தொடர்கள்
பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

கிரெடிட் கார்டு... நீங்கள் செய்யும் 9 தவறுகள்!

கிரெடிட் கார்டு
பிரீமியம் ஸ்டோரி
News
கிரெடிட் கார்டு

கிரெடிட் கார்டு

கிஷோர் சுப்ரமணியன், நிறுவனர், https://www.shreeconsultants.in

கிரெடிட் கார்டு என்பது நுகர்வோரின் வரப்பிரசாதம் எனலாம். அது பல்வேறு சலுகைகள் மற்றும் பலன்களை அளிக்கிறது. ரொக்கப் பணத்துக்கு சிறந்த மாற்று என கிரெடிட் கார்டைக் குறிப்பிடலாம். பெரும் பாலும் கிரெடிட் கார்டுகள் மூலம் பொருள் களை வாங்கும்போது, விலையில் தள்ளுபடி மற்றும் குறிப்பிட்ட சதவிகித தொகை கேஷ் பேக்-ஆக (cashback) கிடைக்கிறது. அதை ஒருவர் எப்படி பயன்படுத்துகிறார் என்பதில் தான் அதன் நன்மைகள் இருக்கின்றன.

கிரெடிட் கார்டை சரியாகப் புரிந்து கொள்ளாமல் பயன்படுத்துவதால்தான் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. கிரெடிட் கார்டு பயன்படுத்தும்போது பலரும் செய்யும் பொது வான தவறுகள் என்ன என்பதைத் தெரிந்து கொண்டால் நாம் அந்தத் தவறுகளைச் செய்யாமல் இருக்கலாம். எனவே, அந்தத் தவறுகளைப் பார்ப்போம்.

கிஷோர் சுப்ரமணியன் 
நிறுவனர், 
https://www.shreeconsultants.in
கிஷோர் சுப்ரமணியன் நிறுவனர், https://www.shreeconsultants.in

1. மறைமுக கட்டணங்களைக் கவனிக்காதது...

அனைத்து கிரெடிட் கார்டு நிறுவனங்களும் ஜீரோ கட்டணம், ஆஃபர்கள், ரிவார்டு பாயின்டுகள் எனப் பல்வேறு கவர்ச்சிகரமான அம்சங்களைச் சொல்லி கவர்ந்திழுக்கின்றன. உண்மையில் கிரெடிட் கார்டுகளில் கட்டணம் இல்லையா என்பதை அலசி ஆராய்ந்து உறுதிப்படுத்திக்கொள்வது அவசியமாகும்.

பெரும்பாலான கிரெடிட் கார்டுகளில் முதல் ஆண்டு மட்டும் ஆண்டுக் கட்டணம் (Annual Fee) இல்லாமல் இருக்கும். அடுத்த ஆண்டுகளில் புதுப்பிக்கும்போது ஆண்டுக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

இந்த கிரெடிட் கார்டை பெட்ரோல் போடவும் பயன்படுத்தலாம் எனக் கவர்ச்சியான அறிவிப்பை நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால், இதற்கு 2.5% கட்டணம் இருப்பதைக் கவனிப்பது அவசியமாகும். கார் வைத்திருப்பவர்கள் ஒரு நாளைக்கு சுமார் 3 - 5 லிட்டர் என்கிற கணக்கில் ஆண்டுக்கு 1,000 - 1,500 லிட்டர் பெட்ரோல் போடும்போது இந்தக் கட்டணமே பெரிய தொகையாக இருக்கும்.

கிரெடிட் கார்டில் பல்வேறு வகையான கட்டணங்கள் இருக் கின்றன. ஆண்டு புதுப்பித்தல் கட்டணம், காலதாமத கட்டணம், கடன் தவணைக்கான செயலாக்கக் கட்டணம், ஏ.டி.எம்மில் பணம் எடுக்கும் கட்டணம் எனப் பல கட்டணங்களை அறிந்துகொண்டு செயல்படுவது நல்லது.

2. வட்டி விகிதங்களை சரியாகக் கவனிக்காதது...

அனைத்து கிரெடிட் கார்டு நிறுவனமும் கடனில் வாங்கும் பொருள்கள் மூலம் பணம் சம்பாதிக்கின்றன. அதாவது, கிரெடிட் கார்டு மூலம் பொருள்கள் வாங்குபவர்கள் பெரும் பாலும் சரியான நேரத்தில் பில்லுக்கான பணத்தைச் செலுத்து வதில்லை. இதனால், அவர்கள் அதிக வட்டியைக் கட்டி வருகிறார்கள். கிரெடிட் கார்டு பெறும் பலரும், சுமார் 45 நாள் களுக்கு வட்டியில்லா கடன் கிடைக்கிறது என்பதற்காக அதை வாங்கிவிடுகிறார்கள். அந்த வட்டியில்லா காலத்தைத் தாண்டி பணம் கட்டும்போது ஆண்டுக்கு சுமார் 35% - 45% வட்டி கட்ட வேண்டும் என்கிற விவரத்தை அறியாதவர்களாக இருக்கிறார்கள்.

உதாரணமாக, கிரெடிட் கார்டு மூலம் பொருளை வாங்கிய ஒருவர், ஒரு மாதம் பணம் கட்ட மறந்துவிட்டார். அவருக்கு தாமதக் கட்டணம் மற்றும் வட்டி 3% எனத் தகவல் வந்தது. அவர் வட்டி 3% என்பதை ஆண்டுக்கு என நினைத்துக் கொண்டார். ஆனால், அது மாத வட்டி ஆகும். அதாவது, ஆண்டு வட்டிக் கணக்கில் அது 36% ஆகும். இதிலிருந்து கிரெடிட் கார்டு பாக்கியை மொத்தமாகக் கட்டிவிடுவது நல்லது என்பதைப் புரிந்திருப்பீர்கள்.

கிரெடிட் கார்டு... நீங்கள் செய்யும் 9 தவறுகள்!

3. குறைந்தபட்ச தொகையை மட்டும் கட்டுவது...

சிலர் எப்போதும் புத்திசாலிதனமாகச் செயல்படுவதாக நினைத்துக்கொண்டு, தாமதக் கட்டணம் இல்லாததால் குறைந்தபட்ச தொகையை (Minimum Amount) மட்டுமே செலுத்தி வருகிறார்கள். ஆனால், குறைந்தபட்ச தொகை போக மீதி உள்ள தொகைக்கு ஆண்டுக்கு சுமார் 35% வட்டி போடப்படுகிறது என்பதை அவர்கள் அறியாமல் இருக்கிறார்கள். தொடர்ந்து குறைந்தபட்சத் தொகையை மட்டும் கட்டி வரும்பட்சத்தில், தொடர்ந்து அதிக வட்டி கட்டி வரும் நிலை காணப்படும். இன்னும் சிலர் கடனுக்கான தவணை போல் கிரெடிட் கார்டு தொகையை மாதம்தோறும் கட்டி வந்தால், கிரெடிட் ஸ்கோர் உயரும் எனத் தவறாக நினைத்து செயல்படுகிறார்கள். இப்படி செய்யும் பட்சத்தில் கிரெடிட் ஸ்கோர் குறையத்தான் செய்யும்.

4. கிரெடிட் கார்டு மூலம் ஏ.டி.எம்மில் பணம்...

கிரெடிட் கார்டு மூலம் ஏ.டி.எம்மில் பணம் எடுக்கும்போது அதற்கு சுமார் 500 ரூபாய் பரிவர்த்தனைக் கட்டணம் (Transaction Charge) செலுத்த வேண்டிவரும். இப்படி எடுக்கும் தொகைக்கு சுமார் 2% கட்டணம் இருக்கும். மேலும், ஏ.டி.எம் மூலம் பணம் எடுத்தால், வட்டி இல்லா சலுகைக் காலம் எதுவும் கிடையாது. பணம் எடுத்த முதல் நாளில் இருந்தே ஆண்டுக்கு கிட்டத்தட்ட 35% வட்டி கட்ட வேண்டி வரும்.

5. கார்டு பாதுகாப்பைக் கவனிக்காமல் இருப்பது...

கிரெடிட் கார்டு எண், சி.வி.வி (CVV - Card Verification Value) எண், பின் (PIN) ஆகியவற்றை செல்போன் மற்றும் இ-மெயிலில் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். இது கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் செய்யும் மிகப்பெரிய தவறுகளில் ஒன்றாகும். செல்போன் மற்றும் கிரெடிட் கார்டை ஒரே நேரத்தில் தவறவிடும் பட்சத்தில் ஆபத்துதான்.

நண்பர்கள், உறவினர்கள், குடும்ப உறுப்பினர்கள், கிரெடிட் கார்டு ஊழியர் களிடம் கிரெடிட் கார்டு விவரங்களைத் தராதீர்கள். கிரெடிட் கார்டை பயன்படுத் தும் முன் அட்டையின் பின் புறத்தில் கையொப்பமிடுங் கள். கையொப்பமிடாத அட்டை தொலைந்துவிட் டால் கடுமையான சிக்கல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. கிரெடிட் கார்டைத் தவறாகப் பயன்படுத்துகிறாரோ என்று கடைக்காரர் சந்தேகப்பட் டால் அவர் கிரெடிட் கார்டு வைத்திருப்பவரை எதற்கா வது கையெழுத்துப் போட வைத்து உறுதி செய்ய வாய்ப்பிருக்கிறது.

மேலும், கிரெடிட் கார்டு மூலம் செய்யப்படும் செலவு கள் குறித்த விவரங்கள் உடனுக்குடன் செல் போனுக்கு எஸ்.எம்.எஸ் மற்றும் மெயிலுக்கு வரும் பாதுகாப்பு வசதியைக் கட்டாயம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த வசதிக்கு சிறிது கட்டணம் வசூலிக்கப்பட்டாலும் அதைக் கட்டுவது நல்லதாக இருக்கும். காரணம், ஒருவரின் கிரெடிட் கார்டு தொலைத்து போய் தவறாகப் பயன்படுத் தப்படும் பட்சத்தில் மேற் கொண்டு பயன்படுத்தாமல் விரைந்து தடுக்க முடியும். சிறிய கட்டணத்துக்காக பெரிய தொகையை இழப்பது புத்திசாலித்தனமல்ல.

6. கடன் வரம்பை நிர்ணயம் செய்யாமல் இருப்பது…

கிரெடிட் கார்டைப் பெற்றுக்கொண்டதும், அதைப் பயன்படுத்தி கடன் மூலம் பொருள்கள் வாங்கு வதற்கான வரம்பை (Limit) மிகக் குறைவாக அல்லது பூஜ்யமாக ‘செட்’ செய்து கொள்ளுங்கள். அந்த கார்டைக் கொண்டு ஷாப்பிங் செய்யப்போகிற நிலையில் / அன்று மட்டும் அதன் வரம்பை அதிகரித்துக்கொள்வதை வழக்கமாகக் கொள்ளுங்கள். இப்படிச் செய்யும் போது கிரெடிட் கார்டு தவறி விட்டாலும் இழப்பு அல்லது அதிக இழப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை.

7. கடன் அளவைத் தாண்டி செலவு செய்தல்...

கிரெடிட் கார்டுக்கு எனத் தரப்பட்டிருக்கும் கடன் அளவுக்குள் (credit level / Credit Limit) செலவு செய்வது நல்லது. அந்த அளவைத் தாண்டி செலவு செய்யும் போது அதிக வட்டி விதிக்கப் பட வாய்ப்பிருக்கிறது.

மேலும், கிரெடிட் வரம்புக் குள் குறைவாகச் செலவிடுவது நல்லது. கிரெடிட் வரம்பில் சுமார் 30% அளவுக்குப் பயன் படுத்துவது நல்லது. உதாரண மாக, ஒருவரின் கிரெடிட் வரம்பு ரூ.1,00,000 லட்சம் எனில், அவரின் மாத கிரெடிட் கார்டு செலவை ரூ.30,000-க்குள் வைத்துக் கொள்வது நல்லது. கிரெடிட் கார்டு வரம்பைத் தாண்டி செலவு செய்தல், அதிகம் பயன்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளால் நம் கிரெடிட் ஸ்கோர் குறையும் அபாயம் இருக்கும். மோசமான கிரெடிட் ஸ்கோர் என்பதன் அர்த்தம் எதிர்காலத்தில் வாங்கப்போகிற கடனுக்கு அதிக வட்டி கட்ட வேண்டும் என்பதாகும்; மேலும், கடன் சுலபமாகக் கிடைக்காது.

8. பில்லிங் ஸ்டேட்மென்டைக் கவனிக்காதது...

கிரெடிட் கார்டு பில்லிங் ஸ்டேட்மென்ட் வந்த வுடன் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் செலவுகளை எல்லாம் நீங்கள்தான் செய்திருக்கிறீர்களா என்பதை சரி பாருங்கள். மேலும், செலவு செய்த தொகையும் சரியாகதான் பில்லில் குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்பதையும் கவனியுங்கள்.

சில நேரங்களில் நீங்கள் வாங்காத பொருள்களுக் கான செலவு தவறாக பில்லில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. தொகையும் அதிகமாகக் குறிப்பிட வாய்ப்புள்ளது. மேலும், அதிக கட்டணம் விதிக்க வாய்ப்புள்ளது. இந்த விஷயங்களில் நுகர்வோர்தான் உஷாராக இருக்க வேண்டும்.

9. கிரெடிட் கார்டு பணம் கட்ட தவறுதல்...

கிரெடிட் கார்டைப் பயன்படுத்துபவர்களில் சிலர் உரிய காலத்தில் பணம் கட்டுவதை ஓரிரு முறை தவறவிடுவது பெரிய விஷயமல்ல என நினைக் கிறார்கள். ஆனால், உண்மையில் நமது இந்தச் செய்கையால், பெரிய கடன் சிக்கலில் முடிய வாய்ப்புண்டு. காரணம், பணம் கட்டத் தவறினால், செலுத்தாத தொகைக்கு வட்டி மற்றும் தாமதக் கட்டணம் விதிக்கப்படும். கிரெடிட் கார்டு கடனுக்கான வட்டி மாதத் துக்கு 3% - 3.5% அதாவது, ஆண்டுக்கு 36% முதல் 42% ஆகும். மேலும், இந்த வட்டி விகிதமானது தினசரி நிலுவைத் தொகை அடிப்படையில் விதிக்கப்படுவதால், வட்டியானது நாள்தோறும் கூடிக்கொண்டே போகும். வட்டிக்கு வட்டி விதிக்கும்போது அது பெரும் கடனாக மாற வாய்ப்புண்டு. எனவே, கூடியவரையில் கிரெடிட் கார்டு தொகையை மொத்தமாக சரியான நேரத்தில் எப்பாடுபட்டாவது கட்டிவிடுவது நல்லதாகும்.

இனி, இந்தத் தவறுகளை எல்லாம் நீங்கள் செய்ய மாட்டீர்கள் இல்லையா?