Published:Updated:

கணவன் - மனைவி இடையேயான `பொருளாதார துரோகம்'... பிரச்னையைக் கையாள்வது எப்படி?

Shopping
Shopping ( Photo: Pexals )

கணவனோ, மனைவியோ... அடுத்தவருக்குத் தெரியாமல், குடும்பநலனைப் பாதிக்கக்கூடிய பெரிய பொருளாதார முடிவுகளை எடுப்பதையே `பொருளாதாரத் துரோகம்’ என்கிறார்கள். இன்றைய தேதியில் தம்பதியரிடையே மனக்கசப்புக்கு முக்கிய காரணமாக விளங்குபவற்றுள் இதுவும் ஒன்று.

பொருளாதாரத் துரோகம் என்றால்..?

பொருளாதாரக் குற்றம் (Financial Crime) என்றால் என்ன என்று நமக்குத் தெரியும். விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்றவர்கள் அதற்குப் பேர் போனவர்கள். ஆனால், பொருளாதார துரோகம் (Financial Infidelity) என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?

கணவனோ, மனைவியோ அடுத்தவருக்குத் தெரியாமல், குடும்பநலனைப் பாதிக்கக்கூடிய பெரிய பொருளாதார முடிவுகளை எடுப்பதையே `பொருளாதாரத் துரோகம்’ என்கிறார்கள். இன்றையத் தேதியில் தம்பதியரிடையே மனக்கசப்புக்கும் திருமண முறிவுகளுக்கும் முக்கிய காரணமாக விளங்குபவற்றுள் இதுவும் ஒன்று.

``நான்தானே சம்பாதிக்கிறேன்; என் இஷ்டம் போல செலவு செய்ய எனக்கு உரிமையில்லையா?” என்ற ஆண் குரலும், ``நானும்தானே சம்பாதிக்கிறேன்; என் பெற்றோருக்குப் பணம் அனுப்புவதில் என்ன தவறு?” என்ற பெண் குரலும் இன்று ஓங்கி ஒலிக்கின்றன. பணம் பற்றிப் பேச ஆரம்பித்தாலே அது சண்டையில்தான் போய் முடிகிறது. இந்த வகையான சண்டைகளைத் தவிர்க்க சம்பளத்தின் அளவை மறைப்பது, இன்க்ரீமென்ட் பற்றிய தகவல்களைச் சொல்லாமல் இருப்பது போன்ற சிறிய வகை துரோகங்கள் தலையெடுக்கின்றன. அதிகமாகப் பொய்கள் விளையாடத் தொடங்கும்பட்சத்தில் ஒருவர் மீது ஒருவருக்கு இருக்கும் நம்பிக்கை குறைய ஆரம்பிக்கிறது.

கணவர்கள் சொல்லும் பொருளாதாரப் பொய்களுக்கான உதாரணங்கள் 

* குறைவாக சம்பாதிப்பதை வெளிப்படுத்த விரும்பாத கணவர், அதிகம் சம்பாதிப்பதாகக் கூறி, அதை நிலைநாட்ட அதிக வட்டியில் கடன் வாங்கி டம்பச் செலவு செய்வது.

Rupee
Rupee
Photo by Sohel Patel from Pexels

* ஆன்லைன் சூதாட்டங்களில் ஈடுபட்டு பணத்தைத் தொலைத்துவிட்டு, அதை மறைக்க ரகசியமாக ஒரு கிரெடிட் கார்ட் அல்லது தனிநபர் கடன் வாங்கி மேலும் மேலும் கடனில் மூழ்குவது.

* சரியான முதலீடுகள் செய்யத் தெரியாமல் கையில் இருந்த பணத்தை இழந்து குற்ற உணர்வில் தவிப்பவர், மனைவி அது பற்றிப் பேச்செடுத்தாலே எரிந்து விழுவது.

* தாய், தந்தையருக்கு வாடிக்கையாகப் பணம் அனுப்புபவர்கள் அது பற்றி மனைவிக்குத் தெரிவிக்காமல் இருப்பது; அல்லது குறைந்த அளவே அனுப்புவதாகப் பொய் கூறுவது.

மனைவிகள் சொல்லும் பொருளாதாரப் பொய்கள்

* குறைவான சம்பளம் பெறுவோர், ``இந்தக் காசுக்கு நீ வேலைக்குப் போகவே வேணாம்; வீட்டிலேயே இரு” என்று வீட்டினர் கூறிவிடுவார்களோ என்று அஞ்சி சில பொய் பேசுகிறார்கள்.

* பெற்றோருக்கு அல்லது பெற்றோர் வழி குடும்பத்தினருக்கு வாடிக்கையாகவோ, அவசர காலத்திலோ உதவி செய்துவிட்டு அதை மறைக்க முயல்கிறார்கள்.

* தனக்கு அதிகமாக சம்பளம் வருவதைக் கூறினால் கணவர் தாம் தூமென்று செலவு செய்ய ஆரம்பித்துவிடுவாரோ என்று அஞ்சி அதை மறைத்து பொய் சொல்கிறார்கள்.

* சேமிக்கும் பழக்கம் உள்ள பெண்கள் தாங்கள் கஷ்டப்பட்டு சேமித்த பணம் பறிபோய்விடுமோ என்று பயந்து அது பற்றி கணவரிடம் தெரிவிப்பதில்லை.

Shopping
Shopping
Photo by Lucrezia Carnelos on Unsplash

* விலை உயர்ந்த பிராண்டட் பொருள்கள் வாங்கிப் பழகியவர்கள் அல்லது அளவுக்கு அதிகமாக ஆடை, அணிமணிகள், மேக்கப் பொருள்கள் வாங்கும் பழக்கம் உள்ள பெண்கள் அதுபற்றி கணவரிடம் சொல்லாமல் மறைக்கலாம்.

இப்படி பலவிதமான காரணங்களுக்காகச் சொல்லும் பொய்கள் எத்தனை நாள் தாக்குப் பிடிக்கும்? மேலும், இதில் சில பொய்கள் குடும்பத்தின் நீண்டகால இலக்குகளைப் பதம் பார்க்கும் அளவு வளர்ந்துவிடுகின்றன. கணவரின் தீயபழக்கங்கள் விளைவித்த கடனைத் தீர்க்க தன் பெற்றோர் போட்ட நகைகளைப் பாதி விலைக்கு விற்ற பெண்களும் உண்டு; மனைவியின் செலவுகளைக் கட்டுப்படுத்தும் வகை தெரியாமல் புலம்பும் ஆண்களும் உண்டு. சரி, இதை எப்படி சரிசெய்யலாம்?

முடிவுகளை சேர்ந்து எடுங்கள்

1. தம்பதியர் இருவரும் பொருளாதார வேலைகளை பங்கு போட்டுச் செய்யலாம். ஒருவர் பட்ஜெட் போட்டு செலவுகளைக் கட்டுப்படுத்தினால், மற்றவர் எப்படிச் சேமிக்கலாம்; எங்கெங்கு முதலீடு செய்யலாம் என்று ஆராய்ச்சி செய்யலாம். இதில் ஆண், பெண் என்ற பாகுபாடு கூடாது. யாருக்கு எந்த வேலையில் ஈடுபாடும் திறமையும் உள்ளதோ, அவர் அந்த வேலையைச் செய்ய வேண்டும். மேலும், முடிவுகள் அனைத்தும் சேர்ந்தே எடுக்கப்பட வேண்டும். கண்டிப்பாகக் கருத்துவேறுபாடு வரும். அதற்கு பயந்து, ரகசிய வேலைகளில் ஈடுபட்டால் திருமணத்தின் அஸ்திவாரமே ஆட்டம் கண்டுவிடும்.

Cards
Cards
Photo: Pixabay

ஷாக் தராதீர்கள்

2. ஒருவருக்குத் தெரியாமல் மற்றவர் பெரிய பொருளாதார முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். ரூ.4 லட்சம் கடனில் மாருதி கார் வாங்கப்போகிறேன் என்று சொல்லிக் கொண்டிருந்தவர், மனைவியை சர்ப்ரைஸ் தந்து அசத்த எண்ணி ரூ.8 லட்சம் கடனில் டவேரா கார் வாங்கி வந்து நின்றால் மனைவிக்கு வருவது சர்ப்ரைஸ் அல்ல; மிகப் பெரிய ஷாக். ஏனெனில், இந்தக் கடன் அவர்கள் வைத்திருக்கும் பல இலக்குகளை (பிள்ளைகள் படிப்பு, திருமணம் மற்றும் மருத்துவ எமர்ஜென்சிகள் போன்றவை) நிலைகுலையச் செய்துவிடும்.

மூன்றாவது கணக்கு...

3. கணவன், மனைவி இருவரும் ஒரே ஒரு ஜாயின்ட் அக்கவுன்ட் வைத்திருப்பதைவிட உன் அக்கவுன்ட், என் அக்கவுன்ட், நம் அக்கவுன்ட் என்று திட்டமிட்டு, முதலீடுகள், கடன் போன்றவற்றுக்கு மூன்றாவது அக்கவுன்ட்டை உபயோகப்படுத்தலாம்.

4. கணவன், மனைவி இருவரும் வேறுவேறு சூழ்நிலைகளில் பிறந்து வளர்ந்திருப்பதால், பணத்தைப் பொறுத்தவரை இருவருடைய பழக்கங்கள், நம்பிக்கைகள் மற்றும் நிலைப்பாடுகள் கண்டிப்பாக வித்தியாசமாகத்தான் இருக்கும். இவை பற்றி திருமணமான புதிதிலேயே இருவரும் பேசி, ஒரே அலைவரிசைக்கு வர முயற்சி செய்யலாம்.

5. ``காலம் கடந்துவிட்டது; மௌனச் சுவர்களைத் தாண்டி அர்த்தமுள்ள பொருளாதார உரையாடல்களை நடத்த முடிவதில்லை” என்று எண்ணுபவர்கள் திருமண ஆலோசகர் அல்லது பொருளாதார ஆலோசகரின் அறிவுரையை நாடலாம்.

Money (Representational Image)
Money (Representational Image)
Photo by Karolina Grabowska from Pexels

நிறைய பேசுங்கள், புரிந்துகொள்ளுங்கள்

இவை அனைத்திலும் அடிநாதமாக இழைந்துவருவது வெளிப்படைத் தன்மையும் அதனால் விளையும் பரஸ்பர நம்பிக்கையும்தான். இதற்கு முக்கியம், ஆரோக்கியமான (அவமானப்படுத்துதல், எள்ளி நகையாடுதல் போன்றவை அற்ற) கலந்துரையாடல்கள். ஆகவே நிறைய பேசுங்கள்; அதைவிட நிறைய புரிந்துகொள்ளுங்கள். Smart Couples Finish Rich.

அடுத்த கட்டுரைக்கு