தொடர்கள்
பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

தமிழக அரசு ஊழியர்கள் விடுப்பு ஊதியத்தை விருட்சமாக வளர்க்கலாம்..!

விடுப்பு ஊதியம்
பிரீமியம் ஸ்டோரி
News
விடுப்பு ஊதியம்

ஓய்வுக்காலம்

ஓய்வுக்கால நிதியத்துக்கு இவ்வளவு இருந்தால் போதும், அவ்வளவு இருந்தால் நன்றாக இருக்கும் என்கிற உத்தேச மனக் கணக்குகள் எல்லாம் ஒன்றுக்கும் உதவாது. ஏனென்றால், அவை எல்லாம் பணவீக்கத்தை மனதில்கொண்டு போடப்படும் கணக்குகள் அல்ல. பணவீக்கத்தை அடிப்படையாக வைத்து போடப்படும் கணக்குகளே ஓய்வுக்கால வாழ்க்கைக்குத் தேவையாக இருக்கும்.

ப.முகைதீன் ஷேக் தாவூது
ப.முகைதீன் ஷேக் தாவூது

பணவீக்கம் மட்டுமல்ல, முன்பு நாம் ஆடம்பரம் என்று நினைத்த பல விஷயங்கள் இன்று அவசியம் என்றாகிவிட்டன. 40 வருடங் களுக்குமுன் நம் வீடுகளில் டிவி இல்லை. 30 வருடங்களுக்கு முன் இரு சக்கர வாகனங்கள் இல்லை. 20 வருடங்களுக்குமுன் நம் வீட்டில் ஏ.சி இல்லை. 10 ஆண்டுக்குமுன் கார் வாங்க வேண்டும் என்ற சிந்தனை நம்மிடம் இல்லை.

ஆனால், இன்றைக்கு இவையெல்லாம் இல்லை எனில், நம்மை ஏளனமாகப் பார்க்கத் தொடங்கிவிடுகிறார்கள். எனவே, கௌரவமான ஓய்வுக்கால வாழ்க்கை என்பது அனைத்து விதமான வாழ்க்கை வசதிகளுடன்கூடியது என்பதே ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மையாக நிற்கிறது. ஓய்வுக்கால நிதியமும் அதற்கேற்றபடி அமைக்கப்பட வேண்டியது அவசியமாகிவிட்டிருக்கிறது.

எனவே, எந்தெந்த வழிகளில் எல்லாம் சேமிப்பு மற்றும் முதலீடு களை விரிவாக்கம் செய்யலாம் என்ற சிந்தனை தவிர்க்க முடியாத தாக இருக்கிறது. இதற்கு நமக்கு வரும் ஒவ்வொரு வருமானத்தையும் முறையாகச் சேர்த்து வைத்து முதலீடு செய்தால் மட்டுமே, பிற்காலத்தில் நமது இலக்குகளை நிறைவேற்ற அது உதவும். அந்த வகையில் அரசு ஊழியர்கள் அனைவரும் பரிசீலிக்க வேண்டிய ஒன்று, தமிழக அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை வழங்கப்படும் விடுப்பு ஒப்படைப்பு சம்பளம். எதிர்காலத்தில் நம் வாழ்க்கையை இன்னும் வசதியாக மாற்றிக்கொள்ள இதை எப்படி பயன்படுத்தலாம் என விரிவாகப் பார்ப்போம்.

தமிழக அரசு ஊழியர்கள் விடுப்பு ஊதியத்தை விருட்சமாக வளர்க்கலாம்..!

பல வகையான விடுப்புகள்...

வார விடுப்பு, விழாக்கால விடுப்பு, மகப்பேறு விடுப்பு தவிர, தமிழக அரசு ஊழியர் அனைவருக்கும் பொதுவானவை ஈட்டிய விடுப்பு, சொந்தக் காரணங்களுக்காக (அரை சம்பள) ஈட்டா விடுப்பு, மருத்துவக் காரணங்களுக்காக (முழு சம்பளத்துடன்கூடிய) மருத்துவச் சான்றின் பேரிலான ஈட்டிய விடுப்பு ஆகியவை.

பணிக்காலம் முழுமைக்கும் அனுமதிக்கத்தக்க மருத்துவ விடுப்பு மொத்தம் 540 நாள்கள். ஓய்வு பெறும் ஒருவர் இந்த விடுப்பை அனுபவிக்காமல் விட்டிருந்தாலும் இதைப் பணமாக்க முடியாது. ஆனால், அதிகபட்சமாகத் தரப்படும் சொந்தக் காரணங்களுக்கான ஈட்டா விடுப்பு, பணிக்காலம் (Service Period) முழுமைக்கும் 180 நாள்கள். இதை அனுபவிக்காமல் வைத்திருந்தால், இதற்கு அரை சம்பளம் என்கிற அடிப்படையில் ஓய்வு பெறும் போது உள்ள சம்பள நிலவரப்படி, மூன்று மாத சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றுக்கொள்ளலாம்.

ஈட்டிய விடுப்பு...

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு 30 நாள்கள் ஈட்டிய விடுப்பு, ஊழியரின் விடுப்புக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. ஒருவர் 30 ஆண்டுகள் பணி நிறைவு செய்தால், அவருக்குக் கிடைக்கக்கூடிய ஒட்டுமொத்தம் ஈட்டிய விடுப்பு 900 நாள்கள்.

ஆனால், பணி நிறைவு செய்து ஓய்வுபெறும் போது ஒருவர் பெறக்கூடிய அதிகபட்சம் ஈட்டிய விடுப்புச் சம்பளம் 240 நாள் களுக்கு மட்டுமே. அதாவது, எட்டு மாத சம்பளம் மட்டுமே கிடைக்கும்.

இடைப்பட்ட காலத்தில், ஈட்டிய விடுப்பு மூலம் பணப் பலன்பெறும் வகையில் ஒவ்வொரு வருடமும் தனது விடுப்புக் கணக்கில் உள்ள 15 நாள் ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து (Surrender) வருடம் தோறும் அரைமாதச் சம்பளத்தை ரொக்கமாகப் பெறலாம். இவ்வாறு கிடைக்கும் விடுப்பு ஊதியத்தைத் தனியாக முதலீடு செய்தால், ஓய்வுக்காலத்துக்குக் கூடுதல் ‘சப்போர்ட்’ கிடைக்கும் என்பதை அரசு ஊழியர்கள் அனைவரும் மறக்கக் கூடாது.

48 ஆண்டுகளாக...

ஆண்டுக்கு ஒருமுறை 15 நாள் ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து, அதற்கான அரைமாத ஊதியத்தை ரொக்கமாகப் பெற லாம் என்ற நடைமுறை கடந்த 48 ஆண்டுக் காலமாகத் தமிழக அரசு ஊழியர்களுக்கு நடை முறையில் உள்ளது. ஆனாலும், 2021 நவம்பரில் இந்தச் சலுகை நிறுத்தி வைக்கப்பட்டது. மீண்டும் 2004-ல் தொடங்கப் பட்டது. ஆனால், மீண்டும் கடந்த ஏப்ரல் 2020 முதல் கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இனிவரும் மாதங்களில் இது மீண்டும் தொடரக்கூடும். ஆனால், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விடுப்பை ஒப்படைத்து சம்பளம் பெறும் சலுகை மீண்டும் தொடங்கப் படும்முன் அதை என்.பி.எஸ், பி.பி.எஃப் போன்ற நீண்ட கால ஓய்வுக்காலத் திட்டங்களில் முதலீடு செய்யலாம். அல்லது, பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து, பிற்பாடு நல்லதொரு ஓய்வுக்கால நிதியைச் சேர்க்கலாம்.

ஓய்வுக்கால நிதியம்...

தற்போது புதிதாகப் பணிக்கு வந்துள்ள ஒருவர் (நடுத்தர அளவாக) 40,000 ரூபாயை மாதச் சம்பளமாகப் பெறுவதாக வைத்துக் கொண்டால், இவர் பெறக்கூடிய தொடக்கநிலை விடுப்பு ஊதியம் (அதாவது, 15 நாள் விடுப்பை ஒப்படைத்துப் பெறக்கூடிய அரை மாதச் சம்பளம்) ரூ.20,000 என்கிற அளவில் இருக்கலாம்.

தற்போதைய நிலையில் சம்பள மானது, மிகக் குறைந்த அளவாக, வருடம்தோறும் 10% கூட்டு வளர்ச்சி பெற்று வருகிறது. இந்தக் கணக் கீட்டின்படி, 30 ஆண்டுக் கால முடிவில் ஓய்வு பெறும்போது, இவரது கடைசி மாதச் சம்பளம் ரூ.6.98 லட்சம் என்பதாக இருக்கும். ஓய்வுக்கால வாழ்க்கைத் தரம் ஒருவரின் கடைசி மாத சம்பளத் துக்குத் தக்கவாறு அமைவது திருப்திகரமானதாக இருக்கும். அவ்வாறு அமைவதற்கு இவரது வருடாந்தர விடுப்பு ஒப்படைப்பு சம்பளத்தை முதலீடு செய்வதன் மூலம் கிடைக்கும் முதிர்வுத் தொகை பக்கபலமாக இருக்கும்.

என்.பி.எஸ்ஸில் முதலீடு...

வருடம்தோறும் கிடைக்கும் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஊதியத்தை என்.பி.எஸ். திட்டத்தில் முதலீடு செய்துவந்துள்ளதாக வைத்துக்கொள்வோம். என்.பி.எஸ் சந்தை வளர்ச்சி சார்ந்தது. என்.பி.எஸ்ஸின் தற்போதைய வருடாந்தர கூட்டு வளர்ச்சி 10 சதவிகிதத்துக்குக் குறையாமல் இருந்துவருகிறது. 10% என்றே கணக்கிட்டால்கூட இவரது என்.பி.எஸ் முதிர்வுத் தொகை 30 ஆண்டு முடிவில் சுமார் 1,04,88,460 என்பதாக இருக்கும். இதில் 60% தொகையான ரூ.62.93 லட்சத்தை ரொக்கமாகப் பெற்றுக் கொள்ளலாம். 40% தொகையான 42 லட்சத்தை அன்யூட்டிக்காக (Pension) விட்டு வைத்தால் மாதம்தோறும் சுமார் 28,000 ரூபாய் பென்ஷன் கிடைக்கும்.

பி.பி.எஃப்பில் முதலீடு...

பி.பி.எஃப் வளர்ச்சியானது மத்திய அரசு நிர்ணயம் செய்யும் வட்டி விகித அடிப்படையில் வளர்வது. சமீப காலமாக 7.1% என்ற அளவில் வட்டி தரப்பட்டு வருகிறது. சராசரியாக 7% வட்டி என்ற கணக்கீட்டின்படி, 30 வருட விடுப்பு ஒப்படைப்புச் சம்பளம் முதலீட்டின் மூலம் கிடைக்கக்கூடிய முதிர்வுத் தொகை சுமார் 70.3 லட்சமாக இருக்கலாம். இதில் அன்யூட்டி திட்டம் கிடையாது என்பதால், மொத்தத் தொகையையும் ரொக்கமாகப் பெற்றுக்கொள்ளலாம்.

ஊதிய உயர்வுக்குப்பின்...

வருடம்தோறும் விடுப்பு ஒப்படைக்கும் தேதியை ஊழியரே நிர்ணயம் செய்துகொள்ளலாம். அந்த வகையில், எந்தத் தேதியில் வருடாந்தர ஊதிய உயர்வு தரப்படுகிறதோ, அந்தத் தேதியையொட்டியே விடுப்பு ஒப்படைப்பு செய்யும் தேதியை நிர்ணயம் செய்துகொண்டால், கிடைக்கக்கூடிய விடுப்பு ஊதியம் அதிகமாக இருக்கும். இதற்கான அகவிலைப்படி நிலுவை தாமதமாகக் கிடைத்தாலும், தவறாமல் அதையும் என்.பி.எஸ் அல்லது பி.பி.எஃப் கணக்கில் செலுத்துவது அவசியம்.

தமிழக அரசு ஊழியர்கள் விடுப்பு ஊதியத்தை விருட்சமாக வளர்க்கலாம்..!

வரிச் சலுகை...

என்.பி.எஸ்ஸுக்கு வருமான வரிப்பிரிவு 80CCD(1) மற்றும் 80CCD(1B) பிரிவுகளின்கீழ் வரிச் சலுகை கிடைக் கிறது. பி.பி.எஃப் கணக்கில் செலுத்தப்படும் தொகைக்கான வரிச் சலுகை பிரிவு 80சி-யின் கீழ்வருவது. சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் ஜி.பி.எஃப் அல்லது சி.பி.எஸ் உடன் விடுப்புக்கால ஊதியத்தையும் முதலீடு செய்வதால், வரிச் சலுகை கிடைக்கலாம். மொத்த முதலீட்டுத் தொகை வரம்புக்கு மேற்பட்டால் வரிச் சலுகை குறையலாம். ஆனால், அதுபற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை.

தவறான தகவல்...

ஜி.பி.எஃப்பில் உள்ள பழைய பென்ஷன்தாரர் மற்றும் சி.பி.எஸ் சார்ந்த அரசு ஊழியர் என்.பி.எஸ் மற்றும் பி.பி.எஃப்பில் சேரமுடியாது என்ற தகவல் தவறானது. இந்திய குடிமக்கள் அனைவரும் மேற்கண்ட ஓய்வுக்கால திட்டங்களில் சேரலாம். மத்திய அரசு ஊழியராக இருந்து, அவருக்கு என்.பி.எஸ் கணக்கு இருந்தால் மட்டுமே, அந்த ஊழியர் இன்னொரு என்.பி.எஸ் கணக்குத் தொடங்க முடியாது.

ஆக, இனியாவது ஈட்டா விடுப்பை ஒப்படைத்து கிடைக்கும் பணத்தை முறையாக முதலீடு செய்யுங்கள்!