இணையப் பயன்பாடு அதிகரித்து வரும் அதே சூழலில் சைபர் கொள்ளைகளும் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. சாமானிய மக்கள்தான் அறியாமையில் சைபர் கொள்ளையர்களிடம் சிக்கி பணத்தை இழக்கிறார்கள் என்று பார்த்தால் வங்கிகளும் சைபர் கொள்ளைகளுக்கு ஆளாவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த நவம்பர் மாதத்தில் சென்னை தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் சைபர் கொள்ளையர்கள் தங்களின் கைவரிசையைக் காட்டியிருக்கின்றனர். ஒரே ஒரு மெயிலை அனுப்பி வங்கிக் கணக்கை ஹேக்கிங் செய்து ரூ.2.61 கோடியை கொள்ளையடித்துள்ளனர்.

சென்னை பாரிமுனையில் செயல்பட்டுவரும் தமிழ்நாடு கூட்டுறவு வங்கி தலைமையகத்துக்கு ஒரு மெயில் வந்துள்ளது. கீ லாக்கர் என்ற தலைப்பில் வந்த அந்த மெயிலை வங்கியாளர்கள் ஒப்பன் செய்து பார்த்திருக்கிறார்கள். மெயிலை ஓப்பன் செய்த அடுத்த விநாடி தமிழ்நாடு கூட்டுறவு வங்கியின் கணினி முழுவதுமாக ஹேக்கிங் செய்யப்பட்டிருக்கிறது.
வங்கியின் கணினியை ஹேக் செய்து தங்களின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்த ஹேக்கர்கள் வங்கியின் கணக்கிலிருந்து ரூ.2.61 கோடியைத் திருடி உள்ளனர். இதையடுத்து காவல்துறையினரிடம் புகார் செய்துள்ளனர்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இந்த ஹேக்கிங் கைவரிசையைச் செய்ததில் சம்பந்தப்பட்ட இரண்டு நைஜீரியர்களை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.

தெரியாதவர்களிடமிருந்து வரும் மெயில், பரிசு விழுந்திருப்பதாக வரும் மெயில் போன்றவற்றைத் திறக்காமல் இருப்பது நல்லது. இணைய குற்றங்களில் சிக்கி பாதிக்கப்படாமல் இருக்க விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம்.