நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

யு.பி.ஐ பணப் பரிவர்த்தனை... பணத்தை இழக்காமல் இருக்க பாதுகாப்பு வழிகள்!

யு.பி.ஐ பணப் பரிவர்த்தனை
பிரீமியம் ஸ்டோரி
News
யு.பி.ஐ பணப் பரிவர்த்தனை

எச்சரிக்கை டிப்ஸ்

யுபி.ஐ (Unified Payments Interface - UPI) மூலம் நடக்கும் பணப்பரிவர்த்தனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது பொருளை வாங்க வெளியில் செல்லும்போது, பலரும் பர்ஸை எடுத்துச் செல்லாமல் மொபைலை மட்டும் எடுத்துச் செல்கின்றனர். என்ன பொருள் வாங்கினாலும் கூகுள் பே, போன் பே, பாரத் பே, பே டிஎம் ஆகிய செயலிகள் மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொள்கின்றனர்.

பல வகையிலும் சாதகமாக இருக்கும் இந்த யு.பி.ஐ முறையில் பணப் பரிவர்த்தனையை மேற்கொள்ளும்போது சில அபாயங்களையும் சந்திக்க வேண்டியிருக்கிறது. யு.பி.ஐ பணப் பரிமாற்றம் செய்யும்போது பணத்தை இழக்காமல் இருக்க நாம் எப்படியெல்லாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வங்கியாளர் மணியன் கலியமூர்த்தியிடம் கேட்டோம். அவர் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

யு.பி.ஐ ஒரு வரப்பிரசாதம்...

“இணையவழி பணப் பரிவர்த்தனை என்பது தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவால் நமக்குக் கிடைத்த வரப்பிரசாதம். முன்பெல்லாம் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகத்தான் இருந்தது. இன்றைக்கு பெரும்பான்மையானவர்களுக்கு வங்கிக் கணக்கு இருக்கிறது. அன்றைக்குப் பெரும்பாலும் பர்ஸிலும், வீட்டிலும்தான் பணத்தை வைத்திருப்போம். பிக் பாக்கெட், பூட்டை உடைத்துத் திருடுகிறவர்கள் எப்படிப் பணத்தைத் திருடினார்களோ, அதே போல் இந்த நவீன காலத்திலும் தொழில்நுட்ப வசதிகளுக்கேற்றாற்போல் நூதனமாக திருடும் கூட்டம் வந்துவிட்டது. இவர்களிடமிருந்து நம் பணத்தைத் தற்காத்துக்கொள்ள பொதுமக்களாகிய நாம்தான் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். தவறு நடந்த பிறகு, அதைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது கட்டாயம் என்றாலும் மோசடி நடப்பதற்கு இடமளிக்காமல் இருக்க வேண்டியது நம் கடமை’’ என்றவர், யு.பி.ஐ பணப் பரிவர்த்தனை முறை குறித்தும், அதன் கட்டுப்பாடுகள் குறித்தும் பேசினார்.

யு.பி.ஐ பணப் பரிவர்த்தனை... பணத்தை இழக்காமல் இருக்க பாதுகாப்பு வழிகள்!

ரூ.2 லட்சம் வரை பணம் அனுப்ப...

“UPI என்பது NEFT, RTGS ஆகிய பணப்பரிவர்த்தனை முறைகளுக்கு மாறுபட்டு மிகக் குறைந்த அளவிலான உடனடிப் பரிவர்த்தனையை மேற்கொள்ளும் சாத்தியம் உடையது. ரூ.2 லட்சம் வரைக்கும் NEFT (National Electronic Funds Transfer) மூலம் அனுப்ப இயலும். அதற்கும் அதிகமான தொகை எனில், RTGS (Real Time Gross Settlement) முறை மூலம்தான் பணத்தை அனுப்ப இயலும்.

ரிசர்வ் வங்கி விதித்திருக்கும் விதிமுறை யின்படி, யு.பி.ஐ மூலம் நாளொன்றுக்கு ரூ.2 லட்சம் வரைக்கும்தான் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும். சில யு.பி.ஐ சார்ந்த செயலிகளில் ரூ.1 லட்சம் வரை பணப் பரிவர்த்தனையும், ரூ.1 லட்சம் வரை பொருள்கள் வாங்கிக் கொள்ளலாம் எனவும் உள்ளது. கூகுள் பே மூலம் நாளொன்றுக்கு ரூ.2 லட்சத்தையும் பணமாகவே அனுப்ப முடியும்.

எட்டு முறைதான் பணம் அனுப்ப முடியும்...

யு.பி.ஐ முறையில் இயங்கும் செயலிகள் ஒரு நாளைக்கு 8 முறைதான் பணப்பரிவர்த்தனை செய்ய முடியும். ரூ.1 லட்சத்தை ஒரே ஒரு பரிவர்த்தனையில் அனுப்பிவிடலாம். 10,000 ரூபாயாக அனுப்பினால், அதிகபட்சம் எட்டு முறை என ரூ.80,000 அனுப்ப முடியும். யு.பி.ஐ மூலம் நாளொன்றுக்கு ரூ.2 லட்சம் வரையிலும் அனுப்ப முடியும் என்றாலும் அதை ஒரே பரிவர்த்தனையில் அனுப்பிவிட முடியாது. ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கான அதிகபட்ச தொகையை நிர்ணயம் செய்து வைத்திருக்கிறது. உதாரணமாக, ஹெச்.டி.எஃப்.சி வங்கிக் கணக்கில் ஒரே பரிவர்த்தனையில் ரூ.50,000 வரை அனுப்ப இயலும். இது வங்கிக்கு வங்கி மாறுபடும் என்பதால், ஒவ்வொரு வங்கியிலும் இது குறித்த விதிமுறைகளைத் தெரிந்து கொண்டு செயல்படுவது நல்லது” என்றவர், யு.பி.ஐ முறையில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்கையில் நம் பணத்தை இழக்காமல் எவ்விதம் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்தும் சொன்னார்.

மணியன் கலியமூர்த்தி
மணியன் கலியமூர்த்தி

கவனமாக இருக்க வேண்டிய அம்சங்கள்...

“மொபைல் அப்ளிகேஷன்களில்தான் யு.பி.ஐ மூலம் பணப்பரிவர்த்தனை செய்கிறோம். ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட் லிங்க் போலவே கேஷ்பேக், ஆஃபர் என மெசேஜ் வழியாக வரும் லிங்குகளை அவசரப்பட்டுத் திறந்துவிடக் கூடாது. அதன் மூலம் உங்கள் மொபைலை ஹேக் செய்து பணத்தைத் திருடும் வாய்ப்பு இருக்கிறது.

சிலர், உங்களுக்குப் பணம் அனுப்புவதாகச் சொல்லி, ஒரு லிங்கை அனுப்பி யு.பி.ஐ-யின் பின்நம்பரை இடச்சொல்வார்கள். ஒன்றை எப்போதும் நினைவில்கொள்ளுங்கள் நீங்கள் யாருக்கேனும் பணம் அனுப்ப வேண்டும் எனில் மட்டும்தான் யு.பி.ஐ-யின் பின்நம்பரை பயன்படுத்த வேண்டுமே தவிர, உங்களுக்கு ஒருவர் பணம் அனுப்பும்போது நீங்கள் பின்நம்பர் எதையும் தரத் தேவையில்லை. இந்த அடிப்படை விதி தெரியாமல், லட்சக்கணக்கில் பணத்தை இழந்தவர்கள் பல லட்சம் பேர்.

மூன்றடுக்குப் பாதுகாப்பு...

யு.பி.ஐ மூலம் பணப் பரிவர்த்தனையை மிகவும் பாதுகாப்பாக மேற்கொள்ள மூன்று நிலைகளிலான உறுதிப் படுத்துதல் முறை இருக்கிறது. யு.பி.ஐ பின், மொபைல் ஓ.டி.பி, இ-மெயில் ஓ.டி.பி ஆகிய மூன்று நிலைகளில் உறுதிப் படுத்தப்பட்டபின் பணத்தை அனுப்புவது மிகவும் பாதுகாப் பானது. டீக்கடை, மளிகைக் கடை, உணவகம் போன்ற சில்லறைப் பரிவர்த்தனை களுக்கு மூன்று நிலையிலான உறுதிப்படுத்தலை மேற் கொள்ள முடியாது என நினைப்பவர்கள் யு.பி.ஐ-யின் லிமிட்டை செட் செய்து கொள்ளலாம். இத்தனை ரூபாய் தொகைக்குமேல் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள முடியாது என நிர்ணயிக்கையில் இது போன்ற மோசடிகளில் பெரும்பணத்தை இழக்காமல் தப்பித்துக் கொள்ளலாம்.

இன்டர்நேஷனல் டிரான்ஸக்‌ஷன் என்கிற தேர்வை டிசேபிள் செய்து வைப்பதன் மூலம் வெளிநாடுகளிலிருந்து நம் பணத்தைத் திருடுவதைத் தடுக்க முடியும். புதிய இடங்களில் QR code மூலம் ஸ்கேன் செய்யும்போது அது அவர்களுக் கான QR code-தானா என்று கேட்டுத் தெரிந்துகொண்டபின் பணத்தை அனுப்புவது நல்லது” என்று சொல்லி முடித்தார் மணியன் கலியமூர்த்தி.

யு.பி.ஐ பணப் பரிவர்த்தனை யில் உள்ள பாதகமான அம்சங் களைப் புரிந்துகொண்டு செயல்படுவது நம் கடமை!