Published:Updated:

கிரிப்டோகரன்சி... என்ன செய்ய வேண்டும் நீங்கள்..?

கிரிப்டோகரன்சி
பிரீமியம் ஸ்டோரி
News
கிரிப்டோகரன்சி

கிரிப்டோகரன்சி

இரா.விஷ்ணு

கிரிப்டோகரன்சி மசோதாவானது நாடாளுமன்றத்தில் நடப்பு குளிர்காலக் கூட்டத் தொடரில் எப்போது வேண்டுமானாலும் தாக்கல் செய்யப்படலாம் என்கிற நிலையில், ‘‘கிரிப்டோகரன்சி வர்த்தகம்: பணத்தை இழக்காமல் இருப்பது எப்படி’’ என்பது குறித்து கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நாணயம் விகடனும் ஜியோட்டஸ் கிரிப்டோகரன்சி எக்ஸ் சேஞ்சும் இணைந்து ஆன்லைன் மூலம் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின.

இந்த நிகழ்ச்சியில் முதலில் பேசிய இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மூத்த ஆலோசகர் ராமச்சந்திரன், கிரிப்டோகரன்சி எப்படிச் செயல்படுகிறது என்பதைப் பற்றி சுருக்கமாகப் பேசினார். அடுத்து பேசிய ஜியோட்டஸ் கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் நிறுவனத்தின் நிறுவனரும் சி.இ.ஓ-வுமான அர்ஜுன் விஜய், கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் பணத்தை இழக்காமல் இருக்கத் தேவையான வழிமுறைகளை எடுத்துச் சொன்னார்.

நீங்கள் ரிஷப் பன்ட்டா, டிராவிட்டா?

“கிரிப்டோகரன்சி வர்த்தகம் என்பது கிரிக்கெட் விளையாட்டு போல. அதில் ரிஷப் பன்ட் மாதிரி அடித்து ஆடக் கூடியவர்களும் இருப்பார்கள். டிராவிட் போல நின்று நிதானமாக விளையாடக் கூடியவர்களும் இருப்பார்கள். ரிஸ்க் எடுத்து அடித்து ஆடி பல வெற்றிகளையும் குவிப்பது பன்டின் ஸ்டைல். ஆனால், சில நேரங்களில் சொற்ப ரன்களில் அவுட் ஆகிவெளியேறவும் செய்வார். டிராவிட் நின்று நிதானமாகத் தான் விளையாடுவார். ஆனால், அதிக ரன் எடுத்து அணியை ஜெயிக்க வைப்பார்.

அது போல, கிரிப் டோவில் முதலீடு செய்யும் குறுகிய கால முதலீட்டாளர்கள் (short term investors) ரிஷப் பன்ட் மாதிரி ரிஸ்க் எடுக்கவும் செய்ய லாம். அல்லது டிராவிட் போல பொறுமையாக நீண்ட காலத்துக்கும் இருக்கலாம். என்ன மாதிரியான ஆட்டத்தை ஆடப்போகிறீர்கள் என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

பங்குச் சந்தை எனில், அதில் பல நிறுவனங்கள் இருக்கும். இந்த நிறுவனங்களுக்கு அடிப்படையில் சொத்து என்று ஒன்று இருக்கும். இதைத்தான் நாம் ‘underlying asset’ என்கிறோம். ஆனால், கிரிப்டோ என்பது தங்கம் போன்றது. ஒரு கிரிப்டோகரன்சி குறிப்பிட்ட அளவு எண்ணிக்கையில் தான் காயின்களை வெளியிடும். இதனால்தான் இதன் மதிப்பு நாளுக்கு நாள் உயர்கிறது.

கிரிப்டோகரன்சி... என்ன செய்ய வேண்டும் நீங்கள்..?

ஏற்ற, இறக்கம் இருக்கும்...

பங்குச் சந்தையில் பங்குகளின் மதிப்பு ஏறி, இறங்குவது போல, கிரிப்டோகரன்சிகளின் மதிப்பு ஏறும், இறங்கும். குறுகிய கால நோக்கில் கிரிப்டோகரன்சியில் பணம் போடுகிறவர்கள், அதன் விலை இறங்கும்போதும் விற்றுவிட்டு வெளியேறிவிடுகிறார்கள். ஆனால், நீண்ட காலத்துக்கு விற்காமல் இருந்தவர்கள், நல்ல லாபம் பார்த்திருக்கிறார்கள்.

உங்களிடம் உள்ள பணத்தில் அஸெட் அலொகேஷன் முறைப்படி, குறிப்பிட்ட அளவு பணத்தை மட்டுமே கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் போட வேண்டும். இந்த மாதிரி அடிப்படை விஷயங்களைப் புரிந்துகொண்டு, வர்த்தகம் செய்தால், கிரிப்டோகரன்சியில் பணத்தை இழக்காமல் இருக்கலாம்’’ என்றவர், அடுத்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

கிரிப்டோகரன்சிக்கு தடை வரப்போகிறது என்கிற செய்தி எல்லா பத்திரிகைகளிலும் வந்திருக்கிறதே...

‘‘கிரிப்டோகரன்சியைத் தடை செய்வதற்காக அல்ல; ஒழுங்கு முறைப்படுத்த நாடாளுமன்றத்தில் இந்தக் கூட்டத் தொடரில் மசோதா தாக்கல் செய்யப்படும் என்கிறார்கள். பங்குச் சந்தையின் செயல்பாடு களைக் கட்டுப்படுத்த செபி இருப்பது போல, கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தை வழிநடத்த விதிமுறைகள் கொண்டுவரப்பட உள்ளன. கிரிப்டோகரன்சியைத் தடை செய்யும் எண்ணம் மத்திய அரசுக்குக் கடந்த காலத்தில் இருந்திருக்கலாம். ஆனால், தற்போது மத்திய அரசின் நிலை பெரிதாக மாறியிருக்கிறது. உலகின் பல்வேறு நாடுகள் இதற்குத் தடை விதிக்காதபோது, நாம் மட்டும் ஏன் தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசாங்கம் யோசிக்கத் தொடங் கியிருக்கிறது. எனவே, இதற்கு தடை வந்துவிடும் என்கிற செய்தியைக் கேட்டு, அவசரப் பட்டு விற்பது சரியான முடிவாக இருக்காது. அப்படி அவசரப் பட்டு விற்றவர்கள், நஷ்டப் படவே செய்திருக்கிறார்கள்.’’

ராமச்சந்திரன், அர்ஜுன் விஜய்
ராமச்சந்திரன், அர்ஜுன் விஜய்

ஆர்.பி.ஐ வெளியிடப்போகும் கிரிப்டோகரன்சி பயன்பாட்டு அடிப்படையில் இருக்குமா, அதன் மதிப்பும் நாளுக்குநாள் உயருமா?

‘‘நிச்சயமாக அது பயன்பாட்டு அடிப்படையிலேயே இருக்கும். அதன் மதிப்பு தினம் தினமும் ஏறி, இறங்குகிற மாதிரி எல்லாம் இருக்காது. தற்போது வங்கி வழியாக யு.பி.ஐ மூலம் பணப் பரிமாற்றம் செய்கிற மாதிரி, ஆர்.பி.ஐ மூலம் கிரிப்டோ கரன்சிகளை நாம் பரிமாற்றம் செய்யும் நிலை வரலாம். என்றாலும், இது பற்றி ஆர்.பி.ஐ தெளிவான எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.’’

இப்போது கிரிப்டோவில் ஏகப்பட்ட காயின்கள் வந்துவிட்டதே, இவற்றில் எந்த காயினைத் தேர்வு செய்வது?

‘‘முன்பு ஒரு இ-மெயில் ஐ.டி வைத்திருப்பது பெரிய விஷயமாக இருந்தது. அதன்பின் ஆப் வைத்திருந்தால், பெரிய விஷயமாகப் பார்த்தார்கள். தற்போது கிரிப்டோ காயின்களை ‘மைனிங்’ செய்வது சர்வசாதாரணமாகி விட்டது. என் நண்பன் சொன் னான், உறவினர்கள் சொன்னார் கள் என்று கொஞ்சம்கூட ஆராயாமல் கிரிப்டோகரன்சியில் நீங்கள் பணம் போடாதீர்கள். அந்த காயின்களை விற்பதால், அவர்களுக்குப் பணம் கிடைக்கும். உங்களுக்குக் கிடைக்காது.

கிரிப்டோகரன்சியில் நீங்கள் பணம் போட வேண்டும் என்று நினைத்தால், இந்தியாவில் உள்ள கிரிப்டோ எக்ஸ்சேஞ்சில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ள காயின் களிலேயே முதலீடு செய்யலாம். அதிலும் உலக அளவில் புகழ் பெற்று, அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ள பிட்காயின், எதிரியம் ஆகியவற்றில் பணம் போடலாம்.’’

குறுகிய காலத்துக்கென வைத்திருக்கும் பணத்தை கிரிப்டோகரன்சியில் போடலாமா?

‘‘கண்டிப்பாகப் போடக் கூடாது. மகன் அல்லது மகளின் திருமணத்துக்கோ, வேறு ஏதாவது ஒரு விஷயத்துக்கோ வைத்திருக்கும் பணத்தை பங்குச் சந்தை மற்றும் கிரிப்டோவில் போடுவதை தவிர்ப்பது அவசியம். ஏனெனில், குறுகிய காலத்தில் கிரிப்டோ கரன்சியின் மதிப்பு இறங்கலாம். அப்படி இறங்கும்போது விற்றால், அதிகம் நஷ்டப்பட வேண்டி யிருக்கும். உதாரணமாக, 2017 ஆரம்பத்தில் ரூ.2 லட்சமாக இருந்த ஒரு பிட்காயினின் மதிப்பு, ரூ.13 லட்சமாக உயர்ந்தது. பிற்பாடு அதன் விலை இறங்கி, மீண்டும் ரூ.13 லட்சத்தை அடைய பல வருடங்கள் ஆனது. இந்த இடைப்பட்ட காலத்தில் விற்றவர்கள் நிச்சயம் நஷ்டப்பட் டிருப்பார்கள். ஆனால், விற்காமல் இருந்தவர்கள், தற்போது ரூ.50 லட்சத்துக்குமேல் போனதைப் பார்த்து சந்தோஷப் பட்டிருப்பார்கள். ஆகவே, குறுகிய கால தேவைக்கு இருக்கும் பணத்தை கிரிப்டோவில் போடுவதைத் தவிர்த்துவிடுங்கள்.’’

பங்குகள் வாங்க டீமேட் அக்கவுன்ட் தேவை. அது போல கிரிப்டோ வாங்க ஏதாவது அக்கவுன்ட் தேவையா?

‘‘கிரிப்டோகரன்சியை வாங்க பான் கார்டு மற்றும் வங்கிக் கணக்கு மட்டுமே போதுமானது.’’

கிரிப்டோகரன்சியை எப்படி வாங்கலாம்?

‘‘கிரிப்டோகரன்சியை வாங்க/விற்க உதவும் எக்ஸ் சேஞ்சுகள் உள்ளன. அவற்றின்மூலம் எளிதாக வாங்கலாம், விற்கலாம்.’’

கிரிப்டோகரன்சியை வாங்க/விற்க எவ்வளவு புரோக்கரேஜ் கமிஷன் தர வேண்டும்?

‘‘எந்த நிறுவனத்தின்மூலம் நீங்கள் கிரிப்டோகரன்சியில் பணம் போடுகிறீர்கள் என்பதைப் பொறுத்து புரோக்கரேஜ் கமிஷன் தொகை மாறும். நீங்கள் எந்த எக்ஸ்சேஞ்ச் மூலம் கிரிப்டோகரன்சி வாங்க நினைக்கிறீர்களோ, அவர்களிடம் கமிஷன் தொகையைக் கேளுங்கள். பிற நிறுவனங்கள் எவ்வளவு என்பதையும் கேட்டு, ஒப்பிட்டு முடிவெடுங்கள்.’’

கிரிப்டோ வர்த்தகத்தில் கிடைக்கும் லாபத்துக்கு எவ்வளவு வரி செலுத்த வேண்டும்?

‘‘கிரிப்டோகரன்சி மூலம் நீங்கள் அடையும் லாபத்துக்கு வரி கட்ட வேண்டும். நீங்கள் எந்த வரி வரம்பில் இருக் கிறீர்களோ, அதைப் பொறுத்து நீங்கள் கட்ட வேண்டிய வரியின் அளவு மாறும்.’’

தற்போது பிட்காயினுக்கு போட்டியாக வந்துள்ள புதுப்புது காயின்களைப் பற்றி...

‘‘தற்போது பல ஆயிரம் காயின்கள் வந்துவிட்டன. இந்த காயின்களில் எத்தனை, காலம் கடந்து நிற்கும் என்று சொல்ல முடியாது. சில காயின்கள் காலம் கடந்து நிற்க லாம்; நிற்காமலும் போகலாம். குறைந்த விலையில் கிடைக்கிறதே என்பதற்காக இந்தப் புதிய காயின்களில் பணத்தைப் போடுவதைவிட, ஆரம்பம் தொடங்கி இன்று வரை இருக்கும், அதிக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிட்காயின் போன்ற காயின்களை வாங்கலாம்’’ என்றார்.

அதிக ரிஸ்க் கொண்ட இதில் பணம் போடும்முன் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களை சொல்வதாக இருந்தது இந்தக் கூட்டம்!