Published:Updated:

பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வருவதில் என்ன சிக்கல்?

மாநில அரசுகளுக்கு இப்போது நேரடியாக வந்துகொண்டிருக்கும் பெட்ரோல், டீசல் வருவாயையும் தடுத்துவிட்டால், பிறகு மத்திய அரசாங்கத்திடம் மாநிலங்கள் காலத்துக்கும் கையேந்த வேண்டிய நிலையே ஏற்படும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வெள்ளிக்கிழமை அன்று கூடிய ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் இரண்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. ஒன்று, பெட்ரோல், டீசல் ஜி.எஸ்.டி வரிமுறைக்குள் கொண்டுவரப்பட மாட்டாது என்பது. இரண்டாவது, ஆன்லைன் மூலம் உணவை ஆர்டர் செய்தால், 5% வரியை ஸ்விக்கி, ஜொமேட்டோ நிறுவனங்களே வசூலிக்க வேண்டும் என்பது.

ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறை, கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் நடைமுறையில் உள்ளது. ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் அவ்வப்போது கூடி, வரி தொடர்பான மாற்றங்களைச் செய்து வருகிறது. இதுவரை 44 ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. கொரோனா பரவல் அச்சம் காரணமாக, கடந்த 2019 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 -ம் தேதிக்குப்பிறகு நடைபெற்ற அனைத்து ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டங்களும் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடக்கின்றன.

இந்த நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், 45-வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் உத்தரப்பிரதேசத்தில் லக்னோவில் நேரடி சந்திப்பு முறையில் நடந்தது.

பெட்ரோல் விலை
பெட்ரோல் விலை
"பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தித்தான் வைக்க வேண்டும்!"- நாராயணன் திருப்பதி

இந்தக் கூட்டத்தில் பல்வேறு பொருள்களுக்கு ஜி.எஸ்.டி வரி விகிதங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டுவருவது, ஸ்விக்கி மற்றும் ஜொமாட்டோவுக்கு ஜி.எஸ்.டி வரி விதிப்பது ஆகிய இரண்டு விஷயங்கள் விவாதத்துக்கு உள்ளாகியிருக்கின்றன.

முக்கியமாக, பெட்ரோல், டீசல் ஆகியவற்றை ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் கொண்டுவரும் பரிந்துரை, கவுன்சில் கூட்டத்தில் பேசுபொருளாக மாறியது. இந்தப் பரிந்துரை நடைமுறைக்கு வந்தால், பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.75-ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.65-ஆகவும் குறைய வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டது. தமிழகம் உள்பட மாநில அரசுகள் பலவும் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், பெட்ரோல் டீசல் விலை ஜி.எஸ்டி-க்குள் கொண்டுவருவது நிராகரிக்கப்பட்டதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

வி.கோபால 
கிருஷ்ணன் 
நிறுவனர், 
www.
moneyavenues.in
வி.கோபால கிருஷ்ணன் நிறுவனர், www. moneyavenues.in

ஜி.எஸ்.டி-க்குள் பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசாங்கம் ஏன் கொண்டுவர நினைக்கிறது, இதனால் யாருக்கு என்ன பயன், மாநில அரசாங்கங்கள் இந்தத் திட்டத்தை தமிழகம் எதிர்க்க என்ன காரணம் என்பது குறித்து www.moneyavenues.in நிறுவனத்தின் நிறுவனர் வி.கோபாலகிருஷ்ணனிடம் பேசினோம்.

``தொடர்ந்து அதிகரித்துவரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வால், தினசரி அலுவலகம் செல்பவர்கள் முதல் சரக்குப் போக்குவரத்தில் ஈடுபவர்கள் வரை அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நான் குறைக்க முடியாது, நீங்கள் குறையுங்கள் என மத்திய, மாநில அரசுகள் இதில் அரசியல் செய்வது என்னவோ உண்மைதான். ஆனால், இந்த ஜி.எஸ்.டி-க்குள் பெட்ரோல், டீசல் விலையை கொண்டு வருவது நல்ல யோசனையாகத்தான் தெரிகிறது. ஏனெனில், பெட்ரோல் டீசல் விலை பெருமளவு குறையும். அதே நேரத்தில், பெட்ரோல், டீசல் மீதான மாநில வருவாயும் குறையும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஜி.எஸ்.டி-க்குள் செல்லும்போது அந்த வரியை நேரடியாக மத்திய அரசாங்கம் பெற்றுக்கொண்டு, அதன்பிறகே மாநிலங்களுக்கான வரி வருவாயை மத்திய அரசாங்கம் பிரித்துக் கொடுக்கும். ஏற்கெனவே நிலுவையில் இருக்கும் ஜி.எஸ்.டி வரியுடன் சேர்த்து, பெட்ரோல் டீசலுக்கான வரிப்பணத்தையும் ஒவ்வொரு முறையும் மாநில அரசுகள் கேட்டுப் பெறும்படியாகிவிடும். இதன் காரணமாகத்தான் எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

சூடுபிடிக்கும் GST கவுன்சில் விவகாரம்: தமிழக நிதியமைச்சரின் கோரிக்கைக்கு மத்திய அரசின் பதில் என்ன?

தமிழக அரசு, தொழில் துறையை ஊக்கப்படுத்தி, புதிய புதிய முதலீடுகளை ஈர்த்து அதன் மூலம் வரி வருவாயை உயர்த்த திட்டமிடுவதை விட்டுவிட்டு, பெட்ரோல், டீசல் மற்றும் மதுபானங்களில் வரும் வரி வருவாயை மட்டுமே அதிகம் நம்பியிருப்பது வளர்ச்சிக்கான வழியாகாது. இந்தத் திட்டத்தை எதிர்க்கும் கேரளாவும் லாட்டரி மற்றும் மதுமான விற்பனையின் மூலம் கிடைக்கும் வரி வருவாயை அதிகம் நம்பி இருக்கிறது.

ஜி.எஸ்.டி
ஜி.எஸ்.டி
`பி.டி.ஆர்-யுடன் மோதல்; கோவா அமைச்சரை ஜி.எஸ்.டி கவுன்சிலில் இருந்து நீக்க வேண்டும்!’ -கோவா எம்.எல்.ஏ

ஜி.எஸ்.டி-க்குள் கொண்டுவருவதன் மூலம் பெட்ரோல், டீசல் விலை குறைந்தால், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் நல்லதுதான். ஏனெனில் சரக்குப் போக்குவரத்தில் இது நேரடி நன்மையை வழங்கும். இதனால் அன்றாட அத்தியாவசியப் பொருள்களின் விலை குறையும். அதனால் பணவீக்கம் குறையும். இப்படி நிறைய விஷயங்களில் நன்மைகள் இருக்கிறது.

அதனால் எதிர்ப்பு தெரிவிக்கும் மாநில அரசுகள், தங்களது மாநிலத்தின் வரி வருவாய் குறையும் என சுயநலமாக யோசிக்காமல், பாமர மக்களுக்கு பலன் தரக்கூடிய இந்த திட்டத்துக்கு ஆதரவளித்து, மாநில அரசின் வரி வருவாயை வேறு எந்தெந்த வழிகளில் அதிகப்படுத்தலாம் என்பதைப் பற்றி யோசிக்கலாம்" என்றார் அவர்.

ஆனால், ஏற்கெனவே தருவதாக சொன்ன தொகையைத் தராமலே மத்திய அரசாங்கம் ஏமாற்றி வருகிறது. இந்த நிலையில், மாநில அரசுகளுக்கு இப்போது நேரடியாக வந்துகொண்டிருக்கும் பெட்ரோல், டீசல் வருவாயையும் தடுத்துவிட்டால், பிறகு மத்திய அரசாங்கத்திடம் மாநிலங்கள் காலத்துக்கும் கையேந்த வேண்டிய நிலையே ஏற்படும். மத்திய அரசாங்கம், மாநில அரசாங்கங்களுக்கு வரியைப் பங்கிட்டுத் தருவதில், ஒரு கண்ணில் வெண்ணெயும் இன்னொரு கண்ணில் சுண்ணாம்பையும் வைக்கத்தானே செய்கிறது? பிறகு எப்படி இதை ஏற்றுக்கொள்ள முடியும் என்று கேட்கிறார்கள் மாநில அரசின் நலன் தொடர்பாக பேசுபவர்கள்.

ஸ்விக்கி, ஜொமாட்டோவுக்கு ஜி.எஸ்டி

வீட்டில் இருந்தபடி தேவையான உணவை ஆர்டர் செய்து சாப்பிடுவது வேகமாக அதிகரித்து வருகிறது. ஜொமாட்டோ, ஸ்விக்கி ஆகிய நிறுவனங்களிடேயே இத்துறையில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்த நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி வரி விதிப்பது குறித்து ஆடிட்டர் ராஜேந்திரகுமாரிடம் கேட்டோம்.

``ஹோட்டல் உணவுப் பொருள்களுக்கு ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையின்கீழ் ஏற்கெனவே வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால், பெரும்பாலான சிறிய ஓட்டல்கள் இந்த வரிகளை வாடிக்கையாளர்களிடம் இருந்து வாங்கிவிட்டு அவற்றை அரசுக்கு முறையாக கட்டுவது இல்லை. ஸ்விக்கி-ஜொமாட்டோ ஆப் வாயிலாக விநியோகம் செய்தது போன்று கணக்கு காட்டிவிடுகின்றன. 2020- 2021 நிதியாண்டில் மட்டும் ஓட்டல்கள் இந்த வகையில் ரூ.2,000 கோடி வரையில் வரி ஏய்ப்பு செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Auditor Rajendra Kumar
Auditor Rajendra Kumar

இதனால், ஓட்டல் உணவுகளை வீடுகளுக்கு சென்று சப்ளை செய்யும் ஸ்விக்கி - ஜொமாட்டோ போன்ற ஆன்லைன் வினியோக நிறுவனங்களையும் ஜி.எஸ்.டி. வரியின்கீழ் கொண்டுவர வேண்டும் என ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் இனி 5% ஜி.எஸ்.டி வரி ஸ்விக்கி மற்றும் ஜொமாட்டோ நிறுவனங்களுக்கு விதிக்கப்படுகிறது.

இருப்பினும், ஏற்கெனவே ஓட்டலுக்கும் வரி செலுத்திவிட்டு அதன் சப்ளை நிறுவனங்களுக்கும் வரி செலுத்துவது இரட்டை வரிமுறைக்கு வழிவகுக்குமே என்கிற கேள்வி அனைவருக்கும் இயல்பாக எழுவதென்னவோ உண்மைதான்.

ஜி.எஸ்.டி வரி இழப்பீடாக ₹75,000 கோடியை வழங்கிய மத்திய அரசு; தமிழகத்திற்கு எவ்வளவு?

ஆனால், இந்த முறை ஜனவரி 1,2022-ம் தேதி நடைமுறைக்கு வரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதனால் உணவுப் பொருள்களின் விலை உயருமா, வாடிக்கையாளர்கள் பாதிப்படைவார்களா என்பது அப்போது தெரியும்'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு