கூகுள் பே, போன்பே, பேடிஎம் மாதிரியான பேமென்ட் அப்ளிகேஷன்கள் மூலம் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது, அதன் வாடிக்கையாளர்களுக்கு கிஃப்ட் கூப்பன்கள் மற்றும் கேஷ்பேக் ஆஃபர்கள் அடங்கிய ஸ்கிரேட்ச் கார்டுகளை அந்தந்த அப்ளிகேஷன்கள் வழங்கும். இது வழக்கமானதுதான். ஆனால், சமீப நாள்களாக குரோம் மெசேஜ் நோட்டிஃபிகேஷன் வாயிலாக போலியான ஸ்கிரேட்ச் கார்டுகள் வந்துகொண்டே இருக்கின்றன. இந்த போலியான ஸ்கிரேட்ச் கார்டுகளிடம் இருந்து மக்கள் அலர்ட்டாக இருக்க வேண்டியது அவசியமாகும்.
அப்படி ஒருவருக்கு வந்த ஸ்கிரேட்ச் கார்டை விளக்கி அவர் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோ சமீப நாள்களாக ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதளங்களில் வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது. அந்த வீடியோவில், போன்பே ஆப்ளிகேஷன் வாயிலாக நீங்கள் ரூ.2,499 ஜெயித்திருக்கிறீர்கள் என்கிற நோட்டிஃபிகேஷன் மெசேஜ் வந்திருக்கிறது. அதை அவர் ஸ்கிரேட்ச் செய்தால், அதில் ரூ.3,473 ஜெயித்திருப்பதாக மெசேஜ் சொல்கிறது. நோட்டிஃபிகேஷனில் ஒரு தொகை, ஸ்கிரேட்ச் கார்டில் ஒரு தொகை இருப்பது அவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்தப் பணம் உங்களுடைய வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும், அதற்காக நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்ய வேண்டும் என்று இருப்பதை அவர் க்ளிக் செய்ததும், நேரடியாக போன்பே அப்ளிகேஷனுக்குள் அவருடைய வங்கிக் கணக்குக்குள் சென்று, ரூ.3,473-ஐ அவருடைய கணக்கில் இருந்து எடுப்பதற்கான விஷயத்தைச் சொல்கிறது. இதைக் கவனிக்காமல் `Send Payment' பட்டனை அழுத்தி, பாஸ்வேர்டை போட்டிருந்தால் அவருடைய வங்கிக் கணக்கில் இருந்து அந்தத் தொகை எடுக்கப்பட்டிருக்கும். இது ஒரு சாம்பிள்தான், இப்படி நிறைய நோட்டிஃபிகேஷன்கள் தினம் தினம் வந்துகொண்டே இருக்கின்றன.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஇது ஒருவகை திருட்டு என்றால், க்யூ.ஆர்.கோடு ஸ்கேன் செய்வதன் மூலம் நடக்கும் திருட்டுகள் ஏராளம். இன்றைய நிலையில் நம்மில் பெரும்பாலானவர்கள் சின்னச் சின்ன கடைகளில் பொருள்களை வாங்கும்போதுகூட போன்பே, பேடிஎம் மற்றும் ஜி-பே மாதிரியான பேமென்ட் ஆப்ளிகேஷனை பயன்படுத்து க்யூ.ஆர் கோடை ஸ்கேன் செய்துதான் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்கிறோம். ஆனால், இதில் இப்படி பலவகையான ஆபத்துகள் இருக்கின்றன.

உதாரணத்துக்கு, சின்னச் சின்ன டீ கடைகள், பெட்டிக்கடைகள், மளிகைக் கடைகளில் க்யூ.ஆர் கோடு ஸ்கேன் கார்டை வெளிப்புறச் சுவர்களில் ஒட்டி வைத்திருப்பார்கள். அது அந்தக் கடைக்காரரின் க்யூ.ஆர் கோடாக இருந்தால் பிரச்னையில்லை. ஒருவேளை அந்தக் கடைக்காரருக்கே தெரியாமல் ஹேக்கர்களால் ஒட்டப் பட்டிருக்கும் க்யூ.ஆர் கோடாக இருந்தால் கடைக்காரருக்கும் பிரச்னை, நமக்கும் ஆபத்து.
ஏனெனில், அந்த க்யூ.ஆர்.கோடை ஸ்கேன் செய்து பணத்தை அனுப்பினால் அந்தப் பணம் அந்தக் கடைக்காரரின் வங்கிக் கணக்கில் வரவாகாமல், ஹேக்கர்களின் வங்கிக்கணக்கில் வரவாகும். அதுமட்டுமல்லாமல், அதை ஸ்கேன் செய்பவர்களின் வங்கிக்கணக்கு விவரங்களும் திருடப்படும். அந்த விவரங்களை வைத்து, வங்கிக்கணக்கில் இருக்கும் பணத்தை அதன் உரிமையாளருக்குத் தெரியாமலேயே ஹேக்கர்களால் எடுத்துவிட முடியும்.
சில மாதங்களுக்கு முன்பு, சென்னையில் போலி க்யூ.ஆர் ஸ்கேன் கார்டுகளை இரவு நேரங்களில் டீக்கடைகளாகப் பார்த்து ஒரு திருட்டுக் கும்பல் ஒட்டியது. இந்தக் காட்சிகள் சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்தது. அதைப் பார்த்த சென்னை காவல் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்ததில், பெரும் நிதி திருட்டு நடக்காமல் தடுக்கப்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதுபோன்ற பேமென்ட் ஆப்ளிகேஷன்களைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது எப்படி, ஃபைனான்ஷியல் தகவல்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பது எப்படி என்கிற பல்வேறு கேள்விகளுடன் தொழில்நுட்ப வல்லுநரான பிரபு கிருஷ்ணாவிடம் பேசினோம்.
``கூட்டம் எங்கு அதிகமாக இருக்கிறதோ அங்குதான் பிக்பாக்கெட் அடிப்பவர்களும் அதிகமாக இருப்பார்கள். அப்படித்தான் இதுவும். இன்றைய நிலையில் பேமென்ட் அப்ளிகேஷன்களை எல்லாவற்றுக்கும் பயன்படுத்துவது அதிகமாகிவிட்டது. ஒரு டீ செலவுக்கான பணத்தைக்கூட, க்யூ.ஆர் கோடை பயன்படுத்திதான் மக்கள் செலுத்துகிறார்கள். பூ வாங்கினாலும் க்யூ.ஆர் கோடுதான். இப்படி பேமென்ட் அப்ளிகேஷன் பயன்பாடு அதிகரித்துள்ளதால், அங்கு ஹேக்கர்களின் ஆதிக்கமும் அதிகரித்துள்ளது. எந்தெந்த வகையில் டிஜிட்டல் பூட்டை திறப்பது என்பதை யோசித்து லாகவமாகத் தகவல்களைத் திருடுகிறார்கள்.

முதலில் மக்கள் பேமென்ட் ஆப்ளிகேஷன் பயன்படுத்தும் விஷயத்தில் தெளிவாக இருக்க வேண்டியது அவசியம். முதலில் ஒரு பேமென்ட் அப்ளிகேஷனில் அனைத்து வங்கிக் கணக்கையும் இணைக்காதீர்கள். பணப்பரிவர்த்தனைகளுக்காகப் பயன்படுத்தும் ஒரே ஒரு வங்கி கணக்கை மட்டுமே பேமென்ட் அப்ளிகேஷனுடன் இணைத்து வையுங்கள். அதிலும் அதிகமான தொகையை போட்டு வைக்க வேண்டாம். சில ஆயிரங்கள் மட்டும் இருப்பது போல பார்த்துக் கொள்ளவும்.
அதே போல என்னென்ன பேமென்ட் அப்ளிகேஷன்கள் இருக்கிறதோ, அவை அனைத்தையும் டவுன்லோடு செய்து பயன்படுத்தாதீர்கள். குறிப்பாக ஒரே ஒரு அப்ளிகேஷனை மட்டும் பயன்படுத்துவது நல்லது. அதுவும் இதர நிறுவனங்களின் அப்ளிகேஷனாக இல்லாமால், உங்களுடைய வங்கி அப்ளிகேஷனாக இருந்தால் இன்னும் பாதுகாப்பானது. அதில் ஏதாவது சிக்கல் என்றாலும், நேரடியாக வங்கியைத் தொடர்பு கொள்ள முடியும்.
முன்பெல்லாம் நெட்பேங்கிங் வசதியை மக்கள் அதிகமாக பயன்படுத்தி வந்தபோது, மெயில் வழியாக லிங்குகளை அனுப்பி ஹேக்கர்கள் தங்களில் திருட்டு வேலைகளைச் செய்து வந்தார்கள். அதுபோலத்தான் இன்று பேமென்ட் அப்ளிகேஷன் வழியாக ஸ்கிரேட்ச் கார்டு லிங்குகளை அனுப்புகிறார்கள். முதலில் அதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களை நம்பி லிங்குகளை க்ளிக் செய்ய வேண்டாம். சில நேரங்களில் எஸ்.எம்.எஸ்-களிலும் பரிசு வென்றிருப்பதாகச் சொல்லி லிங்குகள் வருகின்றன. அதை க்ளிக் செய்யாமல் விடுவதோடு மட்டுமல்லாமல், அந்த மாதிரியான செய்திகளை உடனுக்குடன் போனில் இருந்து டெலிட் செய்துவிடுங்கள்.

வங்கி சார்ந்த விவரங்களை இணையப் பயன்பாடு அதிகம் கொண்டுள்ள டிவைஸ்களில் சேமித்து வைக்காதீர்கள். ஸ்மார்ட்போன்தான் எல்லாம் என்றாகிவிட்ட நிலையில், அதற்குள் அனைத்து விஷயங்களையும், குறிப்பாக ஃபைனான்ஷியல் சார்ந்த விஷயங்களை சேமித்து வைக்காதீர்கள்.
க்யூ.ஆர் கோடு மூலம் ஸ்கேன் செய்வது எளிமை என்பதைத் தாண்டி, அது ஒரு கெளரவம், கெத்து, ஸ்டைலான ஒரு விஷயமாக மாறிவிட்டது. எதற்கெடுத்தாலும் க்யூ.ஆர் கோடு செய்வதை மக்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக்கொள்ள வேண்டும். பொது இடங்களில் வைஃபை பயன்படுத்துவதில் எவ்வளவு ஆபத்து இருக்கிறதோ அதே போலத்தான், பொது இடங்களில் க்யூ.ஆர்.கோடு ஸ்கேன் செய்வதும்.
ஹேக்கர்களை விட்டுவிட்டு இப்படி யோசித்துப் பாருங்கள். மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள ஒரு டீக்கடையில் டீ செலவுக்கான தொகையை அங்கு வைத்துள்ள க்யூ.ஆர் ஸ்கேன் கார்டில் செலுத்துகிறீர்கள். நீங்கள் உங்களுடைய ஸ்மார்ட்போனை பாக்கெட்டில் இருந்து எடுப்பதில் ஆரம்பித்து, ஸ்மார்ட்போன் பாஸ்வேர்டு மற்றும் பேமென்ட் ஆப்ளிகேஷன் பாஸ்வேர்டு போடுவது வரை உங்களுக்கு அருகில் இருக்கும் ஒருவர் உங்களுக்கே தெரியாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்.
உங்களிடம் இருந்து அவரே உங்களுடைய ஸ்மார்ட்போனை திருடுகிறார் எனில், அதற்குப் பிறகு என்ன நடக்கும் என்பதை நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. அதனால், சின்ன சின்ன செலவுகளுக்காக க்யூ.ஆர் கோடை ஸ்கேன் செய்யாமல், பிரயோஜனமாக நேரத்தில் பிரயோஜனமான விஷயத்துக்காக மட்டும் அதைப் பயன்படுத்துங்கள்.

காலம் மாற மாற டிஜிட்டல் ஹேக்கர்களுக்கும் அதற்கு ஏற்றாற் போல திருட்டு வேலைக்கான உத்திகளை மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். அதனால், டிஜிட்டல் சார்ந்த பணப் பரிமாற்ற விஷயங்களில் மக்கள் மிக மிக உஷாராக இருக்க வேண்டியது அவசியம். மேலும், அனைத்தும் டிஜிட்டல் மையம் என்று சொல்லும் நம் நாட்டில்தான் சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. முதலில் இதை இந்திய அரசாங்கம் முக்கியமான விஷயமாக நினைத்து, சைபர் செக்யூரிட்டியை இன்னும் பலப்படுத்த வேண்டும்" என்றார் தெளிவாக.
அதனால், மக்களே... இனி கிஃப்ட் கார்டுகள் உங்களுடைய போனுக்கு மெசேஜாக வந்தால் அதை உடனே டெலிட் செய்துவிடுங்கள். அதே போல வெளியிடங்களில் க்யூ.ஆர் கோடு பயன்படுத்துவதிலும் உஷாராகச் செயல்படுங்கள்!