Published:Updated:

கிரிப்டோகரன்சி... மோசடிகளிலிருந்து தப்பிப்பது எப்படி?

கிரிப்டோகரன்சி
பிரீமியம் ஸ்டோரி
கிரிப்டோகரன்சி

கிரிப்டோகரன்சி

கிரிப்டோகரன்சி... மோசடிகளிலிருந்து தப்பிப்பது எப்படி?

கிரிப்டோகரன்சி

Published:Updated:
கிரிப்டோகரன்சி
பிரீமியம் ஸ்டோரி
கிரிப்டோகரன்சி

மித்தேஷ் கோ.கி

கிரிப்டோகரன்சி வர்த்தகம் பல ஆண்டுகளாக நடந்துவந்தாலும், அதுபற்றி மக்களிடம் இன்னும் நிறைய கேள்விகள் இருக்கவே செய்கின்றன. இந்தக் கேள்வி களுக்கு பதில் சொல்வதற்காக நாணயம் விகடனும் ஜியோட்டஸ் கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்சும் இணைந்து ஆன்லைனில் ஒரு நிகழ்ச்சியை நடத்தியது. கிரிப்டோகரன்சி பற்றி பொதுவாக உள்ள சில கேள்விகளுக்கு பதில் சொன்னார் ஜியோட்டஸ் கிரிப்டோ கரன்சி எக்ஸ்சேஞ்சின் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ அர்ஜுன் விஜய். இனி கிரிப்டோ பற்றிய கேள்விகளும் பதில்களும்...

கிரிப்டோகரன்சியின் மதிப்பு இறங்கிக்கொண்டே வருகிறதே, இதற்கு என்ன காரணம்?

‘‘அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என்கிற எதிர்பார்ப்பு ஒரு பக்கம், ரஷ்யா உக்ரைன் மீது படை எடுக்கலாம் என்கிற பயம் இன்னொரு பக்கம் பலவிதமான காரணங்களாலும் உலகெங்கிலும் உள்ள பங்குச் சந்தைகள் சரிந்துள்ளன. இதே போல, கிரிப்டோகரன்சிகளின் மதிப்பும் குறைந்துள்ளன. இந்தக் குழப்பங்கள் எல்லாம் ஒரு முடிவுக்கு வரும்பட்சத்தில் கிரிப்டோகரன்சிகளின் மதிப்பு மீண்டும் உயர்வதற்கு வாய்ப்புள்ளது.’’

கிரிப்டோகரன்சி... மோசடிகளிலிருந்து தப்பிப்பது எப்படி?

ரஷ்ய நாட்டில் கிரிப்டோகரன்சி தடை செய்யப்படும் என்னும் செய்தி கேள்விப்படுகிறோம். இதன் பின்னணி என்ன?

‘‘கிரிப்டோகரன்சி என்பது இந்தியா உட்பட பல நாடுகளில் அரசாங்கத்தால் ஒழுங்குபடுத்தப்படவில்லை. பெரும்பாலான வளர்ந்த நாடுகளில் அதாவது, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான், தென்கொரியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அரசாங்கத்தால் கிரிப்டோ கரன்சி கட்டுப்பாடுகள் கொண்ட மசோதா கிட்டத்தட்ட நிறைவேற்றப்பட்டது. நேபாளம், உகாண்டா போன்ற சிறிய நாடுகள்தான் அதைத் தடை செய்துள்ளன. கிரிப்டோவைத் தடை செய்துள்ள பெரிய நாடு என்றால் அது சீனா மட்டுமே.

ரஷ்யாவில் என்ன நடந்திருக்கிறது எனில், அந்த நாட்டு அரசுக்கு ரஷ்ய தலைமை வங்கி, கிரிப்டோவை உருவாக்கவும், பரிவர்த்தனை செய்யவும் அனுமதிக்க வேண்டாம் எனப் பரிந்துரை செய்துள்ளது. மற்றபடி, வர்த்தகத்துக்குத் தடை விதிக்கவில்லை. ஆனால், ரஷ்யாவில் கிரிப்டோவுக்குத் தடை வரும் என்று நினைத்து, பலரும் அதை விற்று வருகின்றனர். இன்னும் சில நாள்களில் இந்தக் குழப்பம் நீங்கி, தெளிவு பிறக்கும்.’’

கிரிப்டோகரன்சி என்றால் பிட்காயின் மட்டும்தானா, வேறு ஏதாவது இருக்கிறதா?

‘‘கிரிப்டோகரன்சியை யார் வேண்டுமானாலும் உருவாக் கலாம் என்பதால், பல ஆயிரக் கணக்கான காயின்கள் இப்போது இருக்கின்றன. ஆனால், மதிப்புள்ள காயின்களே வரலாற்றில் மிஞ்சி நிற்கும். கிரிப்டோகரன்சியில் பிட்காயின் தவிர, எதிரியம், லைட்காயின் மற்றும் மீம் காயின் என்று பல உள்ளன.

பிட்காயினை எடுத்துக் கொண்டால் உலகிலேயே 2 கோடியே 10 லட்சம் பிட்காயின் தான் இருக்கிறது. எனவேதான் இதன் மதிப்பு அதிகமாக உள்ளது. அதே சமயம், மீம் காயின்களை எடுத்துக்கொண் டால், பல கோடி காயின்கள் உள்ளன. எனவே, அதன் மதிப்பு மிகவும் குறைவு.

கிரிப்டோகரன்சியில் பிட்காயின் மூலமாக மட்டுமே லாபம் பார்க்க முடியும் என்பது கிடையாது. மீம் காயினில்கூட பலர் லாபம் கண்டுள்ளனர். ஆனால், மீம் காயினில் லாபம் பார்ப்பது லாட்டரி சீட்டு போல. இவற்றில் ரிஸ்க் மிகவும் அதிகம். 100 மீம் காயினில் 20 மீம் காயின் லாபம் தரும்; மீதமுள்ள 80 நஷ்டத்தையே தரும்.’’

அர்ஜுன் விஜய்
அர்ஜுன் விஜய்

கிரிப்டோகரன்சியில் முதன் முதலாக எதில் பணம் போடலாம்?

‘‘கிரிப்டோகரன்சியில் தற்போது சிறந்து விளங்குவது பிட்காயின் மற்றும் எதிரியம். குறைந்த ரிஸ்க் கொண்ட முதலீடாக பிட்காயின் முதலீடு கருதப்படுகிறது. பலர் தற்போது மீம் காயின் மீது கவனம் செலுத்தி வருகின்றனர். ஏனென்றால், இதன் விலை மிகவும் குறைவு. மேலும் மீன் காயினின் சப்ளை மிகவும் அதிகம். 100 ரூபாய் இருந்தாலே என்னால் லட்சம் மீம் காயின் வாங்க முடியும் என்பதால், பலரும் அவற்றை வாங்கி வருகின்றனர். ஆனால், இந்த மீம் காயின் முதலீட்டில் ரிஸ்க் மிக மிக அதிகம். கிரிப்டோ கரன்சியில் முதன்முதலாக பணம் போடுகிறவர்கள் 67% பிட்காயினிலும், 33% எதிரியத்திலும் போடலாம்.’’

மியூச்சுவல் ஃபண்டுகளில் செய்கிற மாதிரி கிரிப்டோ கரன்சியில் எஸ்.ஐ.பி முறையில் வாங்கலாமா?

‘‘எஸ்.ஐ.பி முறை என்பது முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட தொகையைக் குறிப்பிட்ட இடைவெளியில் முதலீடு செய்ய அனுமதிக்கிறது. ஒவ்வொரு முறை நீங்கள் பணத்தை முதலீடு செய்யும் போதும், சந்தை விலை நிலவரப்படி கூடுதல் யூனிட்டுகள் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். எனவே, வெவ்வேறு விலைகளில் வாங்கப்படுவதால், முதலீட்டாளர்கள் ரூபாய் - மதிப்பு சராசரி மற்றும் கூட்டு வட்டியால் பயன் அடைவார்கள். இதே முறையை கிரிப்டோகரன்சியிலும் பயன்படுத்தி, பயன் அடையலாம்.’’

கிரிப்டோகரன்சி தொடர்பான கூட்டங்கள் இன்றைக்கு தமிழகத்தின் பல இடங்களில் நடக்கின்றன. இதில் கலந்து கொள்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

‘‘இந்த மீட்டிங்கில் கலந்துகொள்ள வந்திருப்ப வர்களை ஒரு குறிப்பிட்ட காயின்களை வாங்கத் தூண்டுவார்கள். அவர்கள் கூறும் காயினை நாம் வாங்குவதால், அவர்களுக்கு லாபம் ஏற்படுமே தவிர, நமக்கு நஷ்டம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இந்த மீட்டிங்கை நடத்துபவர்கள் யார், அவர்களின் பின்னணி என்ன என்பதைப் பற்றியெல்லாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். கிரிப்டோகரன்சியில் நீங்கள் பணம் போட நினைத்தால், எக்ஸ்சேஞ்சில் டிரேட் ஆகிற கிரிப்டோகரன்சியில் நீங்களே பணத்தைப் போடலாம். யாரோ ஒருவர் சொல்லும் காயினை நீங்கள் வாங்கத் தேவையில்லை.’’

கிரிப்டோகரன்சி மோசடிகள் நடப்பதாகச் செய்திகள் வருகின்றன. தற்போதுகூட ‘மோரிஸ் காயின்’ மோசடி பற்றிப் பார்த்தோம். இவர்களிடமிருந்து எப்படி நம்மை தற்காத்துக் கொள்வது?

‘‘ஒரு காயினில் இரு பக்கங்கள் இருப்பது போல, கிரிப்டோகரன்சியிலும் நல்லதும் கெட்டதும் உண்டு. கிரிப்டோகரன்சி முதலீட்டில் இடைத்தரகர்களை தவிர்த்து நாமே நேரடியாக பிட்காயினை வாங்குவது சிறந்தது. பெரும்பாலான மோசடிகள் இடைத்தரகர்களால்தான் நிகழ்ந் துள்ளன. டாப் 20 காயின்கள் மீது முதலீடு செய்வது நல்லது.

சிறந்த முதலீட்டாளர்களின் முக்கிய பண்பு பொறுமை. எனவே, முதலில் தெளிவாகக் கற்றுக்கொண்டு, ஆராய்ந்து பலமுறை சரிபார்த்து கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்து லாபம் பெறுங்கள்’’ என்று பல்வேறு கேள்விகளுக்குப் பதில் சொல்லி முடித்தார் அர்ஜுன் விஜய்.

இந்த நிகழ்ச்சியை வீடியோ வடிவில் பார்க்க விரும்பும் வாசகர்கள் பின்வரும் லிங்கைச் சொடுக்கிப் பார்க்கலாம்... https://www.facebook.com/NaanayamVikatan/videos/357650689147610

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism