Published:Updated:

இந்தியாவில் வெளிநாட்டு முதலீடு... மிரள வைக்கும் கறுப்பு - வெள்ளை விளையாட்டு! #LongRead

பணம்
News
பணம்

உலகமயமாக்கல் சூழல், நேர்மையாகத் தொழில் செய்பவர்களுக்குப் பல திறப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதுபோலவே, கறுப்புப்பணப் பதுக்கல்காரர்களின் வளர்ச்சிக்கும் வாய்ப்பாக அமைந்துள்ளது.

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மூலதனத்தை அதிகரிப்பது முக்கியமானதாகும். அது அந்தந்த நாட்டின் தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய் போன்ற இயற்கைவளங்களின் ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்து மதிப்பிடப்படும். ஆனால், அனைத்து நாடுகளும் அவற்றின் இயற்கைவளங்களை மட்டுமேகொண்டு வளர்ந்துவிட முடியாது. எனவே, பொருளாதார வளர்ச்சிக்காக வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும்படியான சட்டதிட்டங்களை உருவாக்குகின்றன. இந்தச் சட்டதிட்டங்கள் நாட்டுக்கு நாடு அந்தந்த நாடுகளின் சூழல், தேவையைப் பொறுத்து வடிவமைக்கப்படுகின்றன.

வெளிநாட்டு முதலீடுகள்

இந்தியாவில் வெளிநாட்டு முதலீடுகள், வெளிநாட்டு நேரடி முதலீடு (எஃப்.டி.ஐ) மற்றும் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீடு (எஃப்.பி.ஐ) என்ற இரண்டு முறைகளில் கொண்டுவரப்படுகின்றன.

ஒரு நாட்டின் உற்பத்திச் சொத்துகளில், நிறுவனங்களில் நேரடியாக வெளிநாட்டினர் முதலீடு செய்வதே வெளிநாட்டு நேரடி முதலீடு எனப்படும். வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீடு என்பது, வேறொரு நாட்டில் அமைந்துள்ள நிறுவனங்களின் பங்குகள் மற்றும் பத்திரங்கள் போன்ற நிதிச் சொத்துக்களில் முதலீடு செய்வதாகும். இந்த இரண்டு வகை முதலீடுகளில் சில வேறுபாடுகளும் ஒற்றுமைகளும் இருக்கின்றன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இரண்டுவகை முதலீடுகளுமே முதலீடு செய்யப்பட்டுள்ள நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படக்கூடியவையே. எனினும், வெளிநாட்டு நேரடி முதலீடானது, முதலீடு செய்யப்படும் நிறுவனத்தின் வளர்ச்சியில், நிர்வாகத்திலும் தனது ஒத்துழைப்பை வழங்கவல்லது. எனவே, அது அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்குக் கூடுதலாகப் பயன்படுகிறது. ஆனால் பங்குகளில் செய்யப்படும் போர்ட்ஃபோலியோ முதலீடானது, தனது முதலீட்டு வளர்ச்சியை மட்டுமே கருத்தில்கொண்டு, நிறுவனத்தின் வளர்ச்சி, தளர்ச்சிக்கேற்ப முதலீட்டை மாற்றிக்கொண்டே இருக்கும். இதை உதாரணத்தோடு சொல்வதென்றால், மாருதி நிறுவனத்தோடு சுஸுகி நிறுவனம் இணைந்து இருவருக்கிடையே தொழில்நுட்பங்களைப் பகிர்ந்துகொண்டு நிறுவனத்தை வளர்ச்சியடையச்செய்வது எஃப்.டி.ஐ வகை முதலீடாகும். தற்போது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 10% பங்குகளை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியிருப்பது எஃப்.பி.ஐ முதலீடாகும். இரண்டுவகை முதலீடுகளாலும் நிறுவனங்களுக்கு பலன் உண்டு என்றாலும், இரண்டிலும் சிறிய வேறுபாடும் உண்டு.

Representational Image
Representational Image

உலகமயமாக்கல் அறிமுகம்

வெளிநாட்டு முதலீடுகள் இந்தியாவில் குவிந்துவருவதற்கு திருப்புமுனையாக உலகமயமாக்கல் பார்க்கப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, சீனாவுக்கு அடுத்தபடியாக மக்கள் தொகை அதிகமுள்ள நாடு. உலகின் வளர்ந்த நாடுகளின் பார்வையில் மிகப்பெரிய விற்பனைச்சந்தையாக இந்தியா பார்க்கப்பட்டது. எனவே, 1950-60-ம் ஆண்டுகளுக்குப் பின்பு பரவலாக விவாதிக்கப்பட்ட உலகமயமாக்கல் சூழலுக்குள் இந்தியாவையும் கொண்டுவர வளர்ந்த நாடுகள் முயற்சியெடுத்தன. இதன்மூலம் இந்தியாவில் முதலீடுகள் செய்வது, நிறுவனங்களைத் தொடங்குவதில் ஆர்வமாக இருந்தன. சுதேசிக்கொள்கையில் தீவிரப்பற்றுள்ள இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தாராளமாக வழிகொடுக்க எதிர்ப்பு வலுவாக இருந்ததால் இந்தியா பின்வாங்கியபடியே இருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

1991-ம் ஆண்டு, முந்தைய அரசுகளின் ஸ்திரத்தன்மையற்ற ஆட்சி காரணமாக, இந்தியா கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித்தவித்த சூழலில், நரசிம்மராவ் பிரதமராகவும், மன்மோகன்சிங் நிதி அமைச்சராகவும் பொறுப்பேற்றனர். அப்போதைய பட்ஜெட் உரையில், உலகமயமாக்கலுக்கான அறிவிப்பை மன்மோகன்சிங் வெளியிட்டார். இதன்மூலம் வெளிநாட்டு இந்தியர்கள், இந்தியாவில் முதலீடு செய்ய ஊக்குவிக்கும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட கறுப்புப்பணத்தைக் கணக்கில்கொண்டுவந்து வரி வசூலிக்கவும் முடிவெடுக்கப்பட்டது. வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும்வகையில் பல்வேறு சலுகைகளும் திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. ஏற்றுமதி, இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளில் தளர்வு கொண்டுவரப்பட்டு ஏற்றுமதி, இறக்குமதி ஊக்குவிக்கப்பட்டது. இந்தியாவின் வர்த்தக முடிவுகளில், உலக வர்த்தக அமைப்பும் தலையிட்டு ஆலோசனைகளை வழங்கத்தொடங்கியது. இதன்காரணமாக, வெளிநாட்டு முதலீடுகளும் நிறுவனங்களும் இந்தியாவில் பெருமளவு கால்பதிக்கத்தொடங்கின.

மன்மோகன் சிங்
மன்மோகன் சிங்

இந்தியாவில் அடுத்தடுத்து வந்த ஆட்சிகளிலும், ப.சிதம்பரம், யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்ட நிதி அமைச்சர்களும் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்கும்வகையில் திட்டங்களைத் தொடர்ந்தனர். முதலீடுகள் குவியத்தொடங்கியதால், தொலைத்தொடர்பு, ஊடகம், போக்குவரத்து, உள்கட்டமைப்பு, விமானப்போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அபரிமித வளர்ச்சியும், இன்னொருபுறம் உள்நாட்டுத்தொழில்கள் சிலவற்றில் நசிவையும் காணமுடிந்ததால் உலகமயமாக்கலுக்கு எதிர்ப்பும் தொடர்ந்தபடியே இருந்தது. எனினும், தற்போதுள்ள சூழலில் உலகமயமாக்கலால் உலகின் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக தொழில்நுட்ப வளர்ச்சியை இந்தியா எட்டியிருக்கிறது. உலகப் பணக்காரர்களின் வரிசையில் இந்தியர்களின் பெயர்களையும் காணமுடிகிறது. உலகமயமாக்கலால் புதிய வேலைவாய்ப்புகள், தொழில்கள் உருவாகிக்கொண்டே இருக்கும்போது, இதன் வேகத்துக்குத் தாக்குப்பிடிக்கமுடியாத மக்கள் ஒருபுறம் வறுமைக்கோட்டுக்குக்கீழே வாழ்ந்துகொண்டிருப்பதும் தொடர்ந்தபடி இருக்கும்படியான, இருவேறு நிலைகளைப் பார்க்க முடிகிறது.

துறைவாரியாக வெளிநாட்டு முதலீடுகள்

உலகமயமாக்கலுக்குப்பின் செய்யப்படும் முதலீடுகள், எந்தெந்த துறையில் வளர்ச்சிக்கான வாய்ப்பு அதிகம் என்பதைக் கணக்கிட்டே செய்யப்பட்டன. இந்தியாவைப் பொறுத்தவரை, தொலைத்தொடர்பு சேவைத்துறைதான் அதிகளவிலான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்துள்ளது. 2017-19 ஆண்டுகளில் இந்தத் துறையில் மட்டும் 8,809 மில்லியன் டாலர்கள் அளவுக்கு வெளிநாட்டு முதலீடு குவிந்துள்ளது. தொலைத்தொடர்பைப் பொறுத்தவரை வெகுவேகமாக வளர்ச்சியடைந்துவரும் துறையாகும். குறிப்பாக, ரிலையன்ஸ் ஜியோ வருகைக்குப்பிறகு இலவச இணையப்பயன்பாடு, குறைந்த செல்பேசிக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கி அனைத்துத்தரப்பு மக்களையும் செல்பேசியைப் பயன்படுத்தச் செய்துள்ளது. எனவே இதில் வெளிநாட்டு முதலீடுகள் பெருமளவு குவிந்துவருகின்றன.

துறைவாரியாக முதலீடுகள்
துறைவாரியாக முதலீடுகள்
Vikatan Infographics

இதற்கு அடுத்ததாக, உற்பத்தித்துறையில் சுமார் 7,066 மில்லியன் டாலர் அளவுக்கு வெளிநாட்டு முதலீடு குவிந்துள்ளது. வாகனக்கடன்கள் எளிதில் கிடைப்பதால் வாகனப்பயன்பாடு அதிகரித்துவருகிறது. அதற்கேற்ப வாகன உற்பத்தியும் பெருகிவருகிறது. எனவே, இந்தத் துறையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பெருமளவு முதலீடு செய்து வருகிறார்கள். இதற்கடுத்தபடியாக, சில்லறை மற்றும் மொத்த வர்த்தகத்துறையில் வெளிநாட்டு முதலீடு குவிந்துவருகிறது. இந்தியர்களின் ஷாப்பிங் மோகம், கடந்த பத்தாண்டுகளாக அதிகரித்து வருகிறது. ஆன்லைன் விற்பனைத்தளங்கள், ஷாப்பிங் மால்கள் அதிகரித்துள்ளதால், இஷ்டத்துக்கு வாங்கிக்குவிக்கும் பழக்கம் அதிகரித்துவருகிறது. குறிப்பாக, ஃப்ளிப்கார்ட், அமேசான் போன்ற ஆன்லைன் தளங்களின்மூலம் இளைஞர்கள் பெருமளவு ஷாப்பிங் செய்யப் பழகியுள்ளனர். எனவே, நன்கு வளர்ந்துவரும் இந்தத் துறையில், 2017-18ம் ஆண்டில் மட்டும், சுமார் 4,478 மில்லியன் டாலர்கள் அளவுக்கு வெளிநாட்டு முதலீடுகள் குவிந்துள்ளன. வங்கிகள், நிதி நிறுவனங்களை உள்ளடக்கிய நிதிச்சேவைகள் துறையில் சுமார் 4,070 மில்லியன் டாலர்கள் அளவுக்கு வெளிநாட்டு முதலீடுகள் குவிந்துள்ளன. மேலும், வணிக சேவைகள், கணினி சேவைகள், கட்டுமானம், மின்சாரம், எரிசக்தி உற்பத்தித்துறையில் வெளிநாட்டு முதலீடுகள் அதிக அளவில் வந்துள்ளன.

வெளிநாட்டு முதலீடுகளை வரவேற்கலாம்

இந்தியாவில் முதலீடு செய்யும் வெளிநாட்டு நிறுவனங்களை, முதலீடுகளை வரவேற்கலாமா, பாதுகாப்பானதுதானா என்று பங்குச்சந்தை நிபுணர் வ.நாகப்பனிடம் கேட்டபோது, ``இந்தியாவில் வெளிநாட்டு முதலீடுகள் வரவேற்கத்தக்க ஒன்றுதான். வெளிநாட்டு முதலீடுகள் வரும்போதுதான் நம்முடைய வளர்ச்சி துரிதப்படும். அதேபோல வெளிநாட்டு நிறுவனங்களை நம் நாட்டில் தொழில் தொடங்க அனுமதிப்பது, நம்மோடு இணைந்து செயல்படும்படி செய்வதும்கூட வரவேற்கத்தக்கதுதான். நாம் தினசரி பயன்படுத்தும் பல்வேறு தொழில்நுட்ப சாதனங்களும் வெளிநாட்டுத் தயாரிப்புகளின்மூலம் நமக்கு கிடைப்பவையே. ஆனால், எந்தெந்த துறைகளில் வெளிநாட்டு நிறுவனங்களை வரவேற்கலாம், எந்தெந்த துறைகளில் கட்டுப்படுத்தலாம் என்பதைப் புரிந்து செயல்படுவது அவசியம். இன்ஷூரன்ஸ் துறையைப் பொறுத்தவரை பெரிய தொழில்நுட்பம் ஏதும் அதில் இல்லை. நம் நாட்டிலுள்ள இன்ஷூரன்ஸ் நிறுவனங்களே சிறப்பாகச் செயல்படுகின்றன. கிளெய்ம்களுக்கு செட்டில்மென்ட் செய்வதில் வெளிநாட்டு நிறுவனங்களைவிட சிறப்பாகச் செயல்படுகின்றன. அப்படியிருக்கும்போது இன்ஷூரன்ஸ் துறையில் வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதிப்பது தேவையற்றது.

வ.நாகப்பன்
வ.நாகப்பன்

அதேபோல வெளிநாட்டுக் குளிர்பான தயாரிப்பு நிறுவனங்களும் நமக்கு தேவையில்லாதவையே. உள்நாட்டு குளிர்பானங்கள், குளிர்பான நிறுவனங்களே நன்முறையில் செயல்படும்போது, வெளிநாட்டு நிறுவனங்களின் அவசியம் இல்லை. ஆன்லைன் துறையில், வால்மார்ட் போன்ற நிறுவனங்களின் முதலீட்டை அனுமதித்திருக்கத் தேவையில்லை. ஆனால், நம் இந்திய நிறுவனமான ஃப்ளிப்கார்ட் மேலும் வளர்ச்சியடைய வேண்டியிருக்கும்போது, அதற்கு முதலீடு தேவைப்படுகிறது. இந்தியாவிலேயே அதற்குத் தேவையான முதலீடுகள் கிடைக்காதபட்சத்தில், வால்மார்ட் நிறுவனத்தோடு ஃப்ளிப்கார்ட் கைகோத்தது தவிர்க்கமுடியாதது.

நம்மிடம் அனைத்துத் தொழில்நுட்ப வசதியும் இருக்கின்ற துறையில் வெளிநாட்டு நிறுவனங்கள் தேவையில்லை. அதேபோல, குறைந்த தேவையே உள்ள துறைகளிலும் வெளிநாட்டு நிறுவனங்கள் தேவையில்லை. அதேவேளை, நம்மிடம் தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத துறைகளில் வெளிநாட்டு நிறுவனங்களும் முதலீடுகளும் வரவேற்கப்படவேண்டியவையாகும். நம் சந்ததிகளை வளர்க்கும்போதே தொழில்முனைவோர்களாக வருவதற்கு வழிசெய்ய வேண்டும். தொழில்முனைவோர்களாக இருப்பவர்களை இந்தச் சமுதாயம் மதிக்க வேண்டும். அத்தகைய சூழல் இருந்தால் நம்முடைய தொழில்துறை பெரிய அளவில் வளர்ச்சியடையும். வெளிநாட்டு நிறுவனங்களின் தேவை இருக்காது" என்றார்.

வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கத் தொடங்கியதும், நம் நாட்டுத்தொழில்களும் பல்வேறு நாடுகளில் தங்களது கிளை நிறுவனங்களைத் தொடங்கியுள்ளன. நம் நாட்டில் தொழில் தொடங்க வந்து, நம்மையே ஆட்சிசெய்த இங்கிலாந்து நாட்டின் ஜாகுவார் லேண்ட் ரோவர்ஸ் நிறுவனத்தை தற்போது இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இதுபோன்ற மாற்றங்கள், வெளிநாட்டு முதலீடுகளுக்கான அனுமதியால் ஏற்பட்டுள்ள மாற்றமேயாகும். வெளிநாட்டு நிறுவனம் ஒன்றை வாங்குவதற்கான தேவையும், நிதி வசதியும் உள்ள நிறுவனங்கள் வாங்குகிறார்கள். அது அந்தந்த நாடுகளின் சட்டதிட்டங்களின்படி செயல்படுத்தப்படுகிறது. இத்தகைய முதலீட்டுப் பரிமாற்றத்திலிருந்து சீனா, வட கொரியா போன்ற சில நாடுகள் சற்று விலகியிருக்கின்றன. முதலீடு செய்வதற்கு சற்று கூடுதலான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

முதலீடு செய்யும் நாடுகள்

இந்தியாவில் மொரீஷியஸ், சிங்கப்பூர், நெதர்லாந்து, அமெரிக்கா, ஜப்பான், கெய்மான் தீவுகள், ஜெர்மனி, ஹாங்காங், இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, UAE உள்ளிட்ட நாடுகள் முதலீடு செய்வதில் முதன்மையாக உள்ளன. இந்தப் பட்டியலில் மொரீஷியஸ், கெய்மான் தீவுகள் போன்ற மிகச் சிறிய தீவுகள் முன்னணியில் இருப்பது ஆச்சர்யமளிக்கிறதா? இந்த ஆச்சர்யத்துக்குப்பின்னே பெரிய கறுப்புப்பணத்தின் முதலீட்டு உத்தியே இருக்கிறது. உலகமயமாக்கல் சூழல், நேர்மையாகத் தொழில் செய்பவர்களுக்குப் பல திறப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதுபோலவே, கறுப்புப்பணப் பதுக்கல்காரர்களின் வளர்ச்சிக்கும் வாய்ப்பாக அமைந்துள்ளது.

முதலீடு செய்யும் நாடுகள்
முதலீடு செய்யும் நாடுகள்
Vikatan Infographics

உலகில் மொத்தம் 195 நாடுகள் உள்ளன. இவற்றில் மிகவும் குட்டி நாடுகள், பொருளாதாரத்தில் நலிவடைந்த நாடுகளும் அடக்கம். தற்போதுவரை, சுமார் 86 நாடுகளோடு வரிவிதிப்பு, வர்த்தக ஒப்பந்தங்களை இந்தியா செய்துள்ளது. இதேபோல ஒவ்வொரு நாடும் அவற்றுக்கென தனிப்பட்ட வரிவிதிப்பு முறையைக் கொண்டிருக்கின்றன. இதில், மொரீஷியஸ், கெய்மன் தீவுகள் உள்ளிட்ட சில நாடுகள், இரட்டை வரிவிதிப்பு தடுப்பு ஒப்பந்தம் போட்டுள்ளன. இதன்படி, இந்தியாவில் வரி செலுத்திய தொகைக்கு மீண்டும் அந்த நாடுகளில் வரிவிதிக்கப்படமாட்டாது. அதேபோல குறிப்பிட்ட சில நாடுகளுக்குள் தனிப்பட்ட முறையில் வரிவிதிப்பு ஒப்பந்தம் போட்டுக்கொள்வதும் உண்டு.

இந்திய நிறுவனத்தின் பங்குகளில் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று முதலீடு செய்கிறது எனக்கொள்வோம். அந்த முதலீட்டுக்குக் கிடைக்கும் லாபத்துக்கு இந்திய வருமான வரிச்சட்டப்படி வரி செலுத்தியாக வேண்டும். இது இந்தியாவுக்குள் வந்து தொழில் செய்து லாபமீட்டும் வெளிநாட்டு நிறுவனம் மற்றும் வெளிநாட்டிலில் இருந்தபடி இந்தியாவில் முதலீடு மட்டுமே செய்யும் நிறுவனங்களுக்கும் பொருந்தும். இந்திய முதலீட்டிலிருந்து கிடைக்கும் டிவிடென்டுக்கும் வரி உண்டு. வரி செலுத்தியதுபோக லாபத்தை வெளிநாட்டுக்கு எடுத்துச்செல்வார்கள். இது இன்னொரு முறை.

ரவுண்ட் ட்ரிப்பிங் முறை

இதற்கு அடுத்ததாக இருக்கும் முறைதான் முக்கியமானது. சில நிறுவனங்கள், நல்ல லாபத்தில் இயங்கினாலும் டிவிடென்ட் மட்டும் தரமாட்டார்கள். காலாண்டு முடிவில் லாபமீட்டிய கணக்கு தெரியவந்ததும், பங்குகளின் விலை ஏறத்தொடங்கும். எனவே இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். இந்த மாதிரி நிறுவனங்களில் அந்நிய நிறுவனங்களின் முதலீடு பெரும்பான்மையாக இருக்கும். விலை ஏறும் சூழலில் பங்குகளை விற்பனை செய்வார்கள். அப்படி விற்கும்போது அந்த விற்பனையில் கிடைக்கும் லாபத்துக்கு நீண்டகால மூலதன ஆதாயம் கிடைக்கும். இதற்கு இந்தியாவில் வரி கிடையாது. ஆக, இந்த லாபத்தை மொரீஷியஸ், கெய்மன் தீவுகள் போன்ற நாடுகளில் உள்ள நிறுவனத்தில் முதலீடு செய்யும்போது, அந்த நாடுகளின் சட்டப்படி அங்கும் வரிசெலுத்தத் தேவையில்லை. மீண்டும் அந்த நாடுகளிலிருந்தபடியே தொடர்ச்சியாக சுழற்சிபோல இந்தியாவில் முதலீடு செய்துகொண்டே இருக்கலாம். இதனை ரவுண்ட் ட்ரிப்பிங் (round tripping) என்பார்கள்.

மொரீஷியஸ் நாட்டைப் பொறுத்தவரை அவர்களது வருமானமே வெளிநாட்டவரின் சுற்றுலாவை நம்பித்தான் இருக்கிறது. எனவே, வெளிநாட்டவரை ஈர்க்கும்விதமாக அங்கே நிறுவனம் நடத்தி லாபமீட்டுபவர்களுக்கு வரிவிதிப்பே கிடையாது. அதேபோல, அங்கு நிறுவனங்கள் தொடங்குவது மிகவும் எளிது. அந்த நிறுவனங்கள், எழுத்தில் மட்டுமே இருக்கும், கட்டடமாக இருப்பதில்லை. அரசாங்கம் எவ்வித கெடுபிடியும், சோதனையும் செய்வதில்லை. கறுப்புப்பணத்தைப் பதுக்கி, பெருக்க நினைப்பவர்கள், மொரீஷியஸில் லெட்டர்பேடு நிறுவனங்களைத் தொடங்கி லாபமீட்டுகிறார்கள். இந்தியாவில் செய்யப்படும் அந்நிய முதலீடுகளில் வெறும் 65 கி.மீ நீளம், 45 கி.மீ. அகலம் கொண்ட மொரீஷியஸ் தீவுதான் முதலிடத்தில் இருக்கிறது. இதில் அடங்கியிருக்கும் மர்மமும் இதுதான்.

முதலீடு செய்யும் நாடுகள்
முதலீடு செய்யும் நாடுகள்
Vikatan Infographics

இதேபோல இன்னும் சில வழிகளில் மொரீஷியஸ் வழியாக கறுப்புப்பணத்தை இந்தியாவில் முதலீடு செய்து வெள்ளையாக்கும் வித்தைகள் நடந்துவருகின்றன. கடந்த 2019-ம் ஆண்டில்தான் இந்தியப் பங்குச்சந்தையில் மூலதன ஆதாயத்துக்கும் 10% வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக மொரீஷியஸ்வழி முதலீடுகள் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் இன்றுவரை மொரீஷியஸ் முதலீடுகளில் பெரிய மாற்றமில்லை. கடந்த மார்ச் மாதத்தில் மட்டுமே, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக மொரீஷியஸ் வழியாக இந்தியாவில் சுமார் 2,83,487 கோடி ரூபாய் அந்நிய முதலீடு வந்துள்ளது.

அடுத்ததாக, சிங்கப்பூரைப் பொறுத்தவரை, தொழில் தொடங்க விரும்பும் நிறுவனங்களை, முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களை வரவேற்கும் நாடாகும். அவர்களுக்குப் பாதுகாப்பான சட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சிங்கப்பூரில் செய்யப்படும் முதலீட்டுக்கு வரி செலுத்தியாக வேண்டும். ஆனால், ஏற்கெனவே இன்னொரு நாட்டில் செலுத்தப்பட்ட வரிவிகிதம் போக, கூடுதல் வரியை மட்டும் செலுத்தினால் போதும். சிங்கப்பூரில் வெளிநாட்டவர்கள் வங்கிக்கணக்கு தொடங்குவது மிகவும் கடினம். நிறைய விதிமுறைகள் இருக்கின்றன. அதேவேளை, அங்கே ஒரு நிறுவனத்தைத் தொடங்குவது மிகவும் எளிது. ஒரே நாளில் ஆன்லைன் மூலமாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கவோ, மூடவோ முடியும். நிறுவனத்தைத் தொடங்கியபின், நிறுவனத்தின் பெயரில் வங்கிக்கணக்கு தொடங்கிவிடலாம். இதுபோன்ற சில காரணங்களால சிங்கப்பூரில் நிறுவனங்கள் அதிகமாக உள்ளன. அங்கிருந்து இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்யப்படுகின்றன.

சீனாவுக்குக் கடிவாளம்!

தற்போது கொரோனா பரவலால் உலக நாடுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சீனாவின் செயல்பாடு மற்ற நாடுகளிடையே சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது. கொரோனாவால் அனைத்து நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டிருக்கும் சீனா பல்வேறு நாடுகளில் முதலீடுகளைச் செய்யத் தொடங்கியுள்ளது. இந்திய தனியார் வங்கியான ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் சுமார் 1,74,92,909 பங்குகளை, அதாவது 1.01 சதவிகிதம் பங்குகளை சீனாவின் `பீப்பிள் பேங்க் ஆஃப் சீனா' வாங்கி இருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் இந்த வங்கியின் பங்கு மதிப்பு 41 சதவிகிதம் வீழ்ச்சியைக் கண்டது. இதனை, சீன வங்கி தனக்கு சாதகமாக்கிக் கொள்ள நினைத்து, இந்த முதலீட்டைச் செய்திருக்கிறது. ஏற்கெனவே அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் சீனா முதலீடு செய்வதற்கும், சொத்துகள் வாங்குவதற்கும் கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில், தற்போது இந்தியாவும் சீனாவுக்குச் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சீன வங்கியின் செயல்பாட்டால், இந்தியா சுதாரித்துக்கொண்டது என்றே சொல்லலாம். இனி வரும் நாள்களில் இந்தியாவின் மற்ற நிறுவனங்களும், வீழ்ச்சியைச் சந்திக்கும் என்கிற நிலை இருப்பதால், இதைப் பயன்படுத்தி அந்நிய நிறுவனங்கள் நாட்டிற்குள் படையெடுக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

இந்த அவசர நிலையைக் சுட்டிக்காட்டி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, ``அந்நிய நேரடி முதலீடு விஷயத்தில் மத்திய அரசு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் மற்ற நாடுகள் நமது பொருளாதாரத்தைத் தட்டிச் செல்ல வாய்ப்பு இருக்கிறது" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்திருந்தார். இதையடுத்து, இந்தியாவுடன் எல்லைகள் பகிர்ந்து கொண்டிருக்கும் எந்த நாடும், சந்தர்ப்பவாதத்தைப் பயன்படுத்தி இந்திய தொழில்களைக் கபளீகரம் செய்வது, கொரோனா வைரஸ் தொற்றைப் பயன்படுத்தி அபகரிப்பதைக் கட்டுப்படுத்தும் வகையில், இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பினால், மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும் எனச் சட்டத்தை திருத்தியிருக்கிறது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

குறிப்பாக, சீனாவுக்கு இந்தியா இந்த விஷயத்தில் கடிவாளம் போட்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். சீனா இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் என்றால், மத்திய அரசின் அனுமதியைக் கட்டாயம் பெற வேண்டும். இதனால், கோபம் அடைந்திருக்கும் சீனா, ``பாரபட்சமான முறையில் இந்தியா திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளது. அந்நிய முதலீடு மீது இந்தியா கொண்டு வந்திருக்கும் புதிய விதிகள் உலக வர்த்தக அமைப்பின் கொள்கைகளுக்கு எதிரானது. அனைத்து நாடுகளில் இருந்து வரும் முதலீடுகளையும் ஒரே மாதிரி நடத்தி, நியாயமான, சமமான வர்த்தகச் சூழலை இந்தியா உருவாக்கும் என்று நம்புகிறோம்'' எனக் காட்டமாகத் தெரிவித்துள்ளது.

ஆனால், சீனாவின் இந்தக் கூற்றுக்கு நாசுக்காக மறுப்பு தெரிவித்திருக்கும் இந்தியா, ``அந்நிய நேரடி முதலீடு விஷயத்தில் மாற்றி அமைக்கப்பட்டிருக்கும் கொள்கை எந்தவொரு நாட்டையும் இலக்காகக் கொண்டிருக்கவில்லை. தற்போதைய கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலகட்டத்தில், நெருக்கடி நிலைமையில் உள்ள இந்திய நிறுவனங்களை காப்பாற்றவே அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திருத்தங்கள் அந்நிய நாட்டின் முதலீடுகளைத் தடை செய்யவில்லை. மாறாக, முதலீடுகளுக்கான ஒப்புதல் வழிமுறையை மட்டும் மாற்றியுள்ளது. இந்தியாவில், ஏற்கெனவே பல துறைகள் அரசு மூலமாக மட்டுமே முதலீடு செய்யும் நிலையில் இருப்பதைச் சீனா கவனத்தில் கொள்ள வேண்டும்" எனச் சொல்லியிருக்கிறது.

சீனாவுக்கு மாற்று இந்தியாவா?

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பலவும் சீனாவைத்தான் அதிகம் நம்பியிருந்தன. ஆனால், தற்போது சீன நிறுவனங்கள் உட்பட, அந்நிய நாட்டு நிறுவனங்கள் பலவும் இந்தியாவுக்கு வர நினைக்கின்றன. ஏனெனில், இந்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பரில் அந்நிய நேரடி முதலீடுகளை ஊக்குவிக்கும் விதமாக, கார்ப்பரேட் வரி விகிதத்தினை 25 சதவிகிதமாக குறைத்தது. அதோடு புதிதாக தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு 15 சதவிகிதம் வரி விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டது. இது தென் கிழக்கு ஆசியாவிலேயே மிகக் குறைவான வரியாகும்.

உலகம் முழுக்கக் கொரோனாவின் தாக்கம் உக்கிரமாக இருக்கும் நிலையில், பல நிறுவனங்கள் செலவினைக் குறைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஆட்குறைப்பு, சம்பளக் குறைப்பு, உற்பத்தி குறைப்பு, உற்பத்தி ஆலைகளை வேறு இடங்களுக்கு மாற்றுதல், குறிப்பாகச் சீனாவிலிருந்து மாற்று இடங்களுக்கு மாற்ற நினைக்கின்றன. இந்த நிலையில்தான் இந்தியாவின் கவர்ச்சியான கார்ப்பரேட் வரி விகிதம் அவர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. மேலும், சீனாவில் தற்போது பல்வேறு காரணங்களுக்காகப் பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சி மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் அமெரிக்காவுடனான வர்த்தகப் போர். சீனாவிற்கு எதிராக அமெரிக்காவும், அமெரிக்காவிற்கு எதிராகச் சீனாவும் அதிகளவிலான வரி விதிக்கப்பட்ட நிலையில், அண்மைக்காலமாக பல வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

China Outbreak
China Outbreak
AP

இந்நிலையில்தான் கொரோனா வைரஸ் பாதிப்பும் சீனாவின் வர்த்தகச் சந்தையைப் பெரிய அளவில் பாதித்துள்ளது. இப்படியான இக்கட்டான சூழ்நிலையில் சீனாவில் புதிய வாய்ப்புகள் பெரிதாகக் கிடைக்கவில்லை என்பதால், சீனா முதலீட்டாளர்கள் உட்பட, வெளிநாட்டு முதலீட்டாளர்களும் இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களிலும் உற்பத்தித் துறையிலும் முதலீடு செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள். அந்தவகையில், சுமார் 1,000 வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய இந்திய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும், அதில் குறைந்த பட்சம் 300 நிறுவனங்கள் தீவிர பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, மொபைல் உற்பத்தி நிறுவனங்கள், ஜவுளி மற்றும் சிந்தடிக் துணி உற்பத்தி உள்ளிட்ட பல வகையான உற்பத்தி நிறுவனங்கள் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது.

சீனாவின் முதலீட்டில் இருக்கும் அரசியல் குறித்து பங்குச்சந்தை நிபுணர் ரெஜிதாமஸிடம் கேட்டபோது, ``தற்போது வுகானில் தொடங்கிய கொரோனாவால் அனைத்து நாடுகளும் பாதிப்பை எதிர்கொண்டுவருகின்றன. இதில் கொரோனா வைரஸ், சீனா திட்டமிட்டு பரப்பியதாக இருக்குமோ என்ற சந்தேகவும் விவாதிக்கப்பட்டு வருகிறது. ஏனென்றால், உலகப் பங்குச்சந்தைகள் பலவும் அடிவாங்கி, பெரும்பாலான முன்னணி நாடுகளின் பங்குகளும் விலைகுறைந்த நிலையில், சீனா அவற்றில் முதலீடு செய்வதற்கான திட்டமோ என்றும் சந்தேகிக்கப்படுகிறது. அதற்கேற்ப அமெரிக்காவின் பல நிறுவனங்களின் பங்குகளில் சீனா முதலீடு செய்துள்ளது. ஆக இதையெல்லாம் பார்க்கும்போதுதான், இந்தியாவும் இந்த விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருக்கிறது. சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் நாமும் வந்துவிடக்கூடாது என்ற எண்ணம் மேலோங்கி வருகிறது. ஏற்கெனவே சீனப்பொருள்களைத்தான் நாம் நிறைய வாங்கிக்குவிக்கிறோம். இந்தக் காரணங்களால் சீன நேரடி முதலீட்டைத் தடுத்து வைத்திருக்கிறோம். உலக வர்த்தக அமைப்பானது வர்த்தகத்தில் கட்டுப்பாடுகள் இருக்கக்கூடாது என்று கூறுகிறது. நாமும், அமெரிக்காவும் உலக வர்த்தக அமைப்பின் உறுப்பினர்களாக இருக்கிறோம். எனவே நமக்கும் அமெரிக்காவுக்கும் இடையே தடையற்ற வர்த்தகம் நடைபெறுகிறது. ஆனால் சீனாவோ அப்படி அனுமதிப்பதில்லை. வெளிநாட்டவர்கள் எந்த ஒரு நிறுவனத்திலும் நேரடியாக முதலீடு செய்து நிர்வாகத்தைக் கைப்பற்ற முடியாது. எனவே சீனாவின் முதலீடுகளுக்கு நாம் கட்டுப்பாடு விதிப்பது சரியானதே" என்றார்.

பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்
பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்

வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி என்பது, வளர்ந்துவரும் நாடுகளுக்கு நல்வாய்ப்பாக இருக்கும் சூழலில், நாடுகளுக்கிடையிலான வர்த்தகப்போர்களை உருவாக்கவும் தவறவில்லை. குறிப்பாக எண்ணெய் வளம்மிக்க இஸ்லாமிய நாடுகளைக் குறிவைத்தே பல்வேறு போர்கள், உள்நாட்டுக்குழப்பங்கள் சமீப காலங்களில் நடந்துவருவதைப் பார்க்க முடிகிறது. சீனா-அமெரிக்கா வர்த்தகப்போர், சவுதி அரேபியா-ரஷ்யா இடையிலான கச்சா எண்ணெய் விலை நிர்ணயப்போர், சீனா-இந்தியா வர்த்தகப்போர் போன்றவை அனைத்துமே உலக நாடுகளிடையே வர்த்தக வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள ஈகோ பிரச்னையின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது. இத்தகைய ஈகோவைத் தீர்க்கும் வலிமையான அமைப்பாக உலக வர்த்தக அமைப்பு வலிமை பெறுவதும், உலகின் நலிவைடைந்த, வறுமையில் வாடும் நாடுகளையும் முன்னேற்றம் காணச்செய்து, ஒட்டுமொத்த உலகின் நன்மையை இலக்காகக்கொண்டு உலக நாடுகள் செயல்படுவதுமே இன்றைய தேவையாகும்.