Published:Updated:

தமிழக அரசு ஊழியர்களுக்கான பென்ஷன் கம்யூடேஷன்... கவனிக்க வேண்டிய அம்சங்கள்..!

ஓய்வூதியம்
பிரீமியம் ஸ்டோரி
ஓய்வூதியம்

ஓய்வூதியம்

தமிழக அரசு ஊழியர்களுக்கான பென்ஷன் கம்யூடேஷன்... கவனிக்க வேண்டிய அம்சங்கள்..!

ஓய்வூதியம்

Published:Updated:
ஓய்வூதியம்
பிரீமியம் ஸ்டோரி
ஓய்வூதியம்

தமிழக அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெ‌‍றும், பழைய ஓய்வூதியத் திட்டம் சார்ந்த அனைத்து ஊழியர்களுக்கும் மாதாந்தர ஓய்வூதியம் (pension), பணிக்கொடை (graduity) பொது வருங்கால வைப்பநிதி இறுதித்தொகை, விடுப்புக்கான சம்பளம் ஆகிய ஓய்வுக்கால பணப் பலன்கள் அனைத்தும் கிடைத்துவிடும்.ஆனால், விரும்பி இசைவு (option) தெரிவித்து விண்ணப்பித்தோருக்கு மட்டும்தான் ‘பென்ஷன் கம்யூடேஷன்’ தொகை கிடைக்கும் அது என்ன ‘பென்ஷன் கம்யூடேஷன்’ என்று கேட்கிறீர்களா?
பென்ஷன் கம்யூடேஷன் என்றால்..?

ப.முகைதீன் ஷேக் தாவூது
ப.முகைதீன் ஷேக் தாவூது

அதாவது, ஓய்வு பெற்ற ஒருவர், தனக்கு அனுமதிக்கப்பட்டுள்ள அடிப்படை ஓய்வூதியத்தில் (அதிகபட்சமாக) மூன்றில் ஒரு பங்கை அதாவது, 33.33% ஒப்படைத்து, மொத்தமாக ஒரு பெரிய தொகையைப் பெறுவதுதான் ‘பென்ஷன் கம்யூடேஷன் (pension commutation) எனப்படுகிறது. மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவான தொகையையும் ஒப்படைத்து, மொத்தமாக ஒரு தொகையைப் பெற முடியும்.

‘பென்ஷன் கம்யூடேஷன்’ தொகையைப் பெறுவது எப்படி?

அரசு ஊழியர் ஒருவர் ஓய்வு பெறுவதற்கு சுமார் நான்கு மாதங் களுக்கு முன்பே, படிவம் 5-ல் ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை பெற மாநிலக் கணக்காயருக்குத் தன் அலுவலகத் தலைவர் மூலமாக விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தின் பத்தி 9-ல் ‘கம்யூடேஷன் பெற விரும்புகிறாரா’ என்ற கேள்விக்கு ‘ஆம்’ என்ற பதிலைத் தெரிவு செய்துவிட்டாலே போதும்; கம்யூடேஷன் எனப்படும் மொத்தத் தொகையும் கிடைத்துவிடும். ‘ஆம்’ என்ற பதிலுக்குக் கீழே ‘எத்தனை ரூபாயை ‘கம்யூட்’ செய்ய விரும்புகிறீர்கள்’ என்ற கேள்விக்கு, தனது ஓய்வூதியத்தில் மூன்றில் ஒரு பங்குக்கு உள்பட்ட தொகையை மறக்காமல் குறிப்பிட வேண்டும்.

தமிழக அரசு ஊழியர்களுக்கான 
பென்ஷன் கம்யூடேஷன்... கவனிக்க வேண்டிய அம்சங்கள்..!

ஓய்வுபெற்ற பிறகு...

ஓய்வுக்கால பணப்பலன் பெற விண்ணப்பிக்கும்போதே, ‘கம்யூடேஷன்’ பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவிக்காதவர்கள் ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெறத் தொடங்கிய பிறகும் கம்யூடேஷன் பெற விண்ணப்பிக்கலாம். அதாவது, இதற்கான விண்ணப்பத்தைக் கருவூலத்தில் இருந்து பெற்று, விண்ணப்பதாரர் எந்தக் கருவூலத்தில் ஓய்வூதியம் பெறுகிறாரோ, அந்தக் கருவூலம் மூலம் இரட்டைப் பிரதிகளில் (Application in Duplicate) இரு புகைப் படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். கருவூல மானது அந்த விண்ணப்பத்தை மாநிலக் கணக் காயருக்கு அனுப்பும்.

இரண்டு வகை...

ஓய்வு பெற்று ஓய்வூதியம் வாங்கத் தொடங்கிய பிறகு, கம்யூடேஷன் பெற வேண்டுமெனில், இரண்டு நடைமுறைகள் உள்ளன. அதாவது, ஒருவர் ஓய்வு பெற்ற தேதியிலிருந்து ஓராண்டுக்குள் கம்யூடேஷன் விண்ணப்பத்தைக் கருவூலம் மூலம் மாநிலக் கணக்காயருக்கு அனுப்பிவிட்டால், ஓய்வூதியதாரர் மருத்துவப் பரிசோதனைக்கு உட்பட மாட்டார். மருத்துவப் பரிசீலனை இல்லாமலே, கம்யூடேஷனுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுவிடும். ஆனால், ஓய்வு பெற்று ஓராண்டுக்குப் பிறகு கம்யூடேஷன் பெற விண்ணப்பிப்பவர்கள் மருத்துவப் பரிசோதனை செய்யப்படுவார்கள். பரிசோதனையானது ஓய்வு பெற்றவரின் வாழ்நாள் காலம் பற்றியது என்பதால், மருத்துவப் பரிசோதனை கடுமையானதாகவே இருக்கும். பரிசோதனை சாதகமாக இல்லாவிட்டால் கம்யூடேஷன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட வாய்ப்புண்டு. தவிர, நன்னடத்தை தொடர்பாகத் தீவிரமான குற்றச் சாட்டு இருந்தாலும், கம்யூடே ஷன் பெற ஒரு தடையாக மாறலாம்.

கம்யூடேஷன் தொகை கணக்கீடு...

ஒருவர், தனக்கு அனுமதிக்கப் படும் பென்ஷனில் எத்தனை ரூபாய் ‘கம்யூட்’ செய்கிறாரோ, அதையும், கம்யூட் செய்யும் போது ஓய்வு பெற்றவருக்கு என்ன வயதோ, அதையும் அடிப் படையாகக் கொண்டுதான் ‘கம்யூடேஷன் தொகை’யும் (lump sum amount) கணக்கிடப்படுகிறது.

வயதுக் கணக்கீடு...

20.10.1962-ல் பிறந்த ஒருவர் 31.10.2022 அன்று ஓய்வு பெறுவார். இவரின் வயது 61 என எடுத்துக் கொள்ளப்படும். அதாவது, ஓய்வுத் தேதிக்கு அடுத்து வரும் பிறந்த நாளில் என்ன வயதோ, அதுதான் கம்யூடேஷன் கணக்குக்கு எடுத்துக்கொள்ளப் படும் வயதாக இருக்கும். உதாரணமாக, 60 வயது நிறைவடைந்து ஓய்வுபெறும் ஒருவர், தனது 45,000 ரூபாய் பென்ஷனில் 15,000 ரூபாயை ‘கம்யூட்’ செய்தால், அவருக்குக் கிடைக்கும் கம்யூடேஷன் தொகை 14,74,920 ரூபாயாக இருக்கும். மற்றொருவர், தன் 45 வயதில் விருப்ப ஓய்வு பெறும் நிலையில், அவர் பெறும் பென்ஷனும் 45,000 ரூபாய்தான். அவரும் 15,000 ரூபாயை ‘கம்யூட்’ செய்தால், அவர் பெறக்கூடிய தொகை 16,14,780 ரூபாயாக இருக்கும்.

தமிழக அரசு ஊழியர்களுக்கான 
பென்ஷன் கம்யூடேஷன்... கவனிக்க வேண்டிய அம்சங்கள்..!

கம்யூடேஷன் பெறும் அட்டவணை...

இந்தந்த வயதில் ஓய்வு பெறு வோர்க்கு ‘இத்தனை வருட’ தொகை கம்யூடேஷன் மொத்த பணமாகத் தரப்படும் என ஓர் அட்டவணை உள்ளது. அதன்படி, 60 முடிந்து 61 வயதான ஓய்வூதிய தாரருக்கு 8.194 ஆண்டுக்கான தொகை கிடைக்கும். 45 முடிந்து 46 வயதானவருக்கு 8.971 வருடத்துக் கான தொகை கிடைக்கும் (காண்க, கணக்கீடு)

15 ஆண்டுகளுக்குள் பணப் பிடித்தம்...

வெவ்வெறு வயதுடைய இருவர் பெறும் தொகை வேறுபட்டு இருந் தாலும், இருவரிடமும் பிடித்தம் செய்யப்படும் தொகை ஒன்றாகவே இருக்கும். அதாவது, இவா்கள் இருவரது மாதாந்தர ஓய்வூதியத்தில் இருந்தும் மாதம் 15,000 ரூபாய் வீதம் 15 ஆண்டுகளுக்குப் பணம் பிடித்தம் செய்யப்படும். கம்யூடேஷன் தொகை பெற்ற தேதியிலிருந்து பிடித்தம் தொடங்கும். மாதாந்தர பென்ஷன் 30,000 ரூபாயாகக் குறைந்துவிடும். 15 வருடம் முடிந்த பிறகு அடிப்படை பென்ஷன் மீண்டும் 45,000 ரூபாயாகிவிடும்.

இறப்பு நேரிட்டால்...

ஓய்வு பெற்று பென்ஷன், பணிக் கொடை முதலானவற்றுடன் பென்ஷன் கம்யூடேஷனும் பெற்ற ஒருவர், உடனடியாகவோ, சிறிது காலம் கழித்தோ இறந்தால், அவரிடம் பிடித்தம் செய்ய வேண்டிய கம்யூடேஷன் தொகை எவரிடமும் பிடித்தம் செய்யப் படாது. குடும்ப ஓய்வூதியத்திலும் பாதிப்பு இருக்காது.

பென்ஷன் மற்றும் பென்ஷன் கம்யூடேஷன் பெறும் விண்ணப்பம் ஓய்வு பெற நான்கு மாதங்களுக்கு முன்பே மாநிலக் கணக்காயருக்கு அனுப்பப்பட்டு, அவரும் ஓய்வு பெற உள்ள ஊழியர்களுக்கு பென்ஷன் கம்யூடேஷன் தொகையை வழங்கும் ஆணையை கருவூலத்துக்கு அனுப்பியிருக்கலாம். ஆனால், ஓய்வு பெற வேண்டிய தேதிக்கு முன்தினமோ, அதற்கு முன்போ கம்யூடேஷன் பெற விரும்புகிறவர் இறந்துபோனால், கம்யூடேஷன் தொகை குடும்பத்தினருக்குக் கிடைக்காது. ஒப்புதல் ஆணை ரத்து செய்யப்பட்டுவிடும்.

தமிழக அரசு ஊழியர்களுக்கான 
பென்ஷன் கம்யூடேஷன்... கவனிக்க வேண்டிய அம்சங்கள்..!

மிக அவசியம் எனில் மட்டுமே வாங்கலாம்...

பென்ஷன் கம்யூடேஷன் என்பது திருப்பிச் செலுத்த வேண்டிய முன்பணம்தான். அதைப் பெற விண்ணப் பிக்கும்முன் அது தேவைதானா என்பதை நன்கு பரிசீலித்து, தவிர்க்க முடியாத தேவை எனில் மட்டுமே பெறுவது சரி. அப்படி வாங்கப்படும் கம்யூடேஷன் தொகை மகளின் திருமணம், மகனுக்குத் தொழில் அல்லது ஓய்வு பெற்றபின் சிறிய அளவில் சுயமாக பிசினஸ் தொடங்கும் தேவை இருந்தால் மட்டும் பெறலாம். ரூ.45,000 மாதாந்தர பென்ஷன் பெற தகுதியுள்ளவருக்கு, தற்போதைய நிலையில் பணிக்கொடை, விடுப்புச் சம்பளம், பொது வருங்கால வைப்பு நிதி ஆகியவற்றின் மூலம் உத்தேசமாக சுமார் ரூ.50 லட்சம் கிடைத்திருக்கலாம். இத்துடன் மாதாந்தர பென்ஷனாக ரூ.60,600 கிடைக்கலாம். இதற்கு மேலும் தேவை இருந்தால் மட்டுமே கம்யூடேஷன் தொகையைப் பெறலாம்.

கம்யூடேஷனாகப் பெற்ற தொகையை வாங்கிய பின் தேவையில்லை என்று அரசுக் கணக்கில் திரும்ப செலுத்த முடியாது. அதே சமயம், வாழ்நாளில் ஒரே ஒரு முறைதான் கம்யூடேஷன் செய்து, மொத்தத் தொகையைப் பெற முடியும். 80 வயது வரை கம்யூடேஷன் செய்யலாம் என்பதால், இந்த விஷயத்தில் நன்கு யோசித்து முடிவெடுப்பது அவசியம்!