Published:Updated:

இன்ஷூரன்ஸ், மியூச்சுவல் ஃபண்ட், கிரெடிட் கார்டு... வலைவிரிக்கும் ‘மிஸ்செல்லிங்’ ஏஜென்டுகள்...

மிஸ்செல்லிங்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்செல்லிங்

சிக்காமல் தப்பிக்கும் வழிகள்!

இன்ஷூரன்ஸ், மியூச்சுவல் ஃபண்ட், கிரெடிட் கார்டு... வலைவிரிக்கும் ‘மிஸ்செல்லிங்’ ஏஜென்டுகள்...

சிக்காமல் தப்பிக்கும் வழிகள்!

Published:Updated:
மிஸ்செல்லிங்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்செல்லிங்

நம் எல்லோருக்கும் இருக்கும் ஆசை என்ன... பணக் கஷ்டமில்லாத வாழ்க்கை தானே..? அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கைக்கு நமக்கு இருக்கும் வருமானம் மட்டுமே போதாது. காப்பீடு, சேமிப்பு, முதலீடு ஆகிய மூன்று முக்கியமான விஷயங்களை நாம் கட்டாயம் செய்தாக வேண்டும். ‘கட்டாயம் செய்தாக வேண்டும்’ என நம்மில் பலரும் நினைப்பதால்தான் என்னவோ, இந்த மூன்று விஷயங்களிலும் ‘மிஸ்செல்லிங்’ தகிடுதத்தங்கள் கடுமையாக நடந்துவருகின்றன. இவற்றை பொதுமக்களுக்குக் கொண்டு செல்லும் வேலையைச் செய்யும் ஏஜென்டுகள், வங்கி/நிதி நிறுவன ஊழியர்கள், மக்கள் தொடர்பு அதிகாரி போன்ற சிலரால் பல ஆயிரக்கணக் கான மக்கள் ஏமாற்றப்பட்டு, பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை இழக்கிறார்கள். ரிசர்வ் வங்கி, செபி, ஐ.ஆர்.டி.ஏ.ஐ போன்ற ஒழுங்குமுறை அமைப்புகளுக்கு வரும் புகார்களே இந்த மோசடிகள் அதிக அளவில் நடக்கின்றன என்பதற்கு எடுத்துக்காட்டு.

சில ‘மிஸ்செல்லிங்’ கதைகள்...

பாண்டியன் என்பவருக்கு திடீரென ரூ.3 லட்சம் தேவைப்பட்டது. தனிநபர்களிடம் கடன் வாங்கினால், 36% வட்டி கேட்டார்கள். அந்தச் சமயத்தில் முன்னணித் தனியார் வங்கியினர் கடன் தரத் தயார் என்று போனில் சொன்னார்கள். வட்டி 24%தான். ஆனால், ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசியை வாங்க வேண்டும். அதற்கு ரூ.25,000 பிரீமியம் கட்ட வேண்டும் என்றார்கள். ரூ.25,000 தானே என்று அவர் கடன் வாங்கி விட்டார். ஆனால், இது 15 ஆண்டுக் கால பாலிசி எனகிற முக்கியமான தகவலை அவரிடம் சொல்லாமலே பாலிசியை ‘மிஸ்செல்லிங்’ செய்திருக்கிறார்கள். பிற்பாடு உண்மையை உணர்ந்த அவர், ஐந்து வருடம் மட்டும் கஷ்டப்பட்டு பிரீமியம் கட்டி நஷ்டப் பட்டார்.

நவநீத கிருஷ்ணனுக்கு இப்போது 77 வயது. 25 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.3 லட்சம் முதலீடு செய்து அவர் வாங்கி வைத்திருந்த ஒரு வங்கிப் பங்கு இப்போது ரூ.90 லட்சமாக உயர்ந்திருந்தது. இதைப் பார்த்த புரோக்கிங் நிறுவனம், நல்ல லாபம் கிடைக்கும் என்று சொல்லி, பங்குகளை விற்க வைத்து, எண்டோவ்மென்ட் பாலிசிகளை அவர் தலையில் கட்டியது. அந்த பாலிசிகளுக்கான பணம் பல ஆண்டுகள் கட்ட வேண்டும் என்கிற அடிப்படைத் தகவலைக்கூட அவரிடம் சொல்லாமல் விற்றதன் விளைவு, அவர் பெற்ற லாபத்தை எல்லாம் இழந்திருந்தார்.

இந்தக் கதைகள் எல்லாம் சில உதாரணங்களே. இது மாதிரி பல ஆயிரம் கதைகள் ‘மிஸ்செல்லிங்’ எப்படி எல்லாம் செய்யப்படுகின்றன என்பதை எடுத்துச் சொல்கிறது.

இன்ஷூரன்ஸ், மியூச்சுவல் ஃபண்ட், கிரெடிட் கார்டு... 
வலைவிரிக்கும் ‘மிஸ்செல்லிங்’ ஏஜென்டுகள்...

இன்ஷூரன்ஸ் ‘மிஸ்செல்லிங்’...

முதலில், காப்பீடுகளில் நடக்கக்கூடிய ‘மிஸ்செல்லிங்’ குறித்தும் அதிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்வது குறித்தும் விரிவாக எடுத்துச் சொன்னார். இன்ஷூரன்ஸ் துறை நிபுணர் எஸ்.தரன்.

“இன்ஷூரன்ஸ், மியூச்சுவல் ஃபண்ட், கிரெடிட் கார்டு ஆகிய மூன்றில், அதிக அளவில் ‘மிஸ்செல்லிங்’ நடப்பதாக புகார்கள் எழுவது இன்ஷூரன்ஸ் பாலிசிகளில்தான். இதற்கு முக்கியமான காரணம், காப்பீட்டையும் முதலீட்டையும் மக்கள் குழப்பிக்கொள்வதுதான்.

பாலிசிகளை விற்கும் ஏஜென்டுகள் அல்லது வங்கி ஊழியர்கள் மக்களிடம் தவறான உத்தரவாதங்கள் கொடுப்பது, பலன்களை அதிகப்படுத்திக் கூறுவது, தகவல்களை முழுமையாகத் தெரிவிக்காமல் இருப்பது, தேவை இல்லாத தவறான பாலிசியைத் தலையில் கட்டுவது உள்ளிட்ட வேலைகளில் ஈடுபடுகிறார்கள்.

இன்ஷூரன்ஸ் பாலிசியை வாங்கும் ஒருவரால் பல ஆண்டுகள் தொடர்ந்து அந்த பாலிசிக்கான பிரீமியத்தை செலுத்த முடியுமா என்பதைப் பற்றியெல்லாம் யோசிக் காமல், ‘இன்று இந்த பாலிசியை விற்றால் போதும்’ என்று நினைத்துதான் ஏஜென்டுகள் செயல்படுகிறார்கள்.

இன்ஷூரன்ஸ் பாலிசிகளைப் பொறுத்தவரை, மூன்று வகைகள் உள்ளன. 1. எண்டோவ்மென்ட் பாலிசி. 2. யூலிப் பாலிசி. 3. டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி. இதில் முதல் இரண்டு வகை பாலிசிகள் காப்பீடும் முதலீடும் கலந்த கலவை. டேர்ம் இன்ஷூரன்ஸ் மட்டும்தான் ப்யூர் காப்பீட்டுத் திட்டம் ஆகும்.

காப்பீட்டை முதலீடாகக் கருதக்கூடாது என்று தொடர்ந்து சொல்லி வருகிறோம். ஆனால், இன்ஷூரன்ஸ் பாலிசிகளை ஏஜென்டுகள், ‘இவ்வளவு பிரீமியம் செலுத்தினால் இத்தனை வருஷத் தில் இவ்வளவு தொகை கிடைக்கும்’ என்று சொல்லியே விற்பனை செய்கிறார்கள். டேர்ம் இன்ஷூ ரன்ஸ் வேண்டும் என்று யாராவது கேட்டால், ‘‘இதில் கட்டிய பணம் திரும்பக் கிடைக்காது. நீங்கள் கட்டும் பணம் திரும்பக் கிடைக்கிற மாதிரியான திட்டங்களையே தேர்வுசெய்யுங்கள்’’ என்று சொல்லி, தவறான எண்டோவ் மென்ட் பாலிசியைத் தந்துவிடுகிறார்கள்.

ஶ்ரீதரன்
ஶ்ரீதரன்

டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி யைத் தராமல், எண்டோவ்மென்ட் பாலிசியைக் கட்டாயப்படுத்தித் தரக் காரணம், அந்த பாலிசிகளை விற்பதன்மூலம் அவர்களுக்குக் கிடைக்கும் பெரும் கமிஷன். இது மாதிரியான பாலிசிகளை விற்பதன் மூலம் அவர்களுக்கு 20 - 25% வரை கமிஷன் கிடைக்கிறது.

ஏஜென்டுகள்தான் என்றில்லை, வங்கி ஊழியர்கள்கூட நிறையவே ‘மிஸ்செல்லிங்’ செய்கிறார்கள். மக்களும் வங்கிகள் மீதுள்ள நம்பிக்கை காரணமாகவும், பல விதமான வேலைகளில் பரபரப்பாக இருப்பதாலும், வங்கி அதிகாரிகள் சொல்வதை அரைகுறையாகக் கேட்டுவிட்டு, பாலிசி விண்ணப்பத் தில் கையெழுத்துப் போட்டுவிட்டுப் போய்விடுகிறார்கள். வங்கி மூலம் விநியோகிக்கப்படும் பாலிசி என்ன வகை, அதில் உள்ள விதிமுறைகள் என்னென்ன, ரிஸ்க் என்ன, கியாரண்டி ரிட்டர்னா, நான் கியா ரன்டிட் (non guaranteed) ரிட்டர்னா என்பதை எல்லாம் வாடிக்கை யாளர்களிடம் வங்கி அதிகாரிகள் தெரிவிப்பதில்லை.

இன்ஷூரன்ஸ் தொடர்பான ‘மிஸ்செல்லிங்’ வலையில் ஒருவர் சிக்காமல் இருக்க வேண்டும் எனில், எந்த இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுப்பதாக இருந்தாலும், அதன் அடிப்படை விஷயங்களைத் தெளிவாகத் தெரிந்துகொண்டபிறகு எடுக்க வேண்டும். நம் அவசரமான சூழ்நிலையை ஏஜென்டுகள் தங்களுக்கு சாதகமாகப் பயன் படுத்திக்கொள்ளப் பார்ப்பார்கள். அதற்கு நாம் இடம்தரக் கூடாது.

எந்தவொரு இன்ஷூரன்ஸ் பாலிசியைத் தேர்வு செய்யும் முன், எந்த வகையில் அந்த பாலிசி உங்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்று பார்ப்பது மிகவும் அவசியம். அந்த பாலிசி மூலம் உங்களுக்குக் கிடைக்கும் பலன்கள் என்ன, அந்தப் பலன்கள் கிடைக்க என்னென்ன விதிமுறைகள் விதிக் கப்படுகின்றன, அந்த பாலிசியை ஏதோ ஒரு காரணத்தால் தொடர முடியாவிட்டால் என்ன ஆகும் என்பதை எல்லாம் பாலிசியை விற்கும் ஏஜென்டிடம் விசாரித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். ஏஜென்டுகள் வாய் வார்த்தையாகச் சொல்வதை எல்லாம் நம்பிவிடக் கூடாது. அவர் சொல்லும் விஷயங்கள் எல்லாம் பாலிசி ஆவணத்தில் உள்ளதா என்று ‘கிராஸ் செக்’ செய்ய வேண்டும். பாலிசி தொடர்பான அனைத்து விவரங்களையும் மின்னஞ்சல் மூலமாக ஏஜென்டிடம் அனுப்பச் சொல்லுங்கள். அந்தக் கடிதப் போக்குவரத்து உங்களுக்கு ஒரு சிறந்த ஆவணமாக இருக்கும்.

பாலிசியைத் தேர்வு செய்யும்போதும், பாலிசி ஆவணத் தில் கையெழுத்திடும் முன்பும் அந்த பாலிசி தொடர்பான விவரங்களைப் பார்க்க வேண்டும். பாலிசியின் பெயர், பாலிசியின் தன்மை மற்றும் பாலிசியின் விவரங்களை வரிவிடாமல் படித்துப் பார்க்க வேண்டும்.

எண்டோவ்மென்ட் பாலிசிகள், கடன் பத்திரங்களில் முதலீடு செய்கின்றன. யூலிப் பாலிசிகள், பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்கின்றன. யூலிப் பாலிசிகள் பங்குச் சந்தை சார்ந்த வருமானத்தைத் தருவதாக இருந்தாலும், அந்தத் திட்டத்தில் பிடித்தம் செய்யப்படும் கட்டணங்கள் போக, எத்தனை சதவிகிதம் வருமானம் கிடைக்கும் என்பதைத் தெளிவாகச் சொல்ல மாட்டார்கள்.

ஆனால், டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியில் முதிர்வில் எந்தப் பணமும் கிடைக்காது. ஆனால், இந்தத் திட்டம் நமக்குப் பிறகான குடும்பத்தின் எதிர் காலத்தைப் பாதுகாப்பதாக இருக்கும். இதில் பிரீமியமும் குறைவு என்பதால், இந்த பாலிசியை மட்டுமே எடுத்து விட்டு, வேறு வகையான இன்ஷூரன்ஸ் பாலிசிகள் வேண்டாம் என ஒதுக்கிவிடலாம்.

காப்பீடு முதலீடு அல்ல!

1970-80-களில் பணவீக்கம் 3% என்கிற அளவில் இருந்தது. அப்போது எண்டோவ்மென்ட் பாலிசிகள் மூலம் கிடைத்த வருமானம் 4% முதல் 5 சதவிகிதமாக இருந்தது. இந்த வருமானம் அப்போதிருந்த பணவீக்கத்தைத் தாண்டியதாக இருந்ததால், காப்பீட்டுத் திட்டங்கள் அப்போது சிறந்த முதலீட்டுத் திட்டங்களாகப் பார்க்கப் பட்டன. ஆனால், இப்போதுள்ள பணவீக்கத்துக்கு இன்ஷூரன்ஸ் திட்டங்களை முதலீடாகப் பார்க்க முடியாது. முதலீடு என்று காப்பீட்டைத் தேர்வு செய்பவர்கள், அந்தத் தொகையை வைப்பு நிதியில் சேமித்தாலே 6% - 7% வருமானம் கிடைக்கும். இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுக்கும்போது நீங்கள் சொன்ன விஷயத்தை எல்லாம் என்னால் கவனிக்க முடியாது என்பவர்கள், ஒரு நல்ல இன்ஷூரன்ஸ் ஆலோசகரிடம் ஆலோசனை பெற்ற பின் முடிவெடுப்பது அவசியம்’’ என்று முடித்தார் ஶ்ரீதரன்.

இன்ஷூரன்ஸ், மியூச்சுவல் ஃபண்ட், கிரெடிட் கார்டு... 
வலைவிரிக்கும் ‘மிஸ்செல்லிங்’ ஏஜென்டுகள்...

மியூச்சுவல் ஃபண்ட் மிஸ்செல்லிங்...

காப்பீடுகளுக்கு அடுத்து மியூச்சுவல் ஃபண்டில் அதிக அளவில் மக்கள் ஆர்வமாக ஈடுபட்டு வருகிறார்கள். மியூச்சுவல் ஃபண்டில் ‘மிஸ்செல்லிங்’ எப்படியெல்லாம் நடக்கிறது, அதற்கு என்ன தீர்வு என மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் ஏ.கே.நாராயணிடம் கேட்டோம். அவர் சொன்னதாவது...

‘‘மியூச்சுவல் ஃபண்ட் விற்பனையில் ‘மிஸ்செல்லிங்’ பல வழிகளில் நடக்கிறது. தவறாக சொல்லப்படும் (misleading) தகவல்களே ‘மிஸ்செல்லிங்’ நடக்க முக்கியமான காரணம். அவற்றில் முதலாவதாக இருப்பது, வருமானம் குறித்த தவறான தகவல். ‘இவ்வளவு லாபம் கிடைக்கும், அவ்வளவு லாபம் கிடைக்கும்’ என்று ஆசைகாட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை விற்கிறார்கள் சிலர். பங்குச் சந்தை சார்ந்த எந்த முதலீட்டுத் திட்டமாக இருந்தாலும் அதில் ரிஸ்க் இருக்கிறது. ஏஜென்டுகள் அல்லது வங்கி/நிதி நிறுவன ஊழியர்கள் என யாராக இருந்தாலும் ஒருவரிடம் ஒரு ஃபண்ட் திட்டத்தைப் பற்றிச் சொல்லும்போது, அதில் உள்ள ரிஸ்க் என்ன என்று கட்டாயம் சொல்ல வேண்டும். அப்படி சொல்லாமல் ஃபண்ட் திட்டத்தை விற்பதால், பிற்பாடு சந்தை இறங்கும்போது நஷ்டத்தைத் தாங்க முடியாமல் மக்கள் தவித்துப் போகிறார்கள்.

ஃபண்டுகளில் அடிக்கடி நடக்கும் இன்னொரு ‘மிஸ்செல்லிங்’, கடந்த கால ரிட்டர்னை மட்டும் தெரிவிப்பது. கடந்த கால ரிட்டர்னை மட்டுமே வைத்துக் கொண்டு ஒரு ஃபண்ட் திட்டத்தின் எதிர்கால செயல்பாட்டை முடிவு செய்ய முடியாது. கடந்த கால ரிட்டர்ன் என்பது முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு எடுத்துக் காட்டே தவிர, தயங்குபவர்களுக்கு தருகிற உத்தரவாதம் அல்ல அது. மேலும், எந்த முதலீட்டுத் திட்டமாக இருந்தாலும், அதன் மூலம் கிடைக்கும் பலன் என்பது, ஒரு முதலீட்டாளர் அந்த முதலீட்டை எவ்வளவு காலத்துக்கு வைத் திருப்பார் என்பதைப் பொறுத்து மாறும். நீண்ட காலம் முதலீடு செய்வதன் மூலமே ஃபண்ட் திட்டங்கள் மூலம் நல்ல வருமானம் பெற வாய்ப்புண்டு. பங்கு சார்ந்த ஃபண்டுகளில் 10 வருடங்கள் இருக்க வேண்டும். ஹைபிரிட் திட்டங்களில் 5 வருடங்கள் இருக்க வேண்டும். ஐந்து மாதம், ஒரு வருடம் என்று குறுகிய காலத் துக்குள் என்ன வருமானம் தந்திருக் கிறது என்று பார்த்து முதலீட்டு முடிவை எடுக்கக் கூடாது.

அதே போல, குறுகிய காலத்துக்கு மட்டும் டிரெண்டில் இருக்கும் துறைகளைக் காட்டி, அந்த ஃபண்ட் திட்டங்களில் நம் பணத்தைப் போடவைக்கும் ‘மிஸ் செல்லிங்’ வேலையும் நடக்கிறது. உதாரணமாக, கொரோனா பெருந்தொற்று பரவல் சமயத்தில் பார்மா துறை நன்றாக இருந்தது. இதைக்காட்டி, இதில் பணம் போடுங்கள் என்று சொன்னால், அதை நாம் கேட்கக் கூடாது. காரணம், இந்தப் போக்கு சில மாதங்கள் வரை மட்டுமே நீடிக்கலாம். பின்னர் எப்படி இருக்கும் என்று தெரியாது. அதேபோல்தான், டிஜிட்டல் துறை.

தீமேட்டிக் ஃபண்டுகள் எல்லோருக்குமானவை அல்ல. அது சீஸன் முதலீட்டாளர்களுக் கானது. குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே ஆனது. ஒரு ஃபண்ட் திட்டத்தை ஒரு முதலீட்டாளருக்கு புராடக்டை விற்பவருக்கு சில பொறுப்புகள் உண்டு. முதலீடு செய்பவரின் வயது, அவருடைய ரிஸ்க் எடுக்கும் திறன், தேவை ஆகியவற்றின் அடிப் படையில் முதலீட்டுத் திட்டத்தைப் பரிந்துரை செய்ய வேண்டும். திட்டங்களின் ‘லாக் இன் பீரியட்’ என்ன, அதில் உள்ள கட்டணங்கள் என்ன, ரெகுலர் திட்டங்களுக்கான கமிஷன் என்ன, வரி விவரங்கள் போன்றவற்றை எல்லாம் தெரிவிக்க வேண்டும். அதே போல், ஃபண்ட் திட்டத் தில் முதலீடு செய்யும் முன் அந்தத் திட்டம் பற்றிக் குறைந்தபட்ச தெளிவுடன் இருப்பதும் முக்கியம். அதற்குத் தேவையான முதலீட்டுக் கல்வியை முதலீட்டாளர்கள் பெற வேண்டும். நிதி மற்றும் முதலீடு சார்ந்த அறிவும் விழிப்புணர்வும் கட்டாயம் எல்லோருக்கும் தேவை. இவையெல்லாம் நமக்கு சரியாக வராது என்று நினைப்பவர்கள் வங்கி, தபால் நிலையம் உள்ள திட்டங்களுடன் நின்றுவிடுவது நல்லது.

ஏ.கே.நாராயண்
ஏ.கே.நாராயண்

மியூச்சுவல் ஃபண்டுகள், பங்குச் சந்தை முதலீடுகள் வங்கிகள் மற்றும் தபால் நிலைய சேமிப்புத் திட்டங்கள் போல அல்ல என்பதை முதலில் தெளிவுபடுத்த வேண்டும். முதலீட்டாளர்களைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை செபி எடுத்து வந்தாலும், ஒவ்வொரு தனிநபரின் நிதி சார்ந்த பாதுகாப்பு என்பது அவரவர் பொறுப்புக்குட்பட்டது என்றுதான் செபியும் சொல்கிறது. ஜனநாயக நாட்டில் விதிமுறைகளுக்கு உள்பட்டு யாரும் எதையும் விற்கலாம். அவர்கள் ஏன் அதை விற்கிறார்கள் என்று கேட்க முடியாது. ஆனால், அது நமக்குத் தேவையான திட்டமா, அந்தத் திட்டம் நம் தேவைகளை நிறைவேற்றும் சரியான திட்டமாக இருக்குமா என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.

‘மிஸ்செல்லிங்’ வலையில் சிக்காமல் இருக்க விழிப்புணர்வு அவசியம். அப்படி சிக்கிவிட்டால், செபியின் SCORES மூலம் புகார் அளிக்கலாம். அப்படி புகார் செய்யும்போது சந்தை ஏற்ற இறக்கங்கள் குறித்தோ, லாப நஷ்டங்கள் குறித்தோ புகார் அளிக்க முடியாது. உங்களிடமிருந்து பணம் வாங்கிவிட்டு, அதைச் செலுத்தாமல் ஏமாற்றி இருந்தால் புகார் செய்யலாம்” என்று கூறி முடித்தார் ஏ.கே.நாராயண்.

கிரெடிட் கார்டு மிஸ்செல்லிங்..

இன்ஷூரன்ஸ், மியூச்சுவல் ஃபண்ட் திட்டங் களுக்கு அடுத்து, ‘மிஸ்செல்லிங்’கால் மக்கள் அதிகம் பாதிக்கப்படுவது கிரெடிட் கார்டால்தான். ஓயாமல் வரும் தொலைபேசி அழைப்புகள், பொது இடங்களில் நச்சரிக்கும் சேல்ஸ் ஏஜென்டுகள் என எங்கு போனாலும் கிரெடிட் கார்டு வலைகளை வீசத் தயாராகவே இருக் கிறார்கள். இவர்கள் தொல்லை தாங்காமல், கிரெடிட் கார்டு வாங்கிவிட்டு, பிற்பாடு அவதிப்படுகிறவர்கள் பலர்.

கிரெடிட் கார்டை வலிய வந்து, விருப்பமில்லாத, தேவைப்படாதவர்களுக்கு விற்பது மிகப் பெரிய தவறு. ஆனால், இந்த ‘மிஸ்செல்லிங்க்கை’த் தடுக்க நம் நாட்டில் போதிய நடைமுறைகள் இல்லை. கிரெடிட் கார்டுகளை அதிக அளவில் மக்களிடம் விற்பது வங்கிகளாகத்தான் உள்ளன. அவர்களுக்கு தரப்பட்ட டார்கெட்டை எட்ட நம்மைப் பலி கடாவாக ஆக்கிவிடுகிறார்கள் வங்கி அதிகாரிகள்.

கிரெடிட் கார்டு விற்பனையில் ஈடுபடுபவர்கள் அதை ‘லைஃப் டைம் ஃப்ரீ கிரெடிட் கார்டு’ என்று சொல்லி விற்பார்கள். கேஷ்பேக், ரிவார்டு பாயின்ட்ஸ், இன்டர்நேஷனல் ஏர்போர்ட் லவுன்ச் ஆக்சஸ் எனப் பல வசதிகள் இருப்பதாகச் சொல் வார்கள். நம் நிதிநிலை என்ன, கிரெடிட் கார்டு தேவையா, அதைச் சரியாக, முறையாகப் பயன்படுத்த நமக்குத் தெரியுமா என்பது குறித்தெல்லாம் அவர்களுக்கு கவலை இல்லை. பொதுவாகவே, ஃபைனான்ஸ் டிசிப்ளின் இருந்தால், கிரெடிட் கார்டை பயம் இல்லாமல் பயன் படுத்தலாம் என்பார்கள். ஆனால், சாதாரண மக்களில் 90% பேரிடம் அந்த ஒழுக்கம் இல்லை என்பதே உண்மை.

‘credit cards are the crack cocaine of the financial world’ என்று புகழ்பெற்ற டில்பெர்ட் காமிக்ஸ் கலைஞர் ஸ்காட் ஆடம்ஸ் கூறுவார். அது முற்றிலும் உண்மை. கிரெடிட் கார்டை வாங்கிப் பயன்படுத்தியவர்கள் அனைவருமே ஒன்று, அதை சீக்கிரம் திரும்ப சரண்டர் செய்ய முயல்வார்கள். இல்லை எனில், ஒரு கார்டில் உள்ள கடன் தொகையை சமாளிக்க இன்னொரு கிரெடிட் கார்டை வாங்குவார்கள். வங்கி ஊழியர் களுக்கு உங்களுடைய பண விவரங்கள், உங்களுடைய நிதி நிலை எல்லாமே தெரியும். அதை வைத்து அவர்கள் உங்களை மீண்டும் வலைவீசி சிக்க வைக்க முயற்சி செய்வார்கள். நீங்கள் தான் அவர்களிடம் இருந்து, விலகி நிற்கத் தெரிந்துகொள்ள வேண்டும்.

‘மிஸ்செல்லிங்’ உஷார், உஷார்!

இன்ஷூரன்ஸ், மியூச்சுவல் ஃபண்ட், கிரெடிட் கார்டுகளில் அதிகம் ‘மிஸ்செல்லிங்’ நடப்பதால், விரிவாக விளக்கிச் சொல்லியிருக்கிறோம். ஆனால், ரியல் எஸ்டேட்டிலும், பங்குச் சந்தையிலும்கூட நிறைய ‘மிஸ்செல்லிங்’ நடக்கவே செய்கின்றன. எந்த வகையான ‘மிஸ்செல்லிங்’காக இருந்தாலும் நாம்தான் விழிப்புடன் இருக்க வேண்டும்!

மிஸ்செல்லிங் பாலிசியை என்ன செய்வது?

“எண்டோவ்மென்ட், யூலிப் பாலிசிகளில் தவறான அல்லது தேவையில்லாத பாலிசிகளை உங்களுக்கு யாரேனும் விற்றிருந்தால், பாலிசி வாங்கிய நாளிலிருந்து 15 முதல் 30 நாள்களுக்குள் அதை சரண்டர் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. இதன்மூலம் பாலிசியை சரண்டர் செய்து கட்டிய பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.

இன்ஷூரன்ஸ் திட்டம் உங்களுக்கு ‘மிஸ்செல்லிங்’ செய்யப்பட்டால் முதலில் இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் புகார் பதிவு செய்யுங்கள். அவர்களிடமிருந்து சரியான தீர்வு கிடைக்காவிட்டால் இன்ஷூரன்ஸ் ஓம்புட்ஸ்மனில் புகார் செய்யலாம். வங்கி ஊழியர் ‘மிஸ்செல்லிங்’ செய்திருந்தால் ரிசர்வ் வங்கியின் ஓம்புட்ஸ்மனில் புகார் செய்யலாம். அதே சமயம், எண்டோவ்மென்ட் பாலிசியில் குறைந்தது மூன்று வருடங்கள் பிரீமியம் செலுத்தியிருந்தால், அதன் பிறகு அதைத் தொடர முடியாவிட்டாலோ, தேவையில்லாதபட்சத்திலோ அதை ‘பெய்ட்அப் பாலிசி’யாக மாற்றிக் கொள்ளலாம். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பாலிசிக்கான பணத்தைக் கட்டாமல் இருந்தால், அதுவாகவே பெய்ட் அப் பாலிசியாக மாறிவிடும். அதுவரை செலுத்திய தொகைக்கான பலன்களை பாலிசி முதிர்வுக் காலத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

யூலிப் பாலிசிகளுக்குக் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் வரை பிரீமியம் செலுத்த வேண்டும். அதன்பிறகு அந்த பாலிசி தொடரவில்லை எனில், 6-வது வருடத்தில் பாலிசியை சரண்டர் செய்துகொள்ளலாம். இவை இரண்டிலும் இடையில் தொடராமல் விட்டு மீண்டும் புதுப்பிக்க விரும்பினால், செலுத்தாத பிரீமியம் தொகையும் அபராதத்துடன் சேர்த்து செலுத்தி புதுப்பித்து கொள்ளலாம். ஆனால், டேர்ம் இன்ஷூரன்ஸைப் பொறுத்தவரை, ஓராண்டு பணம் கட்டவில்லை எனில், பாலிசி காலாவதி ஆகிவிடும். அதை மீண்டும் புதுப்பிக்க முடியாது. மீண்டும் வேண்டும் எனில், புதிய திட்டமாகவே எடுக்க முடியும். எனவே, இந்த பாலிசிக்கான பணத்தைக் கட்டாமல் இருக்கக் கூடாது!"

கிரெடிட் கார்டு: 0% இ.எம்.ஐ நிஜமா..?

கிரெடிட் கார்டில் பொருள்கள் வாங்கினால் 0% இ.எம்.ஐ வசதி என்பார்கள். ஆனால், அந்த வசதியுமே குறுகிய காலத்துக்கு மட்டும்தான் இருக்கும். அதைத் தாண்டிய இ.எம்.ஐ வசதியைத் தேர்ந்தெடுத்தால் வட்டி கண்டிப்பாக உண்டு. அத்துடன் புராசஸிங் சார்ஜ் கண்டிப்பாக இருக்கும்.

இப்படி பெரும்பாலான நேரங்களில் செலவு செய்த தொகையைவிட கூடுதலாக சில ஆயிரங்களை வங்கிகளுக்குக் கட்டணமாக, ஜி.எஸ்.டி-யாக தண்டம் செலுத்தும் நிலைதான் கிரெடிட் கார்டில் உள்ளது. ஒவ்வொரு கிரெடிட் கார்டு பயனாளரும் தங்களுடைய மாதாந்தர ஸ்டேட்மென்டை கவனமாகப் பார்க்க வேண்டும். அப்போதுதான் அதில் இருக்கும் விஷயங்கள் புரிய வரும். கிரெடிட் கார்டு தொடர்பான அனைத்து விவரங்களையும் முழுமையாகத் தெரிந்துகொண்டு பயன்படுத்தாவிட்டால் பண இழப்புகளைச் சந்திக்க வேண்டி வரும்.