Election bannerElection banner
Published:Updated:

`ஒரு மணி நேரத்துக்குள் விண்ணப்பங்களை பரிசீலனை செய்யவேண்டும்!' - இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு உத்தரவு

health insurance
health insurance

போர்க்காலச் சூழல் நிலவும் இந்தக் காலகட்டத்தில் இத்தகைய அறிவிப்புகள் மக்களின் சிரமத்தை நிச்சயம் குறைக்கும். இதைச் செயல்படுத்துவதில் சில சிரமங்கள் இருந்தாலும் தற்போதைய சூழ்நிலையைக் கருதி இதை நிறைவேற்ற காப்பீட்டு நிறுவனங்கள் முயல்வது மக்களிடம் நிச்சயம் வரவேற்பைப் பெறும்.

தற்போது கொரோனா பெருந்தொற்று நமது நாட்டை சுனாமி போல தாக்கி வருகிறது. ஒரே நேரத்தில் பலருக்கு நோய்ப் பரவல் ஏற்படுவதால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இதன் காரணமாக மருத்துவமனையில் படுக்கை கிடைப்பது என்பது தற்போது மிகவும் கடினமான விஷயமாக இருக்கிறது.

மேலும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை கட்டணங்கள் அதிகமாக இருக்கிறது. மருத்துவ காப்பீடு பெற்றுள்ள வாடிக்கையாளர்கள் பணம் எதுவும் செலுத்தாமல் சிகிச்சை பெறும் வசதியை பல காப்பீட்டு நிறுவனங்கள் தமது வாடிக்கையாளருக்கு தந்திருக்கின்றன.

Health Insurance
Health Insurance

தற்போது மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேருவதற்கு அனுமதி கேட்கும்போது, அதைக் காப்பீட்டு நிறுவனங்கள் பரிசீலிப்பதற்கு இரண்டு மணி நேரம் என்ற காலக் கெடு உள்ளது. இதை இந்தப் பேரிடர் காலத்தில் இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் ஒரு மணி நேரமாகக் குறைக்க வேண்டும் என்று காப்பீட்டு நிறுவனங்களை கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த அறிவுறுத்தலானது நிச்சயம் பாலிசிதாரர்களுக்கு மிகவும் பயனளிக்கக்கூடியதாக இருக்கும். ஒரு குடும்பத்தில் ஒரே நேரத்தில் அனைவரும் நோய் தொற்றால் பாதிக்கப்படும் சூழ்நிலை தற்போது நிலவுகிறது. அதனால் எந்தெந்த சிகிச்சைக்கு எவ்வளவு காப்பீடு கிடைக்கும் என்பது தெரியாத சூழ்நிலை உள்ளது. மருத்துவமனையில் படுக்கை கிடைப்பதே பெரிய விஷயமாக இருக்கும்போது ஒரு குடும்பத்தில் பலர் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் சிகிச்சை விரைந்து கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Insurance
Insurance

இதை நடைமுறைப்படுத்துவதற்கு நிச்சயம் காப்பீட்டு நிறுவனங்களுக்கு சிரமத்தைக் கொடுக்கும். காப்பீட்டு நிறுவனங்களில் பணிபுரிவோர்களில் பலரும் நோய்த் தொற்றுக்கு ஆளாகி இருக்கக்கூடும். அதனால் குறைந்த அளவு நபர்களே பணிபுரியக்கூடிய சூழ்நிலை நிலவக் கூடும். மேலும் மருத்துவத்துறை என்பது 24 மணி நேரமும் இயங்கும் ஒரு துறையாகும். இந்தச் சிக்கல்களுக்கு இடையே ஒரு மணி நேரத்தில் முடிவுகள் எடுத்து தெரியப்படுத்துவது என்பது சிரமமான விஷயமாக இருக்கக்கூடும்.

என்றாலும் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் பார்வையில் பார்க்கும்போது இந்த அறிவுறுத்தல் நிச்சயம் பாராட்டத்தக்கதாக உள்ளது. இதை நடைமுறைப்படுத்த தேவையான கட்டமைப்புகளை காப்பீட்டு நிறுவனங்கள் விரைவாக எடுக்க வேண்டிய தேவை உள்ளது.

இது மட்டுமல்லாமல் ஆயுள் காப்பீடு எடுத்துள்ள நபர்கள் இறந்த 7 முதல் 15 நாள்களுக்குள் இறப்பு தொடர்பான ஆவணங்களை காப்பீட்டு நிறுவனங்களுக்கு தற்போதைய நடைமுறைப்படி கொடுக்க வேண்டும். இறந்தவர் குடும்பங்களில் பலருக்கு தொற்று ஏற்பட்டு இருக்கும் என்பதால் இந்தக் குறுகிய காலத்தில் ஆவணங்களை சமர்ப்பிப்பது சிரமமாக இருக்கும். மேலும் காப்பீட்டு நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள் இறந்தவர்களின் வீடுகளுக்குச் சென்று விசாரணை செய்வது என்பது தற்போதைய சூழ்நிலையில் சிரமமான விஷயமாக இருக்கும்.

இதைக் கருத்தில் கொண்டு இறப்பு நடைபெற்ற 90 நாள்களுக்குள் ஆவணங்களை சமர்ப்பிக்கலாம் என்று அறிவுறுத்தலையும் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் வழங்க வேண்டும் என்று காப்பீடு நிறுவனங்களில் பணிபுரியும் முகவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Health Insurance
Health Insurance

போர்க்காலச் சூழல் நிலவும் இந்த காலகட்டத்தில் இத்தகைய அறிவிப்புகள் மக்களின் சிரமத்தை நிச்சயம் குறைக்கும். இதை செயல்படுத்துவதில் சில சிரமங்கள் இருந்தாலும் தற்போதைய சூழ்நிலையைக் கருதி இதை நிறைவேற்ற காப்பீட்டு நிறுவனங்கள் முயல்வது மக்களிடம் நிச்சயம் வரவேற்பை பெறும். இது காப்பீட்டு நிறுவனங்களின் நீண்டகால வளர்ச்சிக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு