Published:Updated:

வளமான ஓய்வுக்காலம்... வரும்முன் தயாராவோம்!

ஓய்வுக்காலம்
பிரீமியம் ஸ்டோரி
ஓய்வுக்காலம்

ஓய்வுக்காலம்

வளமான ஓய்வுக்காலம்... வரும்முன் தயாராவோம்!

ஓய்வுக்காலம்

Published:Updated:
ஓய்வுக்காலம்
பிரீமியம் ஸ்டோரி
ஓய்வுக்காலம்

அடுத்த சில வருடங்களில் வேலையில் இருந்து ஓய்வு பெறப்போகிறவர்கள் மனதில் ஆயிரம் கற்பனைகள்! “ரிட்டயர் ஆனபின், காலையில் மெதுவாக எழுந்து, காபி சாப்பிட்டு, நிதானமாக வாக் போய்விட்டு வந்து, பேப்பர் படித்து, ஆற அமரக் குளித்து, கோயிலுக்குப் போய்...” என்று ஆரம்பித்து நீளும் பட்டியலில் மகன் / மகள் வீடு, உள்நாட்டு சுற்றுலா, வெளிநாட்டு சுற்றுலா என்று எல்லாமும் அடங்கும். நிம்மதியான ஓய்வுக்காலத்தை அனுபவிக்க, இளமையில் இருந்தே பாடுபட்டு சம்பாதித்து, சிறுக சிறுக சேமித்து, முதலீடு செய்து, பாதுகாத்து... என்று எவ்வளவு பிரயத்தனங்கள் எடுக்கிறோம்! ஆனால், இத்தனை பிரயத்தனங்களும் வீணாகாமல் இருக்க ஓய்வுக்காலத்துக்கு சில வருடங்கள் முன்பே தக்க ஏற்பாடுகளைச் செய்வது நல்லது.

சுந்தரி ஜகதீசன்
சுந்தரி ஜகதீசன்

ஐந்து வருடங்கள் முன்பு...

இந்தக் காலகட்டத்தில் சிலருக்கு, “நாம் சேமித்தது போதுமா? ஒருவேளை, சீக்கிரமே வீட்டுக்கு அனுப்பிவிடுவார் களா?” என்பது போன்ற பயங்களும், இன்னும் வேறு சிலருக்கு “இன்னும் எத்தனை நாள்தான் உழைத்துக் கொட்டுவது?” என்பது போன்ற சலிப்புகளும் ஏற்படக்கூடும் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். இதனால் பலரும் அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு ரிஸ்க் நிரம்பிய முதலீடுகள் நோக்கி நகரும் ஆபத்து உண்டு; சிலர், “நாம் செய்திருக்கும் ஏற்பாடுகள் போதும்” என்று நினைத்து, சேமிப்பை முழுமையாகக் கைவிடுவதும் உண்டு.

இது போன்ற தவறுகளைத் தவிர்க்க, ஓய்வுக்காலத்துக்கென நாம் செய்திருக்கும் ஏற்பாடுகள் போதுமானவையா என்று உறுதிப்படுத்திக்கொள்ளுதல் நல்லது. முதலில், இன்று நமக்காகும் செலவுகளைப் பட்டியலிட வேண்டும். ஏனெனில், அதே அளவுப் பணம் நமக்கு ஓய்வுக்காலத்திலும் தேவைப்படும். (ஓய்வுக்காலத்தில் பெரிய செலவு எதுவும் இருக்காது என்கிற எண்ணம் தவறு. மருத்துவம், பணவீக்கம் போன்ற காரணங்களால் இன்று ஆகும் அதே செலவு ஐந்து வருடங்களுக்குப் பிறகும் தொடரும். அதன்பின்பும் பண வீக்கத்தைப் பொறுத்து பணத்துக்கான தேவை அதிகரிக்கவே செய்யும்).

நமக்கு வரக்கூடிய பென்ஷன், வட்டி, டிவிடெண்ட் போன்ற வருமானங்களையும் பட்டியலிட்டு, செலவினங்கள் வருமானத்துக்குள் அடங்குகிறதா என்று பார்க்க வேண்டும். போதாது எனில், ஓய்வுக்காலத்துக்குப் பிறகும் சம்பாதிக்க எந்தவிதத்தில் நம் திறமைகளை மேம்படுத்தலாம் என்று யோசித்து செயல்படலாம்.

வளமான ஓய்வுக்காலம்... வரும்முன் தயாராவோம்!

இரண்டு வருடங்கள் முன்பு...

நீங்கள் வசிக்கும் வீடு குறித்த முடிவுகளைச் செய்ய வேண்டிய நேரம் இது. வீட்டில் ரிப்பேர்கள் செய்வது, பழைய உபகரணங்களை மாற்றுவது போன்ற வேலைகளை மேற்கொள்ளும் நேரம். ஓய்வுக் காலத்தில் உங்கள் வருமானம் நிச்சயம் போதாது என்று தோன்றினால், வாடகைக்காக ஒரு சிறிய போர்ஷனை உருவாக்கலாம். அல்லது தற்போதைய வீட்டை விற்று சிறிய வீடு ஒன்றில் வசிப்பது பற்றித் திட்ட மிடலாம். இதனால் கையில் ஓரளவு பணம் கிடைப்பதுடன், பெரிய வீட்டைப் பராமரிக்கும் சிரமமும் குறையும். ஓய்வுக் காலத்தில் சிலர் சொந்த ஊருக்குச் சென்றுவிடுவதன் மூலமும் செலவைக் குறைக்க முடியும்.

ஓய்வுக்காலத்தில் கடன் இருந்தால், பணிக் காலம் முடிந்து வரும் மொத்தப் பணமும் கடனுக்குச் செல்லக் கூடிய அபாயம் உண்டு. ஆகவே வீட்டுக் கடன் தவிர, மற்ற கடன் சுமை களை இந்த இரண்டு வருடங் களில் முற்றிலுமாக நீக்குவதற்கு வழி தேட வேண்டும். வயது ஏற ஏற, அசையாச் சொத்துகளை நிர்வகிப்பதைவிட அசையும் சொத்துகளை நிர்வகிப்பது எளிது என்பதால், ஏதேனும் பிளாட்டுகளில் (Plots) முதலீடு செய்திருப்பவர்கள் அவற்றை விற்றுக் கடனைத் தீர்க்கலாம்.

கடன் இல்லாதவர்கள் நிலை யான வருமானம் தரக்கூடிய வங்கி மற்றும் போஸ்ட் ஆபீஸ் எஃப்.டிகள், அரசு பாண்டுகள், மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.டபிள்யூ.பி (SWP) முறை போன்றவற்றில் முதலீடு செய்யலாம். லாக்கரில் அதிகம் உபயோகப்படாத நகைகள், வெள்ளிப் பாத்திரங்கள் போன்றவை இருந்தால், அவற்றையும் பணமாக்கி, மூலதனச் சந்தைகளில் முதலீடு செய்தால், லாக்கர் வாடகை, வங்கிக்குச் செல்லும் செலவு போன்றவை குறைவதுடன், உபரி வருமானமும் உருவாகும். ஆனால், இந்தக் காலத்தில் அதிக ரிஸ்க் எடுப்பது ஆபத்து என்பதையும் மறக்கக் கூடாது.

ஒரு வருடம் முன்பு...

கோவிட் போன்ற சோதனைக் காலங்களை சேத மின்றிக் கடக்க எமர்ஜென்சி ஃபண்ட் உதவும். ஆகவே இதுவரை இல்லையெனில், இப்போதாவது ஒரு எமர்ஜென்சி ஃபண்டை உருவாக்குவது முக்கியம். கம்பெனி தரும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் முடியும் முன்பே ஒரு ஃபேமிலி ஃப்ளோட்டர் இன்ஷூரன்ஸ் எடுத்து வைப்பதும் நல்லது.

அஸெட் அலொகேஷன் முறையைக் கடைப்பிடித்து முதலீடு செய்தவர்கள்கூட தங்கள் முதலீடுகளை ஒருமுறை பரிசீலனை செய்து தேவையான மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். கடன், சந்தை என்ற இரண்டிலும் முதலீடு செய்திருப்பவர்கள், மெதுவாக சந்தை முதலீடுகளைக் குறைத்து கடன் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும்.

பங்குச் சந்தையில் அதிக அளவு முதலீடு செய்திருப் பவர்கள், சந்தை ஏற்றத்தில் இருக்கும் சமயத்தில் ஓரளவு முதலீட்டை வெளியே எடுத்துவிடுவது பற்றி யோசிக்கலாம். சந்தையில் இருந்து முற்றாக வெளியேற வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், இன்று 60 வயது என்பது ‘நியூ மிடில் ஏஜ்’ எனப்படுகிறது. இதில் சந்தையைக் கையாளும் பக்குவமும் பொறுமையும், நேரமும் வாய்க்கும் என்பதால், கொஞ்சம் பணத்தைச் சந்தை சார்ந்த முதலீடுகளில் விட்டு வைப்பது வளர்ச்சியை உறுதி செய்யும்.

ஆறு மாதங்கள் முன்பு...

“இது எதையுமே நான் செய்யவில்லை; இதோ ரிடையர்மென்ட் நெருங்கிவிட்டது” என்று கவலைப் படுகிறீர்களா? உங்களுக்காகச் சில யோசனைகள்...

 ஓய்வுக்காலத்தைக் கொஞ்சம் தாமதிக்க முயற்சி செய்யுங்கள். முடியாவிட்டால் பகுதி நேர வேலை களுக்குச் செல்லலாம். சொந்த வீட்டை நல்ல வாடகைக்கு விட்டுவிட்டு சற்று சிறிய வீட்டுக்குக் குடி போகலாம்.

 இதுவரை இருந்த சௌகரியங்களைக் குறைத்துக் கொள்ளத் தயங்கக் கூடாது. காருக்கு பதில் ஸ்கூட்டர், வருடம் நான்கு புத்தாடைகளுக்கு பதில் இரண்டு என மாறத் தயாராக வேண்டும்.

 வெறும் எஃப்.டி-யில் மட்டுமே சேமித்து வந்தவர்கள் சற்று ரிஸ்க் எடுத்து ஓரளவு பணத்தை பாண்டுகளில் முதலீடு செய்யலாம். ஆனால், மொத்தப் பணத்தையும் போடக் கூடாது.

ஓய்வுக்காலம் பற்றி பலரும் அதிகம் கவலைப்படக் காரணம், நிலையான வருமானம் இருக்காது என்பதே. சம்பாதிக்க ஆரம்பித்த உடனேயே முதலீடுகளில் கவனம் செலுத்துவது இந்தக் கவலைக்கு மாற்று மருந்தாகும். நிம்மதியான ஓய்வுக்காலத்துக்கு இளமையில் இருந்தே சேமிக்க வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism