Published:Updated:

இவற்றிற்காக வாங்கினால், பர்சனல் லோன் கூட கெட்ட கடன்தான்! - பணம் பண்ணலாம் வாங்க - 43

எந்த நிறுவனமும் ஒரு கடனை கெடுக்கும் கடனாக வடிவமைப்பதில்லை. ஆனால் அது வாங்கப்படும் காரணமும், சூழ்நிலையும் அதை நம் உழைப்பை உறிஞ்சும் அரக்கனாக மாற்றிவிடுகிறது. உதாரணம், பர்சனல் லோன்.

நம் தூக்கத்தையும், செல்வத்தையும் கெடுக்கும் மூன்று கடன்களில் முதலாவதாக, கிரெடிட் கார்டு கடன் பற்றி கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். இந்த வரிசையில் அடுத்து வருபவை தனி நபர் கடன் எனப்படும் பர்சனல் லோனும், பங்குச் சந்தை தரும் மார்ஜின் டிரேடிங்கும்தான். எந்த நிறுவனமும் ஒரு கடனை கெடுக்கும் கடனாக வடிவமைப்பதில்லை. ஆனால் அது வாங்கப்படும் காரணமும், சூழ்நிலையும் அதை நம் உழைப்பை உறிஞ்சும் அரக்கனாக மாற்றிவிடுகிறது.

Rupee
Rupee
Photo by Ravi Roshan from Pexels

உதாரணமாக, எந்தக் காரணங்களுக்காக பர்சனல் லோன் வடிவமைக்கப்பட்டது?

  • நிறைய சிறு சிறு கடன்கள் ஏற்பட்டுவிட்ட நிலையில் அவற்றை ஒருங்கமைத்து திருப்பிச் செலுத்த வேண்டிய சூழ்நிலையின் போது தனி நபர் கடன் உதவும்.

  • கிரெடிட் கார்டு கடனில் வட்டி விகிதம் அதிகம். ஆகவே கிரெடிட் கார்டு கடனைக் குறைக்க எண்ணும்போது பர்சனல் லோன் வாங்கி கடனைக் குறைக்கலாம்.

  • வீட்டை சிறிது மாற்றியமைக்க எண்ணும்போது வீட்டுக்கடன் கிடைக்காவிட்டால் பர்சனல் லோனை உபயோகிக்கலாம். வீட்டை விற்பதற்கு முன் சிறிது மேம்படுத்தினால் அதிக விலை கிடைக்கும் என்று எண்ணினாலும், இந்தக் கடன் உதவும்.

  • திருமணம் என்பது நம்மைப் பொறுத்த வரை சற்று அதிகம் செலவாகும் வைபவம். அதற்குத் தேவை என்றால் பர்சனல் லோன் வாங்க முடியும்.

  • கொரோனா போன்ற மெடிக்கல் எமர்ஜென்சிகளின் போது செலவழிக்கப் பணம் தேவைப்பட்டால் பர்சனல் லோன் வாங்கலாம்.

ஆனால் நம்மில் பலரும் இதைப் புரிந்து கொள்ளாமல் எல்லாவிதத் தேவைகளுக்கும் இதை உபயோகிக்கிறார்கள். உதாரணமாக,

  • மாத வருவாய் குறையும் பட்சத்தில் சிக்கனத்தைக் கைக்கொள்ளாமல், பர்சனல் லோன் வாங்கி குடும்பத்தை நடத்துவது.

  • ஒரு பொருளைப் பார்த்த மாத்திரத்தில் மயங்கி வாங்க எண்ணுவது, அல்லது நினைத்த மாத்திரத்தில் ஒரு சுற்றுலா போக முடிவு செய்வது போன்ற தருணங்களில் பர்சனல் லோன் வாங்குவதால் கொடுக்கவேண்டிய கட்டணங்களையும், வட்டியையும் எண்ணிப் பார்க்காமல் லோன் வாங்குவது.

  • இன்னும் சிலர் பர்சனல் லோன் வாங்கி முதலீடு செய்கின்றனர். நாம் செய்யும் முதலீட்டில் வரும் வருமானம் பர்சனல் லோன் வட்டியை விட அதிகமாக இருக்கும் பட்சத்தில் மட்டும்தான் இந்த முறை எடுபடும். அப்படி நேர்வது மிக அபூர்வமே.

  • பர்சனல் லோன் வாங்கும் முன் க்ரெடிட் ஸ்கோரை சரி செய்யாதிருப்பதும் தவறு. ஸ்கோர் சரியில்லை என்றால் கடனின் வட்டி விகிதம் கூடும்.

Loan (Representational Image)
Loan (Representational Image)
கிரெடிட் கார்டை இப்படிப் படுத்தினால் பிரச்னையே இல்லை! - பணம் பண்ணலாம் வாங்க - 42
  • ஒரு நல்ல வேலையில் இல்லாதிருந்து, பர்சனல் லோன் வாங்கும்போதும் அதிக வட்டியில்தான் கடன் கிடைக்கும். இது நம் பிரச்னைகளை அதிகப்படுத்தவே செய்யும்.

பர்சனல் லோன்களை வாங்குவது எளிது. விண்ணப்பித்த ஒரே வாரத்தில் தேவையான பணம் கிடைக்கும். அதற்கு ஈடாக எதையும் அடமானம் வைக்கவேண்டிய தேவையில்லை. ஆனால் இதற்கான வட்டி விகிதம் மிக அதிகம். கட்டணங்களும் அதிகம். ஆகவே இதைக் கடைசி பட்சமாக உபயோகிப்பது நல்லது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மார்ஜின் டிரேடிங்

கொரோனா வரவுக்குப் பின் பங்குச் சந்தை புத்துயிர் பெற்றதில், இந்தக் கடனை உபயோகிப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மார்ஜினாகக் குறிப்பிடப்படும், சுமார் 20% பணத்தை மட்டும் நாம் கொடுத்தால் போதும்; மீதியை புரோக்கராக செயல்படும் வலைதளங்கள் கடனாகத் தரும். ஆகவே ஒரு மடங்குக்கு பதிலாக ஐந்து மடங்கு பங்குகளை வாங்கலாம். பணமாகத் தர இயலாவிட்டால், பங்குகளை அடமானமாகத் தரலாம். நாம் எதிர்பார்த்த லாபம் வந்தவுடன் பங்குகளை விற்று புரோக்கருக்கு பணத்தையும், ஒரு சிறு வட்டித் தொகையையும் தந்தால் போதும். ஒருவேளை நஷ்டம் ஏற்பட்டால் உடனடியாக அதை சமன் செய்யும் வகையில் பணம் அல்லது வேறு பங்குகள் தரவேண்டியிருக்கும்.

Stock Market (Representational Image)
Stock Market (Representational Image)
Photo by M. B. M. on Unsplash
இந்த 3 விஷயங்களுக்காக மட்டும் கடன் வாங்குவது புத்திசாலித்தனமே! - பணம் பண்ணலாம் வாங்க - 41

இதற்கு நமக்கு ஒரு மார்ஜின் டிரேடிங் வசதியுள்ள அக்கவுன்ட் இருக்கவேண்டும். ஜெரோதா, ஐசி ஐசி ஐ டைரக்ட் போன்ற எல்லா ஆன்லைன் டிரேடிங் நிறுவனங்களும் இந்த வசதியைத் தருகின்றன. இதில் ஒரு மினிமம் பேலன்ஸ் வைத்திருத்தல் அவசியம். லாபம் வரும்போது அதை பலமடங்கு அதிகரிக்க மார்ஜின் டிரேடிங் உதவுவதால், மிகவும் விரும்பப்படுகிறது. ஆனால் இதில் பல அனுபவமுள்ள முதலீட்டாளர்கள் கூட பெரும் பணத்தை இழப்பதும் நடக்கிறது.

நம் எல்லோருக்கும் வாரன் பஃபெட் தெரியும்; அவருடைய நண்பரும், சக முதலீட்டாளருமான சார்லி முங்கர் தெரியும். ஆனால் மூன்றாவது முதலீட்டாளரான ரிக் கெரின் தெரியாது. ஏனெனில் அவர் தன் பணம் முழுவதையும் தொலைத்து, பெர்க் ஷயர் ஹாத்வே கம்பெனியில் தான் செய்திருந்த முதலீட்டையும் இழந்து வெளியேறினார். காரணம் – மார்ஜின் டிரேடிங். பணம் ஈட்ட அவசரப்படுபவர்கள் நிலை இதுதான் என்று வாரன் பஃபெட் கூறியுள்ளார். ஆகவே நல்ல கடனோ, கெட்ட கடனோ, அளவுக்கு மீறிப் பணம் இழக்கவைக்கும் கடன்களைத் தவிர்ப்பது நல்லது.

- அடுத்து வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு சந்திப்போம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு