பங்குச் சந்தை
நடப்பு
தொடர்கள்
Published:Updated:

வீட்டுக் கடனைக் கட்டி முடித்த பிறகு செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்கள்..!

வீட்டுக் கடன்
News
வீட்டுக் கடன்

கைகொடுக்கும் வீட்டுக் கடன்! - 24

வீட்டுக் கடனுக்குக் கிடைக்கும் வரிச் சலுகைகளைக் கணக்கில் எடுக்கும்போது, கட்டும் நிகர வட்டி என்பது வெகுவாகக் குறைந்துவிடுகிறது. உதாரணமாக, 8.5 சத விகிதத்தில் வீட்டுக்கடன் வாங்கப்படுகிறது. இதற்கு 5%, 20% மற்றும் 30% அடிப்படை வருமான வரி வரம்பில் வருபவர்களுக்கு வரிச் சலுகை கிடைக்கும்பட்சத்தில் வட்டிக்கு உண்மையில் செல்வது முறையே சுமார் 8%, 6.8% மற்றும் 5.85 சதவிகிதமாக இருக்கும்.

எஸ்.கார்த்திகேயன், நிதி ஆலோசகர், 
https://winworthwealth.com/
எஸ்.கார்த்திகேயன், நிதி ஆலோசகர், https://winworthwealth.com/

இன்றைக்கு விற்கும் வீடு விலையில் 20% மற்றும் 30% வருமான வரி வரம்பில் வருபவர்கள் தான் பெருநகரங்கள், நகரங்களில் வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்க முடியும். அவர்களுக்குத் திரும்பக் கட்டும் அசல் மற்றும் வட்டிக்குக் கிடைக்கும் வரிச் சலுகையைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், நிகர வட்டி என்பது மிகக் குறைவாகத்தான் உள்ளது.

வீட்டுக் கடன் வாங்குவதற்குத் தேவையான அடிப்படை தகுதிகள் என்ன, எவ்வளவு தொகை கடனாகக் கிடைக்கும், எந்த வட்டி விகிதம் லாபம், வீட்டுக் கடனை விரைவாக அடைக்க வேண்டுமா வேண்டாமா, வருமான வரிச் சலுகைகளால் கிடைக்கும் நன்மைகள், வட்டிச் செலவை குறைக்க என்னென்ன செய்ய வேண்டும், இதர செலவுகளுக்கு வீட்டுக் கடனுக்கு மேலே கடன் வாங்குவது எனப் பல்வேறு முக்கியமான விஷயங்களைக் கடந்த 23 வாரங்களில் விரிவாகப் பார்த்தோம்.

சொந்த வீடு என்பது சந்தோஷமான விஷயமாகும். வீட்டுக் கடனை சரியாக நிர்வகித்து அதை அடைத்து முடித்துவிட்டோம். வீட்டுக் கடன் கடைசி தவணை முடிந்ததும் வீடு 100 சதவிகிதம் சொந்தமாகிவிடும். கடன் முடிந்ததும், கடனைக் கட்டி முடித்து விட்டோம் என்ற எண்ணத்தில் அடுத்து செய்ய வேண்டிய சில முக்கியமான நடைமுறைகளைப் பின்பற்றுவதில் அஜாக்கிரதையாக இருந்துவிடக் கூடாது. கடன் முடிந்ததும் செய்ய வேண்டிய முக்கியமான சில விஷயங்களைத் தெரிந்துகொள்வோம்.

சொத்து ஆவணங்களைத் திரும்பப் பெறுதல்...

வீட்டுக்கடன் வாங்கும்போது தாய்ப் பத்திரம், அப்ரூவல் பிளான், பட்டா, வில்லங்கச் சான்றிதழ், சொத்து வரி ரசீது என சுமார் 10, 15 ஆவணங்களை வங்கிக்குக் கொடுத்திருப்போம். பொதுவாக, வங்கியே என்னென்ன ஆவணங்கள் தரப்பட்டிருக்கின்றன என்கிற ஒரு பட்டியலைத் தயார் செய்து, அதன் ஒரு பிரதியை வங்கி வைத்துக்கொண்டு, அதன் ஒரு நகலைக் கடன் வாங்கியவருக்குக் கொடுத்திருக்கும். அந்தப் பட்டியல்படி, அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்து வாங்குவது அவசியம். பிற்காலத்தில் ஆவணம் வங்கியில் இருக்கிறது என்று கேட்டால், கிடைப்பது கடினமாகும்.

சில ஆவணங்களின் ஒரிஜினல், பல ஆவணங்களின் நகல்களை வங்கிக்குக் கொடுத்திருப்போம். அவை அனைத்தையும் திரும்பப் பெற்றுக்கொள்வது நல்லது. நகல்தானே என எந்த ஆவணத்தையும் வங்கி, வீட்டு வசதி நிறுவனம் அல்லது நிதி நிறுவனத்தில் விட வேண்டாம். அதனால். பிற்காலத்தில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

வங்கிகளும் வீட்டு வசதி நிறுவனங்களும் வீட்டுக் கடன் தொடர்பான ஆவணங்களை அவற்றின் மத்திய ஆவணப் பாதுகாப்பு அலுவலகத்தின் லாக்கரில் வைத்திருக்கும். இந்த ஆவணங்களை அவை உங்களுக்கு கூரியர் மூலம் அனுப்பலாமா எனக் கேட்கக்கூடும். அப்படிக் கேட்டால், அதற்கு சம்மதிக்காதீர்கள். காரணம், அந்த கூரியர் தபால் நம் கைக்கு வராமல் தவறிவிட்டால் அல்லது முக்கியமான ஆவணங்கள் சேதம் அடைந்திருந்தால் அல்லது சில பக்கங்கள் இல்லை எனில், பிரச்னைதான்.

எனவே, வங்கியின் கிளைக்கு நேரில் சென்று அந்த ஆவணங்களைப் பெற்றுக்கொள்வதுதான் சரியாக இருக்கும். அப்போதுதான் ஆவணங்கள் ஏதாவது தவறி இருந்தால் கேட்டுப் பெற முடியும். பத்திரங்கள் மற்றும் ஆவணங்களின் பக்கங்கள் தொடர்ச்சியாக இருக் கின்றனவா என்பதை உறுதிப்படுத்திக்கொள்வது அவசியமாகும்.

மேலும், வீட்டுக்கடன் அடைபட்டதும் விரைந்து பத்திரத்தை மீட்டுக்கொண்டு வருவது மிக அவசியம்; வங்கிலேயே நீண்ட காலத்துக்கு விட்டு வைப்பது நல்ல தல்ல. நம் சொத்துப் பத்திரங்கள் நம்மிடம் பத்திரமாக இருப்பது மிக முக்கியமாகும்.

வீட்டுக் கடனைக் கட்டி முடித்த பிறகு செய்ய வேண்டிய 
முக்கியமான விஷயங்கள்..!

வீட்டுக் கடனை முடிக்கும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள்...

வீட்டுக் கடனை முடிக்கும்போது மிக முக்கியமாகச் சில விஷயங்களைக் கையாள வேண்டும். அவை என்னென்ன என்று பார்ப்போம்.

ஆட்சேபனை எதுவும் இல்லை சான்றிதழ்...

வீட்டுக் கடன் முழுமையாக அடைக்கப்பட்டவுடன் ‘ஆட்சேபனை எதுவும் இல்லை’ (No Objection Certificate - NOC) என்கிற சான்றிதழை வங்கியிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த ஆவணம் சட்டப்படியான ஓர் ஆவணம் ஆகும். சொத்து மீது வங்கிக்கு எந்த உரிமையும் இல்லை என்பதற்கு ஆதாரம் இதுவாகும். பிற்காலத்தில் சொத்தை விற்கும்போது இந்த என்.ஓ.சி ஆவணம் மிக முக்கியமானதாக இருக்கும்.

விரிவான அறிக்கை...

மேலும் வங்கியிடமிருந்து வீட்டுக் கடனை முழுமையாக அடைத்தற்கான விரிவான அறிக்கையைப் (Statement) பெற்றுக் கொள்வதும் நல்லது. பிற்காலத்தில் கடன் பாக்கி இருக்கிறது என்று வங்கியிலிருந்து அறிவிப்பு ஏதாவது தவறாக வரும்பட்சத்தில் கடனை அடைத்து முடித்த ஆதாரம் நம்மிடம் இருப்பது அவசியமாகும்.

சார்பதிவாளர் அலுவலகத்திலிருந்து அடமானத்தை நீக்கவும்...

வீட்டுக் கடன் வழங்கும்போது, ஆரம்பக் காலத்தில் வீட்டுக் கிரயப் பத்திரத்தை வங்கிகள், வீட்டுவசதி நிறுவனங்கள் அவற்றின் பாது காப்பில் வைத்திருந்தன. வீட்டுக் கடன் வாங்கிய விவரம் சார் பதிவாளருக்குத் தெரியாததால், வீட்டுக் கடனை அடைக்கும் முன்பே சிலர் வீட்டை விற்று விட் டார்கள்; மேற்கொண்டு வீட்டுக் கடன் தவணையை கட்டாமல் விட்டுவிட்டார்கள் இதனால் வங்கிகளால் கடன் பாக்கியை வசூலிக்க முடியவில்லை.

அண்மைக் காலத்தில், வீட்டுப் பத்திரத்தை அடமானமாக வைத்து வீட்டுக்கடன் வாங்கும்போது, அந்த விவரம், சார்பதிவாளர் அலுவலகத்தில் ஓர் ஆவணமாக வங்கி அதிகாரிகளால் பதிவு செய்யப்படுகிறது. இதற்கான முத்திரைக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணங்களை வீட்டுக் கடன் வாங்குபவர் செலுத்த வேண்டும்.

முத்திரைக் கட்டணம், வீட்டுக் கடனுக்கான தொகையில் 0.5% அல்லது அதிகபட்சம் ரூ.30,000 ஆகும். பதிவுக் கட்டணம் கடன் தொகையில் 1% அல்லது அதிக பட்சம் ரூ.6,000-ஆக இருக்கும்.

வீட்டுக் கடனை முடித்த பிறகு, வங்கியிலிருந்து அதிகாரி ஒருவர் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு நேரில் வந்து, ‘கடன் முழுமையாக அடைக்கப்பட்டுவிட்டது’ என ஆவணம் மூலம் உறுதி அளித்தால் தான், அந்தச் சொத்து மீதான அடமானம் நீக்கப்படும். இல்லை எனில், அந்தச் சொத்து அடமானம் வைக்கப்பட்டிருக்கிறது என வில்லங்கச் சான்றிதழில் குறிப் பிடப்படும்.

வீட்டுக் கடன் அடைக்கப்பட்டு சொத்து அடமானம் சார் பதிவாளர் அலுவலகத்திலிருந்து நீக்கப்பட்ட சுமார் 50 நாள்கள் கழித்து, வில்லங்கம் பார்த்து அடமானம் நீக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியமாகும்.

கிரெடிட் அறிக்கையில் மாற்றம்....

வீட்டுக் கடனை முழுமையாக அடைத்து முடித்த விவரத்தை வங்கி, சிபில் உள்ளிட்ட கடன் தகவல் நிறுவனத்துக்குத் தெரிவிக்கும். அந்த விவரம் கடன் அறிக்கையில் (Credit Report) மாற்றப்பட வேண்டும். இதற்கு பொதுவாக, ஒரு மாதம் ஆகும். ஒரு மாதம் கழித்தும் கடன் அறிக்கையில் மாற்றம் எதுவும் ஆகவில்லை எனில், நீங்கள் வீட்டுக் கடன் தவணையை இப்போதும் கட்டிவருவ தாகவே கிரெடிட் அறிக்கை காட்டும். இதனால் அடுத்து அவசரத்துக்கு உடனடியாக வேறு எந்தக் கடனும் வாங்க முடியாது. எனவே, ஜாக்கிரதையாக இருப்பது நல்லது!

(நிறைவு பெற்றது)

வீட்டுக் கடன் காப்பீடு, வீட்டுக் காப்பீடு கட்டாயம்...

தீ விபத்து, கலவரங்கள், சூறாவளிகள், புயல்கள் மற்றும் பூகம்பங்கள் போன்ற இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் இழப்பு அல்லது சேதத்திலிருந்து குடியிருப்புக் கட்டடம் மற்றும் வீட்டிலுள்ள பொருள்களை வீட்டுக் காப்பீடானது (Home insurance) நிதி ரீதியாகப் பாதுகாக்கிறது. ரூ.10 லட்சம் கவரேஜ் கொண்ட வீட்டுக் காப்பீட்டு பாலிசிக்கு ஆண்டு பிரீமியம் ரூ.750 - ரூ.1,100தான்.

அடுத்து, வீட்டுக் கடன் வாங்கியவருக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், குடும்பத்தினர் மீது அந்தக் கடன் சுமை வந்துவிழாமல் பாதுகாப்பது வீட்டுக் கடன் காப்பீடு (Home Loan Insurance) ஆகும். இந்த பாலிசியை கடன் தொகை குறையக் குறைய கவரேஜ் குறைவது போல் வாங்கலாம். இதற்கான பிரீமியம் குறைவாக இருக்கும் அல்லது ஆரம்பத்தில் வாங்கிய வீட்டுக் கடன் அளவுக்கு கவரேஜ் எப்போதும் இருப்பதுபோல் எடுக்கலாம். இதற்கான பிரீமியம் அதிகமாக இருக்கும்.

ஒருவருக்குப் போதிய அளவுக்கு அதாவது, அவரின் ஆண்டு வருமானத்தைப்போல் சுமார் 15 மடங்கு தொகைக்கு ஏற்கெனவே டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கப்பட்டிருக்கும்பட்சத்தில் வீட்டுக் கடன் காப்பீடு எடுக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. அதே நேரத்தில், கூடுதல் பிரீமியம் கட்டும் வசதி இருக்கிறது மற்றும் தனக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும்போது குடும்பத்தினர் நிதிச் சிக்கல் எதிலும் மாட்டிக்கொள்ளக் கூடாது என்று நினைப்பவர்கள் தனியே வீட்டுக் கடன் தொகைக்கும் காப்பீடு எடுத்துக்கொள்ளலாம்.

அதாவது, வீட்டுக் கடன் வாங்கியவருக்கு ஏதாவது அசம்பாவிதம் நடக்கும்போது, வீட்டுக் கடன் சுமையாக இருக்காத அளவுக்கு அவருக்கு ஆயுள் காப்பீடு எடுத்துக்கொள்வது அவசியமாகும். 30 வயதுள்ள ஒருவர் ரூ.1 கோடிக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்தால் ஆண்டு பிரீமியம் சுமார் 15,000 ஆகும்.