Published:Updated:

பணவீக்கத்தைச் சமாளிக்க கைகொடுக்கும் வழிமுறைகள்!

பணவீக்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
பணவீக்கம்

பணவீக்கம்

நீங்கள் கஷ்டப்பட்டு இதுவரை சேர்த்திருக்கும் செல்வத்தையும், அதைச் சேர்க்க நீங்கள் செய்யும் பிரயத் தனங்களையும் ஒருசேர விழுங்கும் பகாசுரர்கள் யார் என்று பார்த்தால், வருமான வரி (Taxation) மற்றும் பணவீக்கம் (Inflation) தான். இதில் வருமான வரியை நாம் தவிர்க்க முடியாது. அப்படித் தவிர்க்க எண்ணுவது குற்றமும்கூட.

ஆனால், பணவீக்கம் அப்படி அல்ல; நேரடியாகவும் மறைமுக மாகவும் நம் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடும் இதை வெல்வது ஒரு சாதனையே. இது குறித்து நாம் இன்று பேசுவதன் காரணம், தக்காளி, கத்திரிக்காய் விலை உயர்வு மட்டுமல்ல, உலகம் முழுவதுமே பணவீக்கம் தலைதூக்குவதாக அஞ்சப்படு வதும்தான்.

சுந்தரி ஜகதீசன், நிதி ஆலோசகர்
சுந்தரி ஜகதீசன், நிதி ஆலோசகர்

பணவீக்கம் என்றால்..?

பணவீக்கம் என்ற வார்த்தையை அடிக்கடி கேள்விப்படுகிறோம். அப்படி எனில் என்ன என்கிற தெளிவு சாதாரண மக்களிடம் இல்லை. போன வருடம் கிலோ முப்பது ரூபாய்க்கு விற்ற வாழைப்பழம், இன்று ஐம்பது ரூபாய். இப்படி சில பொருள்கள் மழை, வறட்சி போன்ற வானிலை மாற்றங்களால் சற்று விலையேறுவது சகஜம். ஆனால், குறிப்பிட்ட காரணங்கள் இன்றி, நம் வருமான உயர்வைவிட நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் எல்லாப் பொருள்களின் விலையும் மெள்ள மெள்ள உயர்வடைந்தால், அதுதான் பணவீக்கம். உலகச் சந்தைகளையே வீழ்ச்சியடையச் செய்யும் வலிமை பணவீக்கத்துக்கு உண்டு.

பணவீக்கத்தின் தாக்கம்...

அப்படி என்ன செய்துவிடும் இந்தப் பணவீக்கம் என்று கேட்கிறீர்களா? வருடம்தோறும் 5% அளவு பணவீக்கம் இருந்தால், பத்து வருடங்களில் உங்களிடம் இருக்கும் நூறு ரூபாயின் மதிப்பு 55 ரூபாயாகக் குறைந்துவிடும். மதிப்பு குறைந்த பணத்தின் வாங்கும் திறனும் குறைவதால், செலவு செய்யும் தொகை அதிகரிக்கும். இப்படி நமது செலவுத் தொகை அதிகரிக்கும்போது, நம் சேமிப்பு விகிதமும், சேமித்த பணத்தின் வாங்கும் திறனும் குறைகிறது. அதனால்தான் உலகின் மிகச்சிறந்த முதலீட்டாளரான வாரன் பஃபெட் வரிச்சுமையைவிட பணவீக்கம் அபாயகரமானது என்கிறார்.நாம் பெறும் மாதச் சம்பளம் பணவீக்கத்துக்கேற்ப உயர்ந்தால், பணவீக்கம் பற்றிக் கவலைகொள்ளத் தேவையில்லை. ஆனால், சம்பள உயர்வு கேட்டு குரலெழுப்ப இயலாத குறைந்த வருமானதாரர்களையும், உயரவே உயராத பென்ஷனில் வாழ்க்கை நடத்துவோரையும் அதிகம் கொண்டிருக்கும் சமூகம் நம்முடையது. இதை மிகக் கடுமையாகத் தாக்கவல்லது இந்தப் பணவீக்கம்.

பணவீக்கத்தைச் சமாளிக்க
கைகொடுக்கும் வழிமுறைகள்!

பணவீக்கத்தின் மூலகாரணம்...

பணவீக்கத்தின் மூலகாரணம் விலையேற்றம். டீசல், பெட்ரோல் விலை எகிறுவதால், பொருள்களின் போக்கு வரத்துச் செலவு ஏறுகிறது. எண்ணெய் விலை ஏற்றம் அதை அடிப்படைத் தயாரிப்புக்குப் பயன்படுத்தும் சோப், தின்பண்டங்கள், ஐஸ்க்ரீம் போன்ற நுகர்வோர் பொருள் களின் அடக்க விலையை ஏற்றுகிறது. இதைச் சமாளித்து தங்கள் லாபவரம்பைத் தக்கவைத்துக்கொள்ள நிறுவனங்கள் மேற்கொள்ளும் பிரயத்தனங்கள் மீண்டும் தனிமனிதரின் தலையில்தான் சுமையை ஏற்றுகிறது.

நிறுவனங்கள் கையாளும் வழிகள்...

பிரதாப் ஸ்நாக்ஸ் என்ற புகழ் பெற்ற கம்பெனியின் சீஃப் ஆபரேட்டிங் ஆபீஸர் சுபாஷிஷ் பாசு என்பவர், “அடிப்படைப் பொருள்களின் விலை ஏற்றத் தைச் சமாளிப்பது மிகவும் சவாலான விஷயம். முடிந்தளவு எங்கள் லாப வரம்பைக் குறைக் கிறோம்; விற்கும் பொருள்களின் அளவுகளைக் குறைப்பதன் மூலமும் சமாளிக்கிறோம்” என் கிறார். இதை “ஷ்ரிங்க் ஃப்ளேஷன்” (Shrinkflation) என்பார்கள். அதாவது, “மாற்றம் இல்லாத விலை; உள்ளிருக்கும் பொருளின் அளவு மட்டும் குறைப்பு...” என்னும் டெக்னிக். 1960-களில் அமெரிக்காவில் பரவலாகப் பின்பற்றப்பட்டு வந்த இந்த டெக்னிக், இன்று நம் நாட்டிலும் பெரிய அளவில் உலா வருகிறது. பொதுமக்கள், பொருள்களின் விலை மாற்றத் தைக் கவனிக்கும் அளவுக்கு, கிராம் அளவுகள் குறைவதைக் கவனிப்பதில்லை என்ற உளவியல் உண்மை இங்கு சாமர்த்தியமாகப் பயன்படுத்தப் படுகிறது.

இப்படிப் பல நிறுவனங்கள் நேரடி விலையேற்றத்தில் ஈடு படாமல், மறைமுக நடவடிக்கை களை மேற்கொள்கின்றன. தங்கள் லாபத்தைக் குறைக்க விரும்பாத சில எஃப்.எம்.சி.ஜி கம்பெனிகள் விலையேற்றத்தை வாடிக்கையாளருக்கு மாற்று வதை வெளிப்படையாகச் செய்ய விரும்பாமல் ‘ஷ்ரிங்க் ஃப்ளேஷன்’ முறையைக் கையாள்கின்றன.

“ஹிந்துஸ்தான் லீவர், நெஸ்லே போன்ற பெரிய கம்பெனிகள்கூட இதற்கு விதிவிலக் கல்ல; அவையும் வெளிப்படையாக விலையை ஏற்றாமல் பொருள்களின் அளவைக் குறைக்கின்றன” என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஹோட்டல்கள், ரெஸ்டாரன்ட்டுகள் போன்றவை ஆள்குறைப்பின் மூலம் விலை உயர்வைச் சமாளிக் கின்றன. இங்கும் வெளிப்படையாக நாம் பாதிக்கப்படுவதில்லை. ஆனால், சர்வீஸ் தாமதப்படுகிறது அல்லது மெனுவில் இருக்கும் அயிட்டங்கள் கிடைப்பதில்லை. சில ரயில் சர்வீஸ்களில் இலவசக் குடிநீர் வழங்கப்படுவதில்லை. இங்கு நேரடியாக நம் பாக்கெட்டைப் பதம் பார்க்காமல் மறைமுகமாகத் தாக்குகிறது பணவீக்கம்.

பணவீக்கத்தைச் சமாளிக்க சில வழிமுறைகள்...

லீவர், நெஸ்லே போன்ற பெரும் நிறுவனங்களின் லாப வரம்பையே அசைத்துப் பார்க்கக் கிளம்பி யிருக்கும் இந்த பூதத்தை நீங்களும் நாமும் எப்படிச் சமாளிப்பது? அதற்கு சில வழிமுறைகள் உண்டு.

1. கிரெடிட் கார்டு, ஆட்டோபே போன்ற வசதிகள் வந்தபின் மாதாந்தர பில்கள் ஏறுவது நம் கவனத்துக்கு வருவதில்லை. ஆனால், மாதம்தோறும் அவற்றை பழைய பில்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதை வழக்க மாகக் கொள்ள வேண்டும். அப்போதுதான் எங்கு, எவ்வளவு செலவு அதிகரித்துள்ளது, எவற்றையெல்லாம் குறைக்க வேண்டும் என்ற தெளிவு கிடைக்கும்.

2. பணவீக்கம் வரும்போது வட்டி விகித உயர்வும் கூடவே வரும். அதனால் நாம் கடன்களுக்கு கட்டும் வட்டியின் அளவு கூடும். நம் கடன்களில் எவையெவை ஃபிக்ஸட் ரேட், எவையெவை ஃப்ளோட்டிங் ரேட் என்று பார்த்து, ஃப்ளோட்டிங் ரேட் கடன்களை உடனடியாக ஃபிக்ஸட் ரேட் கடனாக மாற்றும் முயற்சிகளை மேற்கொள்ளலாம். அல்லது ஃப்ளோட்டிங் ரேட் கடன்களுக்கு சற்று அதிகமான பணம் செலுத்தி முன்கூட்டியே கடனை முடிக்கவும் முயற்சி செய்யலாம்.

3. பணம் அவசரமாகத் தேவைப்படலாம் என்று கேஷாக அலமாரியிலோ, மெத்தைக்கடியிலோ வைத்திருந்தால், அதன் வாங்கும் திறன் கண்டிப்பாகக் குறையும். குறைந்த அளவு வருமானம் தந்தாலும் வங்கி எஸ்.பி அக்கவுன்ட்டுகள் பாதுகாப்பும் லிக்விடிட்டியும் உள்ளவை என்பதால், குறுகிய காலத்தில் தேவைப்படும் பணத்தை அவற்றில் போட்டு வைக்கலாம்.

4. குறுகிய காலத்தில் தேவைப்படாத பணத்தை, பணவீக்கம் தாண்டிய வருமானம் தரும் பங்குகள், பாண்டுகள், மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்வது பணவீக்கத்தை எதிர் கொள்ளும் கேடயமாக உதவும்.

5. பணவீக்கம் 5 சதவிகிதமாக இருக்கும் நிலையில், நம் வருமான உயர்வு வெறும் 3 சதவிகிதமாக இருந்தால், கண்டிப்பாக அது நம் எதிர்காலத்தைப் பாதிக்கும். அப்படி இருக்கும்பட்சத்தில், நம் வருமானத்தை உயர்த்தும் வழிகளைப் பற்றி நாம் அவசியம் சிந்திக்க வேண்டும்.

நம் பணத்தை விழுங்க அனகோண்டா போன்று தலைநீட்டும் பணவீக்கம் குறித்து நாம் சர்வஜாக்கிரதையுடன் செயல்படாவிட்டால், நாம் ஒருபோதும் பெரும் பணம் சம்பாதிக்க முடியாது!