Published:Updated:

உங்களை பணக்காரர் ஆக்கும் ‘ஸ்மார்ட் செலவு’ சூட்சுமங்கள்!

சேமிப்பு
பிரீமியம் ஸ்டோரி
சேமிப்பு

சேமிப்பு

உங்களை பணக்காரர் ஆக்கும் ‘ஸ்மார்ட் செலவு’ சூட்சுமங்கள்!

சேமிப்பு

Published:Updated:
சேமிப்பு
பிரீமியம் ஸ்டோரி
சேமிப்பு

பணத்தைச் சேமிக்கும் விருப்பமும் திறமையும் பெரும் செல்வத்தை (Wealth) உருவாக்குவதற்கான ரகசியமாகும். பணத்தைச் சேமிக்க, சம்பாதிப்பதைவிட குறைவாகச் செலவிட வேண்டும். இதைச் சொல்லும்போது மிக எளிமையாகத் தோன்றும். ஆனால், நடைமுறைப்படுத்துவது மிகவும் கடினமாகும்.

த.ராஜன் 
இணை நிறுவனர், 
https://www.holisticinvestment.in/
த.ராஜன் இணை நிறுவனர், https://www.holisticinvestment.in/

மிகவும் சிக்கனமான குடும்ப பட்ஜெட்டில்கூட பணத்தைச் சேமிக்க உங்களுக்கு ஏராளமான வழிகள் உள்ளன. பணத்தைச் சேமிப்பது அல்லது குறைவாக செலவு செய்வது ஒரு குடும்பத் தின் பண ஆளுமை ஆகும்.

‘ஸ்மார்ட்டாக இருக்க, கவனமாக செலவு செய்யுங்கள்...

‘ஸ்மார்ட்டாக இருக்க, தவறாமல் சேமியுங்கள். மேதையாக இருக்க, அள்ளிக் கொடுங்கள்’ என்கிற சிப் இங்க்ராமின் முதலீட்டு வாசகம் அர்த்தம் உள்ளதாகும். குறைவாகச் செலவு செய்வதும், அதிகமாகச் சேமிப்பதும் வாழ்நாள் முழுவதுக்குமான திறமையாக ஒருவருக்கு இருக்க வேண்டும்.

நிதி இலக்குகளை நிறைவேற்ற சேமிக்கவில்லை எனில், நீங்கள் உங்கள் கவனத்தை இழந்து நுகர்வோர் கலாசாரத்தில் சிக்கி, வீடு முழுக்க பொருள்களை வாங்கிக் குவிக்கும் (Consumerism and Materialism) செயல்களின் பின்னால் சென்று பணத்தை வீணாக்கிக்கொண்டிருப்பீர்கள்.

உங்களை பணக்காரர் ஆக்கும்
‘ஸ்மார்ட் செலவு’ சூட்சுமங்கள்!

4 விஷயங்களை விலக்கி வையுங்கள்...

கீழ்க்கண்ட நான்கு விஷயங்களிலிருந்து விலகி இருந்தால், ஒருவர் செலவைக் குறைத்து சேமிப்பை அதிகரித்து செல்வந்தராக முடியும்.

1. உணர்ச்சி வசப்படுதல்: உங்கள் செலவு முறையில் (Spending pattern) உங்கள் உணர்ச்சிகள் (Emotions) முக்கிய பங்கு வகிக்கின்றன. மகிழ்ச்சி, கேளிக்கை போன்ற பாசிட்டிவ் உணர்ச்சிகள், பொழுதுபோக்கு விஷயங்களில் உங்களை அதிகமாகச் செலவிடத் தூண்டுகிறது. பொறாமை, அவமானம், மன அழுத்தம், மனச்சோர்வு, விரக்தி போன்ற நெகட்டிவ் உணர்ச்சிகள், புகைபிடித்தல், மது அருந்துதல், தேவையில்லாத பொருள்களை வாங்குதல் ஆகியவற்றில் அதிகமாகச் செலவிட உங்களைத் தூண்டுகிறது.

2. பாரம்பர்ய சிந்தனைகள்: நம் பாரம்பர்ய சிந்தனைகள் நம்மை பல நேரங்களில் தேவையில்லாத செலவுகளைச் செய்ய வைத்துவிடுகிறது. உதாரணத்துக்கு, திருமண நாளுக்கு ஆண்டுதோறும் பட்டுப் புடவை, பட்டு வேஷ்டி வாங்க வேண்டும். தீபாவளிக்கு ஊர் மெச்சும் அளவுக்கு பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற சிந்தனைகள்.

3. சமூகத்தின் பாதிப்பு: நாம் வாழும் சமூகம் நம்மை அதிகம் செலவு செய்ய வைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. சக ஊழியர்கள் அனைவரும் தங்கள் சொந்த காரில் அலுவலகத் துக்கு வருவதால், நீங்களும் கார் வாங்க வேண்டிய நிலைக்கு வலுக்கட்டாயமாகத் தள்ளப்படுவீர்கள். உங்கள் பிள்ளையின் பிறந்தநாளில், அவன் /அவளுடன் படிக்கும் அனைவருக்கும் பரிசுகள் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும். திரைப் படங்களை நீங்கள் முதல் நாள் முதல் காட்சியிலேயே பார்த்துக்கொண்டிருக்க வேண்டும்.

நண்பர்கள், சக பணியாளர்கள், அக்கம்பக்கத்தினர், உறவினர்கள் மற்றும் கிளப் உறுப்பினர்களால், இந்தச் செலவு பாதிப்பு ஏற்படுகிறது. சில சமயங்களில் விளம்பரங்கள் மற்றும் தள்ளுபடி விற்பனை போன்ற விளம்பரச் சலுகைகள் உங்களை அதிகமாகச் செலவழிக்க வைக்கும்.

4. தேவையற்ற செலவு பழக்க வழக்கங்கள்: நீங்கள் வளரும்போது உருவாகும் பழக்கவழக்கங்கள் உங்களை மனக்கிளர்ச்சியுடன் செலவிட வைக்கும். திரைப் படங்கள் பார்த்தல், ஹோட்டல் களில் சாப்பிடுதல், புகைபிடித்தல், மது அருந்துதல் போன்றவை தேவையற்ற செலவு பழக்க வழக் கங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு களாகும்.

புத்திசாலித்தனமாகச் செலவழிக்க சில உத்திகள்...

சில விஷயங்களை மேற்கொள் வதன்மூலம் தேவையில்லாத செலவுகளைக் குறைத்து சேமிப்பை அதிகரிக்க முடியும்.

1. உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்துங்கள்: யோகா அல்லது தியானம், டிவியில் நகைச்சுவை நிகழ்ச்சிகளைப் பார்ப்பது, கோயிலுக்கு அல்லது கடற்கரைக் குச் செல்வதன் மூலம் உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத் தலாம். கூடவே செலவுகளையும் கட்டுப்படுத்தலாம். சுய பரிசோதனை செய்து, எப்போதும் மனதை சமநிலையில் வைத்துக்கொண்டால், தேவை யற்ற செலவுகள் தானே விலகி ஓடிவிடும். புத்திசாலித்தனமாக செலவழிக்க சமநிலையான மனம் முக்கியமானதாகும்.

2. உங்களை நீங்களே கேள்வி கேளுங்கள்: விஷேச நாள்களுக் காக எடுக்கும் பட்டாடைகள் எப்போதாவது ஒருமுறைதான் பயன்படுத்தப்போகிறோம். அதன் பிறகு, அது பீரோவில் தூங்கப்போகிறது. தேவை இல்லாமல் அதிக விலை கொடுத்து இது போன்ற பட்டாடைகளை எடுப்பதற்குப் பதில் அதிகம் பயன் படுத்தும் விலை குறைவான பருத்தி ஆடைகளை அது போன்ற தினங்களில் எடுப்பது லாபகரமாக இருக்குமே என்பதை உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்ளுங்கள். அதேபோல், தீபாவளி அன்று எக்கச்சக்கமாகப் பட்டாசு வெடித்து, காசை கரியாக்குவது தேவையா என்கிற கேள்வியையும் உங்களுக்கு நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.

இப்படி நீங்கள் பாரம்பர்ய சிந்தனைகளிலிருந்து வெளியே வந்துவிட்டாலே, அதிக செலவு குறைந்து சேமிப்பு அதிகரித்துவிடும். மேலும், எந்தச் செலவுகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்கிற தெளிவும் பிறக்கும்.

நீங்கள் தனித்தன்மைமிக்கவர்...

உங்கள் நண்பர்கள் அல்லது உங்களைச் சுற்றியுள்ளவர்கள் போல் பொருள்களை வாங்கவோ, செலவழிக்கவோ முடியவில்லை எனில், நீங்கள் வருத்தப்பட வேண்டிய அவசியமில்லை. காரணம், மகிழ்ச்சி என்பது வெளியில் இல்லை. அது உங்கள் மனதில்தான் இருக்கிறது. திடமான மனதுடன் நீங்கள் இருந் தால் தேவையில்லாத செலவுகளில் இருந்து தப்பிக்க முடியும்.

நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொள்ளுங்கள்...

அதிக செலவு செய்யும் தேவை யற்ற பழக்கங்களை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற அவசியம் இல்லை. புத்திசாலித்தன மாக செலவழிக்கும் நல்ல பழக்கங் களை மட்டும் கற்றுக் கொள்ளலாம். பழக்க வழக்கங்கள் என்பவை நம்மைச் சார்ந்திருக்கிறது. நாம்தான் நமக்கு எது நல்லதோ அதை மட்டும் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு பழக்கம் என்பது அறிவு, திறமை மற்றும் ஆசை ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். அறிவு என்பது ‘என்ன செய்ய வேண்டும், அதை ஏன் செய்ய வேண்டும்’ என்பதாகும். அதாவது, நாம் குறைவாகச் செலவு செய்து, அதிகமாகச் சேமிக்க முடிந்தால், பணக்காரராக முடியும். திறமை என்பது ‘குறைவாகச் செலவழிக்க என்னென்ன உத்திகளைப் பயன்படுத்த வேண்டும்’ என்பதாகும்.

நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பழக்கங்கள்...

தொடர்ந்து சேமிக்க வேண்டுமெனில், நிதி சார்ந்த வலைப்பதிவுகள் / புத்தகங்களைப் படிப்பது அவசியம். உங்கள் செலவுகளைக் கண்காணிக்கவும், உங்கள் செலவைக் குறைப்பதற்கான வழிகளைக் கண்டறியவும் இது அவசியம்.

போனஸ் போன்ற கூடுதல் அல்லது எதிர்பாராத வருமானத்தை புத்திசாலித்தனமாகச் செலவிடுங்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உங்களின் ஓய்வுக்காலம் போன்ற இலக்குகளுக்கு முதலீடு செய்து வர வேண்டும்.

அதிக செலவு, உணர்ச்சி வசப்பட்டு செலவு செய்தல், கடனில் பொருள்களை வாங்குதல் ஆகியவற்றைத் தவிர்த்து, ஸ்மார்ட்டாகச் செலவு செய்ய பழகினால், நீங்கள் நிச்சயமாக செல்வந்தராக முடியும் என்பதில் சந்தேகமே இல்லை!

தேவையான செலவுகள் Vs தேவையற்ற செலவுகள்..!

மளிகைப் பொருள்கள், பள்ளிக் கட்டணம், வீட்டு வாடகை கொடுத்தல், வீட்டுக் கடனுக்கான தவணை கட்டுதல் போன்ற கடமைகளை நீங்கள் தவிர்க்க முடியாது. ஆனால், நீங்கள் அடிக்கடி பயன்படுத்தாத கிளப் உறுப்பினர் போன்ற தேவையற்ற செலவுகளை நீங்கள் நிச்சயமாக நிறுத்தலாம். மேலும், வாரம் தோறும் திரையரங்குக்குச் சென்று சினிமா பார்த்தல், ஹோட்டல் சென்று சாப்பிடுவதை நிறுத்தலாம் அல்லது குறைக்கலாம்.

செலவு செய்யாத பணம் சேமிக்கப்படுகிறது. எதிர்கால நிதி இலக்குகளை நிறைவேற்றும் ஆசை உங்களுக்கு உண்மையிலேயே இருந்தால் மட்டுமே மேலே உள்ள உத்திகளைச் செயல்படுத்த முடியும்.

இந்த உத்திகளைச் செயல்படுத்தும் போக்கில் நீங்கள் தேவையில்லாத செலவுகளை தொடர்ந்து செய்யாதவராகவும் விடாமுயற்சியுடன் செயல்படுத்துபவராகவும் இருக்க வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism