Published:Updated:

சம்பளம் மட்டும்தான் உங்க நிதிப்பிரச்னைக்கு காரணம்னு நினைக்குறீங்களா? இதுவும் பிரச்னைதான்! - 5

Rupees
Rupees ( Photo by rupixen.com on Unsplash )

வரவு பற்றியே யோசிப்பதால் அறை நடுவே ஸ்டூல் போட்டு அமர்ந்திருக்கும் யானையை நாம் பார்க்கத் தவறிவிடுகிறோம். அந்த யானைதான் நம் வருமானத்தை விழுங்கும் அநாவசியச் செலவுகள். | பணம் பண்ணலாம் வாங்க - பகுதி 5

சிலருக்கு மாதக் கடைசியில் பணம் மீதி இருக்கும்; நமக்கோ சில நாள்களுக்குள்ளேயே பணம் அத்தனையும் தீர்ந்துவிட, மாதத்தின் நிறைய நாள்கள் மீதி இருக்கும். உடனே நமக்குத் தோன்றுவதென்ன? `சே! நல்ல சம்பளம் வர்ற வேலையா தேடணும்' அல்லது `இன்னும் சில பகுதி நேர வேலைகள் செய்து வருமானத்தை அதிகரிக்கணும்' என்பதே.

இப்படி வரவு பற்றியே யோசிப்பதால் அறை நடுவே ஸ்டூல் போட்டு அமர்ந்திருக்கும் யானையை நாம் பார்க்கத் தவறிவிடுகிறோம். அந்த யானைதான் நம் வருமானத்தை விழுங்கும் அநாவசியச் செலவுகள். அந்தச் செலவுகளைக் குறைக்க முடிந்தாலே பணம் மீதமாகும்.

இதைப் படித்ததும் சிலருடைய முதல் ரியாக் ஷன் `அநாவசியச் செலவா? அவசியச் செலவுக்கே இங்கு பணத்தைக் காணோம். நான் எங்கிருந்து அநாவசியச் செலவுகள் செய்வது?' என்பதாக இருக்கலாம். ஆனால், செலவுகள் என்பது இரண்டு வயதுக் குழந்தைகள் போல - அவற்றின் மீது ஒரு கண் இருந்துகொண்டே இருக்க வேண்டும்; இல்லாவிட்டால் நிலைமை கட்டுக்கடங்காமல் போய்விடும். வாருங்கள்; எங்கெங்கு அநாவசியச் செலவுகள் ஏற்படுகின்றன; அவற்றை எப்படித் தவிர்ப்பது என்று பார்க்கலாம்.

Money (Representational Image)
Money (Representational Image)
  1. இம்பல்ஸ் பர்சேஸ்

    பார்த்தவுடன் யோசிக்காமல் வாங்கிவிடுதல். இதற்குப் பல உளவியல் காரணங்கள் இருந்தாலும், நம் பர்ஸின் நலத்துக்கு இது நல்லதல்ல என்பதால், இதைத் தவிர்ப்பது நல்லது. தேவையான பொருள்களுக்கு லிஸ்ட் போட்டு வாங்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு இம்பல்ஸ் பர்சேஸ் குறைவு. லிஸ்ட்டில் இல்லாத பொருள் மீது ஆசை வந்தால், அதை வாங்குவதை அடுத்த மாத லிஸ்டில் சேர்த்துக்கொள்ளுங்கள். நடுவிலிருக்கும் ஒரு மாத இடைவெளியில் நாம் வாங்க விரும்பிய பொருள் ஆசையா, தேவையா என்பது தெளிவாகப் புரிந்துவிடும்.

2. அதீத வாடகை

வீட்டு வாடகை, தவிர்க்க முடியாத ஒரு முக்கியமான செலவு. ஒரு வீட்டுக்குக் குடிபோனபின் அதன் வாடகை பற்றிய பரிசீலனை நின்றுவிடுகிறது. அடுத்த வீட்டுக்கு மாறும்போது அநேகமாக இன்னும் அதிக வாடகை உள்ள வீட்டையே தேர்வு செய்கிறோம். இதற்கு பர்சனல் ஃபைனான்ஸ் சொல்லும் தீர்வு என்னவென்றால், உங்கள் வாடகை எப்போதும் உங்கள் வருமானத்தில் 30 சதவிகிதத்துக்குள் இருக்க வேண்டும் என்பதே. இதை வெற்றிகரமாக நிறைவேற்றுங்கள்; கணிசமான தொகை கையில் நிற்கும்.

Loan (Representational Image)
Loan (Representational Image)
எவ்வளவு சம்பாதித்தாலும் சேமிக்கவே முடியவில்லையா? நீங்கள் தவறு செய்வது இதில்தான்! - 4

3. ஆட்டோமேடட் பேமென்ட்ஸ்

பில்களை ஞாபகம் வைத்துக் கட்டும் தொல்லையில் இருந்து தப்பிக்க போன் பில், கரன்ட் பில், ஜிம் சந்தா, வைஃபை மற்றும் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் போன்ற ஓ.டி.டி பிளாட்ஃபார்ம்களுக்கான சந்தா போன்றவற்றை ஆட்டோமேடிக்காக மாதந்தோறும் நம் பேங்க் அக்கவுன்டிலிருந்து செல்லும்படி செய்திருப்போம்; தவறில்லை. ஆனால், இந்தக் கொரோனா காலத்தில் எத்தனை முறை ஜிம் சென்றோம் என்று கணக்கு பார்த்தால், எந்தப் பிரயோஜனமும் இல்லாமல் சில நூறு ரூபாய்கள் தொலைவதைக் கவனிக்க முடியும்.

உபயோகிக்காத இதுபோன்ற சந்தாக்களை உடனடியாக நிறுத்த வேண்டும். இன்னும் சில ஆன்லைன் பிளாட்ஃபார்ம்கள் முதல் ஆறு மாதத்துக்கு ஃப்ரீ என்று சொன்னதால் லாகின் செய்து சம்மதம் தந்திருப்போம். ஆறு மாத காலம் முடிந்தபின் ஆட்டோமேட்டிக்காக நம் அக்கவுன்டில் இருந்து சந்தா போக ஆரம்பித்திருக்கும். அதைக் கவனிக்கத் தவறியிருப்போம். குறைந்தபட்சம் ஆறு மாதத்துக்கு ஒரு முறையாவது நம் ஆட்டோமேட்டட் பேமென்டுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

4. மின்சாரம், டிவி மற்றும் போன்

இவை மூன்றுமே இன்றைய வாழ்வில் இன்றியமையாதவை. ஆனால், அவற்றை அளவாகப் பயன்படுத்துகிறோமா? மின்சாரத்தைப் பொறுத்தவரை, கசிவு எங்காவது இருக்கிறதா என்று அடிக்கடி செக் செய்வதும், எல்.இ.டி பல்புகளுக்கு மாறுவதும் நல்லது. ஏ.சி, ஃப்ரிட்ஜ் போன்றவற்றில் பழுது இருந்தால் அதிக மின்சாரம் வேஸ்ட் ஆகும். டிவியையும் போனையும் பொறுத்தவரை நமக்குத் தேவையான சேனல்களை / பிளான்களைப் பொறுக்கி எடுக்கும் வசதிகளை உபயோகித்து செலவைக் குறைக்கலாம். போனைப் பொறுத்தவரை போஸ்ட் பெய்டைவிட ப்ரீ பெய்ட் செலவு குறைவு.

money
money
நிம்மதியான ஓய்வுக்காலத்திற்கு உதவும் `பேசிவ் இன்கம்'; நீங்கள் தயாரா? - பணம் பண்ணலாம் வாங்க - 3

5. ஹோட்டல் உணவு

கொரோனாவுக்குமுன் கட்டுக்கடங்காமல் சென்றுகொண்டிருந்த இந்த மோகம் இப்போது ஸ்விகி, ஸொமேட்டோ என்று மாறியுள்ளது. எப்போதும் வீட்டு உணவுகளையே சாப்பிட்டால் போரடிக்கும்தான். வீட்டில் செய்த சப்பாத்திக்கு ஹோட்டல் குருமா சேர்த்தால் செலவு பாதியாகக் குறையும். இப்படியான மிக்ஸ் அண்ட் மேட்ச்சுகள் சுவைக்குக் சுவை; சிக்கனத்துக்கு சிக்கனம். அடுத்த வாரத்துக்கான உணவுப் பிளானை முன்கூட்டியே போட்டு வைத்தால் அவசரத்துக்காக ஹோட்டல் உணவை நாடுவதைத் தவிர்க்கலாம்.

மேலே இருப்பது ஒரு முழுமையான லிஸ்ட் அல்ல. நம் குடும்பத்தில் ஏற்படும் வழக்கமான செலவுகள் அனைத்தையும் அவ்வப்போது பரிசீலிக்கும் வழக்கத்தை மேற்கொண்டால் செலவு குறையும்; சேமிக்கப் பணம் இருக்கும்.

- (அடுத்து திங்கள் அன்று சந்திப்போம்)

பர்சனல் ஃபைனான்ஸ் கலையை உங்களுக்கு சொல்லித்தரும் புதிய தொடர் இது. திங்கள், புதன், வெள்ளிதோறும் காலை 9 மணிக்கு. உங்கள் விகடன்.காமில்..!
அடுத்த கட்டுரைக்கு