நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

சுமையில்லாமல் சொந்த வீடு... வீட்டுக் கடன் முன்பணம் திரட்டும் சுலப வழிகள்!

வீட்டுக் கடன்
பிரீமியம் ஸ்டோரி
News
வீட்டுக் கடன்

வீட்டுக் கடன்

சொந்த வீடு, நம் அனைவரின் வாழ்நாள் கனவு மற்றும் சமூக அந்தஸ்தாக இருக்கிறது. இதை நம்மில் 90 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோர் வீட்டுக் கடன் மூலம்தான் வாங்கி வருகிறோம். காரணம், வீடு வாங்க நிறைய பணம் வேண்டும். அதை அனைவராலும் மொத்தமாகத் திரட்ட முடியாது என்பதே முக்கியமான காரணம். ஆனால், வீட்டுக் கடனில் வீடு வாங்குவது என்பது மிகப் பெரிய நிதிப் பொறுப்பாகும். வீட்டுக் கடன் வாங்கும்போது, வீடு வாங்குபவர் தன்பங்குக்குக் கட்ட வேண்டிய முன்பணத்தைத் திரட்டுவதில் பலரும் பல தவறுகளைச் செய்கிறார்கள். இந்தத் தவறுகளை நாம் செய்யாமல் இருக்கும் வழிகளை விளக்கமாகப் பார்ப்போம்.

கா.ராமலிங்கம் 
இணை நிறுவனர், 
Holisticinvestment.in
கா.ராமலிங்கம் இணை நிறுவனர், Holisticinvestment.in

20% தொகையை முன்பணமாகக் கட்ட வேண்டும்...

பெரும்பாலானோர் வீட்டின் மதிப்பில் மொத்தத் தொகைக்கும் வீட்டுக் கடன் கிடைக்காது என்பதை கடன் வாங்கும்போதுதான் தெரிந்துகொள்கிறார்கள். வங்கிகள், வீட்டுவசதி நிறுவனங்கள், வங்கிசாரா நிதிச் சேவை நிறுவனங்கள் போன்றவற்றில் வீட்டுக் கடன் வாங்கும்போது வீட்டின் மதிப்பில் பொதுவாக, 20% தொகையை வீடு வாங்குபவர் தன் கையிலிருந்து போட வேண்டும் என்பது ரிசர்வ் வங்கியின் விதிமுறை. இதை முன்பணம் (Down Payment) என்பார்கள்.

வீட்டின் மதிப்பில் 100% தொகையைக் கடனாகத் தரும்பட்சத்தில் வீட்டைக் கடனில் வாங்குபவருக்கு அதன் மீதான பிடிமானம் அதிகம் இருக்காது. வீட்டுக் கடன் தவணையைக் கடன் வாங்கியவர் சரியாகக் கட்டாதபட்சத்தில், வீட்டின் விலை எதிர்காலத்தில் குறைந்திருக்கும் பட்சத்தில், வீட்டை விற்றாலும் வீட்டுக் கடன் தொகைக்கு இணையான தொகை, வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனத்துக்குக் கிடைக்காது. அந்த நிலையில், கடன் கொடுத்த வங்கி அல்லது வீட்டுவசதி நிறுவனம் இழப்புக்கு உள்ளாகும் என்பதால், ரிசர்வ் வங்கி இந்த விதிமுறையை வைத்திருக்கிறது.

கடனுக்கும் வீட்டின் மதிப்புக்குமான (LTV - Loan to Value Ratio) விகிதத்தை ரிசர்வ் வங்கி அவ்வப்போது கடன் சந்தையின் சூழலுக்கேற்ப மாற்றும். இந்த டவுன் பேமென்ட் தொகையானது வங்கி அல்லது வீட்டுவசதி நிறுவனம், வாங்கும் கடன் தொகை, கடனைத் திரும்பச் செலுத்தும் தகுதியைப் பொறுத்து மாறுபடலாம்.

கடன் தொகை ரூ.30 லட்சத்துக்குக்கீழ் இருந்தால், வீட்டின் மதிப்பில் 90% வரைக்கும் கடன் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அதாவது, முன்பணமாகச் செலுத்தும் தொகை வீட்டின் மதிப்பில் 10% ஆகும். வீட்டின் மதிப்பு ரூ.75 லட்சத்துக்குமேல் இருந்தால், வீட்டின் மதிப்பில் 75% வரை கடன் கிடைக்கும். அதாவது, வீடு வாங்குபவர் முன்பணமாகத் தரும் தொகை 25 சதவிகிதமாக இருக்கும்.

இன்னொரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். எல்.டி.வி மதிப்பைக் கணக்கிட சொத்துப் பதிவுக்கான முத்திரைக் கட்டணம், பதிவுக் கட்டணம், இதர ஆவணக் கட்டணங்கள், புரோக்கர் கட்டணம் ஆகியவற்றைச் சேர்க்கக் கூடாது என்பதும் ரிசர்வ் வங்கியின் இன்னொரு முக்கியமான விதிமுறை ஆகும்.

சுமையில்லாமல் சொந்த வீடு... வீட்டுக் கடன் முன்பணம் திரட்டும் சுலப வழிகள்!

பழைய வீடு வாங்கும்போது...

பழைய வீடுகளை வீட்டுக் கடன் மூலம் வாங்கலாம் என்றாலும், வீடு எந்தளவுக்குப் பழையதாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு டவுன் பேமென்ட் சதவிகிதம் / தொகை அதிகரிக்கும். அந்த வகையில், வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்கும்போது வீட்டின் மதிப்பில் சுமார் 20% - 35% வரை முன்பணமாகக் கட்ட வேண்டியிருக்கும். மிகப் பழைய வீடு (15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய வீடு) எனில், 40%-50% கூட வீட்டுக் கடன் வாங்குபவர் தனது சொந்தப் பணத்தை முன்பணமாகத் தர வேண்டியிருக்கும். அதாவது, வீட்டின் மதிப்பு ரூ.50 லட்சம் எனில், அதற்கான 25% என்றால், ரூ.12.50 லட்சத்தை முன்பணமாகத் தர வேண்டியிருக்கும்.

வீடு வாங்கும்போது எவ்வளவுக்கு எவ்வளவு சொந்தப் பணத்தைக் கட்டுகிறீர்களோ, அந்த அளவுக்கு கடனுக்கான மாதத் தவணை (EMI) குறைவாக இருக்கும். எனவே, எப்போதும் அதிக டவுன் பேமென்ட் குறைவாக இருக்கிற மாதிரி பார்த்துக்கொள்ளுங்கள். இதனால், வீட்டுக் கடனை விரைவாக அடைக்க வாய்ப்புண்டு.

வீட்டுக் கடன் தொகை அதிகமாக இருக்கும்பட்சத்தில், பரிசீலனைக் கட்டணம் (கடன் தொகையில் சுமார் 1%) அதிகரிக்கும். மேலும், வீட்டுக் கடனுக்கான வட்டியும் அதிகரிக்கும். உதாரணத்துக்கு, ஒருவர் ரூ.30 லட்சத்துக்குள் வீட்டுக் கடன் வாங்கினால், கடனுக்கான மாறுபடும் வட்டி விகிதம் (Floating Rate) சுமார் 7% எனில், ரூ.30 லட்சத்தை விட கடன் தொகை அதிகமாக இருந்தால், கடனுக்கான வட்டி விகிதம் 7.5% - 8 சதவிகிதமாக அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

இன்ஷூரன்ஸ் எடுப்பது அவசியம்...

இப்போதெல்லாம் வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு வீட்டுக் கடன் காப்பீட்டை எடுக்க வங்கிகள், வீட்டுவசதி நிறுவனங்கள் வலியுறுத்து கின்றன. இது நல்ல விஷயமும் கூட. ஆண்டுக்கு சில ஆயிரம் ரூபாயை இன்ஷூரன்ஸ் பிரீமியமாகக் கட்டுவதன்மூலம் வீடு வாங்கிய குடும்பத் தலைவர்/ தலைவிக்கு ஏதாவது அசம்பா விதம் நடக்கும்போது, இந்தக் கடன் தொகை குடும்ப உறுப்பினர்களுக்கு சுமையாக மாறாது. காப்பீட்டுத் தொகை மூலம் வீட்டுக் கடன் அடைக்கப் பட்டு, வாரிசுகளுக்கு வீடு வழங்கப்படும்.

வீட்டுக் கடன் தொகை அதிகமாக இருக்கும்பட்சத்தில் காப்பீடு பிரீமியம் அதிகமாக இருக்கும். பல நேரங்களில் காப்பீட்டு பிரீமியம் கடனைக் கட்டும் மொத்த காலத்துக்கும் மொத்தமாகக் கட்டப்பட்டு, வீட்டுக் கடன் தொகையுடன் சேர்க்கப்பட்டுவிடும். அந்த வகையிலும், வீட்டுக் கடன் தவணையும் அதிகரிக்கும். எனவே, கடன் தொகை குறைவாக இருப்பது நல்லது.

வீட்டுக் கடன் வாங்கும் போது கையிலிருந்து போடும் தொகை அதிகமாக இருக்கும் பட்சத்தில் குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. கிரெடிட் ஸ்கோர் மிகவும் குறைவாக இருப்பவர் களுக்கு இப்பொதெல்லாம் வங்கிகள், வீட்டு வசதி நிறுவனங்கள் அதிக வட்டி விதிக்கின்றன. அது போன்ற வர்கள் அதிக பணத்தை முன் பணமாகக் கட்டும்போது கடனுக்கான வட்டியை அதிகரிக் காமல் பார்த்துக்கொள்ள முடியும்.

என்ன செய்யக் கூடாது?

இந்த டவுன் பேமென்ட் தொகையைத் திரட்ட பலரும் தனிநபர் கடன், நகை அடமான கடன் வாங்குகிறார்கள். இப்படி கடன் வாங்கிய டவுன் பேமென்ட் கடன் ஒருவருக்கு நிதிச் சிக்கலை உருவாக்கும். காரணம், வீட்டுக் கடன் தவணை, டவுன் பேமென்ட் கடன் தவணை இரண்டையும் ஒருவர் ஒரே நேரத்தில் கட்டுவது சிரமாக இருக்கும்.

வீட்டுக் கடனுக்கான முன்பணத்தை தனிநபர் கடன் வாங்கிக் கட்டும்போது இரு சிக்கல்களைச் சந்திக்க வேண்டும். ஒன்று, கடனுக்கான வட்டி மிக அதிகம் (16% - 22%). இரண்டாவது விஷயம், கடனை 2, 3, 5 ஆண்டு களில் விரைந்து அடைக்க வேண்டியிருக்கும் என்பதால், கடனுக்கான இ.எம்.ஐ. மிக அதிகமாக இருக்கும்.

பலரும் அவசரத் தேவைக்கு என வைத்திருக்கும் எமர்ஜென்சி ஃபண்டை வீட்டுக் கடன் முன் பணமாகப் பயன்படுத்துகிறார்கள். இது மகா தவறாகும். ஏதாவது திடீர்ச் செலவு வந்தால், நிலைமையைச் சமாளிப்பது கஷ்டமாக இருக்கும். அப்படியே வேறு வழியில்லாமல் பயன்படுத்தி னாலும் விரைந்து எமர்ஜென்சி ஃபண்டை உருவாக்கிக்கொள்வது அவசியமாகும். சிலர் கிரெடிட் கார்டில் பணம் எடுத்து, முன் பணமாகக் கட்டுகிறார்கள். இதைத் தவிர்ப்பது நல்லது. காரணம், பணமாக எடுக்கும்போது கிரெடிட் கார்டில் வட்டி இல்லா சலுகைக் காலம் கிடையாது. கிரெடிட் கார்டு மூலம் எப்போது பணம் எடுக்கிறோமோ, அப்போதே அதற்கான வட்டி போடத் தொடங்கிவிடுவார்கள். மேலும், பணம் எடுக்கத் தனிக் கட்டணம் இருக்கிறது. வட்டியும் ஆண்டுக்கு சுமார் 40% வரை ஆகும்.

பி.எஃப் பணத்தை முன்பணமாகக் கட்டலாமா?

பலரும் ஓய்வுக்கால சேமிப்பான பி.எஃப் பணத்தை வீட்டுக் கடன் டவுன் பேமென்ட்டுக்குப் பயன்படுத்து கிறார்கள். இதுவும் தவறுதான். அப்படியே எடுக்கும்பட்சத்தில் அடுத்துவரும் ஆண்டுகளில் விருப்ப பி.எஃப் திட்டத்தின் மூலம் எடுக்கப்பட்ட பணம் பி.எஃப் கணக்கில் சேரும் அளவுக்குக் கூடுதல் தொகையைச் சேர்ப்பது அவசியம். அப்போதுதான் ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக இருக்க முடியும். இதே போல், பிள்ளைகளின் உயர்கல்வி செலவுக்கென சேர்த்திருக்கும் தொகையை வீட்டுக் கடன் முன்பணமாகப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.

அதிக பிரீமியம் கட்டிவரும் அதே நேரத்தில் குறைவான கவரேஜ் கொண்ட எண்டோவ்மென்ட் காப்பீடு பாலிசி களை சரண்டர் செய்து, முன்பணம் திரட்டும் பழக்கமும் இருக்கிறது. இதை நிதித் திட்டமிடல் முறையில் தவறு என்று சொல்ல முடியாது. அதேநேரத்தில், இப்படி பாலிசியை சரண்டர் செய்யும் முன் குறைந்த பிரீமியத்தில் அதிக தொகைக்கு கவரேஜ் அளிக்கும் டேர்ம் பிளான் எடுத்துக்கொள்வது அவசியம். இடையில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், குடும்பத்துக்குக் காப்பீடு மூலமாக இழப்பீடு கிடைக்காமல் போவதைத் தவிர்க்கத்தான் இந்த ஏற்பாடாகும்.

சுமையில்லாமல் சொந்த வீடு... வீட்டுக் கடன் முன்பணம் திரட்டும் சுலப வழிகள்!

என்ன செய்ய வேண்டும்?

பணிபுரியும் அலுவலகத்தில், நண்பர்கள், உறவினர்களிடம் வட்டி இல்லாத கடன் அல்லது குறைந்த வட்டியிலான கடன் கிடைத்தால், அதை வீட்டுக் கடன் முன்பணத்துக்கு பயன்படுத்திக்கொள்வது லாபகரமாகவும் வசதியாகவும் இருக்கும்.

தற்போதைய நிலையில், வீட்டுக் கடனுக்கான வட்டி மிகவும் குறைந்து, 6.6 சதவிகிதமாக உள்ளது. மேலும், பல இடங்களில் வீடுகளின் விலை குறைந்து, வாங்கக்கூடிய நிலையில் கிடைக்கிறது. கொரோனாவுக்குப் பிறகு, சொந்த வீடு/அடுக்குமாடிக் குடியிருப்புக்கான தேவை உருவாகி இருக்கிறது. இந்த நிலையில், வீடு வாங்கும் முடிவை திடீரென எடுத்தீர்கள் எனில், டவுன் பேமென்ட்டுக்கு ஏற்கெனவே இருக்கும் சேமிப்பு மற்றும் முதலீடுகளைப் பயன்படுத்தலாம்.

நிறுவனப் பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் இருக்கும் பணத்தை முன்பணத் துக்குப் பயன்படுத்திக் கொள்ளும்பட்சத்தில் வீட்டுக் கடன் தவணையை மட்டுமே கட்ட வேண்டிவரும். தேவைப் பட்டால் வீட்டில் / லாக்கரில் உள்ள தங்க நகைகளை அடமானம் வைத்து வட்டிக்குப் பணம் பெறுவதற்கு பதில் விற்று பணமாக்கி, அதை வீட்டுக் கடன் முன்பணத்துக்குப் பயன்படுத்தலாம். பிற்பாடு வருமானம் அதிகரிக்கும்போதும், கடன் அளவு குறையும்போதும் தங்க நகைகளை வாங்கிக் கொள்ளலாம்.

முதலீட்டின் மூலம் முன்பணம் திரட்டுதல்...

டவுன் பேமென்ட்டுக்கான தொகையை மூன்று ஆண்டுகளுக் குள் சேர்க்க நினைத்தால், வங்கி ஆர்.டி அல்லது கடன் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து தேவையான தொகையைச் சேர்க்கலாம். ஐந்து ஆண்டு களுக்குப் பிறகு, வீட்டுக் கடனுக் கான முன்பணம் தேவை எனில், ஹைபிரிட் ஃபண்டுகள், ஈக்விட்டி ஃபண்டுகளில் (ஃபிளெக்ஸிகேப் ஃபண்டுகள், லார்ஜ்கேப் ஃபண்டுகள், மல்ட்டி கேப் ஃபண்டுகள், பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டுகள்) முதலீடு செய்து வரலாம்.

வீட்டுக் கடன் முன்பணம் விஷயத்தில் இனி நீங்கள் உஷாராக இருப்பீர்கள்தானே?

வீட்டுக் கடன் முன்பணத்துக்கு பணம் சேர்க்கும்போது..!

வீட்டுக் கடனுக்கான முன்பணத்தை ஏற்பாடு செய்பவர்கள், கட்டுமானப் பொருள்கள், கட்டுமானக் கூலி ஆகியவற்றின் பணவீக்க விகித உயர்வு, முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்துக்கான தொகை ஆகியவற்றையும் கணக்கிட்டு அதற்கேற்ப அதிக தொகையைச் சேர்க்க வேண்டும். வீட்டுக் கடன் தவணை என்பது ஒருவர் நிகரமாக வீட்டுக்கு எடுத்துச் செல்லும் சம்பளத்தில் 40 சதவிகிதத்துக்கு அதிகமாக இருக்கக் கூடாது. அதற்கேற்ப, முன் பணத்தை அதிகமாக ஏற்பாடு செய்துகொள்வது நல்லது. இல்லையெனில், அதிக இ.எம்.ஐ கட்டும் நிலை ஏற்படும். இதனால், குடும்பச் செலவைச் சமாளிப்பது கடினமாக இருக்கும். சொந்த வீட்டில் சோகமாக இருப்பது நல்லதல்ல. இதுபோன்ற நேரத்தில், வீடு வாங்கும் திட்டத்தை சில ஆண்டுகளுக்குத் தள்ளி வைப்பதில் தவறில்லை.