் வாங்கிய வங்கி அதிகாரிகளிடம் உறுதிப்படுத்திக்கொள்வது நல்லது.

கடன் தவணையைக் கட்டுவதாக இருந்தால் எக்காரணம் கொண்டும் ஏஜென்டுகளிடம் பணம் தராதீர்கள். வங்கிக்குச் சென்று நேரில் கட்டுங்கள். தனிமனித உரிமை விதிமுறைகளின் படி, ஒருவர் வாங்கிய கடன் குறித்த விவரங்களை வங்கி நிர்வாகம் தொடர்பில்லாத மூன்றாம் நபருடன் பகிரக் கூடாது. ஒரு வேளை, வங்கி ஒருவரின் கடன் விவரங்கள் பற்றி மூன்றாம் நபர்களிடம் தெரிவித்திருந்தால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கடன் பெற்றவர் களுக்கு உரிமை உண்டு.

கடன் வசூலிக்க வரும் அதிகாரிகள் / ஏஜென்டுகள் கடன் வாங்கியவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் கெளரவ மாகவும் நாகரிகமாகவும் நடந்துகொள்வது கட்டாயம். அதுவும் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரையில் மட்டுமே கடன் வாங்கியவர் களைக் கடன் வசூலிக்கும் அதிகாரிகள் அணுக வேண்டும். அதை மீறினால், நீதிமன்றத்தில் ஆதாரங்களை சமர்ப்பித்து அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க முடியும்.

என்ன செய்ய வேண்டும்?

தொடர்ந்து மூன்று மாதத் துக்குமேல் வீட்டுக் கடன் தவணையைச் சரியாகக் கட்ட முடியாத சூழ்நிலை ஏற்படும் என முன்பே தெரிந்தால், முன்கூட்டியே வங்கி / வீட்டு வசதி நிறுவனம், நிதி நிறுவனத்தின் மேலாளரை அணுகி, நிலைமையை விளக்கிச் சொல்வது நல்லது.இதனால், சில மாதங்களுக்கு மாதத் தவணைகள் கட்டுவ தில் இருந்து விலக்கு அளிக்கலாம். தேவைப்பட்டால் கடன் காலத்தை அதிகரித்து, மாதத் தவணையைக் குறைக்க முடியும். அதிக சம்பளத்தில் இருக்கும் ஒருவர் ஏதோ ஒரு சிக்கல் காரணமாக வேறு குறைவான சம்பள வேலைக்கு மாறக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டால், கடன் காலத்தை அதிகரித்து கடனை மாற்றி அமைக்க (Restructuring Loan) முடியும்.

உதாரணமாக, 30 வயதுள்ள ஒருவர் 15 வருடத்தில் கடனை அடைப்பதாக அதாவது, அவரின் 45 வயது வரை கடன் கட்டுவதாக வீட்டுக் கடன் வாங்கியிருப்பதாக வைத்துக்கொள்வோம். கடன் ஐந்து வருடங்கள் கட்டப் பட்ட நிலையில் தற்போதுள்ள அளவுக்கு அதிக மாதத் தவணையை அவரால் கட்ட முடியவில்லை எனில், கடனை அவரின் 50 வயது வரைக்கும் கட்டும்படி கடன் காலத்தை நீட்டித்துக் கொள்ள முடியும். அப்போது மாதத் தவணை குறையும். சம்பளம் குறைந்திருக்கும் நிலையில், கடன் தவணையும் குறையும்போது நிலைமையை சமாளித்து மீண்டுவர முடியும்.

750-க்குமேல் நல்ல கிரெடிட் ஸ்கோர் இருந்து, இதற்கு முன் இதுபோன்று தவணை தவறவில்லை எனில், வங்கிகள், கடன் காலத்தை நிச்சயம் நீட்டித்துத் தரும்.

இப்படி மாற்ற வங்கி சம்மதிக்கவில்லை எனில், உங்களுக்கு வேறு ஏதாவது முதலீடுகள் அதாவது நிறுவனப் பங்குகள், மியூச் சுவல் ஃபண்டுகள், ஃபிக்ஸட் டெபாசிட்டுகள் இருந்தால், அவற்றைப் பணமாக்கி, வீட்டுக் கடன் தவணை பாக்கியைக் கட்டலாம். பின்னர், வாய்ப்பு வசதிகள் வந்த பிறகு இந்த முதலீடுகளை மீண்டும் செய்துகொள்ளலாம். தங்க நகை இருந்தால், அதை அடமானம் வைத்தும் நிலையை சமாளிக்கலாம். மேலும், உடனடியாகத் திரும்பச் செலுத்தத் தேவை இல்லாத வகையில் நண்பர்கள், உறவினர்களிடம் கடன் வாங்கி நிலைமையைச் சமாளிக்கலாம். இதற்கு, நீங்கள் பண விஷயத்தில் இதற்குமுன் நியாயமாக நடந்திருப்பது அவசியமாகும்.

ஏலம் விடும்பட்சத்தில் குறைவான தொகைக்குப் போகும் சூழ்நிலை இருந்தால், வங்கியின் ஒப்புதலுடன் வீட்டுக் கடன் வாங்கியவரே அவரின் வீட்டை விற்க ஏற்பாடு செய்யலாம். வீட்டை வாங்குபவர் பாக்கிக் கடனைக் கட்டும்பட்சத்தில் கடன் பாக்கி போக கணிசமான தொகை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அல்லது இன்னொருவர் இந்த வீட்டைக் கடனில் வாங்க வழி இருக்கிறது. அதையும் வங்கியின் ஒப்புதலுடன் மேற்கொள்ள முடியும்.

சிலர், சில முறை மாதத் தவணையைத் தாமதமாகக் கட்டி, பின்னர் அதையே பழக்கமாக்கிக் கொள்கிறார்கள். இதனால் ஏற்படும் பின்விளைவுகளை அவர்கள் நினைத்துப் பார்ப்ப தில்லை. இப்படி தொடர்ந்து தாமதமாக இ.எம்.ஐ கட்டிவரும் நிலையில், கிரெடிட் ஸ்கோர் மிகவும் குறையும்; இதனால் எதிர்காலத்தில் எந்தக் கடனும் வாங்க முடியாது. மேலும், இ.எம்.ஐ தாமதக் கட்டணத்துக்கு ஜி.எஸ்.டி இருக்கிறது.

தவணை கட்டுவதில் சிக்கலைத் தவிர்க்க, வீட்டுக்கு எடுத்து வரும் சம்பளத்தில் கடன் தவணை 40 சதவிகிதத்தைத் தாண்டாமல் பார்த்துக்கொள்வது கட்டாயமாகும். மேலும், குறைந்தபட்சம் ஒரு மாத இ.எம்.ஐ தொகை வங்கிக் கணக்கில் எப்போதும் கூடுதலாக வைத்துக்கொள்வது அவசியம்.

(சொந்த வீட்டை வாங்குவோம்)

கிரெடிட் ஸ்கோர் பாதிப்பு..!

வீட்டுக் கடன் தவணைக்கான பணம் கட்டத் தவறுவது கிரெடிட் ஸ்கோரைக் கட்டாயம் பாதிக்கும் என ஏற்கெனவே பார்த்தோம். 90 நாள்களுக்கு மேல் மாதத் தவணையைக் கட்டவில்லை எனில், கடன் வழங்கிய நிறுவனம் இந்த விவரத்தைக் கடன் அமைப்புகளுக்கு (credit bureaus) அனுப்புகின்றன. இந்த விவரம் ஒருவரின் கடன் அறிக்கையில் என்.பி.ஏ (Non-performing Asset) எனக் குறிக்கப்பட்டிருக்கும். இதைத் தொடர்ந்து கிரெடிட் ஸ்கோர் உடனே வெகுவாகக் குறையும்; எதிர்காலத்தில் வேறு எந்தக் கடனும் வாங்க முடியாத நிலை உருவாகும்.

அவசரகால நிதியின் அவசியம்..!

கடன் வாங்கும் முன், முதலீட்டை ஆரம்பிக்கும் முன் ஒருவர் அவரின் மாதச் செலவுகளைப் போல் குறைந்தது 3 முதல் 6 மடங்கு தொகையை அவசர கால நிதியாகச் சேர்த்து வைக்க வேண்டும் என வலியுறுத்துகிறார்கள் நிதி நிபுணர்கள்.

குடும்பத்துக்கான மாதச் செலவுகள் என்கிறபோது அதில் மளிகைச் செலவுகள், மின்சாரக் கட்டணம், கடன் தவணைகள் சேரும். இப்படி சுமார் ஆறு மாதச் செலவு தொகையைச் சேர்த்து வைக்கும் போது திடீர் உடல் நலக்குறைவு, வேலை இழப்பு போன்றவற்றின்போது குடும்பச் செலவுகள் மற்றும் கடன் தவணைகளைச் சுலபமாக மேற்கொண்டு நிலைமையை சுமுகமாக சமாளிக்க முடியும். இது வரைக்கும் அவசரகால நிதியை சேர்ந்த்து வைக்க வில்லை எனில், இனியாவது சேர்த்து வையுங்கள்.