நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

வளர்ச்சி நிதி நிறுவனம்... மத்திய அரசாங்கம் எப்படி உருவாக்க வேண்டும்? ஆலோசனைகளும் வழிகாட்டல்களும்!

வளர்ச்சி நிதி நிறுவனம்
பிரீமியம் ஸ்டோரி
News
வளர்ச்சி நிதி நிறுவனம்

B A N K I N G

மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்யப் பட்ட மத்திய அரசின் பட்ஜெட்டில், அடிப்படை கட்டு மானப் பணிகளுக்குத் தேவையான கடன் வசதி வழங்குவதற்காக ஒரு புதிய வளர்ச்சி நிதி நிறுவனம் (Development Financial Institution) அமைக்கப்படும்; நிதி நிறுவனத்துக் கான மூலதனத் தேவைக்காக ரூ.20,000 கோடி ஒதுக்கப்படும்; அடுத்த மூன்று ஆண்டுகளில் குறைந்தபட்சம் ரூ.5,00,000 கோடி மதிப்புள்ள கடன் களை வழங்கும் திறனுடன்கூடிய புதிய நிதி நிறுவனத்துக்கான சட்ட வரைவு மசோதா தனியே தாக்கல் செய்யப்படும் என மூன்று முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

வளர்ச்சி நிதி நிறுவனம்
வளர்ச்சி நிதி நிறுவனம்

கடந்த காலத் தவறுகள்...

இந்திய வங்கி வரலாற்றைப் பொறுத்தவரை, நீண்டகால நிதி நிறுவனங்கள் ஏற்கெனவே நமக்கு நன்கு அறிமுகமானவைதான். சுதந்திரம் அடைந்த பிறகு புதிய இந்தியாவைக் கட்டமைப்பதற்காக, தொழில் மற்றும் கட்டுமான நிறுவனங் களுக்கு நீண்டகால கடன் வசதி வழங்கும் திறன் படைத்த வங்கிசாரா நிதி நிறுவனங்களின் தேவை உணரப் பட்டது. பொதுத்துறை சார்பில் ஐ.டி.பி.ஐ (1964), ஐ.எஃப்.சி.ஐ (1948) போன்ற நிறுவனங்களும், தனியார் தரப்பிலிருந்து ஐ.சி.ஐ.சி.ஐ (1955) நிறுவனமும் உருவாக்கப்பட்டன. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவற்றால் வெற்றிகரமாக நீடித்து நிலைபெற முடியவில்லை. ஐ.டி.பி.ஐ அதன் துணை நிறுவனமான ஐ.டி.பி.ஐ வங்கியுடனும், ஐ.சி.ஐ.சி.ஐ அதன் துணை நிறுவனமான ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியுடனும் இணைந்து விட்டன.

2008-ல் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர், இந்திய வணிக வங்கிகள் குறிப்பாக, பொதுத்துறை வங்கிகளின் தரப்பிலிருந்து அடிப்படை கட்டுமானம் மற்றும் தொழில்துறை நிறுவனங்களுக்கு ஏராளமான நீண்ட கால கடன்கள் வழங்கப்பட்டன. ஆனால், அவற்றில் பெரும் பாலானவை வாராக்கடனாக உருவெடுத்ததும் அந்த வாராக் கடன்கள் பல வங்கிகளின் அஸ்தி வாரத்தையே ஆட்டிப் படைத்ததும் நீண்டகால கடன்களின் சிக்கலான தன்மையைப் பிரதிபலிக்கிறது.

இரட்டை இலக்க வளர்ச்சி அடைய...

நூறாண்டு காணாத கொரோனா பேரிடரின் பிடியிலிருந்து இந்தியப் பொருளாதாரம் மெல்ல மெல்ல மீண்டுவரும் தற்போதைய சூழ்நிலையில், 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற மாபெரும் இலக்கை நாம் விரைவில் அடைவதற்கு, இரட்டை இலக்க தொழில் துறை வளர்ச்சி அத்தியாவசமானதாகும். தொழில்துறையின் வளர்ச்சிக்கு மத்திய அரசு ஏராளமான முன்னெடுப்புகளை மேற்கொண்டுவரும் அதேவேளையில் அடிப்படைக் கட்டுமான வளர்ச்சிப் பணிகளில் தனியார் துறையையும் ஈடுபடுத்த வேண்டிய தேவை உள்ளது. அதே சமயத்தில், கட்டுமானத் துறையில் முதலீடு செய்யமுன் வரும் தனியார் துறையினர் வணிக ரீதியாக வெற்றி பெற வேண்டுமென்றால், அவர்களுக்கு குறைந்த வட்டியில் நீண்டகால கடன் வசதி செய்து தர வேண்டிய அவசியமும் எழுந்துள்ளது. வாராக்கடன் பிடியிலிருந்து பொதுத்துறை வங்கிகள் இன்னும் மீண்டெழாத சூழ்நிலையில், புதிய நீண்டகால நிதி நிறுவனத்தின் தேவை முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் தற்போது உணரப்படுகிறது.

அதே சமயம், முந்தைய வங்கிசாரா நிதி நிறுவனங்களைப்போல, புதிய நிறுவனமும் தோல்வியடையாமல் இருக்கவும் இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உறுதுணையாக வெற்றிப் பாதையில் பயணிக்கவும் செய்ய வேண்டியது என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

அரசியல் தலையீடு கூடாது...

நீண்டகால நோக்கில் ஒரு நிறுவனம் நீடித்து நிலைபெற வேண்டுமென்றால், அந்த நிறுவனத்தின் அடிப்படை செயல்பாட்டு நெறிமுறைகள் (Corporate Governance) சிறப்பாக அமைந்திருக்க வேண்டும். குறிப்பாக, நிதித்துறை சார்ந்த நிறுவனங்களுக்கு இந்த விதிமுறை அதிகமாகவே பொருந்தும். கடன் சார்ந்த முடிவுகளில் அரசியல் தலையீடு எவ்வளவு பெரிய ஆபத்துக்கு இட்டுச் சென்றது என்ற விஷயத்தில், வரலாற்றில் இருந்து நாம் கற்க வேண்டிய பாடங்கள் ஏராளம். புதிய வளர்ச்சி நிறுவனம் உருவாக்கப் படும்போதே, அரசியல் தலையீடு களுக்கு வாய்ப்பில்லாத வகையில் நிறுவனக் கட்டமைப்பு வலுவாக அமைவதை உறுதிப்படுத்திட வேண்டும்.

புதிதாக உத்தேசித்துள்ள நிதி நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பைத் தொழில் வல்லுநர்கள் வசம் முழுமையாக ஒப்படைத்துவிட்டு, ஒரு ஆரம்ப கால பங்குதாரராக மட்டுமே மத்திய அரசு செயல்பட வேண்டும். பன்னாட்டு முதலீட்டு நிறுவனங்களின் ஆரம்பகட்ட பங்கு முதலீடு (Venture Capital) ஊக்குவிக்கப்படும்பட்சத்தில், புதிய நிதி நிறுவனத்துக்கு சிறப்பான தொழில்நுட்ப வழிகாட்டுதல் கிடைக்கவும் மற்றும் வலிமையான செயல்பாட்டு வழிமுறைகள் அமையவும் உதவிகரமாக இருக்கும். புதிய நீண்டகால நிதி நிறுவனம் ஓரளவுக்கு சிறப்பாகச் செயல்படத் தொடங்கியவுடன், நிறுவனத்தின் பங்குகளைத் தேசியப் பங்குச் சந்தையில் பட்டியலிடுவது சந்தை கண்காணிப்பை அதிகரிப்பதுடன் நிறுவனத்தின் வெளிப்படைத் தன்மையும் மேம்படுத்தும்.

நிதித் திட்டம்...

அடிப்படைக் கட்டுமானப் பணிகள் மற்றும் தொழில்துறை முதலீடுகளில் ஒட்டுமொத்த பொருளாதாரத்துக்கான பொதுப்பலன்கள் அதிகம் இருந்தாலும், நீண்டகால நிதி முதலீடு தேவைப்படுவதுடன் வணிக ரீதியாக லாபம் கிடைக்கவும் நெடுங்காலம் பிடிக்கிறது. எனவே, கட்டுமானத் திட்டங்களுக்குக் கடன் உதவி வழங்கும் நிதி நிறுவனங்களுக்கும் நீண்டகால நோக்கில் நிதி தேவைப்படுகிறது.

சொத்துகள் மற்றும் கடன் ஆகியவற்றின் பொருந்தாத் தன்மைதான் (Assets Liabilities Mismatch) முந்தைய நீண்டகால நிதி நிறுவனங்களின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. ஐ.எல்.எஃப்.எஸ் நிறுவனத்தின் தோல்வி சமீபத்திய உதாரணம். அதே சமயம், இந்தியாவில் நீண்டகால கடன் பத்திரங்களுக்கான சந்தை இன்னும் முதிர்ச்சி அடையாத நிலை உள்ளது. வணிக வங்கிகள் பொதுமக்களிடமிருந்து பெறும் டெபாசிட் பணம்கூட குறைந்த கால நோக்கமுடையதுதான்.

நீண்டகால கடனின் வட்டி விகிதம் அதிகமாகும்போது, சிறப்பான தொழில் திட்டங்கள் கூட வணிகரீதியாகத் தோல்வி அடைந்துவிடுகின்றன என்பது வருத்தத்துக்குரிய உண்மை. வரலாறு மீண்டுமொருமுறை திரும்புவதைத் தவிர்க்க வேண்டுமென்றால், புதிய நிதி நிறுவனத்துக்கு நீண்டகால கடன் உதவி, குறைந்த வட்டி செலவில் கிடைப்பதை உறுதிப் படுத்த வேண்டும்.

பொதுமக்கள் நேரடியாக நீண்டகால கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதை எளிமைப்படுத்தும் வகையில், கடன் பத்திரச் சந்தையை விரிவுபடுத்த ரிசர்வ் வங்கி முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். புதிய நிறுவனம் வெளியிடும் நீண்டகால கடன் பத்திரங்களில் பொதுமக்கள், இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வதை ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய அரசு வரி சலுகைகளை வழங்க வேண்டும்.

கொள்கை ரீதியான ஆதரவு...

அடிப்படைக் கட்டுமானத் திட்டங் களில் தனியார் துறை ஈடுபட வேண்டு மென்றால், அரசின் முழுமையான கொள்கை நிலைத்தன்மை மற்றும் ஊக்குவிப்பு அவசியமானதாகும். 2008-11 காலகட்டத்தில் உருவான பல தனியார் திட்டங்கள் தோல்வியடைந்ததற்கு அப்போதைய கொள்கைரீதியான முடக்கமே (Policy Paralysis) முக்கிய காரணமாகச் சொல்லப்பட்டது. பெரிய அளவில் இயங்கும் தனியார் திட்டங்கள் தோல்வியடையும்போது, அவற்றுக்கு கடன் வழங்கிய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களும் பாதிக்கப்படுகின்றன. எனவே, நாட்டின் நலனை முன்னிட்டு, நீண்டகால அடிப்படைக் கட்டுமானம் மற்றும் உற்பத்தி ஊக்குவிப்புக்கான கொள்கைகளை வகுக்க வேண்டும். உற்பத்தி மற்றும் தொழில் நிறுவனங் களுக்கான அரசு அனுமதிகள் எளிதாகவும் விரைவாகவும் கிடைப்பதை உறுதிப் படுத்த வேண்டும்.

கொரோனாப் பேரிடரைத் தொடர்ந்து பல மேலை நாடுகள், உலக உற்பத்தித் துறையில் சீனாவின் ஆதிக்கத்தைக் குறைக்க முடிவு செய்துள்ளன. நாம் இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டால், விரைவில் இந்தியா ஒரு பொருளாதார வல்லரசாக உருவெடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதற்கான நமது வெற்றிப் பயணத்தில், பட்ஜெட்டில் உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய நீண்டகால நிதி நிறுவனம் உறுதுணையாக இருக்கும் என்று நம்புவோம்.

பிட்ஸ்

ருகிற 2025-ம் ஆண்டுக்குள் நம் நாட்டில் உள்ள பெரும் பணக்காரர் களின் எண்ணிக்கை 75% உயரும் என நைட்ஃபிராங்க் நிறுவனம் தெரிவித்து உள்ளது. உலக அளவில் இது 41 சதவிகிதமாக இருக்கும் என்பது குறிப்பிடத் தக்கது !