Published:Updated:

என்ன ஆகும் இந்தத் துறைகள்?

கொரோனா பிரச்னைகள்...
பிரீமியம் ஸ்டோரி
News
கொரோனா பிரச்னைகள்...

கொரோனா பிரச்னைகள்...

இப்போதெல்லாம் நம்மிடம் இரண்டே கேள்விகள்தான் இருக்கின்றன.

‘எப்போது கொரோனாப் பிரச்னை சரியாகும்?’

‘கொரோனாவுக்குப் பிறகு தொழில்துறைகள் எப்படியிருக்கும்?’

விவசாயம் தொடங்கி பல்வேறு துறைகளின் எதிர்காலம் குறித்துத் துறைசார்ந்த நிபுணர்களிடம் பேசினோம்.

விவசாயம்

மனித சமூகத்தின் ஆதித்தொழில் விவசாயம். ஏற்கெனவே பலரும் விவசாயத்திலிருந்து வேறு தொழில்களுக்கு நகர்ந்துவிட்ட நிலை, மழையின்மை, கடன் பிரச்னை, ரசாயன உரங்கள் ஆகியவற்றால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவும் விவசாயிகளைக் கடுமையாக பாதித்துள்ளது... விளைவித்த காய்கறிகளைக் கொள்முதல் செய்வதில் பல சிக்கல்கள் ஏற்பட்டன. ஆனாலும், வரும்காலத்தில் விவசாயத்தில் பெரும் மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதாக நம்பிக்கை தெரிவிக்கின்றனர் இயற்கை விவசாயிகள். “நுகர்வுக் கலாசாரத்தில் மாற்றத்தை உண்டாக்கியுள்ளது கொரோனா” என்கிறார் CREATE அமைப்பின் தலைவர் பொன்னம்பலம்.

விவசாயம்
விவசாயம்

“புலம்பெயர் தொழிலாளர்கள் விஷயத்தில் புதுப் பாடம் படித்திருக்கிறோம். பஞ்சாபில் கோதுமை அறுவடைக்காலம் இது. உத்தரப்பிரதேசம் மற்றும் சண்டி கரில் இருந்து தொழிலாளர்கள் வராததால் அறுவடை தடைப்பட்டுப் போயிருக்கிறது. இவர்கள் இல்லாமல் வேலைகளை எப்படிச் சமாளிப்பது எனும் விஷயத்தை இனி யோசிக்கவேண்டியுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் மனநிலையிலும் மாற்றம் உள்ளது. இதுபோன்ற கஷ்டமான சூழ்நிலையில் நகரங்களுக்குப் புலம்பெயராமல் கிராமம் சார்ந்த தொழிலில் ஈடுபடுவது குறித்து யோசிக்கத் தொடங்கிவிட்டார்கள். இதனால், கிராமத்தில் வேலைவாய்ப்புகள் உருவாகும். விவசாயத்துக்குச் செழிப்பான எதிர்காலம் இருக்கிறது. அதற்கு ஒரு சமீபத்திய உதாரணம். வாரணாசியிலிருந்து முதல் முறையாக லண்டனுக்குக் காய்கறிகள் ஏற்றுமதி தொடங்கியுள்ளது. இதேபோல் வெளிநாடுகளுக்கு உற்பத்தி செய்யக்கூடிய மையங்களாகத் தமிழ்நாட்டின் கிராமங்கள் மாறும். சம்பளம் என்பதைக் கடந்து சுய தேவையை மட்டும் முன்வைத்து நுகர்வுக் கலாசாரம் மாறும்” என்கிறார்.

சுற்றுலாத் துறை

World Travel and Tourism Council கொடுத்திருக்கும் அறிக்கையின்படி சுற்றுலாத் துறையில் 7.5 கோடி வேலை இழப்புகள் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது அமைப்பு சாரா தொழிலாளர்களைச் சேர்க்காமல் எடுக்கப்பட்ட அறிக்கை. ஆனால் இந்தியச் சுற்றுலாத்துறையில் அமைப்பு சாரா தொழிலாளர்களே அதிகம். KPMG வெளியிட்டிருக்கும் ‘இந்தியப் பொருளாதாரத்தில் கொரோனாவின் பாதிப்பு’ எனும் அறிக்கையில் சுற்றுலாத் துறையில் 70 சதவிகித வேலை இழப்புகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்கள். கிட்டத்தட்ட 3.8 கோடி நபர்களின் வேலை அபாயத்தில் இருக்கிறது.

சுற்றுலாத் துறை
சுற்றுலாத் துறை

சுற்றுலாத் துறையில் பல ஆண்டு அனுபவம் கொண்ட ஸ்டார்ட் யுவர் ட்ரையல் நிறுவனர் ஸ்ரீநாத் நம்மிடம் பேசியபோது “பயணம் கிளம்புபவர்களை மூன்றாகப் பிரித்துக்கொள்ளலாம். தொழில் சார்ந்து பயணிப்பவர்கள், பர்சனல் காரணங்களுக்கான பயணிப்பவர்கள், விடுமுறை சுற்றுலாப் பயணிகள். இதில் விடுமுறைப் பயணிகள்தான் சுற்றுலாத் துறைக்கு மிக முக்கியமானவர்கள். இவர்களின் பயணங்கள் ஒவ்வொரு ஆண்டும் 20 சதவிகிதம் வளர்ந்துகொண்டிருந்தது. இப்படி வளர்ச்சியில் இருந்த துறை கடந்த 3 மாதங்களாக மொத்தமாக முடங்கிவிட்டது. இந்தியப் பொருளாதாரத்தில் 20 பில்லியன் டாலர் முடக்கம் ஏற்பட்டுள்ளது. உலக வர்த்தகத்தில் 10 சதவிகிதம் சுற்றுலாத் துறையின் பங்கு. அது இப்போது மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளதால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பழைய வளர்ச்சியைத் தொட 18 முதல் 24 மாதங்கள் வரை ஆகும். முதலில் உள்நாட்டுப் பயணம்தான் அதிகரிக்கும். வெளிநாட்டுப் பயணங்கள் டிசம்பர் மாதத்துக்குப் பிறகுதான் ஆரம்பிக்கும். சுற்றுலாத் துறையில் ‘செல்ஃப் டிரைவ்’ அதிகரிக்கும். விமானநிலையம் மற்றும் ஹோட்டல்களில் தற்போது ‘பேப்பர்லெஸ்’ என்ற விஷயம் இல்லை. மக்களுக்கு நம்பகத் தன்மையை ஏற்படுத்த முதலில் இந்த விஷயம் நடைமுறைக்கு வரும். விமான நிலையங்களில் ஹெல்த் செக்அப் தொடரும், பல நாடுகள் தங்களது விசா நடைமுறையை இன்னும் தீவிரமாக்கும். விடுதிகள் மற்றும் விமானங்களில் கிருமி நாசினி, முகக் கவசம் போன்ற சுகாதாரம் சார்ந்த பல விஷயங்களைக் கடுமையான நடைமுறைப்படுத்துவார்கள். துருக்கி, இஸ்தான்புல் ஆகிய நாடுகள் முக்கியமான சுற்றுலாத் தலங்களை ‘பயோ ஃபென்சிங்’ முறைக்குக் கொண்டுவருகிறார்கள். அதாவது, ஆரோக்கியமாக இருப்பவர் களுக்கு மட்டுமே அந்த இடத்தில் அனுமதி வழங்கப்படும். பிசினஸ் டிராவல் என்பது வெகுவாகக் குறையப்போகிறது. அதற்குப் பதில் சுற்றுலாப் பயணங்கள் அதிகரிக்கும்” என்றார்.

சினிமாத்துறை

பார்வையாளர்களுக்கு பிரமாண் டமான துறையாகத் தெரிந்தாலும் கொரோனாவால் முழுமையாக முடங்கிக் கிடக்கிறது திரைத்துறை. ஷூட்டிங் தடை, சினிமா ரிலீஸ் தள்ளிப்போதல் என நேரடியாகவும், மறைமுகமாகவும் பல லட்சம் பேருடைய வருமானம் பாதித்துள்ளது. இதுகுறித்து, தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத் (FEFSI) தலைவர் இயக்குநர் ஆர்.கே. செல்வமணியிடம் பேசினோம்.

சினிமாத்துறை
சினிமாத்துறை

“கொரோனா வழக்கமான பேரிடரைக் காட்டிலும் உலகமெங்கும் மிகப்பெரிய திண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஊரடங்கு முடிந்தவுடன் மற்ற துறைகளைக்காட்டிலும் சினிமா மீண்டுவர அதிக காலம் பிடிக்கும். ஃபெப்சி-யின் 80% உறுப்பினர்கள் வேலைக்குச் சென்றால் மட்டுமே உணவு என்ற வாழ்நிலையைக் கொண்டவர்கள். 15 சதவிகிதம் பேர் சேமிப்பு, குடும்பச் சூழல் என வேலையில்லாமல் ஒரு 2-3 மாதங்கள் சமாளிக்க முடியும். மீதமுள்ளவர்கள் மிடில்கிளாஸ் மற்றும் டெக்னீசியன்ஸ், ஆர்ட்டிஸ்டுகள். இவர்களுக்கு வேலையின்மை மட்டுமே பிரச்னைதவிர வாழ்வாதாரம் பாதிப்பு என்பது இருக்காது. ஆனால் சம்மேளனத் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கக்கூடிய சூழலில் இருப்பவர்கள். யதார்த்தத்தில் சம்மேளனம் மூலம் கிடைக்கும் உதவி இவர்களின் வாழ்க்கைத் தேவைக்கு 15 முதல் 20 சதவிகிதம் மட்டுமே உதவிகரமாய் இருக்கும். சினிமாவில் வேலை பார்க்கும் பலருக்கும் சொந்த ஊர் சென்னையாக இருப்பதில்லை. இதனால் அரசு ரேஷன் கார்டு மூலம் தரும் உதவிகளைப் பெறமுடியாத சூழலும் நிலவுகிறது.

சினிமாவால் வாழ்வாதாரம் உயர்ந்து நிற்கும் அனைவரும் அதன் கடைநிலைத் தொழிலாளர்களுக்கு உதவிசெய்ய வேண்டிய கடமை இருக்கிறது. இந்த லாக்டெளன் முடிந்தாலும் சினிமாத் தயாரிப்புகளும் படப்பிடிப்புகளும் உடனடியாகத் தொடங்கிவிடாது. தயாரிப்பாளர்கள் போதுமான நிதியைத் திரட்ட வேண்டும். மனதளவில் நடிகர், நடிகைகள் கொரோனா அச்சமின்றி இருக்க வேண்டும். வேலைச் சூழலில் அனைவரும் மாஸ்க் அணிந்திருந்தாலும், காட்சி எடுக்கும்போது இவர்கள் மாஸ்க் அணியாமல்தான் நடிக்க வேண்டும். சினிமா வணிகமாகவும் சிக்கலைச் சந்திக்க நேரிடும். பெரிய நடிகர்கள், உதாரணத்திற்கு விஜய்க்கு 40% பிசினஸ் வெளிநாடுகளில்தான் உள்ளது. சர்வதேச நாடுகளில் திரையரங்குகள் திறக்க 4 - 5 மாதங்கள் ஆகும் எனத் தெரிகிறது. இந்தச் சூழலில் பெரிய படங்கள் ரிலீஸிலும் தாமதம் இருக்கும்.

லாக்டெளன் முழுமையாகவும், நாடு முழுவதும் தளர்த்தப்பட்டாலே சினிமாத் தொழில் இயல்பு நிலைக்குத் திரும்பும். சினிமாவை ஒரு தொழில்துறையாக அங்கீகரித்த மத்திய அரசு, ஒவ்வொரு படத்துக்கும் 20,000 ரூபாய் நேரடியாக வசூல்செய்யும் மத்திய அரசு, இந்தத் துறைக்குத் தேவையான எந்த அந்தஸ்தையும் சலுகையையும் தரவில்லை.

லாக்டெளன் முடியும்போது, தமிழக அரசு மக்களிடம் பணம் புழங்க வகை செய்யவேண்டும். இது அனைத்தும் பழைய நிலைக்கு வர செப்டம்பர் ஆகிவிடும். அனைவரும் சேர்ந்து உழைத்தால் 2021 செழிப்பான ஆண்டாய் மலரும்” என்றார்.

பரிமளா, சத்தியசீலன், ஆர்.கே.செல்வமணி
பரிமளா, சத்தியசீலன், ஆர்.கே.செல்வமணி

இந்தச் சூழலில் திரைப்படங்களை நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிட ஆயத்தமாகி வருவது குறித்துத் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபுவிடம் கேட்டோம். “இதனால் சில முக்கியமான மாற்றங்கள் நிகழும். ஓ.டி.டியில் உலகளவிலான பல்வேறு மொழிப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் ஆகியவற்றைப் பார்ப்பதால் ரசனைமுறையில் மாற்றம் வரும். அதற்கேற்ப தமிழ்ப்படங்களும் தயாராக வேண்டும். தயாரிப்பாளர்களுக்குப் பணத் தட்டுப்பாடு ஏற்படும். தமிழ் சினிமாவின் ஓட்டத்துக்கு காரணமாக இருக்கும் புது முதலீட்டாளர்கள் வரத்து மிகக் குறைவாகவே இருக்கும். நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என முக்கியமானவர்களின் சம்பளங்களில் மாற்றம் ஏற்படும்.”

லாஜிஸ்டிக்ஸ்

வேலை இழப்பை சுலபமாக சமாளிக்கலாம் எனும் நிலையில்தான் லாஜிஸ்டிக் துறை உள்ளது. உலகளவில் லாஜிஸ்டிக் தொழிலில் முன்னணி நிறுவனமான டிவிஎஸ் சப்ளை செயின் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் இந்தியத் தலைவர் ஆர். ஷங்கர், இதுகுறித்து விரிவாகப் பேசினார்.

“லாஜிஸ்டிக்ஸ், மக்களின் நுகர்வுக் கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தொழில். அதனால், பொருளாதாரம் சரிந்தாலும் இங்கே வேலையிழப்பு ஏற்படாது. கொரோனா இப்போது நம் வாழ்வியல் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது விநியோகச் சங்கிலியில் மாற்றத்தை ஏற்படுத்தும். தற்போது இந்தத் துறையில் ஒன்று முதல் பத்து வாகனங்கள் வைத்திருக்கும் சிறு தொழில் முனைவோர் அதிகம். கொரோனாவின் பாதிப்புக்குப் பிறகு நுகர்வுக் கலாசாரம் மாறும்போது பிசினஸ் மாடலை மாற்றவேண்டியிருக்கும். இதில் சிறுதொழில் முனைவோருக்குச் சில சிக்கல்கள் ஏற்படும் என்பதால் அக்ரிகேட்டார் எனும் ஒருங்கிணைப்பாளருடன் இணைந்து செயல்படத் தொடங்குவார்கள். இது பாசிட்டிவ் மாற்றமே. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் லாஜிஸ்டிக் துறைக்கு ஆகும் செலவு என்பது மொத்த உற்பத்தியில் 8 சதவிகிதம் மட்டுமே. இந்தியாவைப் பொறுத்தவரை இது 13 சதவிகிதம். இதை 2024-க்குள் 10 சதவிகிதமாகக் குறைக்கவேண்டும் என்பது அரசின் கொள்கை. இதற்கு கொரோனா உதவியிருக்கிறது. லாஜிஸ்டிக் துறையின் வளர்ச்சியை வேகப்படுத்தியிருக்கிறது” என்றார்.

ஆர்.ஷங்கர், ஸ்ரீநாத், விஜயகுமார்
ஆர்.ஷங்கர், ஸ்ரீநாத், விஜயகுமார்

ஐ.டி துறை

இதுநாள் வரை வெளிநாடுகளைச் சார்ந்திருந்த தகவல் தொழில்நுட்பத் துறை உள்நாட்டு சேவையிலும் இனி அதிகம் கவனம் செலுத்தப்போகிறது. தற்போதைய நிலை பற்றி FITE தலைவர் பரிமளாவுடன் பேசும்போது, “புது புராஜெக்ட்கள் கிடைக்க நேரம் எடுக்கும் என்றாலும், ஏற்கெனவே எடுத்த புராஜெக்ட்களில் தடைப்படாமல் வேலை நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது” என்றார். மேலும், “வழக்கம்போல ஐடி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். ஒருவேளை லேஆஃப் இருக்கும் பட்சத்தில், மேனேஜர், சீனியர் மேனேஜர் போன்ற மிடில் மேனேஜ் மென்ட் தரத்தில் இருப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகம். அதனால், இவர்களின் வேலைகளுக்குத் தான் ஆபத்து அதிகம். அதிலும்கூட பெண்களின் வேலைக்குத்தான் முதல் ஆபத்து” என்கிறார்.

இப்போது கொரோனா காரணமாக 75 சதவிகிதம் ஐடி ஊழியர்கள் ஒர்க் ஃப்ரம் ஹோம் முறையில் பணியாற்றுகிறார்கள். 2025-ம் ஆண்டுக்குள் இதை 100 சதவிகிதம் ஆக்கிவிடுவோம் என்கிறது டிசிஎஸ் நிறுவனம். டிசிஎஸ் போலவே பல ஐடி நிறுவனங்கள் ஒர்க் ஃப்ரம் ஹோம் என்பதை முதன்மையாக்கத் திட்டமிட்டுக் கொண்டுள்ளன.

தகவல் தொழில்நுட்பம் இப்படி யென்றால் மென்பொருள் உருவாக்கும் நிறுவனங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்கிறார் இன்டெலக்ட் டிசைன் அரினா நிறுவனத்தின் மேலாளர் விஜயகுமார். ஐடி துறை மற்ற நாடுகளைச் சார்ந்து இருப்பதுபோல மென்பொருள் துறையில் நிறைய நாடுகள் இந்தியாவைச் சார்ந்திருப்பதாகத் தெரிவிக்கிறார். இதனால், ஐடி துறையைவிட மென்பொருள் நிறுவனங்களின் தேவை அதிகரிக்கும் என்கிறார்.

என்ன ஆகும் இந்தத் துறைகள்?

நெசவு

தமிழ்நாட்டின் உற்பத்தித் துறையில் மிக முக்கியமானது நெசவு. நெசவுத் தொழில் ஏற்றுமதி நல்ல லாபம் ஈட்டிக்கொண்டிருந்த வேளையில் கொரோனா பாதிப்பால் ஏற்றுமதி தடைப்பட்டுள்ளது. சிறிய கார்மென்ட்ஸ் முதல் பெரிய நெசவு நிறுவனங்கள் வரை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட ஒரு கோடி பேரின் வேலைக்கு ஆபத்து இருக்கிறது. ஆனால், இங்கே நல்ல விஷயம் என்னவென்றால் ‘டெக்ஸ்டைல் மற்றும் அப்பேரல் துறை’ கொரோனா லாக்டௌனுக்கு முன்பு அதன் ஆண்டு வளர்ச்சி 11.3 சதவிகிதம் என்று நல்ல நிலையிலேயே இருந்தது. 2025-ம் ஆண்டுக்குள் 1,800 கோடி டாலர் வளர்ச்சியை நெருங்கும் என்று கணிக்கப்பட்ட துறை இது. நெசவுத்துறைக்கு அரசு ஊக்கம் அளித்தால் மொத்த வேலையிழப்பையும் இங்கே கட்டுப்படுத்திவிட முடியும் என்கிறார்கள் துறை சார்ந்த வல்லுநர்கள்.

ஆட்டோமொபைல்

ஆட்டோமொபைல் துறை கடந்த நவம்பர் 2019-லிருந்தே நஷ்டத்தில் இயங்கிவந்தாலும், இங்கே வேலையிழப்பு என்பது ஒப்பந்தப் பணியாளர்கள் அளவில் மட்டுமே. ஆட்டோமொபைல் துறையில் ஒப்பந்தப் பணியாளர்கள் விகிதம் 10-15 சதவிகிதம். வேலையிழப்பு என வரும்போது அதிகபட்சம் 5 சதவிகித ஒப்பந்தப் பணியாளர்கள் நிறுத்தப்படுவார்கள்.

சர்வீஸ் துறை
சர்வீஸ் துறை

இங்கே வாகனங்களின் விற்பனை குறையும் ஆனால், லாக்டௌன் காரணமாக சர்வீஸ் துறையில் வளர்ச்சி இருக்கும் என்கிறார் அஷோக் லேலண்ட் நிறுவனத்தின் வடிவமைப்புத் துறைத் தலைவர் சத்தியசீலன். “கடந்த 15 மாதங்களுக்கு மேலாக வாகன விற்பனை குறைவு, BS-6 தொழில்நுட்பத்தில் அதிகம் செலவு செய்திருக்கிறோம் வேறு. இப்போது கொரோனா காரணமாக பணப் புழக்கம் வெகுவாகக் குறைந்துவிட்டது என்பதால் BS-6 வாகனங்கள் வாங்குவதற்கு ஆட்கள் இல்லை. ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் துறையும் கொஞ்சம் கலங்கி நிற்கிறது. ஒரு பக்கம் நிதி நிலை குறைந்திருக்கிறது. இன்னொரு பக்கம் உற்பத்தித் திறன் அதிகரித்திருக்கிறது. ஒர்க் ஃப்ரம் ஹோம் முறையில் 6 மாதத்தில் முடிக்கவேண்டிய வேலை அனைத்தும் 30 நாளில் முடித்திருப்பது இன்ப அதிர்ச்சியாகவே இருக்கிறது. நான்காம் தொழிற்புரட்சியை நோக்கி மிக வேகமாக நகர்ந்துவிட்டோம். ஆனால், இதனால் வாகனத்தின் தேவை குறையும். ஸ்கிராப்பேஜ் என்பது புது டிரெண்டாக உருவாகப்போகிறது. ஸ்கிராப்பேஜ் குறையும்போது காற்று மாசு ஏற்படுத்தும் வாகனங்கள் குறைந்துவிடும். இயற்கையைப் பற்றிக் கொஞ்சம் யோசிக்கத் தொடங்கிவிட்டதால் மின்சார வாகனங்களைப் பற்றி மக்கள் யோசிப்பார்கள்’’ என்கிறார்.

என்ன ஆகும் இந்தத் துறைகள்?

ஒவ்வொரு துறையும் தன்னளவில் தனித்துவம் வாய்ந்தவை. இந்தத் துறைகளுக்கே உரிய பலம் மற்றும் பலவீனங்கள், கொரோனாவுக்குப் பிறகு புதிய பரிணாமத்தைப் பெறும். புதிய ஐடியாக்கள், கடும் உழைப்பு ஆகியவை எல்லாத் துறைகளையும் செழிப்படையச் செய்யும் என்று நம்புவோம். நம்மிடம் இருக்கும் மூலதனங்களில் சிறந்தது நம்பிக்கைதான்.