நடப்பு
Published:Updated:

வாழ்க்கையில் தினமும் நீங்கள் கவலைப்படும் முக்கியமான விஷயங்கள்..! - என்னென்ன தெரியுமா..?

வாழ்க்கை
பிரீமியம் ஸ்டோரி
News
வாழ்க்கை

FINANCIAL MISTAKES

மக்களின் பழக்கவழக்கங்கள், சுகதுக்கங்கள் பற்றி சர்வேக்கள் எடுப்பது மேலை நாடுகளில் அடிக்கடி நிகழும் ஒன்று. அங்குள்ள ஆராய்ச்சி மனப்பான்மை யும், கல்வி முறைகளும் டெக்னாலஜியும் இதைச் சாத்தியப்படுத்துகிறது. இந்தியாவிலும் சமீப காலங்களில் இதுபோன்ற சர்வேக்களைக் காண முடிகிறது. அப்படி ஒரு சர்வேயில், ``பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, உங்கள் தலையாய வருத்தம் என்ன?” என்று கேட்டிருந்தார்கள். இதற்குப் பதிலளித்தவர்கள் கூறிய வருத்தங்களில் சில...

ஒரு பொருத்தமான / லாபகரமான வேலையைத் தேர்ந்தெடுக்கத் தவறிவிட்டேன்; இன்றுவரை முதலீடு எதுவும் செய்யவில்லை; எனக்குப் பொருத்தமில்லாத முதலீட்டு முறைகளில் ஈடுபட்டு பணத்தை இழந்து, வாங்க முடிந்த தருணத்தில் வீடு வாங்காமல் விட்டுவிட்டேன்; எதிர்காலத்தைப் பற்றி நினைக்காமல் ஆடம்பரத்தில் ஈடுபட்டு சக்திக்கு மீறிய கடன்களை வாங்கிவிட்டேன்... இவை அனைத்துமே நம்மில் பலரும் எண்ணி வருந்தும் விஷயங்கள்தான். ஏன் இப்படியான தவறுகள் நிகழ்ந்தன, அவற்றை எப்படிச் சரி செய்வது என்று பார்க்கலாம்.

பொருத்தமான / லாபகரமான வேலையைத் தேர்ந்தெடுக்கத் தவறுதல்...

சுந்தரி ஜகதீசன்
சுந்தரி ஜகதீசன்

ஒரு நல்ல வாழ்க்கைத்துணை எவ்வளவு அவசியமோ, அவ்வளவு அவசியம் ஒரு பொருத்தமான வேலை. ஏனெனில், ஒரு நாளின் பெரும்பாலான நேரம் வேலையில் கழிகிறது. மனதுக்கு ஒவ்வாத வேலையைச் செய்ய நேர்கையில் மனமும் உடலும் சோர்வடைகிறது. இன்னும் சிலருக்கு வேலையில் வெறுப்பில்லாமல் இருக்கலாம்; ஆனால், பெரிய ஆர்வமும் இல்லாமல் போகலாம். ஆர்வமின்றிச் செய்யும் வேலையில் மேலும் மேலும் முன்னேற வேண்டும் என்ற ஆசையும் இருக்காது. அது நம் பொருளாதார உயர்வை கண்டிப்பாகப் பாதிக்கும்.

இன்னும் சிலர் மனதுக்குப் பிடித்த வேலையில் ஈடுபட்டாலும், தங்களுக்கு சரியான சன்மானம் கிடைக்கிறதா என்று பார்ப்பதில்லை. மனதுக்குப் பிடித்த வேலை பார்ப்பது மிகுந்த திருப்தியைத் தந்தாலும், நாம் வெறும் திருப்திக்காக வேலை பார்க்கவில்லையே! வேலையிலிருந்து கிடைக்கும் வருமானத் தில்தான் நம் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடியும் என்பதால்தானே வேலையில் சேர்கிறோம்? வருமானத் திலிருந்து சேமிப்பு, சேமிப்பிலிருந்து முதலீடு, முதலீட்டிலிருந்து செல்வம் என்று படிப்படியாக வளர்வதற்கு முதல்படியாக இருப்பது வருமானம்தான். அரசு வேலையில் இல்லாதவர்கள் தங்களுக்கு தரப்படும் வருமானமும், சம்பள உயர்வும் சரிதானா என்று கவனிக்க வேண்டும். வருமானம் மிகக் குறைவாக இருக்கும்பட்சத்தில் தங்கள் திறமையை உயர்த்திக்கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும் அல்லது இன்னொரு வருமானம் ஈட்ட வழி இருக்கிறதா என்று பார்க்கலாம்.

முதலீடு எதுவும் செய்யாதிருத்தல்...

நம்மில் மூன்றில் ஒருவர் வேலையில் சேர்ந்து ஐந்து வருடங்கள் வரை சேமிப்பின் அருமை பற்றி யோசிப்ப தில்லையாம். இவர்களிடம் ஒரே ஒரு ஆர்.டி, வரிச் சலுகை பெற ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசி போன்ற மினிமம் சேமிப்பு தவிர, வேறெதுவும் இருப்பதில்லையாம். இதற்கு, பல காரணங்கள் இருக்கலாம்.

குறைந்த வருமானம்; வெறும் ரூ.500, ரூ.1,000 சேமித்து என்ன செய்யப்போகிறோம் என்ற விரக்தி; அதிக வருமானம் வந்த பின் சேமிப்பு பற்றி யோசிக்கலாம் என்ற எண்ணம்; அதீத செலவுப் பழக்கங்கள்; எவ்வளவு சேமிப்பது, எப்படிச் சேமிப்பது என்று புரியாத குழப்பம். இப்படிப் பல காரணங்கள். ஆனால், சேமிக்கும் நேரம் என்று எதுவும் வரப் போவதில்லை. மிகக் குறைந்த அளவே சேமிக்க முடிந்தாலும் அது நமக்கு சேமிக்கும் பழக்கத் தையும், முதலீட்டு முறைகளையும் கற்றுத் தருவதால் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. ஆகவே, அதிகமோ குறைவோ, இதுவரை சேமிக்கத் தவறியவர்கள், உடனே சேமிப்பை ஆரம்பிப்பது நன்று.

வாங்க முடிந்த தருணத்தில் வீடு வாங்கத் தவறுதல்...

25 வயதில் முதல் சம்பளம் வாங்குகையில், நம் மனதுக்கும் நிலைமைக்கும் பொருத்தமான முதலீட்டு முறைகள் நமக்குப் புரிவதில்லைதான். அத்துடன், தங்களுக்குச் சாதகமான முதலீட்டு முறைகளைக் காட்டி நம்மைச் சுரண்டும் நண்பர்களும் உறவினர் களும் வாய்த்துவிட்டால், சில தவறான முதலீடுகளில் சிக்கி, வருடக்கணக்கில் அதிலேயே உழல வேண்டிய நிலை ஏற்படும்.

பொன்ஸி திட்டங்களின் கவர்ச்சி, குடும்பத்தினர் தரும் அழுத்தம், வரிச் சேமிப்புக்காக முதலீடு செய்ய வேண்டிய கடைசி நிமிடக் கட்டாயம் இவற்றுடன் நம் அறியாமையும் சேர்ந்து விட்டால், நஷ்டம் விளைவிக்கும்/ குறைந்த வருமானம் தரும் முதலீடுகளில் பல வருடம் சிக்க வைத்துவிடும்.

இடைப்பட்ட காலங்களில் சில நல்ல வீடுகள், நிலங்கள் வாங்கும் வாய்ப்பு வரும் பட்சத்தில், அவற்றைப் புறக் கணிக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டு, நஷ்டத்தை அதிகரிக்கிறது. வீடு என்பது மிகப்பெரிய முதலீடு என்பதுடன், அத்தியாவசியத் தேவையும் என்பதால், முடிந்தவரை நடுத்தர வயதில் இந்தக் கடமையை முடிப்பது நல்லது.

வாழ்க்கையில் தினமும் நீங்கள் கவலைப்படும் முக்கியமான விஷயங்கள்..! - என்னென்ன தெரியுமா..?

ஆடம்பரத்தில் ஈடுபட்டு கடன் வலையில் சிக்குதல்...

சம்பளம் வாங்கத் தொடங்கி யதும் நமக்குச் சிறகுகள் முளைத்த ஒரு ஃபீலிங். இத்தனை நாள்கள் அடக்கி வைத்த ஆசைகளும் கனவுகளும் தலைவிரித்தாடும். வாழ்க்கையைக் கொண்டாடு வதில் தவறில்லை. ஆனால், கொண்டாட்டமே வாழ்க்கை என்று எண்ணத் தொடங்குவது தவறு. சைக்கிள் வாங்க முடிந்த வர்கள் பைக் வாங்குவதும், பைக் வாங்க முடிந்தவர்கள் கார் வாங்குவதும், 50 பேருடன் முடிய வேண்டிய நிகழ்ச்சிகளுக்கு 500 பேரை அழைப்பதும் ஆடம்பரம் அல்லாமல் வேறென்ன? இப்படி எடுத்ததுமே `பெருவாழ்வு’ வாழ விழைபவர்கள் சீக்கிரமே கடன் படுகுழியில் விழநேர்கிறது.

ஆனால், கடனிலும் நல்ல கடன், கெட்ட கடன் என்று உள்ளன. கல்விக் கடன், வீட்டுக் கடன், குறைந்த அளவு வாகனக் கடன் – இவை கடன்கள் அல்ல; முதலீடுகள். ஆனால், ஸ்மார்ட்போன் வாங்க, சுற்றுலா செல்ல அல்லது கல்யாணம், ரிசப்ஷன் போன்ற குடும்ப நிகழ்வுகளுக்காக வாங்கும் கடன்கள், நிரப்ப இயலா படுகுழிகள். இவற்றைக் கண்டிப்பாகத் தவிர்ப்பது நல்லது.

வருத்தம் இல்லாத வாழ்க்கை இல்லை. ஆனால், அந்த வருத்தம் ஏன் ஏற்பட்டது, அதைக் களையும் வழி என்ன என்று சிந்திப்பதே எதிர்கால வருத்தங்களைத் தவிர்க்கும் வழி. இப்போது சொல்லுங்கள் - உங்கள் தலையாய பொருளாதார வருத்தம் என்ன? அதை எப்படிக் களையப் போகிறீர்கள்?