Published:Updated:

̀`மொத்த முதலீடும் முடங்கியது!' கலங்கும் சிறு குறு வியாபாரிகள்... மீள்வது எப்படி?

சிறு வியாபாரிகள்
News
சிறு வியாபாரிகள்

கொரோனாவால் பல்வேறு துறைகள் பல விதமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நுகர்வோர் சந்தையில் முக்கியப் பிரிவாக இருக்கும் பலசரக்குக் கடைகள் தற்போது மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.

தமிழ்நாட்டில் இப்போது எட்டு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு மட்டும் எந்தத் தளர்வுகளும் இல்லாமல் ஊரடங்கு தொடரும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் பயணம் மற்றும் தொழில் நடத்துவதற்கான தளர்வுகள் அறிவித்திருந்தாலும், மக்கள் வெளியில் வந்து பொருள்கள் வாங்குவதற்குத் தயக்கம் காட்டி வருகின்றனர்.  

இதனால் மளிகைக் கடை, பழக்கடை, மொபைல் கடைகள் எனப் பல சிறு, குறு வியாபாரிகள் பெரிதும் பாதிப்படைந்திருக்கிறார்கள். இந்தியாவில் மொத்தம் 10 மில்லியன் முதல் 12 மில்லியன் வரை சிறு மற்றும் குறு விற்பனைக் கடைகள் உள்ளன. இவை அனைத்தும் மளிகைப் பொருள்கள் மற்றும் இதர அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகளாகும். ஊரடங்கு காரணமாக இவற்றில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட  கடைகள் மூடப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

கொரோனா பயத்தின் காரணமாகவும், அரசின் கட்டுப்பாடுகள் காரணமாகவும் கடைகளின் உரிமையாளர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பியுள்ளதால் தற்போது இவை மூடப்பட்டுள்ளன. இன்றைய நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், கொரோனா வைரஸ் பயத்தைக் காட்டியிருப்பதால், மூடப்பட்ட கடைகள் இனி வரும் நாள்களிலும் வழக்கம் போலச் செயல்படுமா என்பது சந்தேகமே.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஊரடங்கு காலகட்டத்திற்குப் பிறகு விநியோகஸ்தர்கள் வியாபாரிகளுக்கு பொருள்களைப் உடனடி பணத்திற்கே விற்க எண்ணுவார்கள். இதனால் கடை உரிமையாளர்களுக்குப் பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் கிடைக்காமல் போகலாம். ஏற்கெனவே பொருள்களின் வரத்து என்பது குறைந்தே காணப்படுகிறது. மக்களும் பொருளாதார நெருக்கடி காரணமாக தேவைக்கு மட்டுமே தற்போது வாங்கி வருகின்றனர். பெரும்பாலான கடைகளில் சில நாள்கள் வியாபாரமற்ற சூழ்நிலையே நீடிக்கிறது.

A vendor drinks water on a summer day in Jammu, India.
A vendor drinks water on a summer day in Jammu, India.
Photo: AP / Channi Anand

சென்னை, கோவை மாதிரியான மெட்ரோ நகரங்களில் வெளி மாநிலங்களிலிருந்தும், வெளி ஊரிலிருந்தும் வந்துதான் அதிக மக்கள் கடை நடத்துகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளதால் திரும்ப வருவதும் நிச்சயமற்றதே. மேலும் வெளி மாநிலங்களிலிருந்து கடையில் வேலை செய்யும் ஊழியர்களும் தற்போது பணியில் இல்லை. இப்படி பல்வேறு காரணங்களால் கடைகள் அனைத்தும் மூடியே உள்ளன. முழுமையான ஊரடங்கிற்குப் பிறகும் இதில் பாதிக் கடைகளே மீண்டும் திறப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதனால், இந்நிலை இன்னும் 5 அல்லது 6 மாதத்திற்கு நீடிக்கலாம் எனத் துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 

இந்த ஊரடங்கால் ஸ்மார்ட்போன் விற்பனைக் கடைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது இவர்களுக்கு சில மொபைல் நிறுவனங்கள் உதவ முன்வந்துள்ளன. இந்தியாவின் மொத்த ஸ்மார்ட் போன் விற்பனையில் 62 சதவிகிதம் இந்த மாதிரியான கடைகளில் வாங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மளிகைப் பொருள்கள் விற்பனையில் 20 சதவிகித விற்பனை சிறிய கடைகளில் நடைபெறுகிறது.

Mobile Shop
Mobile Shop

இதுபற்றி, விற்பனை டிராக்கர் நிறுவனமான நீல்சன், ``இந்தியாவில் வேகமாக விற்பனையாகும் நுகர்வுப் பொருள்கள் கடந்த ஏப்ரல் மாதம் விற்பனையில் 34 சதவிகித சரிவைக் கண்டுள்ளன. இதற்கு முக்கியக் காரணம் சிறிய கடைகளில் விற்பனை 38 சதவிகிதமாக சரிந்ததே ஆகும். அதேநேரம், பொருள்களின் தேவை 5 சதவிகிதம் உயர்ந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எதிர்காலம் குறித்த பயம் வாட்டி வதைக்கிறது!

மாதவன்
மாதவன்

இதுகுறித்து சென்னை மேடவாக்கத்தில் பழக்கடை வைத்திருக்கும் தூத்துக்குடியைச் சேர்ந்த மாதவனிடம் பேசினோம். ``நான் மேடவாக்கத்தில் மூன்று பழக்கடைகள் வைத்திருக்கிறேன். கடந்த 15 வருடமாக இந்தத் தொழிலைத்தான் செய்துவருகிறேன். ஊரடங்கு அறிவிப்புக்கு முன்பாகவே என்னுடைய சொந்தப் பணிகளுக்காக ஊருக்கு வந்திருந்தேன். ஊரடங்கு அறிவிப்பாலும், கொரோனா தொற்று பயத்தினாலும் என்னால் சென்னைக்குச் செல்ல முடியவில்லை. கடந்த 2 மாதங்களாகச் சொந்த ஊரிலேயேதான் இருந்து வருகிறேன். கடைகள் திறக்கப்படாததால் இருப்பு வைத்திருந்த பழங்கள் எல்லாம் அழுகிப் போயிருக்கும்.  ஏப்ரல், மே, ஜீன் மாதங்கள்தான் சீசன் நேரம். இந்தச் சமயத்தில்தான் ஓரளவுக்கு வருமானம் நன்றாக இருக்கும். ஊரடங்கு காரணமாக வருமானம் சுத்தமாக இல்லை. 

மூன்று கடைகளுக்கும் சேர்த்து மொத்தம் 50,000 ரூபாய் வாடகை கொடுக்கவேண்டும். இரண்டு மாத வாடகை பாக்கி இருக்கிறது. என்னுடைய கடைகளில் 3 பேர் வேலை செய்கிறார்கள். அவர்களுக்குச் சம்பளம் கொடுக்க முடியாத நிலைமை. முடிந்த அளவுக்கு அவர்களுக்குப் பண உதவி செய்துகொண்டிருக்கிறேன். குடும்பச் செலவு, ஸ்கூல் ஃபீஸ் கட்ட வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறேன். என்னைப் போலவே பலரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சுட்டெரிக்கும் வெயிலை விடவும், எதிர்காலம் எப்படி இருக்குமோ என்கிற பயம்தான் இப்போது எங்களை வாட்டி வதைத்துக்கொண்டிருக்கிறது" எனக் கவலையுடன் தெரிவித்தார்.

வாழ்வாதாரமே கேள்விக்குறியாகியிருக்கிறது!

சென்னை குன்றத்தூரில் இரும்புக் கடை வைத்திருக்கும் சுடலை முத்து, ``வழக்கமான வேலை நாள்களில் 500 ரூபாய், வார இறுதி நாள்களில் 1000 ரூபாய் வரைக்கும் லாபம் கிடைக்கும். என் கடைக்கு நிறைய பேர் வந்து பழைய பேப்பர் போடுவார்கள். அதைச் சிலர் வந்து வாங்கிக்கொண்டு போவார்கள். இரும்புப் பொருள்கள் விற்பதையும் தாண்டி, பேப்பர் விற்பனையின் மூலமும் நல்ல வருமானம் கிடைத்துக்கொண்டிருந்தது. ஆனால், கடந்த இரண்டு மாதமாக வியாபாரமே இல்லை. கடையை மூடிவிட்டு சொந்த ஊருக்கு வந்துவிட்டேன். இங்கேயும் வேலை எதுவும் கிடைக்கவில்லை. உள்ளூரில் வசிக்கும் ஆட்களுக்கே வேலை குறைவாகத்தான் இருக்கிறது. 

சுடலை முத்து
சுடலை முத்து

கொரோனா தொற்றினால் தமிழகத்திலேயே சென்னைதான் அதிகம் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் மாவட்டமாக இருக்கிறது. பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை அங்கு நாளுக்குநாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இதனால் மீண்டும் அங்கு போய் கடை திறப்பதற்கு பயமாகத்தான் இருக்கிறது. இன்னும் ஒரு மாதம் கழித்து, சென்னையின் நிலைமை எப்படி இருக்கிறது என்பதைப் பார்த்துவிட்டுத்தான் முடிவெடுக்க வேண்டும். என்னுடைய மொத்த வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதிலிருந்து எப்படி மீண்டு வருவேனோ தெரியவில்லை" என்றார்.

வியாபாரம் செய்ய பயமாகத்தான் இருக்கிறது!

சென்னை ஆதம்பாக்கத்தில் மளிகைக் கடை வைத்திருக்கும் திருநெல்வேலியைச் சேர்ந்த துரை, ``ஊரடங்கு அறிவிப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்பாகவே சொந்த ஊருக்கு வந்துவிட்டேன். 40 நாட்களுக்கு மேலாக ஊரிலேயே இருந்துவிட்டு, கடந்த மே 20-ம் தேதி மீண்டும் சென்னைக்கு வந்தேன். சென்னையில் இப்போது இருக்கும் நிலைமையில் வியாபாரம் மிகவும் டல்லடிக்கிறது. பொதுமக்கள் நிறைய பேர் வெளியில் வரவே பயப்படுகிறார்கள். இதனால் ஏற்கெனவே வாங்கி வைத்திருக்கும் பொருள்கள் இன்னும் விற்கப்படாமல் இருக்கின்றன. மக்கள் கடன்களுக்குப் பொருள்களைக் கேட்கிறார்கள். ஆனால் இப்போதிருக்கும் நிலைமையில் நம்மால் கடனுக்குப் பொருள்கள் கொடுக்கவும் முடிவதில்லை. ஏனெனில் நாம் சரக்குகளை வாங்குபவர்களுக்குக் கட்டாயம் பணம் தரவேண்டிய சூழ்நிலை. 

துரை
துரை

முதல் ஊரடங்குக்கு முன்னால், கடைகளுக்குப் பொருள்கள் வருவதில் சிக்கல் இருந்தது. ஆனால் இப்போது ஓரளவுக்குப் பரவாயில்லை. திருமழிசை காய்கறிச் சந்தையில் எங்களைப் போன்ற சிறு வியாபாரிகளைக் காய்கறிகள் வாங்க அனுமதிப்பதில்லை. இதனால் காய்கறி அங்காடிகளில்தான் காய்கறி வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. நான் கடை வைத்திருக்கும் பகுதியில் கொரோனா பாதிப்பு குறைவாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் ஒருவிதமான பய உணர்வுடன்தான் வியாபாரம் பார்த்து வருகிறேன்" என்றார்.

கடன் வாங்கித்தான் சமாளித்தேன்!

சலூன் கடைக்காரர்கள் சந்தித்த சவால்கள் குறித்தும், நிதிப் பிரச்னைகள் குறித்தும் சென்னை சூளைமேட்டில் சலூன் கடை வைத்திருக்கும் ராஜேஷிடம் பேசினோம். ``கடந்த 66 நாள்களாக எனது சலூன்கடை மூடியேதான் இருக்கிறது. கடைக்கு வாடகை, வேலை செய்பவர்களுக்கு ஊதியம் என எதுவும் என்னால் கொடுக்க முடியவில்லை. மற்ற மாவட்டங்களுக்கு முன்னரே அனுமதி வழங்கியிருந்த நிலையில், ஜூன் 1-ம் தேதி முதல் சென்னையில் உள்ள சலூன் கடைகள் திறக்க அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. ஆனால் இவ்வளவு நாள்கள் மூடியிருந்ததால் ஏற்பட்டிருக்கும் இழப்புக்கு அரசிடமிருந்து எந்தவொரு நிதி உதவியும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. என்னை மாதிரியான சிறிய கடை வைத்து நடத்திக்கொண்டிருப்பவர்களுக்கு இது மிகப்பெரிய இழப்பாகும். இதுநாள்வரை கடன் வாங்கித்தான் குடும்பச் செலவுகளை சமாளித்துக் கொண்டிருந்தேன். 

ராஜேஷ்
ராஜேஷ்

`சலூன் கடைகள் மூலமாகத்தான் கொரோனா தொற்று அதிகம் பரவுகிறது' என்கிற தவறான தகவல் மக்கள் மத்தியில் பரவிருக்கிறது. சுத்தம், சுகாதாரம் இல்லாத இடம் எதுவாக இருந்தாலும் கொரோனா தொற்று பரவத்தான் செய்யும். என்னைப் பொறுத்தவரை என் வாடிக்கையாளர்களே எனக்கு தெய்வம். என் நலனைப் போல அவர்களின் நலனும் எனக்கு முக்கியம். எப்போதும் கடையைச் சுத்தமாக வைத்திருப்பேன். கொரோனா நாள்களுக்குப் பிறகு கடையைத் திறந்திருப்பதால் சானிடைசர், கிளவ்ஸ், மாஸ்க் எனக் கூடுதல் பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தி வைத்திருக்கிறேன். 

என்னுடைய ரெகுலர் வாடிக்கையாளர்களில் பெரும்பாலானவர்கள் சொந்த ஊருக்குப் போயிருக்கிறார்கள். அவர்கள் எப்போது வருவார்கள் என்பது தெரியாது. புதிய வாடிக்கையாளர்கள் பயத்தின் காரணமாக வருவார்களா என்பது தெரியாது. இதனால் கொரோனாவுக்கு முன்னர் இருந்த வியாபாரம், இனி இருக்குமா என்பது சந்தேகம்தான்" என்றார்.

தொழில் துறை ஆலோசகரான எஸ்.சிவக்குமார், ``இன்றைய லாக் டௌன் காலகட்டத்தில் நாடு முழுவதும் இருக்கும் பெரும் கடைகள் ஹோம் டெலிவரி, ஆன்லைன் ஆர்டர் என வர்த்தகத்தை விரிவாக்கம் செய்துள்ளதால் சிறு வியாபாரிகள் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனத் தெரிகிறது. இதேபோல் மொபைல் விற்பனைக் கடைகளும் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.    

எஸ்.சிவக்குமார்
எஸ்.சிவக்குமார்

இவர்களின் இந்த நிலைக்கு மிக முக்கிய காரணம், மக்கள் கையில் பணம் இல்லாததும், வியாபாரிகள் கையில் பொருள்களை வாங்க நிதி வசதி குறைந்து போயிருப்பதும்தான். மேலும் சிறு வியாபாரிகளுக்குக் கொரோனாவுக்கு முன்பு கடன் அடிப்படையில் விற்பனைக்காகப் பொருள்கள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால் இனி வரும் காலங்களில் அது வழங்கப்படுமா என்பது சந்தேகம்தான். ஏனெனில் மளிகைக் கடைகள் சில மாதங்களாக மூடப்பட்டிருப்பதால் எஃப்.எம்.சி.ஜி (Fast-moving consumer goods) துறை சார்ந்த நிறுவனங்கள் பெரும் இழப்பைச் சந்தித்திருக்கின்றன. 

ஏற்கெனவே கடன்களில் கொடுத்த பொருள்கள் விற்பனையாகவில்லை. விற்பனைதாரர்களிடமிருந்து அதற்கான தொகை இன்னும் வசூலிக்கப்படவில்லை. வியாபாரிகளுக்கும் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை. இப்படிப் பல பிரச்னைகள் இருக்கின்றன. 

கொரோனா தொற்றால் ஏற்பட்டிருக்கும் வியாபார மந்தநிலை சீராக இன்னும் 3 - 6 மாதங்கள் வரை ஆனாலும், நிச்சயமாகச் சிறு வியாபாரிகள் மீண்டு வருவதற்கே வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. கொரோனாவுக்கு முன்பு இருந்ததைப்போல எந்தவொரு பிஸினஸும் இனி இருக்காது என்பதால், வியாபாரிகள் தங்களின் எதிர்கால பிஸினஸ் திட்டங்களை அதற்கு ஏற்றாற்போல மாற்றி அமைத்துக் கொள்வது நல்லது. தொழில்நுட்ப ரீதியான விஷயங்களைத் தெரிந்துகொண்டு, அதை பிஸினஸுக்குள் கொண்டு வந்து மாற்றங்களுக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொள்வது ரொம்பவே முக்கியம்" என்றார்.

வியாபார மந்தநிலை சீராக இன்னும் 3 - 6 மாதங்கள் வரை ஆனாலும், நிச்சயமாகச் சிறு வியாபாரிகள் மீண்டு வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.
- எஸ்.சிவக்குமார், தொழில் துறை ஆலோசகர்

ஊரடங்கு காலத்தில் கடை உரிமையாளர்கள் பயணம் செய்ய பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த முடியவில்லை. இதனால் பொருள்களை கொண்டு வருவதிலும் அதிக செலவினங்கள் ஏற்பட்டன. இதனுடன் விற்பனை இல்லாமல் கடைக்கான வாடகையையும் அவர்களால் செலுத்த இயலவில்லை. கடைக்கான மின்சாரச் செலவையும் வீணாக ஏற்க அவர்கள் தயாராக இல்லை. இப்படிப்பட்ட பல்வேறு காரணங்களால் சிறிய கடைகள் பல இனி வரும் காலங்களில் மூடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

கொரோனா அச்சம் காரணமாக கணிசமான மக்கள், இணையம் மூலம் மளிகைப் பொருள்கள் வாங்கத் தொடங்கியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் இதை ஊரடங்கிற்குப் பிறகு தொடரலாம். இதனால் வருகின்ற ஆறு ஏழு மாதங்களில் விற்பனை என்பது சிறிய கடைகள் வைத்திருப்பவர்களுக்குச் சவாலான ஒன்றுதான்!.