பங்குச் சந்தை
தொடர்கள்
நடப்பு
Published:Updated:

டாப்அப் லோன்... வீட்டுக் கடனுக்கு மேலே கடன் வாங்கலாம்..!

 வீட்டுக் கடன்
பிரீமியம் ஸ்டோரி
News
வீட்டுக் கடன்

கைகொடுக்கும் வீட்டுக் கடன்! -23

வீட்டுக் கடன் வாங்கியவர் கூடுதல் இ.எம்.ஐ-களைக் கட்டி னாலோ, பகுதி அளவில் மொத்தத் தொகையைக் கட்டினாலோ, அசல் தொகை வேகமாகக் குறைந்துவரும். அப்போது வீட்டின் மதிப்பு, பாக்கி இருக்கும் கடன் தொகையைவிட அதிகமாக இருக்கும்.

எஸ்.கார்த்திகேயன், நிதி ஆலோசகர், 
https://winworthwealth.com/
எஸ்.கார்த்திகேயன், நிதி ஆலோசகர், https://winworthwealth.com/

உதாரணமாக, வீட்டின் மதிப்பு ரூ.50 லட்சம். வாங்கிய கடன் ரூ.40 லட்சம். ஐந்தாண்டு கழித்து கடன் பாக்கி ரூ.25 லட்சமாகக் குறைவதாக வைத்துக்கொள் வோம். அப்போது வீட்டின் மதிப்பு ரூ.75 லட்சமாக உயர்ந்திருப்பதாக வைத்துக் கொள்வோம். இப்போது, வீட்டில் நம் பங்கு ரூ.50 லட்சமாக இருக்கும்.

இதை நம் சேமிப்பு என வைத்துக்கொள்ளலாம். அதாவது, கடனுக்கான இ.எம்.ஐ-யைக் கட்ட கட்ட உங்களின் சேமிப்பு அதிகரித் துக்கொண்டே வருகிறது.

டாப்அப் கடன்...

இந்த நிலையில், ஒருவர் ஏதாவது ஒரு தேவைக்குப் பணம் தேவைப்பட்டால், கிரெடிட் கார்டு கடனோ, தனிநபர் கடனோ வாங்கத் தேவையில்லை. அதிகரித் திருக்கும் உங்கள் வீட்டின் மதிப்பு மற்றும் அடைந் திருக்கும் கடன் தொகையின் அடிப்படையில் குறைவான வட்டியில் டாப்அப் கடன் (Top-up Loan) வாங்கிக் கொள்ளலாம்.

ஏற்கெனவே வீட்டுக் கடன் வாங்கியவர்கள், அந்த வீட்டின் மீது மேலும் கடன் வாங்குவதுதான் டாப் அப் கடன் என்கிறார்கள். பொதுவாக, இந்தக் கடனை 18 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் வாங்கிக் கொள்ளலாம். இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் (NRI) வாங்கலாம்.

டாப்அப் லோன்... வீட்டுக் கடனுக்கு 
மேலே கடன் வாங்கலாம்..!

என்ன காரணத்துக்காக டாப்அப் கடன்?

இந்தக் கடனை எந்தக் காரணத்துக்கும் வாங்கலாம். வீட்டைப் புதுப்பித்துக் கட்ட, வீட்டை மேலும் அலங்கரிக்க, வீட்டில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்த, மருத்துவச் செலவு, பிள்ளைகளின் உயர்கல்வி - கல்யாணச் செலவுகள், தொழில் தொடங்க, வணிகத்தை விரிவாக்கம் செய்ய, தனிப்பட்ட பணத் தேவை என எந்தத் தேவைக் கும் இந்தக் கடனை வாங்கிப் பயன்படுத்த முடியும்.

டாப் அப் கடனை ‘ஓவர் டிராஃப்ட்’ என்கிற முறையில் வாங்கும்போது, பயன் படுத்திய கடன் தொகைக்கு மட்டும் வட்டியைக் கட்டும் வசதியிருக்கிறது.

ஏற்கெனவே வாங்கிய வீட்டுக் கடனுக்கு இணை யான தொகைக்கு டாப்அப் கடன் வாங்கலாம். இப்படி அதிக தொகை கடன் வாங்க சொத்தின் மதிப்பு, சம்பளம் மிகவும் அதிகரித்திருக்க வேண்டும்.

பொதுவாக, ஏற்கெனவே வாங்கிய வீட்டுக் கடனில் எவ்வளவு அடைக்கப்பட்டிருக்கிறதோ, அந்தத் தொகையை டாப்அப் கடனாக சுலபமாக வாங்கிக்கொள்ள முடியும். ஆனால், வீட்டுக் கடனுக்கான மாதத் தவணையைத் தவறாமல் தொடர்ந்து சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு கட்டி வரும் நிலையில்தான் இந்த டாப்அப் கடன் கிடைக்கும்.

டாப்அப் மூலம் வாங்கும் கடன் குறைந்தபட்சம் ரூ.50,000 ஆகவும், அதிகபட்சம் ரூ.50 லட்சமாகவும் இருக்கிறது. இது வங்கிகளைப் பொறுத்து மாறுபடும். உதாரணமாக, ஐ.சி.ஐ.சி.ஐ பேங்கில் அதிகபட்சம் ரூ.25 லட்சம் டாப்அப் கடன் கிடைக்கும். இதுவே ஹெச்.டி.எஃப்.சி-யில் ரூ.50 லட்சம் வாங்க முடியும்.

கடன் வாங்குபவரின் வயது, திரும்பச் செலுத்தும் திறன், இதர கடன்கள், வீட்டுக் கடன் வாங்கிய சொத்தின் வயது, சொத்தின் தற்போதைய மதிப்பு, பாக்கிக் கடன் தொகை, கடன் முடிய இருக்கும் ஆண்டுகள் ஆகியவற்றைப் பொறுத்து டாப்அப் கடன் தொகையும், திரும்பக் கட்டும் காலமும் நிர்ணயம் செய்யப்படும். பாக்கிக் கடன் மற்றும் வாங்கப்போகும் டாப்அப் கடன் சேர்ந்து சொத்தின் சந்தை மதிப்பில் சுமார் 80 சதவிகிதத்துக்குள் இருக்க வேண்டும் என சில வங்கிகள் நிபந்தனை விதிக்கின்றன. பொதுவாக, வீட்டுக் கடன் வாங்கும்போது சொத்தின் மதிப்பில் சுமார் 80% கடன் கிடைக்கும். இதுவே டாப்அப் கடன் என்கிறபோது இப்போதைய அதிகரித்த சொத்தின் மதிப்பில் சுமார் 60% கடனாக கிடைக்கும்.

இதுவே டாப்அப் கடன் வாங்கி வீட்டை மேம்படுத்தும்போது வீட்டின் மதிப்பு உயர்கிறது. உதாரணமாக, மார்பிள் பதித்தல், தேக்கு மர அலமாரிகள் ஏற்படுத்துதல் மூலம் வீட்டின் மதிப்பு உயர்கிறது.

வட்டி எவ்வளவு?

டாப்அப் கடனுக்கான வட்டி வீட்டுக் கடனுக்கான வட்டியைவிட ஓரிரு சதவிகிதம் வட்டி அதிகமாக இருக்கக்கூடும். அதாவது, வீட்டுக் கடனுக்கான வட்டி 9% எனில் டாப்அப் கடனுக்கான வட்டி 10 - 12 சதவிகிதமாக இருக்கும். தனிநபர் கடன், நுகர்வோர் கடன் உள்ளிட்டவையுடன் ஒப்பிடும்போது இந்த டாப்அப் கடனுக்கான வட்டி குறைவாகும்.

பொதுவாக, வீட்டுக் கடனைக் கட்டிமுடிக்கும் காலம் வரைக்கும் டாப்அப் கடனையும் கட்டி முடிக்க அனுமதிக்கப்படுகிறது. டாப்அப் கடனை 20 - 30 ஆண்டுகள்கூட திரும்பக் கட்டலாம். உதாரணமாக, நாட்டின் முன்னணி பொதுத் துறை வங்கியான எஸ்.பி.ஐ-யில் டாப்அப் கடனை 30 ஆண்டுகள் வரை கட்ட முடியும்.

புதிதாக வீட்டுக் கடன் வாங்குவது போல தான். புதிதாக சம்பளச் சான்றிதழ், வீட்டின் புதிய மதிப்பீட்டு அறிக்கை போன்றவற்றை வழங்க வேண்டும். இதற்கென இருக்கும் தனி விண்ணப்பப் படிவத்தை நிரப்பிக் கொடுக்க வேண்டும். அடை யாளத்துக்கான ஆதாரம் மற்றும் முகவரிக்கான ஆதாரமாக பான் கார்டு, ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், ஆதார் கார்டு போன்றவை கொடுக்க வேண்டிவரும். மேலும், மார்பளவு புகைப்படங்கள் மூன்று, கடந்த ஆறு மாத வங்கிக் கணக்கு பரிவர்த்தனை போன்றவை தேவைப்படும். பெரும்பாலான வங்கிகள், சரியான ஆவணங்கள் இருக்கும்பட்சத்தில் இந்தக் கடனை ஓரிரு தினங்களில் வழங்கிவிடுகின்றன. இந்தக் கடனுக்கு பரீசிலனைக் கட்டணம் உண்டு.

டாப்அப் கடனுக்கு வரிச் சலுகை...

வீட்டைப் புதுப்பிக்க (உதா ரணமாக, தரையில் டைல்ஸ் மாற்றுதல், மார்பிள் பதித்தல், அலரிமாரிகள் கட்டுதல்), வீட்டை விரிவாக்கம் செய்ய, வீட்டைப் பழுது பார்க்க வாங்கும் டாப்அப் கடனில் திரும்பக் கட்டும் மாதத் தவணை யில் வரிச் சலுகை கிடைக்கும். அதுவும் திரும்பக் கட்டும் அசலுக்குக் கிடையாது. வட்டிக்கு மட்டும் வரிச் சலுகை உண்டு.

குடியிருக்கும் வீடு எனில், நிதி ஆண்டில் ரூ.30,000 வரைக்கும் வரிச் சலுகை உண்டு. வாடகைக்கு விடப்பட்ட வீடு எனில், வாடகையை வருமானமாக வரிக் கணக்கில் காட்டும் பட்சத்தில் நிதி ஆண்டில் ரூ.2 லட்சம் வரைக்கும் வரிச் சலுகை இருக்கிறது.

அதே நேரத்தில், ஒருவர் இந்த இரு சலுகைகளும் சேர்த்து நிதி ஆண்டில் அதிகபட்சம் ரூ.2 லட்சம்தான் வட்டிக்கு வரிச் சலுகை பெற முடியும்.

இதுவே டாப்அப் லோன் வாங்கி, புது வீடு கட்டும்போது அல்லது புது வீடு வாங்கும் போது திரும்பக் கட்டும் அசலில் ரூ.1.5 லட்சம் வரைக்கும் வட்டி யில் நிதி ஆண்டில் ரூ.2 லட்சம் வரைக்கும் வரிச் சலுகை பெற முடியும். இதற்கு வீடு கட்டி யதற்கான ரசீது மற்றும் ஆவணங் களைப் பாதுகாப்பாக வைத் திருப்பது அவசியமாகும். டாப்அப் கடன் வாங்கி மருத்துவச் செலவு, வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்குதல், சுற்றுலா செல்தல் உள்ளிட்டவற்றுக்குப் பயன் படுத்தினால் வரிச் சலுகை கிடையாது.

புதிய வீடு கட்ட நேரடியாக வீட்டுக் கடன் கிடைத்தால் வாங்கிக்கொள்வது நல்லது. காரணம், டாப்அப் கடனைவிட அதற்கு வட்டி குறைவாகும். அதே நேரத்தில் வேறு இதர செலவுகளான சுற்றுலா, கார், ஃபர்னிச்சர் போன்றவை வாங்க டாப்அப் கடனைப் பயன்படுத்துவது லாப கரமாக இருக்கும்.

இரண்டாவது பெரிய வீடு...

வீட்டுக் கடன் வாங்கி 5, 6 வருடங்கள் கழித்து நமது வருமான மும் உயர்ந்திருக்கும்; கூடவே நம் குடும்பமும் பெரிதாகி இருக்கும். மேலும், நாம் ஏற்கெனவே வாங்கிய வீட்டின் மதிப்பும் கூடியிருக்கும். அப்போது நம் கையில் இருக்கும் உபரித் தொகையை வைத்துக் கொண்டு, சிறிய தொகையைக் கடனாக வாங்கி வசதியாக வசிக்க இரண்டாவது வீடு வாங்கலாம்.

இரண்டாவது வீட்டின் விலை மிகவும் அதிகமாக இருக்கும்பட்சத் தில் முதல் வீட்டை வாங்கிய காலம் ஐந்து வருடங்களுக்குமேல் இருந்தால், அதை விற்றுவிட்டு பெரிய வீடாக வாங்கிக்கொள்ளலாம் அல்லது வீட்டைக் கட்டிக் கொள்ளலாம். இப்படிச் செய்தால், கிடைத்த வரிச் சலுகையில் எந்தப் பிரச்னையும் இருக்காது. வீட்டுக் கடனில் வாங்கிய வீட்டை ஐந்தாண்டுகளுக்குள் விற்கும் பட்சத்தில் வழங்கப்பட்ட வரிச் சலுகை திரும்பப் பெறப்படும். கூடவே, நீண்ட கால மூலதன வரி விலக்கு முற்றிலுமாகக் கிடைக்கும்.

இரண்டாவது வீட்டைக் கடன் மூலம் வாங்கும்போது அதற்குண்டான அசலுக்கு ரூ.1.5 லட்சமும் வட்டிக்கு ரூ.2 லட்சம் வரிச் சலுகை இருக்கிறது. ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வீட்டுக் கடன் இருந்தாலும் அனைத்தும் சேர்ந்து திரும்பக் கட்டும் அசலில் நிதி ஆண்டில் ரூ.1.5 லட்சமும், வட்டியில் ரூ.2 லட்சமும்தான் அதிகபட்சம் வருமான வரிச் சலுகை கிடைக்கும்.

ஒருவர் 30% வருமான வரி கட்டுபவராக இருந்தால் தாராளமாக இரண்டாவது வீடு வாங்கலாம். ஆனால், முழுவதுமாகக் கடனை வாங்கி இரண்டாவது வீடு வாங்குவது நல்லதல்ல.

டாப்அப் லோன்... வீட்டுக் கடனுக்கு 
மேலே கடன் வாங்கலாம்..!

கடனில் இரண்டாவது வீடு வாங்கலாமா?

பொதுவாக, குடியிருக்க ஒரு வீடு போதும். அந்த வீடு வசதியாக இருக்கும்பட்சத்தில் இரண்டாவது வீட்டை கையில் இருக்கும் மொத்த தொகையைக் கொண்டோ, வருமான வரிச் சலுகைக்காகவோ வாங்குவது புத்தி சாலித்தனம் அல்ல எனப் பெரும்பாலான நிதி ஆலோசகர்கள் ஆலோசனை வழங்குகிறார்கள்.

அதற்கு மிக முக்கியமான காரணம், இன்றைய நிலையில், வீட்டின் மதிப்பில் ஆண்டுக்கு சுமார் 3 சத விகிதம்தான் வாடகை வருமானமாகக் கிடைக்கிறது. உதாரணமாக, வீட்டின் விலை ரூ.30 லட்சம் எனில், ஆண்டு வாடகை சுமார் ரூ.60,000தான் கிடைக்கும். அதாவது மாதத்துக்கு ரூ.5,000 மட்டுமே கிடைக்கும்.

ரூ.30 லட்சம் வீட்டுக் கடனை 15 வருடத்தில், 9 சதவிகித வட்டியில் திரும்பக் கட்டுவதாக இருந்தால் மாதத் தவணை சுமார் ரூ.31,420. இந்தத் தொகையை 15 ஆண்டு களுக்கு ஆண்டுக்கு சராசரியாக ஆண்டுக்கு 12% வருமானம் எதிர்பார்க்கும் டைவர்சிஃபைட் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால், முதலீட்டுத் தொகை ரூ.1.6 கோடியாகப் பெருகி இருக்கும். வீட்டுக் கடன் வரிச் சலுகையைக் கணக்கில் எடுத்துக்கொண்டாலும் ரூ.30 லட்சம் வீட்டின் மதிப்பு இந்த அளவுக்கு பெருகி இருக்குமா என்பது சந்தேகம்தான்! மேலும், எல்லா வருமானத்தையும் வீடு வாங்கவே செலவழித்தால், பிள்ளைகளின் உயர்கல்வி, கல்யாணம், ஓய்வுக் காலத்துக்குப் போதிய அளவு சேமிக்க முடியாது.

ஏற்கெனவே பல முறை சொன்னதுபோல் குடியிருக்க ஒரு வீட்டை வீட்டுக் கடன் மூலம் வாங்கிவிட்டு, மீதித் தொகையை இதர நிதித் தேவைகளை நிறைவேற்ற செலவிடுவதே சரி.

வீட்டுக் கடன் என்பதை ஒரு சுமையாக ஆக்கிக் கொண்டுவிடக் கூடாது. அது அளவோடு இருப்பதே சரி!

(சொந்த வீட்டை வாங்குவோம்)