Published:Updated:

உலகத்தை ஆட்டிப்படைக்கும் ஆட்குறைப்பு; இந்திய நிறுவனங்களின் நிலை என்ன?#LongForm

ஆட்குறைப்பு நடவடிக்கைகள்
ஆட்குறைப்பு நடவடிக்கைகள்

'ஏர் இந்தியா' மற்றும் 'இண்டிகோ' நிறுவனங்கள் ஏற்கெனவே ஆட்குறைப்பை அறிவித்துவிட்டன.

கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் ஊரடங்கு அமலால், இந்தியாவில் 6 முதல் 13 கோடி மக்கள் வரை, தங்களுடைய வேலையை இழப்பார்கள் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்த வேலையிழப்பானது தொழிற்சாலைகளில் இருந்து, பிளாட்பார தொழில் வரை இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில், கொரோனா பரவாமல் இருக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து ஊரடங்கை நீட்டித்துக்கொண்டே இருக்கின்றன. தமிழக அரசாங்கம், ஊரடங்குக்குள் ஒரு ஊரடங்கைப் போட்டு கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முயல்கிறது. ஆனால், இந்த ஊரடங்கினால் அனைத்துத் தொழில் நிறுவனங்களும் முற்றிலுமாக முடங்கிப் போயிருக்கின்றன. பல இந்திய நிறுவனங்கள் நஷ்டத்தைச் சமாளிக்க முடியாமல் ஆட்குறைப்பு அறிவிப்புகளை வெளியிட ஆரம்பித்திருக்கின்றன. கொரோனா நாள்களுக்குப் பிறகு, நிறுவனங்களின் வேலையிழப்பு நடவடிக்கைகள் இன்னும் அதிகமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.  

தற்போதைய நிலையில் தமிழ்நாட்டில் `வேலையின்மை விகிதம்' (வேலையில்லாதவர்களின் சதவிகிதம்) 49.8 சதவிகிதமாக இருக்கிறது. இது இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான அளவாகும்.

ஆட்குறைப்பு பதற்றம்... வேலை இழப்பைத் தவிர்க்கும் வழிகள்!

``கொரோனா தொற்று உலகளவில் ஏற்பட்ட சுகாதார மற்றும் உடல் நல பாதிப்பு மட்டும் அல்ல, தொழிலாளர்களையும் அவர்களைத் தொடர்ந்து பொருளாதாரத்தையும் மிகத் தீவிரமாகப் பாதிக்கும் விஷயம் எனவும், உலகளவில் பல கோடி வேலைகள் அபாயத்தில் இருப்பதாக"  சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் எந்தெந்த துறைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன? எந்தெந்த துறைகளில் வேலையிழப்புகள் அதிகம் இருக்கும்? எதிர்காலத்தில் துறை சார்ந்த நடவடிக்கைகள் எப்படி இருக்கும்? என்கிற விஷயங்களைத்தான் இந்தக் கட்டுரையில் அலசப்போகிறோம்.

வீழ்ச்சியில் விமானத்துறை!

தற்போதைய நிலையில் பல நாடுகள் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளத் தடை விதித்துள்ளன. ஏற்கெனவே விமான பயணத்துக்காக முன்பதிவு செய்த பயணிகள், தங்கள் பயணத்தை ரத்து செய்து வருவதால், எதிர்காலத்திலும் விமான போக்குவரத்து நிறுவனங்கள் விமான சேவையை ரத்து செய்யும் நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

4.5 கோடி!
விமானத்துறையில் வேலையிழப்பு!

ஆஸ்திரியா, பெல்ஜியம், டென்மார்க், நார்வே, சுவிட்சர்லாந்து, துருக்கி, இங்கிலாந்து உட்பட மொத்தம் 36 நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு இந்தியா தடை விதித்துள்ளது. அதேபோல இந்தியர்களும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள வெளிநாடுகளுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

வேலையின்மை விகிதம்
வேலையின்மை விகிதம்

இதனால் விமானப் போக்குவரத்துத் துறையில், 5 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பும், 4.5 கோடி வேலை இழப்பும் இருக்கும் என, கணிக்கப்பட்டுள்ளது. அடுத்தது என்ன நடக்கும் என்பது தெரியாததால், இந்தத் துறையில், அடுத்த சில மாதங்களுக்கு, தற்போதுள்ள நிலையையே சந்திக்க நேரிடும். தற்போதைய நிலையில் கொரோனாவால், இந்தத் துறை சார்ந்த நடவடிக்கைகள், 66 சதவிகிதம் குறைந்துள்ளதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

தனியார் வசமாகும் ஏர் இந்தியா!

`ஏர் இந்தியா' மற்றும் `இண்டிகோ' நிறுவனங்கள் ஏற்கெனவே வேலையிழப்புகளை அறிவித்துவிட்டன. `இண்டிகோ'  நிறுவனம், தங்களின் மூத்த ஊழியர்களின் ஊதியத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையைப் பிடித்தம் செய்வதாக அறிவித்தது.

ரூ.5 லட்சம் கோடி!
விமானத்துறையின் வருமான இழப்பு!

`கோ ஏர்' நிறுவனமும் தனது வெளிநாட்டு விமானிகளின் ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளது. மேலும், தனது சர்வதேச விமான சேவைகளை நிறுத்துவதாகவும், ஊதியம் இல்லாத திட்டத்தின்படி தனது ஊழியர்களைச் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுமாறும் அறிவித்துள்ளது.

அதிக பாதிப்புகளைச் சந்திக்கும் சுற்றுலாத்துறை!

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க, மக்கள் யாரும் பயணம் மேற்கொள்ளக் கூடாது என அறிவுறுத்தப்பட்டதால் ரூ.5 லட்சம் கோடி பணப் புழக்கம் உள்ள சுற்றுலாத் துறையில் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றினால், சுற்றுலா மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழில்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தத் துறையில் கடும் வேலையிழப்பு ஏற்படக்கூடும் எனவும் அத்துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

இந்தியாவின் மொத்த வேலைவாய்ப்பில், சுற்றுலாத்துறை மட்டுமே 12.75 சதவிகிதம் வேலைவாய்ப்பை, அதாவது 5.56 சதவிகிதம் நேரடி மற்றும் 7.19 சதவிகிதம் மறைமுக வேலைவாய்ப்பைக் கொண்டுள்ளது. கடந்த 2018-19-ம் நிதி ஆண்டில் சுற்றுலாத்துறையில் 8.7 கோடிக்கும் அதிகமானோர் பணியாற்றியதாக, இந்திய சுற்றுலா அமைச்சகத்தின் 2019-20-ம் நிதி ஆண்டின் அறிக்கை தெரிவிக்கிறது. 

வேலையிழந்தவர்கள்
வேலையிழந்தவர்கள்

மக்களின் பயணம் தற்காலிகமாகத் தடைபட்டுள்ளதால், தங்கும் விடுதியில் பணிபுரிகிறவர்கள், சுற்றுலாவுக்குப் பயன்படும் வாகன ஓட்டுநர்கள், கைவினைப் பொருள்கள் செய்யும் கலைஞர்கள் எனப் பலருக்கும் பாதிப்பு ஏற்படும். இந்த நிலை தொடர்ந்தால், இந்தத் துறையில் 60-லிருந்து 70 சதவிகிதம் மக்கள் வேலை இழக்க வாய்ப்புள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில், இந்திய சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் தொழில்களில், 3.8 கோடிக்கு, அதிகமான வேலையிழப்பு இருக்கும் என, நிதி சேவைகள் மற்றும் வணிக ஆலோசனை நிறுவனமான கே.பி.எம்.ஜி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

கொரோனாவால் முதலில் பாதிக்கப்பட்டது, சுற்றுலாத் துறை. அதுபோல், கடைசியாக மீள்வதும் இந்தத் துறையாகவே இருக்கும்.

இந்தத் துறையின் மீதான கொரானாவின் தாக்கமானது, ஜூன் மாதம் இறுதிவரை கடுமையாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டம் சுற்றுலா சீசன் இல்லாத காலகட்டம் என்பதால், வழக்கமாகவே இந்த மாதங்களில் சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கும். வருமானமும் சரிந்திருக்கும். வழக்கமாக அக்டோபர் மாதத்தில் சுற்றுலாத்துறையின் வருமானம் நன்றாக இருக்கும். ஆனால், இன்றைய சூழ்நிலை அதைக் கணிக்க முடியாததாக இருக்கிறது. 

மேலும், இந்தத் துறையின் பாதிப்புகளைக் கேரளா, இமாசலப் பிரதேசம் போன்ற சுற்றுலாவின் வருமானத்தைப் பெரிதும் நம்பியுள்ள மாநிலங்கள் அதிகமாக உணரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் முதலில் பாதிக்கப்பட்டது, சுற்றுலாத் துறை. அதுபோல், கடைசியாக மீள்வதும் இந்தத் துறையாகவே இருக்கும்.

ஊசலாடும் உணவுத் துறை!

வைரஸ் குறித்த அச்சம் காரணமாகவும், அரசாங்கத்தின் அறிவுரையாலும் மக்கள் வீட்டைவிட்டு வெளியில் வருவதில்லை. இதனால் உணவு விடுதிகள் மிகுந்த நஷ்டத்தை எதிர்கொள்கின்றன. பல மாநிலங்களில் உணவு விடுதிகள் மூடப்பட்டுள்ளன. 

``70 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு நேரடி வேலைவாய்ப்பை வழங்கி வரும் உணவுத் துறை, உணவகத்தொழிலின் மூலம் ஆண்டுக்கு சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் வருமானத்தைப் பார்த்து வருகிறது. ஆனால், கொரோனா பாதிப்புக்குப் பிறகு இத்துறையானது அதன் பிழைப்புக்காக கடுமையாகப் போராடி வருவதாகவும், தற்போதைய நிலையில் மிகப்பெரிய வருவாய் இழப்பை சந்தித்துக் கொண்டிருப்பதாகவும்"  இந்திய தேசிய உணவக சங்கம் 'NRAI' தெரிவித்துள்ளது. 

Hotel
Hotel

தற்போதைய ஊரடங்கு  முழுமையாக நீக்கப்பட்டாலும், பாதிக்கப்படும் துறைகளில் உணவுத் துறையும் ஒன்றாக இருக்கும். ஏனெனில், இத்துறையின் தேவை உடனடியாக அதிகரிக்கும் என்று சொல்ல முடியாது. மக்கள் முன்புபோல் உணவகங்களுக்கு வந்து உணவு சாப்பிட முனைப்பு காட்ட மாட்டார்கள். அவர்களின் செலவு செய்யும் முறையில் நிச்சயமாக மாற்றம் உருவாகியிருக்கும். இது போன்ற பல காரணங்களால், ஹோட்டல் மற்றும் உணவகத் தொழிலில் கிட்டத்தட்ட 15 சதவிகித வேலைகள் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கொரோனாவால் வேலையிழப்பு... வளைகுடாவில் தவிக்கும் 80 லட்சம் இந்தியர்கள் நிலை என்னவாகும்?

பல்வேறு தொழில்கள் பாதிப்பால், `டிரக்' டிரைவர்களுக்கு வேலை குறையும். அதனால், நெடுஞ்சாலைகளில் இயங்கி வரும், `தாபா' எனப்படும் உணவகங்கள், `மெக்கானிக்' கடைகள் பாதிக்கப்படும். இப்படி, கண்ணுக்குத் தெரியாமல் பலருடைய வேலையை, இந்தக் கொரோனா பறித்துள்ளது. உணவுத் துறை சார்ந்த நிறுவனங்களுக்கு அரசின் ஆதரவு இல்லாமல் போனால், ஊரடங்குக்குப் பிறகும் மேலும் பல நிறுவனங்கள் மூடப்படும் வாய்ப்புகளே அதிகம் இருக்கிறது.

ஆட்குறைப்பு நடவடிக்கையைக் கடைசியாக கையிலெடுங்கள்!

``தொழிலாளர்கள் இல்லாமல் எந்தவொரு நிறுவனமும் இல்லை என்பதால், தங்களின் தற்போதைய வருமான இழப்புகளைச் சமாளிக்க, குறைவான வேலை நேரம், ஊழியர்களுக்குச் சம்பள வெட்டு ஆகியவற்றை முதலில் நடைமுறைப்படுத்திய பிறகு , கடைசியாக ஆட்குறைப்பை நிறுவனங்கள் பரிசீலிக்கலாம்.   

சி.கே.ரங்கநாதன்
சி.கே.ரங்கநாதன்

அனைத்துத் துறைகளிலும் வருமானம் குறையும்போது, சம்பளக் குறைப்பு, ஊழியர் எண்ணிக்கை குறைப்பு போன்ற நடவடிக்கைகளை நிறுவனங்கள் முன்னெடுக்கும். இதனால் வேலையிழப்புகள் அதிகரிக்கும். ஆனால், இப்படியான நிலை ஒரு நாட்டின் பொருளாதாரத்துக்கு நல்லதல்ல. இந்நிலை உருவாகாமல் தடுக்க, அரசாங்கம் தொழில் நிறுவனங்களுக்கான நிதி ஆதரவு நடவடிக்கைகளை அவசியம் மேற்கொள்ள வேண்டும்" என்கிறார் கவின்கேர் நிறுவனத்தின் தலைவர் சி.கே.ரங்கநாதன்.

உற்பத்தித் துறை வேகமெடுப்பது சந்தேகமே!

உற்பத்தித் துறையில், 5.64 கோடி பேர் பணியாற்றுகின்றனர். ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டாலும், அனைத்துத் தொழிற்சாலைகளும் உடனடியாக முழு வீச்சில் இயங்கத் துவங்குமா என்பது சந்தேகமே. ஆட்டோமொபைல், ஜவுளி, இன்ஜினீயரிங் உட்பட பல்வேறு தொழிற்சாலைகளில், வெளிமாநிலத் தொழிலாளர்கள் அதிகளவில் பணியாற்றி வந்தனர். ஊரடங்கு தளர்வுக்குப் பின், இவர்கள் எவ்வளவு சீக்கிரம், மீண்டும் தொழிலுக்கு வருவர் என்பதைப் பொறுத்தே உற்பத்தித் துறையின் வளர்ச்சி இருக்கும். 

Automobile components Industry
Automobile components Industry

ஆட்டோமொபைல் துறையைப் பொறுத்தவரை, கடந்த நவம்பர் 2019-லிருந்தே நஷ்டத்தில் இயங்கி வருகிறது என்று சொல்லலாம். இந்தத் துறையில் வேலையிழப்பு என்பது ஒப்பந்தப் பணியாளர்கள் அளவிலேயே இருக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். ஆட்டோமொபைல் துறையில் ஒப்பந்தப் பணியாளர்கள் விகிதம் என்பது 10-15 சதவிகிதம். வேலையிழப்பு என வரும்போது அதிகபட்சம் 5 சதவிகித ஒப்பந்தப் பணியாளர்கள் நிறுத்தப்படுவார்கள். 

ஸ்கோடா, ஃபோக்ஸ்வாகன், ரெனோ போன்ற நிறுவனங்கள் ஏற்கெனவே யாரையும் வேலையை விட்டு நீக்கமாட்டோம் என்று அறிவித்துள்ளார்கள். MG இந்தியா நிறுவனமும் சம்பளம் குறைப்பு நடவடிக்கையிலோ, ஆட் குறைப்பிலோ ஈடுபடமாட்டோம் என்று அறிவித்துவிட்டது. இந்தியாவின் பெரிய நிறுவனங்களான டாடா, மாருதி, ஹூண்டாய், டொயோட்டா, மஹிந்திரா மற்றும் ஃபோர்டு நிறுவனங்களிடம் இருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை.

`இந்தியாவில் 2020 ஏப்ரல் மாத கார் விற்பனை!' - அதிர்ச்சி கொடுத்த கொரோனா

மாருதி, ஹூண்டாய் நிறுவனங்கள் கொரோனாவுக்குப் பிறகு லாபகரமாக இயங்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் இந்த நிறுவனங்கள் தங்களின் தொழிலாளர்களைத் தற்போது குறைத்துக்கொள்ள வாய்ப்பில்லை. அப்படிச் செய்தால் டிமாண்ட் அதிகரிக்கும்போது இவர்களால் அதைப் பூர்த்திசெய்ய முடியாது.

பெரிய நிறுவனங்களுக்குப் பாதிப்பு குறைவுதான். ஆட்டோமொபைல் துறையைப் பொறுத்தவரை சின்னச் சின்ன நிறுவனங்கள்தான் அதிகம் பாதிக்கப்படும். அதிலும் முக்கியமாக உதிரிபாக நிறுவனங்கள். Crisil அறிக்கையின்படி 2019-20 நிதி ஆண்டில் ஆட்டோமொபைல் SME நிறுவனங்களின் தேவை 12 சதவிகிதம் குறைந்துள்ளது. ஏற்றுமதி ஓரளவுக்கு கைகொடுத்தாலும் மார்ச் மாதத்துக்குப் பிறகு, அதுவும் மொத்தமாக நின்றுவிட்டது. ஆட்டோமொபைல் உதிரிபாகத் தயாரிப்பாளர்கள் சங்கம் (ACMA) கொடுத்த தரவுகளின்படி இந்தியாவில் இந்தத் துறை நாளொன்றுக்கு ரூபாய் 1,000 முதல் 1,200 கோடி இழப்பைச் சந்தித்து வருகிறது.

இந்தியாவில் மீண்டும் இயங்கத் தொடங்கிய ஆட்டோமொபைல் நிறுவனங்கள்... எப்படி?

50 லட்சத்துக்கும் அதிகமானோர் செயல்படும் இந்தத் துறையில் வேலை இழப்பு மிகப்பெரிதாக இருக்கப்போகிறது. உதிரிபாக நிறுவனங்கள் இயங்கத்தொடங்கினால்தான் பெரிய நிறுவனங்களால் செயல்பட முடியும். கடந்த 2 ஆண்டுகள் தொடர்ந்து உதிரிபாக நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கிவரும் நிலையில் வேலையிழப்பு இங்கே மிகச் சகஜமானதாக இருக்கப்போகிறது.

ரியல் எஸ்டேட் துறை!

கட்டுமானம், சுரங்கம், மின்சாரம், குடிநீர், எரிவாயு போன்ற துறைகளில், 5.9 கோடி பேர் பணியாற்றுகின்றனர். இதிலும், பலருடைய வேலை பறிபோகும் அபாயம் உள்ளது. மக்களிடம் பணப்புழக்கம் குறைந்துள்ள நிலையில், வீடுகள் விற்பனை, 25 - 35 சதவிகிதம் குறையும் என்றும், அலுவலகத் தேவை, 13 - 30 சதவிகிதம் குறையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதனால், புதிய கட்டுமானங்களை துவக்க, இந்தத் துறையினர் நிறைய யோசிப்பர். `மால்' எனப்படும் மிகப் பெரிய வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள் போன்றவற்றை உடனடியாகத் திறக்க அனுமதிக்க மாட்டார்கள். அவ்வாறு அனுமதித்தாலும், மக்கள் கூட்டம் அதிகம் இருக்காது.

வீட்டு மனை ரியல் எஸ்டேட்
வீட்டு மனை ரியல் எஸ்டேட்

ஏற்றுமதியும், இறக்குமதியும்!

பல்வேறு நாடுகள், தங்களுடைய எல்லையை மூடியுள்ளன. அதனால், ஏற்றுமதியை நிறுத்தும்படி உத்தரவிட்டுள்ளன. அனைத்து நாடுகளும் பொருளாதார பாதிப்பைச் சந்தித்துள்ள நிலையில், முன்னரே போடப்பட்ட ஏற்றுமதி ஆர்டர்கள் ரத்து செய்யப்படலாம். இறக்குமதியும் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்தத் துறை சார்ந்த தொழில், மீண்டு வருவதற்கு நீண்ட காலமாகலாம். அதனால், இத்துறை சார்ந்த பல லட்சம் பேர் வேலையை இழக்கும் அபாயம் இருக்கிறது.

``நாட்டில் வேலை பார்ப்பவர்களில், 90 சதவிகிதம் பேர், அமைப்பு சாரா துறைகளில் பணியாற்றுகின்றனர். தற்போதைய நிலையில், 40 கோடி பேர் பல்வேறு அமைப்பு சாரா துறைகளில் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பலருக்கு வேலையிழப்பு ஏற்படலாம். மேலும், கொரோனாவால் பொருளாதார ரீதியாக அதிகம் பாதிக்கப்பட்டவர்கள், தினக் கூலிகள். ஊரடங்கால், ஏற்கெனவே கடும் சிரமத்தைச் சந்தித்த இவர்கள், அடுத்து வரும் மாதங்களிலும், அது போன்ற நிலையையே சந்திக்க நேரிடும். தொழில்கள் முழுமையாகத் தலைதூக்கும் வரையில், வருவாய் இழப்பை இவர்கள் சந்திப்பார்கள். 

ஜோதி சிவஞானம்
ஜோதி சிவஞானம்

ஊரடங்கின்போது ஆட்டோ ஓட்டுநர்கள், ரிக் ஷா ஓட்டுநர்கள், வாடகை கார் ஓட்டுநர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அடுத்த சில மாதங்களுக்கு இவர்களுடைய சேவை குறைவாகவே இருக்கும். இதனால் பலர் வேலையில்லாமல் வீட்டில் இருக்க வேண்டிய சூழல் உருவாகும். 

சாலையோர பிளாட்பாரங்களில் உணவு தயாரித்து விற்பவர்களின் பாடு, மிகவும் மோசம். வைரஸ் அச்சம் மக்களிடையே இன்னும் சிறிது காலத்துக்குக் கண்டிப்பாக இருக்கும். அதனால், பிளாட்பார கடைகளில் சாப்பிடுவதைத் தவிர்ப்பர். இதுபோன்ற நிலையே, தெருவோர லாண்டரி, அயர்ன் கடைகளின் நிலைமையும்" என்கிறார் பொருளாதார நிபுணரான ஜோதி சிவஞானம். 

தற்போதைய நிலை இப்படியே நிலவினால், மக்களிடம் பணம் இருக்காது, தேவையான பொருள்களையும் வாங்க முடியாது. இதனால் மக்களின் நுகர்வு குறையும். வர்த்தகம் நேரடியாகப் பாதிக்கப்படும். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மிகப்பெரிய பாதிப்பு இருக்கும். வேலையின்மை விகிதத்தைக் குறைக்க, மத்திய அரசாங்கம் அதிரடி நடவடிக்கைகளை எடுக்காமல் போனால், `கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்' செய்தவன் கதையாகிவிடும்.

அடுத்த கட்டுரைக்கு