Published:Updated:

பணத்தை மிச்சப்படுத்த உதவும் பெட்ரோல், டீசல் கிரெடிட் கார்டுகள்!

கிரெடிட் கார்டு
பிரீமியம் ஸ்டோரி
News
கிரெடிட் கார்டு

கிரெடிட் கார்டு

கிரெடிட் கார்டு மூலம் டெலிபோன் பில், எலெக்ட்ரிசிட்டி பில், இன்ஷூரன்ஸ் பிரீமியம், சினிமா, ரயில், விமான டிக்கெட் புக்கிங் வசதி எனப் பல வசதிகள் மற்றும் சலுகைகள் இருப்பதுபோல, பெட்ரோல் டீசல் பயன்பாட்டுக்கென பிரத்யேக கார்டு களும் உள்ளன. பெட்ரோல் / டீசல் விலை 100 ரூபாயைத் தாண்டி இருக்கும் இன்றைய நிலையில், இந்த வகை கார்டுகளை மக்கள் வாங்கிப் பயன்படுத்தலாமா, இந்தக் கார்டுகளைப் பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்று வங்கி அதிகாரியான மணியன் கலியமூர்த்தியிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

பெட்ரோல் கிரெடிட் கார்டு என்றால்...

“இன்றைய நிலையில், குறிப்பிட்ட வர்த்தக நிறுவனத்துடன் இணைந்து வழங்கப்படும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் வேகமாகப் பிரபலமாகி வருகின்றன. பயண நிறுவனங்கள், ‘இ-காமர்ஸ்’ நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுடன் இணைந்து, வங்கிகளால் இந்த வகைக் கார்டுகள் வழங்கப்படுகின்றன. இதேபோல, வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பிக் கொள்வதற்கான தொகையைச் செலுத்த ஆயில் நிறுவனங்களுடன் இணைந்து பெட்ரோல் கார்டுகள் வழங்கப்படுகின்றன.

பெட்ரோல் நிறுவனங்களுடன் இணைந்து வழங்கப்படும் இந்த வகை கார்டுகளைப் பயன்படுத்தி பெட்ரோல், டீசல் போடும்போது அதன்மூலம் பல சலுகைகளை வாடிக்கை யாளர்களால் அனுபவிக்க முடியும். ‘கேஷ்பேக்’ போன்ற சலுகைகளை பெட்ரோல் கார்டுகள் அளித்தாலும், இவற்றின் மூலம் பலன் பெறுவது பல விஷயங்களைப் பொறுத்தே அமையும்.

பணத்தை மிச்சப்படுத்த உதவும்
பெட்ரோல், டீசல் கிரெடிட் கார்டுகள்!

பெட்ரோல், டீசலுக்காக கார்டு...

இந்தியன் ஆயில் சிட்டி பிளாட்டினம், ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் கோரல், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் மெம்பர்சிப் ரிவார்ட்ஸ், ஸ்டாண் டர்டு சார்ட்டர்டு சூப்பர் வேல்யூ டைட்டானியம் எனப் பல்வேறு கார்டுகள் சந்தையில் இருக்கின்றன. ஒவ்வொரு கிரெடிட் கார்டுக்கும் ஆண்டுக் கட்டணம் மாறுபடுகிறது. சில கார்டுகளில் ஆண்டுக் கட்டணம் குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை இருக்கின்றன. சில கார்டுகளில் குறிப்பிட்ட தொகைக்குமேல் செலவு செய்தால், ஆண்டுக் கட்டணம் மாதிரியான சலுகைகளும் உண்டு.

உதாரணமாக, உங்களுடைய வாகனத்தில், நீங்கள் தினமும் அலுவலகத்துக்குச் சென்று வருகிறீர்கள், வேலை நிமித்த மாகவோ, நண்பர்களுடனோ அடிக்கடி பயணம் செய்கிறீர்கள், ஆண்டுக்குப் பலமுறை சொந்த ஊருக்குச் சென்று வருகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இதற்கான பயணத்தின்போது பெட்ரோல், டீசல் போடும்போது, பணத்துக்குப் பதில் பெட்ரோல் கிரெடிட் கார்டுகளைப் பயன் படுத்தினால், வங்கிகள் ரிவார்டு பாயின்டுகள் எனப் பலதரப் பட்ட சலுகைகளை அளிக்கும். வெவ்வேறு கார்டுகள் அளிக்கும் பல்வேறு வகையான சலுகைகளை அலசிப் பார்த்து, உங்களுக்கு எது பொருந்துமோ, எது அதிகம் பயனளிக்குமோ அதைத் தேர்வு செய்துகொள்ள லாம். பெட்ரோல் கார்டுகள் பணம் செலுத்த எளிதான வழி என்பதுடன், ‘கேஷ்பேக்’ சலுகை, தள்ளுபடி மற்றும் ரிவார்டு பாயின்ட் உள்ளிட்ட சலுகைகளை அளிக்கின்றன. பெட்ரோல் விலை அதிகரிக்கும் சூழலில் இது நிச்சயம் பலன் அளிக்கக்கூடியது” என்றவர், கவனிக்க வேண்டிய விஷயங்களைக் குறிப்பிட்டார்.

மணியன் கலியமூர்த்தி
மணியன் கலியமூர்த்தி

கவனிக்க வேண்டிய விஷயங்கள்...

“கார்டைத் தேர்வு செய்யும் முன், அதற்கான ஆண்டுக் கட்டணம், நுழைவுக் கட்டணம் போன்றவற்றைக் கவனிக்க வேண்டும். கார்டு நிறுவனங்கள் கட்டணம் தொடர்பான செலவு வரம்பையும் கொண்டிருக்கலாம். இந்தக் கட்டணங்களைக் கணக்கிட்ட பின், கார்டு பலன் அளிக்கும் வகையில் அமைய வேண்டும்.

கார்டுகள் அளிக்கும் சலுகைகள் பொருந்தக்கூடிய பெட்ரோல் நிலையங்களையும் கருத்தில்கொள்ள வேண்டும். கேஷ்பேக் சலுகை, ரிவாய்டு பாயின்ட்டுகள் எந்தெந்த நிலையங்களுக்கெல்லாம் பொருந்தும் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். கார்டு பயன்பாடு தொடர்பான நிபந்தனைகளையும் கவனமாகப் படிக்க வேண்டும். இந்த அம்சங்களை எல்லாம் பரிசீலித்து, கார்டு உண்மையில் பலன் அளிக்குமா எனத் தீர்மானிக்கலாம்.

ரிவார்டு பாயின்ட்டுகள் சேர்ந்த பிறகு, அதை அந்தந்த கார்டு தொடர்பாக வங்கிகள் ஏற்படுத்தி வைத்திருக்கும் ‘கஸ்டமர் கேருக்கு’த் தொடர்புகொண்டு, அதைப் பணமாக அல்லது கிரெடிட் கார்டு லிமிட்டுகளாக மாற்றிக்கொள்வ திலும் அதிக கவனம் தேவை. ரிவார்டு புள்ளிகளுக்கு ஆசைப்பட்டு கிரெடிட் கார்டுகளின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டாம். ஆன்லைனில் அதிகமாக ஷாப்பிங் செய்ய வேண்டியிருக்கிறது. அடிக்கடி பெட்ரோல் போட வேண்டிய தேவை இருக்கிறது எனில் மட்டுமே இந்த வகை கார்டுகளை வாங்குங்கள்” என்றார் தெளிவாக.

நீங்களும் இந்த ஃப்யூயல் கிரெடிட் கார்டை ஜாக்கிரதையாகப் பயன்படுத்தலாமே..!

71 லிட்டர் பெட்ரோல் இலவசம்: சிட்டி பேங்க் ஃப்யூயல் கார்டு!

சிட்டி பேங்க் வங்கியானது, தன் வாடிக்கையாளர் களுக்காக இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் இணைந்து பெட்ரோல் கிரெடிட் கார்டை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் கிடைக்கும் டர்போ பாயின்ட்கள் மூலம் இந்தியன் ஆயில் பெட்ரோல் நிலையங்களில், தன் வாடிக்கையாளர்கள் ஆண்டுக்கு 71 லிட்டர் பெட்ரோல், டீசலை இலவசமாகப் பெறலாம் என அறிவித்துள்ளது. இந்தியன் ஆயில் சிட்டி பிளாட்டினம், ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் கோரல், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் மெம்பர்சிப் ரிவார்ட்ஸ், ஸ்டாண்டர்டு சார்ட்டர்ட் சூப்பர் வேல்யூ டைட்டானியம் எனப் பல்வேறு கார்டுகள் சந்தையில் இருக்கின்றன!

போனஸ் பாயின்ட்ஸ்!

பொதுவாக, கிரெடிட் கார்டைப் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் வெகுமதி புள்ளிகளைச் சில வங்கிகள் அளிக்கின்றன. உங்கள் கணக்கில் போதிய வெகுமதி புள்ளிகள் சேர்ந்தவுடன், அதைப் பணமாகவோ, ஷாப்பிங் கூப்பன்களாகவோ பெற்றுக்கொள்ளலாம். இந்த கார்டுகளைப் பெட்ரோல் நிலையங்களில் பயன்படுத்தினால், குறைந்தபட்சம் 2.5% - 5% வரை போனஸ் புள்ளிகளாகக் கிடைக்கும். உதாரணமாக, ஆண்டுக்கு ரூ.1,00,000 செலவழித்தால் அதிகபட்சம் ரூ.5,000 கேஷ்பேக்-ஆகக் கிடைக்கும். இதில் ஒவ்வொரு நிறுவனமும் போனஸ் பாயின்ட், ரிவார்டு பாயின்ட் என ஆஃபரை அள்ளித் தெளிக்கின்றன. அடிக்கடி பயணம் செய்பவர் அல்லது பயணம் செய்வதே தொழிலாக இருப்பவர்களுக்கு பெட்ரோல், டீசலை நிரப்ப பணத்துக்கு பதில் கார்டு பயன்படுத்துவது நிச்சயம் லாபம்தான்.

உதாரணமாக, கால் டாக்சி டிரைவர் ஒருவர் ஒரு நாளைக்கு குறைந்தது 20 முதல் 25 லிட்டர் வரை டீசல் நிரப்புகிறார். ஒரு லிட்டர் டீசல் விலை 100 ரூபாய். 25 லிட்டர் எனில் ஒரு நாளைக்கு 2,500 ரூபாய் செலவிடுகிறார். மாதம் 750 லிட்டர் எனில், 75,000 ரூபாய் செலவிட வேண்டியுள்ளது. பெட்ரோல் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி 5% கேஷ்பேக் எனில், மாதம் ரூ.3,750 மிச்சம். இதுவே 365 நாள், ஓர் ஆண்டுக்கு 9,125 லிட்டர் செலவாகும் நிலையில், ரூ.9,12,500-க்கு டீசல் நிரப்ப வேண்டியுள்ளது. இதை இந்த கார்டு மூலம் வாங்கினால், ஆண்டுக்கு சுமார் ரூ.45,000 வரை மிச்சப்படுத்தலாம். மாதக் கணக்கில் பார்க்கும்போது இது ஒரு சிறிய தொகையாக இருந்தாலும், அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு ஆண்டுக்கணக்கில் ஒரு பெரிய தொகை நிச்சயம் மிச்சமாகும்.