சென்னையில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கான அமைப்பான இந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸின் `சேம்பர் டே’ ஜனவரி 23-ம் தேதி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அடையார் ஆனந்த பவன், திருவண்ணாமலையைச் சேர்ந்த சோல் ஃப்ரீ டிரஸ்ட்க்கு விருது வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்றார். இந்த சேம்பரின் முன்னாள் தலைவர்களும் இந்தக் குழுவின் உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
இந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸின் தலைவர் வ.நாகப்பன் வரவேற்பு நிகழ்த்தினார். தொழிலும் சமூக சேவையிலும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறவர்களைப் பாராட்டி கெளரவிக்க இந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ் பல ஆண்டுகளாக இந்த விருதைத் தந்துவருவதாக அவர் தனது வரவேற்புரையில் தெரிவித்தார்.
ஹிந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ் 1945-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இதில் 950 உறுப்பினர்கள் உள்ளனர். பல தொழில்முனைவோர்களுக்கு உதவியாகவும் ஊக்கமாகவும் இந்த சேம்பர் இருக்கிறது. தொழிலில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருதுகளும் வழங்கி வருகிறது.
2023-ம் ஆண்டுக்கான பிசினஸ் எக்ஸெலன்ஸ் ஃபார் அவுட்ஸ்டாண்டிங் அச்சீவ்மென்ட்ஸ் விருது அடையார் ஆனந்த பவன் நிறுவனத்துக்கும், `த சாம்பியன் ஆஃப் ஹிமானிட்டி அவார்ட் ஃபார் சோசியல் சர்வீஸ்’ விருது சோல் ஃப்ரீ டிரஸ்ட்க்கும் வழங்கப்பட்டது.
அடையார் ஆனந்த பவன்
பிசினஸ் எக்ஸெலன்ஸ் ஃபார் அவுட்ஸ்டாண்டிங் அச்சீவ்மென்ட்ஸ் விருதை ஏ2பியின் நிறுவனர் கே.டி.சீனிவாச ராஜாவுக்கு வழங்கினார் அமைச்சர் த.மோ.அன்பரசன். விருதைப் பெற்ற அவர், ``ஏ2பி-யின் வெற்றிக்கு மக்கள் அளித்த ஆதரவும் பணியாளர்களின் ஒத்துழைப்புமே காரணம். விவசாயக் குடும்பத்தில் பிறந்து தென்னிந்திய உணவை உலகம் முழுக்க பரப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் அடையார் ஆனந்த பவனை நிறுவினோம். தொடக்கத்தில் அடையார் ஆனந்த பவனுக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை. எங்கள் நிறுவனத்தில் வழங்கிய பல விதமான இனிப்புகளும் நல்ல சுவையுடன்கூடிய உணவும் சாப்பிட்ட மக்களுமே அங்கீகாரம் அளித்தனர்.
தற்போது உலக அளவில் 160 கிளைகளைக் கொண்ட நிறுவனமாக அடையார் ஆனந்த பவன் விளங்கி வருகிறது. இதில் 12,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஒரு நாளுக்கு சராசரியாக 10,000 கிலோ கணக்கான இனிப்புகள் அடையார் ஆனந்த பவன் தயாரித்து வருகிறது. இந்த விருதை தமிழக மக்களுக்கும் அடையார் ஆனந்த பவனில் பணியாற்றும் ஒவ்வொரு பணியாளருக்கும் அர்ப்பணிக்கிறேன். அடையார் ஆனந்த பவனின் ஒரே குறிக்கோள் தென்னிந்திய உணவை உலக அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்பது மட்டுமே’’ என்று பேசினார் அவர்.
சோல்ஃப்ரீ டிரஸ்ட்
அடுத்து, திருவண்ணாமலையைச் சேர்ந்த `சோல்ஃப்ரீ’ டிரஸ்ட்டுக்கு `த சாம்பியன் ஆஃப் ஹிமானிட்டி அவார்ட் ஃபார் சோசியல் சர்வீஸ்’ விருதை வழங்கினார் அமைச்சர் அன்பரசன். இந்த டிரஸ்ட்டின் நிறுவனர் ப்ரீத்தி ஸ்ரீனிவாசன் விருதைப் பெற்றுக்கொண்டார்.
ப்ரீத்தி ஸ்ரீனிவாசன் எதிர்பாராத விபத்து ஒன்றில் சிக்கி 90% உடல் இழப்பை இழந்தவர். இவரைப் போல, முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட பலருக்கும் மறுவாழ்வு அளிக்கும் வகையில் திருவண்ணாமலையில் `சோல் ஃப்ரீ ரீஹபிளியேஷன் சென்டரை’ நிறுவியுள்ளார். இந்த டிரஸ்ட் ஒரு மறுவாழ்வு மையமாகவும் பாதிப்பிலிருந்து மீள்வதற்கான பயிற்சியும் சிகிச்சையும் வழங்கும் மையமாகவும் இருக்கிறது. குறிப்பாக, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.
ப்ரீத்தி ஸ்ரீனிவாசன் வைத்த கோரிக்கை..!
``விபத்தில் சிக்கி, உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டவர்களை எந்த வகையிலும் குறைவாக எண்ண வேண்டாம்; இவர்களுக்கான வீல் சேர், யூரினரி கார்டிகல்ஸ், ஹாஸ்பிடல் பெட் போன்றவற்றுக்கு வரி விதிக்கப்படுவதைத் தவிர்க்க வேண்டும்’’ என்று வேண்டுகோள் வைத்தார்.
மேலும், வீல் சேரில் பயன்படக்கூடிய ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தோராயமாக 20,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் வீல்சேரை வாங்குவதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். இதற்கான விலையைக் குறைக்க வேண்டும்’’ என்றார்.
விருதுகளை அளித்தபின் பேசினார் அமைச்சர் தா.மோ. அன்பரசன். அடையார் ஆனந்த பவன் நிறுவனத்துக்கும், சோல் ஃப்ரீ நிறுவனத்துக்கும் தனது பாராட்டைத் தெரிவித்த அமைச்சர், சோல் ஃப்ரீ டிரஸ்ட் நிறுவனர் பிரீத்தி ஸ்ரீனிவாசன் கேட்டதைப் போல ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் மருத்துவ உபகரணங் களுக்கான நடவடிக்கை கூடிய விரைவில் எடுக்கப்படும்'' என்றார்.
தமிழகத்தில் சிறு தொழில் நிறுவனங்களின் முன்னேற்றத்துக்காக அரசு செய்துவரும் நடவடிக்கைகள், திட்டங்கள் பற்றி விளக்கமாக எடுத்துச் சொன்னார் அமைச்சர்.
அமைச்சர் பேசிமுடித்தபின், இந்த அமைப்பின் விஜய் பி.சோர்டியா நன்றி தெரிவித்தார்!