பிரீமியம் ஸ்டோரி

நம்மில் பலரும் அவசியத் தேவை, வருமான வரிச் சேமிப்பு, சமூக அந்தஸ்து எனப் பல்வேறு காரணங்களுக் காகச் சொந்த வீடு வாங்குகிறோம். அதையும் நம்மில் பலர் வீட்டுக் கடனில்தான் வாங்குகிறோம். வீட்டுக் கடனைத் திரும்பக் கட்டும் காலம் ஐந்து ஆண்டுகள் தொடங்கி, 40 ஆண்டுகள் வரை செல்கிறது. வீட்டுக் கடனுக்குக் கட்டும் மாதத் தவணை (இ.எம்.ஐ) என்பது பலருக்கு நீண்ட காலத்துக்கு அவர்களின் குடும்ப பட்ஜெட்டை பாதிப்பதாக இருக்கிறது.

இதற்கு பயந்தே பலரும் வீட்டுக் கடனை விரைந்து முடிக்க நினைக்கிறார்கள். அப்படி விரைந்து முடிக்கும்போது கடனுக்கான வட்டிச் செலவு குறைவதுடன், கடன் இல்லை என்கிற நிம்மதியும் வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்குக் கிடைக்கிறது. வீட்டுக் கடன் வட்டியைக் குறைக்க பல வழிகள் இருக்கின்றன. அதில் முக்கியமான வழிகளைப் பார்ப்போம்.

சௌ.சிவகுமார் 
நிறுவனர், 
www.bestservicerealty.in
சௌ.சிவகுமார் நிறுவனர், www.bestservicerealty.in

1. கடனைத் திரும்பக் கட்டும் காலம் குறைவாக இருந்தால்...

கடனைத் திரும்பக் கட்டும் காலம் குறுகியதாக இருந்தால் வட்டிக்குச் செல்லும் தொகை குறைவாக இருக்கும். அதே நேரத்தில், மாதம்தோறும் கட்டும் தொகை அதிகமாக இருக்கும். உதாரணமாக, ஒருவர் ரூ. 30 லட்சம் வீட்டுக் கடன் வாங்குகிறார். கடனுக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 7%. இந்தக் கடனை 10 ஆண்டுகளில் திரும்பக் கட்டுவதாக இருந்தால், மாதத் தவணையாக ரூ.34,830 கட்ட வேண்டும். இதில், வட்டிக்குச் செல்லும் தொகை ரூ.11,79,880 ஆகும்.

இதுவே 20 ஆண்டுகளில் கடனைக் கட்டும்போது, மாதத் தவணையாக ரூ.23,260 கட்ட வேண்டும். இதில் வட்டிக்குச் செல்லும் தொகை ரூ.25,82,140-ஆக இருக்கும். ஆக, குறுகிய காலத்தில் கடனைக் கட்டி முடிக்கும் போது, வட்டிச் செலவை வெகுவாகக் குறைக்கலாம் என்றாலும், உங்களால் எந்த அளவுக்கு அதிக இ.எம்.ஐ கட்ட முடியும் என்பதற்கேற்ப திரும்பக் கட்டும் காலத்தை முடிவு செய்வது நல்லது.

2. இடையிடையே மொத்தத் தொகையைக் கட்டினால்...

வீட்டுக் கடன் மாதத் தவணையில் திரும்பச் செலுத்தும் அசல் மற்றும் வட்டி இரண்டும் அடங்கியிருக்கும். கடன் வாங்கியபின், ஆரம்ப ஆண்டுகளில் மாதத் தவணையில் வட்டிக்குக் கழியும் தொகை அதிகமாக இருக்கும். அந்த வகையில் கடனை வாங்கிய முதல் சில ஆண்டுகளில் குறிப்பிட்ட அளவு தொகையைக் கட்டி, கடனைக் குறைக்கும்போது, வட்டிக்குச் செல்லும் தொகை கணிசமாகக் குறையும்.

வங்கிகள், வீட்டு வசதி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் முன்கூட்டியே கடனைக் கட்ட அனுமதி அளிக்கின்றன. இதற்கு அவை அபராதம் எதுவும் விதிப்ப தில்லை. எனவே, போனஸ், சம்பள உயர்வு, வேறு ஏதாவது தொகை கிடைத்தால், அதைக் கொண்டு இடையிடையே கட்டி வந்தால், வீட்டுக் கடன் விரைந்து அடைவதுடன், வட்டிக்குச் செல்லும் தொகையும் குறையும்.

3. கடனை வேறு நிறுவனத்துக்கு மாற்றுதல்...

பொதுவாக, வங்கிகள், வீட்டுவசதி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் ஏற்கெனவே வாங்கப்பட்ட கடன்களுக்கு அதிக வட்டியும், இப்போது புதிதாகக் கடன் வாங்குபவர் களுக்குக் குறைவான வட்டியும் வசூலிக்கின்றன. நீங்கள் சில ஆண்டுகளுக்கு முன் வீட்டுக் கடன் வாங்கியிருந்தால், இப்போது கடனுக்கான வட்டி சுமார் 9 சதவிகிதத்துக்கு மேல் இருக்கும் பட்சத்தில், சுமார் 7 சத விகிதத்துக்கு வேறு நிறுவனத் தில் வீட்டுக் கடன் கிடைக்கும் பட்சத்தில் அதற்கு மாற்றிக்கொள்வது லாபகரமாக இருக்கும்.

இப்படிக் கடனை வேறு நிறுவனத்துக்கு மாற்றும்போது எந்த அளவுக்கு லாபம் கிடைக்கும் என்பதை முன்கூட்டியே கணக்கிட்டுக் கொள்வது நல்லது. அடுத்து, கடனை வேறு வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனத்துக்கு மாற்றப்போகும் விஷயத்தைத் தற்போது வீட்டுக் கடன் இருக்கும் நிறுவனத்துக்குத் தெரிவித்தால், அந்த வங்கி அல்லது நிறுவனம் உங்கள் வீட்டுக் கடனுக்கான வட்டியைக் குறைக்க வாய்ப்பிருக்கிறது.

அப்படி ஒரு வாய்ப்பு கிடைத் தால், அதைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. காரணம், கடனை மாற்றும் நிறுவனத்தில் எவ்வளவு காலத்துக்கு வட்டி விகிதம் உயராமல் இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. மேலும், புதிய நிறுவனத்துக்கு கடனை மாற்றும்போது பல்வேறு கட்டணங்கள் மற்றும் செலவுகள் ஆகும் என்பதையும் கவனத்தில் கொண்டு செயல்படுவது அவசியம்.

வீட்டுக் கடன் வட்டிச் செலவைக்
குறைக்கும் 7 வழிகள்..!

4. ஆண்டுதோறும் மாதத் தவணையை அதிகரித்தல்...

சில வங்கிகள், வீட்டு வசதி நிறுவனங்கள் வீட்டுக் கடனுக்கான மாதத் தவணையை ஆண்டுதோறும் அதிகரித்துக் கட்ட அனுமதிக்கின்றன. உதாரணமாக, ஒருவருக்கு ஆண்டுக்கு 10% சம்பள உயர்வு கிடைக்கிறது எனில், அவர் ஆண்டுதோறும் 3% அல்லது 5% வீட்டுக் கடன் தவணையை அதிகரித்துக் கட்டிவருவதன் மூலம் வீட்டுக் கடனை விரைந்து கட்டிமுடிந்து, வட்டியை வெகுவாக மிச்சப்படுத்த முடியும்.

5. அதிக கிரெடிட் ஸ்கோர்...

கிரெடிட் ஸ்கோர் 750-க்கு மேல் இருக்கும்பட்சத்தில் (கிரெடிட் ஸ்கோர் 0-ல் தொடங்கி 900-ல் நிறைவு பெறும்) வீட்டுக் கடன் சுலபமாகக் கிடைக்கும். இதைவிட அதிகமாக உங்களுக்கு கிரெடிட் ஸ்கோர் இருக்கும் பட்சத்தில், குறைவான வட்டியில் வீட்டுக் கடன் கிடைக்கும்.

உதாரணமாக, எஸ்.பி.ஐ-யில் கிரெடிட் ஸ்கோர் 800-க்குமேல் இருந்தால், குறைவான வட்டியில் கடன் கிடைக்கும். ஹெச்.டி.எஃப்.சி, ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க், எல்.ஐ.சி ஹவுஸிங் ஃபைனான்ஸ், கோட்டக் மஹிந்திரா பேங்க் ஆகியவற்றில் கிரெடிட் ஸ்கோர் அதிகமாக இருந்தால் குறைவான வட்டியில் வீட்டுக் கடன் கிடைக்கும். அதே சமயம், பெரும்பாலான வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிறுவனங்கள் குறைவான கிரெடிட் ஸ்கோர் இருப்பவர்களுக்கு அதிக வட்டியில் தான் வீட்டுக் கடன் தருகின்றன.

6. வட்டி, பரிசீலனைக் கட்டணத்தில் பேரம்...

ஒருவருக்கு அதிக கிரெடிட் ஸ்கோர் இருந்தால், வீட்டுக் கடன் முன்பணத்தை அதிகமாகக் கட்டும் பட்சத்தில், அவர் வீட்டுக் கடனுக்கான வட்டி மற்றும் வீட்டுக் கடன் பரிசீலனைக் கட்டணம் (Processing Fees) ஆகியவற்றில் பேரம் பேசி குறைக்க முடியும்.ஒருவர் வேலைபார்க்கும் நிறுவனம் பெரிய கார்ப்பரேட் நிறுவனமாக இருந்தாலும் வட்டியில் பேரம் பேசி குறைக்க முடியும்.

7. பல நிறுவனங்களில் கடன் விசாரணை...

வீட்டுக் கடன் வாங்கும் பலரும் அவர்கள் சேமிப்புக் கணக்கு இருக்கும் வங்கியிலேயே வீட்டுக் கடன் வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். வீட்டுக் கடன் வாங்க அதிகம் அலைய வேண்டி யிருக்காது; கடன் நடைமுறை சுலபமாக இருக்கும் என்பதற்காக இப்படிச் செய்கிறார்கள்.

வீட்டுக் கடனைத் திரும்பக் கட்டும் காலம் மிக நீண்டது என்பதால், சுமார் 0.25%-0.5% வட்டி குறைவாக இருந்தாலே நீண்ட காலத்தில் அதிகமான வட்டித் தொகை மிச்சமாகும்.

நாம் ஏற்கெனவே பார்த்தபடி, ஒருவர் ஆண்டுக்கு 7% வட்டியில் ரூ.30 லட்சம் வீட்டுக் கடனை வாங்கினால், 20 ஆண்டுகளில் கடனைக் கட்டும் போது வட்டிக்குச் செல்லும் தொகை ரூ.25,82,140-ஆக இருக்கும். இதுவே வட்டி விகிதம் 7.5 சதவிகிதமாக இருந்தால், வட்டிச் செலவு ரூ.28,00,220 ஆகும்.

அதாவது, ரூ.2,18,080 கூடுதலாகக் கட்ட வேண்டும். எனவே, சேமிப்புக் கணக்கு இருக்கும் வங்கியை மட்டும் வீட்டுக் கடனுக்குக் கவனிக்காமல் இதர வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிறுவனங்களிலும் விசாரணை மேற்கொண்டு, வீட்டுக் கடன் பெற நினைப்பது நல்லது.

இந்த வழிமுறைகளைப் பின்பற்றி வீட்டுக் கடனுக்கான வட்டிச் செலவைக் குறைக்க நீங்கள் முயற்சி செய்யலாமே!

நிலையான வட்டி Vs மாறுபடும் வட்டி விகிதம்!

வீட்டுக் கடன் வட்டியைப் பொறுத்தவரையில் நிலையான வட்டி விகிதம் மற்றும் மாறுபடும் வட்டி விகிதம் (Fixed Rate and Floating Rate) என இரு வகை இருக்கின்றன. வட்டி விகிதம் குறைந்து வரும் காலத்தில் ஃப்ளோட்டிங் ரேட் விகிதத்தையும் வட்டி விகிதம் அதிகரித்து வரும் காலத்தில் நிலையான வட்டிவிகிதத்தையும் தேர்வு செய்வது லாபகரமாக இருக்கும். இந்த நிலையான வட்டி என்பது குறிப்பிட்டக் காலத்துக்குதான் (3 ஆண்டுகள் அல்லது 5 ஆண்டுகள்). அதன் பிறகு, அப்போதுள்ள ஃப்ளோட்டிங் விகித வட்டி கணக்கிடப்படும்.

இந்த இரு விகித வட்டிக்கும் இடையே எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது என்பதைப் பார்த்து, அதற்கு ஏற்ப முடிவு செய்வது நல்லது. ஃப்ளோட்டிங் விகிதத்தைவிட ஃபிக்ஸட் வட்டி 1.5%-க்கு மேல் அதிகமாக இருந்தால் ஃப்ளோடிங் விகிதத்தைத் தேர்வு செய்வது லாபகரமாக இருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு