Published:Updated:

நீங்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவரா..? உங்களுக்கான 5 தங்க விதிமுறைகள்..!

கிரெடிட் கார்டு
பிரீமியம் ஸ்டோரி
கிரெடிட் கார்டு

கிரெடிட் கார்டு

நீங்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவரா..? உங்களுக்கான 5 தங்க விதிமுறைகள்..!

கிரெடிட் கார்டு

Published:Updated:
கிரெடிட் கார்டு
பிரீமியம் ஸ்டோரி
கிரெடிட் கார்டு

கடன் அட்டை என்கிற கிரெடிட் கார்டு பற்றி இந்தியாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவு சில அதிர்ச்சியான மற்றும் ஆச்சர்யமான தகவல்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறது.

அதாவது, ஆண்டுக்கு ரூ.3 லட்சம் (மாதம் ரூ.25,000) சம்பாதிக்கும் மற்றும் சம்பளம் வாங்கும் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் சராசரியாக மூன்று முதல் நான்கு கிரெடிட் கார்டுகள் வைத்திருப்பது தெரியவந்துள்ளது.

த.ராஜன் 
நிதி ஆலோசகர், 
Holisticinvestment.in
த.ராஜன் நிதி ஆலோசகர், Holisticinvestment.in

இதுவே 36 வயது மற்றும் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் இடையே மூன்று கார்டுகளும் 41 வயது மற்றும் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் இடையே ஒன்று முதல் இரண்டு கிரெடிட் கார்டுகளும் இருக்கின்றன. இதுவே 51 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் ஒரு கிரெடிட் கார்டு இருக்கிறது.

அதிகம் கடன் வாங்கும் இளைஞர்கள்...

இதிலிருந்து என்ன தெரிகிறது? கிரெடிட் கார்டு வைத்திருக்கும் இளைஞர்கள் அதிகம் கடன் வாங்குபவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் இந்தக் கடன்களுக்கு ஆண்டுக்கு சராசரியாக 25 - 45% வட்டியைக் கட்டி வருகிறார்கள். இவர்கள் தங்கள் நிதிப் பொறுப்பை உணர்ந்து செயல்படுகிறார்கள் என்று சொல்ல முடியுமா? இத்தனை கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி அதிக வட்டி கட்டி வருபவர்களை நிதி ரீதியாகப் புத்திசாலிகளாக மதிப்பிட முடியுமா?

வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் சுமார் 7.5%, கார் கடன்கள் 9.5%, நுகர்வோர் கடன்கள் 11.5% மற்றும் தனிநபர் கடன் 14 - 16% என வட்டி இருக்கிறது. கிரெடிட் கார்டுகளுக்கு மட்டும் ஏன் 25% வட்டி அல்லது அதற்குமேல் வட்டி விகிதம் விதிக்கிறார்கள். இது முட்டாள்தனம் இல்லையா, ஒருவரிடம் ஒரு கிரெடிட் கார்டுகூட இருக்கக் கூடாது என்று ரிசர்வ் வங்கி நினைக்கிறதா என்று நீங்கள் கேட்கலாம்.

இந்தக் கேள்விக்கு பதில், இல்லை என்பதே. உங்களிடம் கிரெடிட் கார்டு இருக்கலாம். ஆனால், இரண்டுக்குமேல் இருக்கக் கூடாது என்பதுதான் பொதுவான விதி. உங்களிடம் இரண்டு கார்டு இருக்கும்பட்சத்தில், அவற்றை லாபகரமாகப் பயன்படுத்த முடியும். எப்படி என்று கேட்கிறீர்களா?

கீழே காணும் ஐந்து தங்க விதிமுறைகளைப் பின்பற்றினால், நீங்கள் உங்கள் நிதிப் பொறுப்பிலிருந்து விலகாமல் இருக்க முடியும்.

நீங்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவரா..? உங்களுக்கான 5 தங்க விதிமுறைகள்..!

தங்க விதிமுறை 1: முடிந்தவரை உங்கள் கிரெடிட் கார்டு பில்லின் 100 சதவிகிதத் தொகையைச் செலுத்துங்கள்

கிரெடிட் கார்டுக்கான பில் தொகையை முழுமையாகக் கட்டுவது மூலம் நீங்கள் வட்டி எதுவும் கட்ட வேண்டி யிருக்காது. அப்படியே சற்று தாமதம் ஏற்பட்டாலும், குறைவான வட்டிதான் செலுத்தும்படி இருக்கும்.

நீங்கள் நுகர்வோர் கடன் அல்லது கார் கடன் அல்லது வீட்டை அழகு செய்ய கடன் வாங்குவதாக இருந்தால், வங்கி மூலம் குறைந்த வட்டியில் கடன் வாங்குங்கள். முடிந்த வரையில் பெரிய தொகை கடன்களுக்கு கிரெடிட் கார்டு கடனை பயன்படுத்தாதீர்கள். சின்னச் சின்ன செலவுகளுக்குப் பயபடுத்தினாலும் தயவுசெய்து கிரெடிட் கார்டு பில்லுக்கான பணம் செலுத்துவதை எந்தக் காரணம் கொண்டும் தாமதப்படுத்தாதீர்கள்.

உங்கள் கிரெடிட் கார்டு தாமதக் கட்டணத்தை ஒரு முறை சாவகாசமாக ஆராய்ந்து பாருங்கள். உங்களுக்கு மயக்கம்தான் வரும். அந்த அளவுக்கு அந்தக் கட்டணங்கள் அதிகமாக இருக்கும். தாமதக் கட்டணம், கூடவே வட்டியும் இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்துகொண்டால், தாமதமாகப் பணம் செலுத்துவதை நிறுத்திவிடுவீர்கள் அல்லது கிரெடிட் கார்டை பயன்படுத்துவதையே நிறுத்திவிடுவீர்கள்.

தங்க விதிமுறை 2: ஆண்டுக் கட்டணமில்லா கிரெடிட் கார்டு

கிரெடிட் கார்டுகளுக்கு ஆண்டுக் கட்டணம் செலுத்து வதைத் தவிர்க்கவும். அந்த வகையில் ஆண்டுக் கட்டணம் இல்லாத கார்டுகளாகப் பார்த்து தேர்வு செய்யவும்.

நீங்கள் செலுத்தும் ஆண்டுக் கட்டணம் உங்களுக்குக் கூடுதல் செலவாகும். பல முன்னணி வங்கிகள் இலவச கிரெடிட் கார்டுகளை வழங்கி வருகின்றன. அவற்றை வாங்கிப் பயன்படுத்தும்போது, ஆண்டுக் கட்டணம் என்கிற வகையில் சில ஆயிரம் ரூபாயைத் தண்டமாகச் செலுத்துவதைத் தவிர்க்க முடியும். இப்படி மிச்சமாகும் பணமே பத்து, இருபது ஆண்டு களில் கணிசமான தொகையாக உங்களிடம் இருக்கும்.

தங்க விதிமுறை 3: தொடர்ந்து நீண்ட காலத்துக்கு கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துங்கள்

நீங்கள் தங்க விதிமுறை 1 மற்றும் 2-ஐ பின்பற்ற நம்பகமான கிரெடிட் கார்டு நிறுவனத்தின் கார்டுகளைத் தொடர்ந்து பயன் படுத்தி வாருங்கள்.

உங்களுக்கு கிரெடிட் ஸ்கோர் பற்றித் தெரியும். நீண்ட காலமாகத் தொடர்ந்து கிரெடிட் கார்டை சரியாகப் பயன்படுத்தி வந்தால், உங்களின் கிரெடிட் ஸ்கோர் மேம்பட்டு வரும். அதன் மூலம் எதிர்காலத்தில் இதர பெரிய கடன்களை வாங்கும் போது உங்களுக்கு அதிக தொகை கடனாகக் கிடைக்கும். கூடவே, குறைந்த வட்டியிலும் அந்தக் கடன் கிடைக்கும். இப்படி கிரெடிட் கார்டுகளைத் தொடர்ந்து சரியாகப் பயன் படுத்துவதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க முடியும்.

தங்க விதிமுறை 4: ரிவார்டு பாயின்டுகளைப் பயன்படுத்தத் தவறாதீர்கள்

பிரபல கிரெடிட் கார்டு் நிறுவனங்கள், நீங்கள் செலவு செய்யும் தொகையில் குறைந்த பட்சம் 1% - 2% தொகையை உங்களுக்கு ரிவார்டு பாயின்டாக வழங்கும். நீண்ட காலத்தில் இது பெரிய தொகையாக மாறும்.

இதைப் பயன்படுத்தும்போது நீங்கள் புதிதாக வாங்கும் பொருளின் விலை கணிசமாகக் குறையும். இந்த ரிவார்டு பாயின்டுகளைக் குறித்து வைத்து பயன்படுத்தத் தவறாதீர்கள்.

தங்க விதிமுறை 5: அதிகபட்ச இலவச வட்டிக் காலத்தைப் பயன்படுத்துங்கள்

கிரெடிட் கார்டு மூலம் பொருள்கள் வாங்கும் போது, அதிகபட்சம் 52 நாள்களுக்கு வட்டி இல்லாத கடன் காலத்தைப் பெற முடியும். கடன் சுழற்சி (credit cycle) ஆரம்பிக்கும்போது கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், இப்படி அதிகபட்ச இலவச வட்டிக் காலத்தைப் பயன்படுத்த முடியும்.

உங்களின் பில்லிங் தேதி ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி என்றால், கிரெடிட் கார்டு மூலம் பொருள்கள் வாங்குவதை 15-ம் தேதி முடிந்து செய்யுங்கள். அதாவது, ஒவ்வொரு மாதமும் 16-ம் தேதி முதல் 25-ம் தேதிக்குள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி பொருள்களை வாங்குவதை வழக்கமாக வைத்திருக்க வேண்டும்.

அதன் பிறகு, அடுத்த பில்லிங் சுழற்சி வரும் வரை வேறு பொருள்கள் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். இப்படித் தொடர்ந்து செய்யும்பட்சத்தில், அதிக நாள்கள் வட்டி இல்லா காலத்தைப் பெற முடியும்.

மேலே குறிப்பிட்ட கிரெடிட் கார்டு தங்க விதிமுறைகள் ஐந்தையும் தொடர்ந்து ஆறு மாதம் அல்லது ஓராண்டுக் காலத்துக்குப் பின்பற்றி வரும் பட்சத்தில், கிரெடிட் கார்டை லாபகரமாகப் பயன்படுத்துவதில் தேர்ச்சி பெற்றுவிடுவீர்கள். இந்த விதிமுறைகளைப் பின்பற்றுவதற்கு முன் உங்கள் கையை விட்டுச் சென்ற தொகையையும், இப்போது மிச்சமாகும் தொகையையும் கணக்கிட்டுப் பாருங்கள்.

மேலும், கிரெடிட் கார்டு என்பது இரு பக்கமும் கூர்மையான கத்தி போன்றது. இதைத் தவறாகப் பயன்படுத்தும்பட்சத்தில் அதிக பணம் உங்களுக்கு செலவாவதோடு, மன நிம்மதியும் பாதிக்கப்படும். எனவே, நிதித் திட்டமிடல் மூலம் நிதி இலக்குகளை நிர்ணயித்துக்கொண்டு செயல்பட ஆரம்பித்தால், தேவையில்லாமல் பல பொருள்களை வாங்குவது தவிர்க்கப்படும். இது தவிர, கடனில் பொருள்களை வாங்குவதும் குறையும் எனலாம்.