Published:Updated:

வருமானத்தையும் சேமிப்பையும் அதிகரிக்கும் வழிகள்! கொரோனா கால ஆலோசனைகள்...

சேமிப்பு...
பிரீமியம் ஸ்டோரி
சேமிப்பு...

P E R S O N A L F I N A N C E

வருமானத்தையும் சேமிப்பையும் அதிகரிக்கும் வழிகள்! கொரோனா கால ஆலோசனைகள்...

P E R S O N A L F I N A N C E

Published:Updated:
சேமிப்பு...
பிரீமியம் ஸ்டோரி
சேமிப்பு...

கொரோனா இரண்டாம் அலை உயிர்பயத்தைக் காட்டிக்கொண்டிருக்கிறது. இதன் தொடர்ச்சி யாக, இனிவரும் காலங்களில் பொருளாதார ரீதியில் நாமெல்லாம் கடினமான சவால்களைச் சந்திக்க வேண்டிவரலாம். அதற்குத் தயாராக இருக்க வேண்டுமெனில், நம்மிடம் சேமிப்பும் அதிகமாக இருக்க வேண்டும்; வருமானமும் அதிகரிக்க வேண்டும். இந்த இரண்டுக்கும் என்னென்ன வழி என்று நிதி ஆலோசகர் லலிதா ஜெயபாலனிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

லலிதா ஜெயபாலன்
லலிதா ஜெயபாலன்

வீண்செலவைக் குறையுங்கள்...

“நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு வருமானம் அதிகரிப்பது அவர்கள் வேலை பார்க்கிற நிறுவனங்களின் பொருளாதார நிலைமையைப் பொறுத்தது. ஆனால், சேமிப்பு என்பது நம் கைகளில் இருப்பது. நாம் மனது வைத்தால், வீண்செலவுகளைக் குறைத்து, சேமிக்க முடியும். எனவே, உடனடியாகச் சேமிக்க ஆரம்பியுங்கள்.

கொரோனா முதல் அலையின்போதே பலரும் அடிக்கடி ஹோட்டலுக்குச் சென்று சாப்பிடுகிற பழக்கத்தைக் குறைத்துக்கொண்டார்கள். உடைகளுக்கான செலவும், சினிமாவுக்குச் செல்கிற செலவும் குறைந்து சிக்கனமாக இருக்கப் பழகிவிட்டார்கள். நீங்களும் அவர்களில் ஒருவர் எனில், இந்தச் செலவுகளைத் தவிர, வேறு ஏதாவது வீண்செலவு செய்கிறீர்களா என்பதைக் கவனித்து, அவற்றையும் தவிர்க்க ஆரம்பியுங்கள். ஆனால், செலவைக் குறைத்தால் மட்டும் போதாது; வருமானத்தை எப்படி அதிகரிப்பது என்பதையும் பார்ப்பது அவசியம்.

கூடுதல் திறமைகளைப் பணமாக்கலாம்!

கூடுதல் திறமைகளில் இரண்டு வகை உள்ளன. ஒன்று, உங்களுடைய வேலையின் தன்மைக்கு ஏற்ப உங்களிடம் இருக்கிற கூடுதல் திறமைகள். இன்னொன்று, நீங்கள் செய்கிற வேலையைத் தாண்டி உங்களிடம் இருக்கிற கூடுதல் திறமைகள். இத்தனை நாள் அவற்றைப் பற்றி யோசித்ததில்லை எனில், இனிமேல் யோசிக்க ஆரம்பியுங்கள்.

கட்டுமானத் துறையில் வேலை பார்க்கிறீர்கள்; கணிதத்திலும் புலி என்றால், தினமும் ஒரு மணி நேரம் ஆன்லைனில் டியூஷன் எடுக்கலாம். நிதி சார்ந்த துறையில் வேலை பார்க்கிறீர்கள்; கூடவே முகநூலில் சிறிய சம்பவங்களைக்கூடக் கதைபோல எழுதுகிற அளவுக்குக் கற்பனைத் திறன் கொண்டவர் என்றால், ஆன்லைனில் கதை எழுத முயற்சி செய்யலாம். சிலர் உலக அரசியல், சினிமா அல்லது பொருளாதார அறிவு ஓஹோவென்று இருக்கலாம். நீங்கள் யூடியூப் சேனல் ஆரம்பிக்கலாம்.

இப்படி உங்களிடம் இருக்கிற கூடுதல் திறமைகளை உங்களுக்கு வருமானம் தருகிற விதத்தில் பயன்படுத்த ஆரம்பிக்கலாம். இப்படி வருகிற வருமானத்தை எந்தக் காரணம் கொண்டும் செலவழிக்காமல் சேமித்து வைக்கலாம்.

சேமிப்பு...
சேமிப்பு...

ஆன்லைன் வேலைகள்...

ஆன்லைனில் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேர வேலை தற்போது நிறைய கிடைக்கின்றன. வொர்க் ஷீட் ஃபில்லப் செய்வதற்கும் மருத்து வர்களுக்கு அப்பாயின்ட்மென்ட் ஃபிக்ஸ் செய்து தருவதற்கும் ஆட்கள் கிடைப்பதில்லை. சிறு தொழில் செய் பவர்கள் வியாபாரத்தை நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்திருப்பார்கள். டேட்டா என்ட்ரி தெரிந்தவர்கள் அந்த நோட்டை வாங்கி, டேலியில் ஏற்றலாம். இவற்றைத் தவிர, கன்டென்ட் ரைட்டிங், மொழி பெயர்ப்பு, அனிமேஷன் கன்டென்ட், கர்சீவ் ரைட்டிங், ஆன்லைனில் பாட்டு, யோகா, மொழிப்பாடங்கள் கற்றுத் தருவது, ஃப்ரீலான்சர் என்று நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. உங்க ளுக்குப் பொருத்தமான வேலையைச் செய்யலாம்.

வட்டியை அதிகப்படுத்த...

உங்கள் முதலீட்டின் மூலம் கூடுதல் வருமானம் பெறும் வழிகளைப் பார்ப்போம். நீங்கள் ஏற்கெனவே நிலையான வைப்புத் தொகை (FD) வைத்திருக் கிறீர்கள்; அதற்கான வட்டி 4 சதவிகிதம்தான் எனில், அதை 6 சதவிகிதமாக மாற்றுவது குறித்து யோசிக்கலாம். 6% வட்டி வருகிறது எனில், 8 சதவிகிதத்துக்கு மாற்ற முயற்சி செய்யலாம். உங்கள் முதலீட்டை வட்டி அதிகம் தருகிற வங்கிக்கு உங்கள் நிலையான வைப்புத் தொகையை மாற்றுவதன் மூலம் கூடுதல் வருமானம் பெறலாம். அப்படிச் செய்யும்போது அதில் உள்ள ரிஸ்க்குகளையும் நன்கு ஆராய வேண்டும்.

கூடுதல் வட்டி வேண்டுமென்றால்...

உங்களுக்கு 8 சதவிகிதத்துக்கும் கூடுதலாக வட்டி கிடைக்க வேண்டுமெனில், நீங்கள் எந்த முறையில் சேமிக்கிறீர்கள் என்பதை யோசிக்க வேண்டும். நீங்கள் ஓய்வு பெறுவதற்கு 20 வருடம் இருக்கிறது; பிள்ளைகள் கல்லூரிக்குச் செல்வதற்கு 10 வருடம் இருக்கிறது எனில், நீங்கள் ரிஸ்க் எடுப்பதற்கு நேரம் இருக்கிறது. அதனால், மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் ஸ்டாக் மார்க்கெட்டில் முதலீடு செய்து கூடுதல் வருமானம் பெறலாம். இப்போதெல்லாம் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம். குறைந்தபட்சமாக ரூ.1,000 கூட முதலீடு செய்யத் தொடங்கலாம்.

இண்டெக்ஸ் ஃபண்ட்!

கொஞ்சம் கூடுதலாக ரிஸ்க் எடுத்து, நீண்டகால நோக்கில் முதலீடு செய்ய விரும்புகிறவர்கள், இண்டெக்ஸ் ஃபண்டில் முதலீடு செய்யலாம். முதலில் 12 மாதத்துக்கு மட்டும் முதலீடு செய்யலாம். அடுத்த வருடம் தொடர விருப்பம் எனில், தொடரலாம். இல்லையெனில், நிறுத்திவிடலாம். மறுபடியும் எப்போது தேவையோ, அப்போது தொடரலாம். அல்லது மொத்தமாக ஒரு தொகையையும் முதலீடு செய்யலாம். அதிலும் உங்களுக்குத் தேவையெனும்போது முதலீடு செய்யலாம். தேவையில்லை எனும்போது பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.

புதிதாக மியூச்சுவல் ஃபண்டில் பணம் போடுகிறவர்கள் இண்டெக்ஸ் ஃபண்டில் பணம் போட்டால் ரிஸ்க் மிகக் குறைவு. ஏனென்றால், கடந்த 20 வருடங்கள் இண்டெக்ஸ் இந்தியாவில் ஏறுமுகமாகவே இருக்கிறது. அடுத்து வரும் காலத் திலும் இந்த இண்டெக்ஸ் ஃபண்ட் மூலம் கணிசமான வளர்ச்சியை எதிர்பார்க்கலாம்’’ என்றார் லலிதா ஜெயபாலன்.

ஆக, நம் செலவுகளைக் குறைக்க வும் வருமானத்தை உயர்த்தவும் வழிமுறைகளைக் கொஞ்சம் யோசித்து நாமே கண்டறிய முடியும். இந்த இரண்டையும் செய்வதற்கு நம்மிடம் மனம் இருந்தால் போதும், அதற்கான வழிகள் தானாகவே நமக்குக் கிடைக்கும்!