நிறுவனங்களில் வளர்ச்சிப் பாதையில் நடக்கும் சில சம்பவங்கள் அதற்கு திருப்புமுனையாக அமைவது போல, சில தனிமனிதர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களும் சில நிறுவனங்களுக்குத் திருப்புமுனையாக அமைந்துவிடுகின்றன. அப்படிப்பட்ட தனிமனிதர்தான் வி.வைத்தியநாதன். அவர் ஆரம்பித்த ஃப்யூச்சர் கேப்பிடல் நிறுவனம், கேப்பிடல் ஃபர்ஸ்ட் நிறுவனமாக மாறிய திருப்புமுனை கதையை இந்த வாரம் பார்ப்போம்.
யார் இந்த வைத்தியநாதன்?
கடந்த சில ஆண்டுகளாகவே அடிக்கடி செய்திகளில் அடிபடுபவர் வி.வைத்தியநாதன். ஐ.டி.எஃப்.சி பர்ஸ்ட் வங்கியின் நிர்வாக இயக்குநர். கடந்த பிப்ரவரியில் இவருடைய ஐந்து பணியாளர்களுக்கு 9 லட்சம் பங்குகளைப் பரிசாக வழங்கி ஆச்சர்யப்படுத்தினார். கடந்த ஆண்டு மே மாதம் 4.5 லட்சம் பங்குகளை மூவருக்கு வழங்கி மீண்டும் மீடியாவின் கவனத்தை இழுத்தார். 2020-ம் ஆண்டு தன்னுடைய பள்ளி ஆசிரியருக்கு ஒரு லட்சம் பங்குகளை பரிசாக வழங்கினார். அதற்கு முன்பாக 2018-ம் ஆண்டு நவம்பரில் 4.29 லட்சம் பங்குகளை நண்பர்கள், உறவினர்களுக்கு பரிசாக வழங்கினார்.
ஊடகங்களுக்குப் பெரிதும் பேட்டி வழங்காத இவர், பல அசாத்தியமான விஷயங்களை, யாரும் எடுக்காத பல ரிஸ்க்குகளை எடுத்திருக்கிறார். இவர் வாழ்க்கையில் நடந்த பல திருப்புமுனை சம்பவங்கள், தோல்வியில் இருப்பவர்களுக்கு ஊக்கமாக இருக்கும்.
தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும் அப்பாவுக்கு மத்திய அரசுப் பணி என்பதால், இந்தியாவின் பல இடங்களில் பள்ளிக்கல்வியைப் படித்திருக்கிறார். பிர்லா இன்ஸ்டிடியூட்டில் பொறியியல் மற்றும் ஹார்வேர்டில் நிர்வாகம் படித்தவர். சிட்டி வங்கியின் ரீடெய்ல் பிரிவில் சில காலம் வேலை செய்தவர், 2000-ம் ஆண்டு ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் இணைந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் ரீடெய்ல் பிரிவில் முக்கியமான பொறுப்பை எடுத்தார். ரீடெய்ல் பிரிவில் 50 பணியாளர்களுடன் தொடங்கப்பட்டது. குறுகிய காலத்தில் 1,400-க்கும் மேற்பட்ட கிளைகள், 26,000 பணியாளர்கள் என்னும் பெரிய வளர்ச்சியை ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் ரீடெய்ல் பிரிவு மாறியது. இதன் காரணமாகவே மிகக் குறைந்த வயதில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் இயக்குநர் குழுவில் நியமனம் செய்யப்பட்டார் வைத்தியநாதன். 2006-ம் ஆண்டு இயக்குநர் குழுவில் இணையும்போது இவரின் வயது 38.
இதைத் தொடர்ந்து ஐ.சி.ஐ.சி.ஐ புருடென்சியல் லைஃப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக வைத்தியநாதன் நியமனம் செய்யப்பட்டார்.
2009-ம் ஆண்டு ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் தலைமைப் பொறுப்பில் இருந்து கே.வி.காமத் விலகி, சாந்தா கோச்சர் பொறுப்பேற்றார். அவருக்கு பத்து ஆண்டுகளுக்கு மேல் தலைமைப் பொறுப்பில் இருப்பதற்கான வாய்ப்பு இருந்ததால், சில முக்கியமான நபர்கள் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் இருந்து விலகி, மற்ற நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பைத் தேடிச் செல்ல ஆரம்பித்தார்கள் அல்லது புதிய நிறுவனத்தைத் தொடங்கினார்கள்.
இந்த நிலையில், 42 வயதாகும் தனக்கு அடுத்த பத்து ஆண்டுகளுக்கு வங்கியின் தலைமைப் பொறுப்பு கிடைக்க வாய்ப்பு இல்லை என்பதை உணர்ந்தார் வைத்தியநாதன்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஃப்யூச்சர் கேப்பிடல் உதயமானது...
விமானப் பயணம் என்பது சிலருக்கு ஆசையாக இருக்கலாம். சிலருக்கு வாழ்நாள் இலக்காக இருக்கலாம், சிலருக்குத் தேவையாக இருக்கலாம். ஆனால், வைத்தியநாதனின் வாழ்க்கையில் எடுக்கப்பட்ட பல முக்கியமான முடிவுகள் விமானப் பயணத்தில் எடுக்கப்பட்டவை.
2010-ம் ஆண்டு ஏப்ரலில் மும்பையிலிருந்து ஹைதராபாத்துக்கு விமானத்தில் செல்லும்போது அருகில் உள்ள சகபயணியாக வந்தவர், ஃப்யூச்சர் குரூப் நிறுவனத்தின் தலைவர் கிஷோர் பியானி. இருவருக்கும் இடையேயான உரையாடல் நடந்தது. வைத்தியநாதனின் எதிர்காலத் திட்டம் பற்றிக் கேட்டார் பியானி. நிதி முதலீட்டு நிறுவனம் ஒன்றைத் தொடங்கும் பேச்சு வந்தது. அதைத் தலைமை ஏற்று நடத்த வேண்டும் என்பது பியானியின் எண்ணம்.

``ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷில் லைப் நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் இருப்பதால் கூடுதல் சம்பளம் இலக்கு அல்ல’’ என வைத்தியநாதன் சொல்ல, அவருக்குப் புதிதாகத் தொடங்கப்படும் நிறுவனத்தின் 10% பங்குகளை வழங்கினார் பியானி. 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் உதயமானது ஃப்யூச்சர் கேப்பிடல். இதன் நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராகப் பொறுப்பேற்றார் வைத்தியநாதன்.
ஆனால், நிறுவனம் தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே பல பிரச்னை. நிறுவனத்தின் நிதி நிலைமை சரியில்லை. ரீடெய்ல் பிரிவைவிட மொத்தக் கடன் பிரிவே அதிக வலிமை கொண்டதாக இருந்தது. எக்கச்சக்க எதிர்பார்ப்புடன் ஐ.பி.ஓ வந்து, வெற்றி கண்ட கேப்பிடல் ஃபர்ஸ்ட் நிறுவனத்தின் பங்கு விலை உச்சத்தைத் தொட்ட பின்பு, அதன் விலை உயரவே இல்லை.
இந்த நிலையில், ஃப்யூச்சர் குழுமத்தின் கடன்கள் அதிகரிக்கத் தொடங்கியது. அதனால் குழுமத்துக்கு முக்கியமில்லாத தொழில்களில் இருந்து வெளியேற முடிவெடுத்தார் கிஷோர் பியானி. ஐ.சி.ஐ.சி.ஐ-யில் முக்கியமான பதவியில் இருந்து வெளியேறி, புதிதாகப் பொறுப்பேற்ற நிறுவனத்தில் சில மாதங்களிலே இந்தச் சிக்கல் வைத்தியநாதனுக்கு உருவானது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கேப்பிடல் ஃபர்ஸ்ட் எப்படி உருவானது?
இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண நினைத்தார் வைத்தியநாதன். இரண்டு தீர்வுகள், அவர் முன் இருந்தது. ஒன்று, நிறுவனத்தை விட்டு வெளியேறுவது. இந்தத் தீர்வை எடுக்கக் கூடாது என்பதில் தீர்மானமாக இருந்தார் வைத்தியநாதன். அடுத்த தீர்வு, நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகள் கிஷோர் பியானி வசம் இருந்ததால், அந்தப் பங்குகளை வேறு யாராவது வாங்கி, அவரை நிறுவனத்தில் இருந்து வெளியேற்றுவது. இந்தத் தீர்வை செயல்படுத்துவதன் மூலமே நிறுவனத்துக்கும் தனக்கும் திருப்புமுனையாக அமையும் என்கிற முடிவுக்கு வந்தார்.
உடனே களத்தில் இறங்கினார். பிரைவேட் ஈக்விட்டி முதலீட்டு நிறுவனங்களான பெய்ன், பிளாக்ஸ்டோன் உள்ளிட்ட நிறுவனங்களுடன் பேசினார்.

இந்த நிலையில், மீண்டும் ஒரு விமானப் பயணம். டெல்லியில் இருந்து மும்பைக்கு அருகில் வார்பர்க் பின்கஸ் என்னும் பிரைவேட் ஈக்விட்டி நிறுவனத்தின் உயரதிகாரிகளில் ஒருவரான நரேந்திர ஓஸ்வால். இருவரின் உரையாடல் விமானப் பயணத்துக்குப் பிறகும் தொடர்ந்தது. வார்பர்க் பின்கஸ், ஃப்யூச்சர் கேப்பிடல் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை வாங்குவதாக ஒப்புக்கொண்டது. அதைத் தொடர்ந்து ஃப்யூச்சர் குழுமம், ஃப்யூச்சர் கேப்பிடல் நிறுவனத்தில் இருந்து முழுமையாக வெளியேறியது.
2012-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இந்த டீல் நடந்து முடிய, ஃப்யூச்சர் கேப்பிடல் என்னும் நிறுவனம் கேப்பிடல் பர்ஸ்ட் என்னும் நிறுவனமாக மாறியது. வைத்தியநாதன் அதன் தலைவராக இருப்பதை வார்பர்க் நிறுவனமும் விரும்பியது.
சர்வதேச அளவில் பெரிய நிறுவனமான வார்பர்க் முதலீடு செய்திருப்பதால், நீண்ட காலத் திட்டத்துக்கு கேப்பிடல் பர்ஸ்ட் தயாரானது. ரீடெய்ல் பிரிவில் கேப்பிடல் பர்ஸ்ட் கவனம் செலுத்தியது. 2009-ம் ஆண்டில் நஷ்டத்தில் இருந்த நிறுவனம், லாபப் பாதைக்கு திரும்பத் தொடங்கியது. 2012 முதல் 2018 வரையிலான ஐந்து நிதி ஆண்டுகளில் 39% வளர்ச்சியை அடைந்தது. வாராக்கடனும் 1 சதவிகிதத்துக்குக் கீழ் குறைந்தது. 2012-லிருந்து 2018 வரையில் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 10 மடங்குக்கு அளவுக்கு உயர்ந்தது. கேப்பிடல் ஃபர்ஸ்ட் முதல் திருப்புமுனையைக் கண்டது.
ஐ.டி.எஃப்.சி பர்ஸ்ட் வங்கி வந்தது எப்படி?
2017-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஐ.டி.எஃப்.சி வங்கியும் ஸ்ரீராம் குழுமமும் இணைவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஆனால், நான்கு மாதங்களில் சந்தை மதிப்பில் உள்ள வித்தியாசம் காரணமாக இந்த டீல் கைவிடப்பட்டது.
இந்த நிலையில், ஐ.டி.எஃப்.சி வங்கியின் ராஜிவ் லால் மற்றும் வைத்தியநாதன் சந்தித்து உரையாடத் தொடங்கினார்கள். கேப்பிடல் பர்ஸ்ட் வசம் 50 லட்சம் சிறுதொழில்முனைவோர்கள் உள்ளனர். அடுத்தகட்ட வளர்ச்சி வங்கிதான்.

அதே சமயம், ஐ.டி.எஃப்.சி வங்கி பெரிய நிறுவனங்களுக்கு அதிகம் கவனம் செலுத்தியது. (ரிலையன்ஸ் கேப்பிடல், திவான், வோடபோன் உள்ளிட்ட சில). அதனால் சிறு நிறுவனங்களுக்குக் கடன் கொடுக்கும் நிறுவனங்களுடன் இணைய விரும்பியது. அதனால் இந்த இரு நிறுவனங்களை இணைக்கும் பேச்சுவார்த்தை தொடங்கியது. இந்த இரு நிறுவனங்களும் இணைந்ததால் ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸ்ட் வங்கி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இந்த இணைப்புக்குப் பின், கேப்பிடல் பர்ஸ்ட் நிறுவனத்தில் முதலீடு செய்த வார்பர்க் பின்கஸ் தனது முதலீட்டைப் பகுதி அளவுக்கு வெளியே எடுத்தது. இருந்தாலும் ஒருங்கிணைந்த நிறுவனமான ஐ.டி.எஃப்.சி பர்ஸ்ட் வங்கியில் கணிசமான பங்குகள் வார்பர்க் பின்கஸ் வசம் இன்னும் இருக்கிறது.
ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸ்ட் பேங்க் இன்று...
கடந்த ஐந்தாண்டுகளில் நிறுவனத்தின் செயல்பாட்டு லாபம் 100% அளவுக்கு உயர்ந்திருக்கிறது. நிகர வட்டி வரம்பு 1.9 சதவிகிதத்தில் இருந்து 5.9 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது.
2010-ம் ஆண்டு ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்சியல் லைஃப் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்து வைத்தியநாதன் விலகியபோது அவர் இடத்துக்கு வந்தவர் சந்தீப் பக்சி. 2018-ம் ஆண்டு ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் சந்தா கோச்சர். முறைகேடு காரணமாக அவர் விலகியபோது அவர் இடத்துக்கு நியமனம் செய்யப்பட்டர் சந்தீப் பக்சி.

ஐ.சி.ஐ.சி.ஐ குழுமத்தில் இருந்து வைத்தியநாதன் வெளியேறாமல் இருந்திருந்தால், அவர் தற்போது ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் தலைமைப் பொறுப்புக்குக்கூட வந்திருக்கலாம். ஆனால், ஃப்யூச்சர் கேப்பிடல் என்னும் நிறுவனம் உருவாகாமலே போயிருக்கும். கேப்பிடல் பர்ஸ்ட், ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸ்ட் வங்கி போன்ற நிறுவனங்கள் உருவாகாமலே போயிருக்கும்.
திறமையான மாலுமிக்கு கரையில் வேலையில்லை.
திருப்புமுனை கண்ட இன்னொரு நிறுவனம் பற்றி அடுத்த தொகுப்பில் பார்க்கலாம்!