Published:Updated:

PF கணக்கிலிருந்து பணம் எடுக்க அரசு அனுமதி... விண்ணப்பிப்பது எப்படி?

பணம்
பணம்

கொரோனா பொருந்தொற்று காலத்தில் பணத் தேவையைச் சமாளிக்க பி.எஃப் கணக்கிலிருந்து மீண்டும் பணம் எடுக்க மத்திய அரசு அனுமதித்திருக்கிறது.

கொரோனாவின் இரண்டாவது அலையினால், தமிழகம் உட்பட இந்தியா முழுக்க பல மாநிலங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன.

பொருளாதார நெருக்கடி, வேலையிழப்பு போன்ற காரணங்களால் தொழிலாளர்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு, பணியாளர்கள் பிஎஃப் கணக்கில் இருந்து முன்பணம் எடுத்துக்கொள்ள தொழிலாளர்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

Investment
Investment
Image by Steve Buissinne from Pixabay

அதன்படி, பிரதம மந்திரி கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ், மூன்று மாத அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சப்படி (டி.ஏ) அல்லது பிஎஃப் கணக்கில் உள்ள நிலுவைத் தொகையில் 75%, இதில் எது குறைவோ, அதை முன்பணமாகத் தொழிலாளர்கள் எடுத்துக்கொள்ளலாம். கடந்த 2020-ம் ஆண்டின் கொரோனா தாக்கத்தின்போதும், இதே மாதிரி சலுகையை மத்திய அரசு அறிவித்திருந்தது. இதனால் பல்லாயிரக் கணக்கான ஊழியர்கள், தங்களுடைய பி.எஃப் கணக்கில் இருந்து பணத்தை எடுத்து, அவசரத் தேவைகளுக்கு பயன்படுத்திக் கொண்டனர். இன்றைய தேதி வரை, 76 லட்சம் கோவிட் க்ளெய்ம்கள் பெறப்பட்டுள்ளன. 18,698.15 கோடி ரூபாய் க்ளெய்ம் தொகை வழங்கப்பட்டிருக்கிறது.

பி.எஃப் இன்ஷூரன்ஸ்... பணியாளர் இறந்தால் ரூ.7 லட்சம் வரை இழப்பீடு..! நீங்களும் அறிந்துகொள்ளுங்கள்...

பொதுவாக, உடல்நலக் குறைவு, புதிய வீடு வாங்குவதற்கு போன்ற குறிப்பிட்ட காரணங்களுக்கு மட்டுமே குறிப்பிட்ட சதவிகிதத்தில் பிஎஃப் பணத்தை எடுக்க முடியும். எனினும், பொருந்தொற்றுக் என்பதால், மற்ற காரணங்கள் எதுவும் இல்லாமல் கொரோனாவை மட்டும் காரணம் காட்டி பணத்தை எடுக்க மத்திய அரசு அனுமதித்திருக்கிறது. இதற்கு எந்தவொரு ஆவணத்தையும், பணத்தை எடுப்பதற்கு ஆதாரமாகக் காட்டத்தேவையில்லை எனவும் சொல்லப்பட்டிருக்கிறது.

பி.எஃப் கணக்கில் இருந்து எடுத்த தொகையை திரும்பச் செலுத்த வேண்டியதில்லை என்றும், கொரோனாவைக் காரணம் காட்டி பணம் எடுக்க முயன்றால், மூன்று நாள்களுக்குள் பணம் தரப்படும் என்றும் தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பி.எஃப் என்பது நமது ஓய்வுகாலத் தேவைகளுக்காக சேமிக்கப்படும் தொகையாகும். இதில் இடையிடையே பணத்தை வெளியில் எடுப்பது நல்லதா, அப்படி எடுத்தால் அதை திருப்பிச் செலுத்துவதில் மேற்கொள்ள வேண்டிய விஷயம் என்ன, இதற்கு மாற்று வழி ஏதாவது உண்டா என்கிற சில கேள்விகளுடன் நிதி ஆலோசகர் சுரேஷ் பார்த்தசாரதியிடம் பேசினோம்.

சுரேஷ் 
பார்த்தசாரதி 
நிதி ஆலோசகர்,  
Myassetscon
solidation.com
சுரேஷ் பார்த்தசாரதி நிதி ஆலோசகர், Myassetscon solidation.com

``பி.எஃப் சேமிப்பு ஓய்வுகாலத் தொகையிலிருந்து கோவிட் காலத்தில் எடுக்கப்படும் பணத்தை அது தொடர்பானவற்றுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதை இதர தேவைகளுக்காகப் பயன்படுத்துவது ஏற்புடையது அல்ல. வங்கி மற்றும் அஞ்சலக சேமிப்புகளில் கிடைக்காத வட்டி விகிதம் பி.எஃப் சேமிப்புக்கு கிடைக்கிறது. தற்போதைய நிலையில் 8.5% வட்டி விகிதத்தை பி.எஃப் கணக்கில் சேமிக்கும் பணத்துக்கு அரசு கொடுத்து வருகிறது. அதனால் பி.எஃப் கணக்கில் இருக்கும் பணத்தை எடுத்து பயன்படுத்துவதை கடைசி யோசனையாக வைத்துக்கொண்டு செயல்பட வேண்டும். இதற்குப் பதிலாக, வீட்டில் தங்க நகைகள் இருந்தால், அதைக் கொண்டு வங்கியில் தங்க நகைக்கடன் வாங்கி பயன்படுத்துவது நல்லது. ஏனெனில், தற்போதைய நிலையில், மற்ற கடன்களைவிட தங்க நகைக் கடனுக்கான வட்டி மிகக் குறைவு. கடனுக்கான வட்டி 7% என்றாலும்கூட, பி.எஃப் சேமிப்பில் 1.5% வட்டி நமக்கு மிச்சமாகிறது.

பி.எஃப் பணத்தை எடுக்கலாம், தங்க நகைகளை வைத்து வங்கியில் கடன் பெறலாம் என்கிற நிலையை முதலில் நீங்கள் உருவாக்கிக் கொள்ளாதீர்கள். இந்த நிலைக்கு நீங்கள் வராமல் இருக்க வேண்டுமெனில், உங்களிடம் அவசரகால நிதிச் சேமிப்பு அவசியம் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 6 - 12 மாதங்களுக்குத் தேவைப்படும் நிதியை நிச்சயமாக நாம் ஒவ்வொருவரும் சேமித்து வைத்திருக்க வேண்டும்.

சேமிப்பு
சேமிப்பு

தவிர்க்க முடியாத காரணத்தால், பி.எஃப் கணக்கில் இருந்து பணத்தை எடுத்து செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை வந்தால், எடுத்த பணத்துக்கு இணையான பணத்தை வி.பி.எஃப் மூலமாக ஒரு சில ஆண்டுகளுக்குள் திரும்பச் செலுத்திவிடுவது நல்லது. அரசு திரும்பச் செலுத்த தேவையில்லை என்று சொன்னாலும் கூட, பணியாளர்கள் திரும்பச் செலுத்துவதுதான் ஓய்வுகாலத்துக்குப் பலனளிக்கும்.

பி.எஃப் பென்ஷன்... அதிகபட்சம்         எவ்வளவு கிடைக்கும்? அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்..!

பெருந்தொற்று நேரத்தில், தொழிலாளர்களுக்கு இது போன்ற சலுகைகள் வழங்குவது வரவேற்கத்தக்க விஷயம்தான். ஆனால், தொழிலாளர் அமைச்சகம் சொல்லி இருப்பது போல, பணியாளர்களின் மூன்று மாதம் அடிப்படை சம்பளம் + டி.ஏ அல்லது பி.எஃப் கணக்கில் உள்ள மொத்தத் தொகையில் 75% தொகை முழுவதும், அனைத்து பணியாளர்களுக்கும் தேவைப்படுவதில்லை. ஒன் -டைம் சலுகையாக இதை வழங்கும்போது, தேவையில்லாவிட்டாலும் பணியாளர்களால் மொத்தமாக மட்டுமே எடுத்துக்கொள்ள முடிகிறது.

அதனால், தேவைப்படும் தொகையை மட்டுமே எடுக்கும்படி, தொழில்நுட்ப ரீதியான மாற்றத்தை கொண்டு வர வேண்டும். மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் உள்ள டெபிட் கார்டு முறையைப் போல, பெருந்தொற்று காலங்களில் மட்டும் பி.எஃப் சேமிப்பு கணக்கில் இருந்து தேவைப்படும் தொகையை (ஏற்கெனவே உள்ள லிமிட்டுக்குள்) எடுத்து பயன்படுத்தும்படி டெபிட் கார்டு முறையை அறிமுகப்படுத்துவது நல்லது. இதனால் பி.எஃப் கணக்கிலிருந்து தேவையில்லாமல் பணம் வெளியில் போகாது" என்றார் தெளிவாக.

விண்ணப்பிப்பது எப்படி?

Application
Application
Pixabay

https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற இணையப்பக்கத்துக்கு செல்லவும். உங்களுடைய யு.ஏ.என் நம்பர் மற்றும் பாஸ்வேர்டு கொண்டு உள்நுழையவும். ஆன்லைன் சர்வீசஸ் (Online Services) என்கிற ஆப்ஸனுக்கு கீழ் உள்ள க்ளெய்ம் (Claim) என்பதைத் தேர்வு செய்யவும்.

காண்பிக்கப்படும் திரையில், உங்களுடைய வங்கி கணக்கு எண்ணை குறிப்பிட்டு உறுதி செய்யவும். `Proceed for Online Claim' என்பதை கிளிக் செய்யவும். பின்னர் திரையில் தோன்றும் தெரிவில், `PF Advance' என்பதை தேர்வு செய்யவும். `Purpose of Withdrawl' என்பதற்கு `Outbreak of Pandemic (Covid 19)' என்பதைத் தேர்வு செய்யவும்.

உங்களுக்குத் தேவையான பணத்தை குறிப்பிட்டு, காசோலை (செக்) அல்லது வங்கி பாஸ்புக்கை ஸ்கேன் செய்து பதிவேற்றவும். இப்போது உங்கள் மொபைல் எண்ணுக்கு ஓ.டி.பி வரும். அதை குறிப்பிடவும். உங்கள் கோரிக்கை சமர்ப்பிக்கப்படும். உங்கள் விண்ணப்பம் சரிப்பார்க்கப்பட்டு, அதிகபட்சம் ஒருவாரத்தில் பணம் வங்கிக்கணக்கில் வந்துவிடும்.

ஆப் மூலமும் விண்ணப்பிக்கலாம்!

இதுதவிர உமாங் (UMANG) ஆப்ளிகேஷன் மூலமாகவும், பி.எஃப் பணத்தை எடுப்பதற்காக விண்ணப்பிக்கலாம். அதற்கு முதலில், உங்களுடைய ஸ்மார்ட்போனில் உமாங் ஆப்ளிகேஷனை டவுன்லோடு செய்து EPFO விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் `அட்வான்ஸ் கோரிக்கை (கோவிட் -19)’ (Request for Advance (Covid-19) என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பிறகு, உங்கள் UAN கணக்கு விவரங்களை உள்ளிட்டு அவற்றை ஓ.டி.பி மூலம் சரிபார்க்கவும்.

Rupees
Rupees
Photo by rupixen.com on Unsplash

உறுப்பினர் ஐடியைத் தேர்ந்தெடுத்து உங்கள் வங்கி கணக்கு எண்ணின் கடைசி நான்கு இலக்கங்களை உள்ளிடவும். பின்னர் `Proceed' என்பதைத் கிளிக் செய்யவும், அடுத்த கட்டத்தில் உங்கள் முகவரியை உள்ளிடவும். இப்போது உங்கள் வங்கிக் கணக்கில் வெற்று காசோலையை பதிவேற்றவும். அவ்வளவுதான். மேற்கண்ட ஆப் வழிமுறைகளை பயன்படுத்தி நீங்கள் பி.எஃப் பணத்தை அட்வான்ஸாகப் பெறலாம்.

ஆக, அரசு அனுமதிக்கிறது என்பதற்காக ஓய்வுகாலத் தேவைக்கான பணத்தில் கை வைப்பதற்கு முன்பாக, மேலே குறிப்பிட்டது போல மாற்று வழி இருந்தால் அதைக் கடைப்பிடிக்கவும்!

அடுத்த கட்டுரைக்கு