Published:Updated:

Buy Now; Pay Later... வரமா, சாபமா?

ஷாப்பிங்
பிரீமியம் ஸ்டோரி
News
ஷாப்பிங்

ஷாப்பிங்

கோவிட் நம் சமூகத்தில் கொண்டு வந்துள்ள மாற்றங்கள் ஏராளம். அதில் முக்கியமானது, ஆன்லைன் ஷாப்பிங். சற்று வசதி வாய்ந்தவர்கள், கையில் பணம் இல்லை என்றாலும் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு போன்றவற்றை உபயோகித்து தேவை யானவற்றை ஆன்லைனில் வாங்குகிறார்கள். வசதி குறைந்தவர்களும் இந்த கார்டுகள் ஏதுமில்லாமலேயே நினைத்த மாத்திரத்தில் விரும்பிய பொருள்களை ஆன்லைனில் வாங்க உதவியாக வந்திருப்பது Buy Now; Pay Later. அதாவது, பொருள்களை முதலில் வாங்கிவிட்டு, பிறகு பணம் தருவது. பயனாளிகள், வியாபாரிகள், இ-காமர்ஸ் தளங்கள், ஃபின்டெக் கம்பெனிகள் என்று அனைவருக்கும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இது நமக்குக் கிடைத்த வரமா அல்லது சாபமா?

சுந்தரி ஜகதீசன்
சுந்தரி ஜகதீசன்

பி.என்.பி.எல் என்றால்...

இது ஒரு குறுகிய காலக் கடன் வகையைச் சேர்ந்தது. இந்த வசதியை உபயோகிக்க விரும்பும் பயனாளர், முதலில் பான், ஆதார் போன்ற மினிமம் கே.ஒய்.சி விவரங்களைக் கொடுத்தால், இந்தத் தளங்கள் அவரின் மாதாந்தர பில்கள், வாகன வசதி, வங்கி விவரங்கள் போன்றவற்றை சோஷியல் மீடியா / ஆன்லைன் டேட்டா மூலம் அறிந்து அவரின் தகுதிக்கேற்ப லிமிட் நிர்ணயம் செய்து தருகின்றன.

தேவையான பொருளை தளத்தில் அவர் தேர்ந்தெடுத்த பின், ‘பே லேட்டர்’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்தால், சில இ.எம்.ஐ ஆப்ஷன்கள் தோன்றுகின்றன. அதில் தனக்கு வசதியான ஒன்றை அவர் க்ளிக்கியதும் அந்த பில்லுக்கான பணம் உடனடியாக வியாபாரிக்கு ஃபின்டெக் கம்பெனியால் வழங்கப்படுகிறது. இவை அனைத்துக்கும் மொத்தமாக எடுத்துக்கொள்ளப்படும் நேரம் 10 முதல் 15 நிமிடங்கள் மட்டுமே. பணம் பெற்ற வியாபாரி குறித்த பொருளை பயனாளருக்கு அனுப்புகிறார். 15 - 45 நாள்கள் வரை கடனாக வழங்கப்படும் இந்தத் தொகையைப் பயனாளர், குறித்த காலத்துக்குள் முழுவதுமாகத் திருப்பிச் செலுத்த வேண்டும்.

ரூ.500 முதல் ரூ.30,000 வரை அவரவர் தகுதிக்கேற்றவாறு கடன் தரப்படும். கடனை ஒழுங்காகத் திருப்பிச் செலுத்து வோருக்கு ரூ.1 லட்சம் வரைகூட லிமிட் நீள்கிறது. குறித்த காலத்துக்குள் திருப்பிச் செலுத்திவிட்டால், அதிகப்படியாக வட்டி, கட்டணம் என்று ஏதும் கிடையாது. மாதம் முழுவதும் ஷாப்பிங் செய்த பின், ஒரே பில்லில் பணத்தை செட்டில் செய்யலாம்.

Buy Now; Pay Later... வரமா, சாபமா?

பயனாளிகளுக்கு என்ன லாபம்?

பி.என்.பி.எல் நடைமுறையைப் பயன்படுத்துபவரில் இளைஞர்களே அதிகம். கிரெடிட் கார்டு தங்கள் பெற்றோருக்கு ஏற்படுத்திய அவதிகளைப் பார்த்த பின் இளைய தலைமுறையின் கவனம் பி.என்.பி.எல்-ஐ நோக்கி திரும்பியுள்ளதாகக் கூறப் பட்டாலும், கிரெடிட் கார்டு கிடைக்காதவர்கள் அல்லது கிரெடிட் கார்டு லிமிட்டைத் தாண்டியவர்கள் பி.என்.பி.எல் வசதியை நாடுகிறார்கள் என்பதே உண்மை.

வங்கிகள் ஒருவருக்குக் கடனோ, கிரெடிட் கார்டோ தருவதற்கு வருமானச் சான்றும், கிரெடிட் ஹிஸ்டரியும் முக்கியம். குறைந்த சம்பளம் பெறுவோர், சுயதொழில் செய்வோர் மற்றும் இதுவரை கடன் வாங்கி இருக்காத இளைஞர்கள் போன்றோருக்கு வருமானச் சான்றிதழ் மற்றும் கிரெடிட் ஹிஸ்டரி இருக்காது என்பதால் கடன் கிடைப்பது சிரமம். அவர்களுக்கு இந்த பி.என்.பி.எல் ஒரு வரப்பிரசாதம். மிகவும் குறைந்த கிரெடிட் ஸ்கோர் இருப்போருக்கும் பி.என்.பி.எல் கிடைக்கும். ஆனால், வட்டி விகிதம் அதிகமாக இருக்கும்.

வியாபாரிகளுக்கு என்ன லாபம்?

வலைதளங்களில் தங்கள் பொருள்களை விற்பனை செய்யும் வியாபார கம்பெனிகள் (Sellers) பொதுவாகப் பயனாளர் களுக்கு வழங்கும் தள்ளுபடியை ஃபின்டெக் கம்பெனிகளுக்குத் தந்துவிடுகின்றன. ஃபின்டெக் கம்பெனி உடனடியாக பில் பணத்தை மொத்தமாக செட்டில் செய்துவிடுவதால், வியாபார கம்பெனிகளுக்குப் பணத்தை வசூலிக்கும் பிரச்னை இல்லை. வியாபாரமும் அதிகரிக்கிறது.

ஃபின்டெக் கம்பெனிகளுக்கு என்ன லாபம்?

வியாபாரிகள் வழங்கும் 1% - 3% தள்ளுபடி ஃபின்டெக் கம்பெனிகளுக்கு உடனடியாகக் கிடைக் கிறது. 1% - 3% என்பது குறைவாகத் தோன்றினாலும் வருடாந்தரக் கணக்கின்படி, 20% லாபம் கிடைக்கிறது. குறித்த காலத்தில் கட்ட இயலாமல் இ.எம்.ஐ ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்தால், மாதவட்டி 2.33%. அதாவது, வருட வட்டி 28%. பிராசஸிங் கட்டணம் ரூ.500 முதல் ரூ.1,200 வரை அல்லது கடன் தொகையில் 2% ஆகும்.

ரூ.5,000 கடன் பெறுவோர் கட்டும் வட்டி பிராசஸிங் கட்டணம் ரூ.651. இது ரூபாய் அளவில் குறைவாகத் தோன்றினாலும், வருட வட்டியைக் கணக்கிட்டால் 44% அளவுக்கு எகிறுகிறது. இவை தவிர, குறித்த காலத்தில் கட்ட இயலாதவருக்கு லேஸிபே போன்ற சில ஃபின்டெக் கம்பெனிகள் விதிக்கும் தண்டம் (Penalty) ஒரு நாளுக்கு ரூ.15. இப்படி ஒவ்வொரு கட்டத் திலும் ஃபின்டெக் கம்பெனிகள் லாபத்தை அள்ளுகின்றன.

வரமா, சாபமா?

இது ஒருவகையில் சாபம்தான். கடன் என்பது எவ்வளவு பெரிய வலை; ஒழுங்காகத் திருப்பிக் கட்டாவிட்டால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை முற்றிலுமாக அறியாத இளைஞர்கள்தான் சிக்கலை எதிர்கொள்கிறார்கள். பி.என்.பி.எல் கடன் ஒழுங்காகத் திருப்பிக் கட்டப்படுகிறதா என்பது கிரெடிட் ஸ்கோர் வழங்கும் கிரெடிட் பீரோக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. ஒழுங்காகக் கடனைத் திருப்பிக் கட்டாத வர்களின் கிரெடிட் ஸ்கோர் குறைவதால், எதிர்காலத்தில் அவர்கள் வாங்கும் கடன் களுக்கு அதிக வட்டி விதிக்கப்படுகிறது; நல்ல வங்கிகளிடம் இருந்து கடன் பெறும் வசதியும் மறுக்கப்படலாம். நிலையான வருமானம் இல்லாதவர்கள் அடிக்கடி சிறு, சிறு கடன் களைப் பெறும்பட்சத்தில், மொத்தமாகத் திருப்பிக் கட்ட இயலாமல் கடனில் மூழ்கவும் வாய்ப்புள்ளது.

அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் வங்கிக் கடன் பெறும் தகுதி இல்லாத, தரம் குறைந்த நபர்களுக்குக் கோடிக்கணக்கான டாலர்கள் பி.என்.பி.எல் கடனாக வாரி இரைக்கப்பட்டுள்ளது என்றும், பிணை ஏதுமற்ற இந்தக் கடன்களை வசூலிப்பது மிகவும் கடினம். இதனால், 2008-ல் உலக பொருளா தாரத்தையே உலுக்கிய சப் ப்ரைம் க்ரைஸிஸ் (Sub Prime Crisis) போன்ற ஒரு சூழ்நிலை உருவாகலாம்.

Buy Now; Pay Later... வரமா, சாபமா?

நாம் என்ன செய்யலாம்?

துறுதுறுக்கும் கைகளை அடக்க முடியாமல் ஆன்லைனில் வாங்கிக் குவிக்கும் பழக்கமும், அதற்காக பி.என்.பி.எல் உபயோகிக்கும் பழக்கமும் உள்ளவர்கள் இந்தக் கடனுக்கான வட்டி (+ மற்ற கட்டணங்கள்) விகிதம் 44% என்பதைக் கவனியுங்கள். குறித்த காலத்துக்குள்ளாகக் கடனைத் திருப்பிக் கட்டும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள். எல்லாவற்றையும் விட சிறந்தது ஆன்லைனில் பொருள் களை வாங்கும்போது, கடன் வாங்காமல், கையில் உள்ள பணத்தின் அளவுக்கு மட்டுமே பொருள்களை வாங்குவது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.