Published:Updated:

``கொரோனா ஏற்படுத்திய இழப்பைத் தாங்க முடியவில்லை!" - 70 ஆண்டு பாரம்பர்ய நிறுவனம் `விட்கோ' மூடல்

விட்கோ
விட்கோ

``70 ஆண்டுகளாக எங்களின் பிராண்டுக்கு முழு ஆதரவு கொடுத்த அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எங்களின் நன்றி" - விட்கோ!

கடந்த ஒரு வருடமாகப் பாடாய்ப்படுத்திவரும் கொரோனா, பல தொழில் நிறுவனங்களை நிரந்தரமாக மூடவைத்திருக்கிறது. அந்தப் பட்டியலில் இப்போது சேர்ந்திருக்கிறது சென்னையைத் தலைமையகமாகக்கொண்டு செயல்படும் 70 ஆண்டுக் கால பாரம்பர்யம் கொண்ட விட்கோ நிறுவனம்.

1951-ம் ஆண்டு சென்னை ஜார்ஜ் டவுனில் 500 சதுரடியில் தொடங்கிய `விட்கோ’-வின் பிசினஸ் பயணம், 2021-ம் ஆண்டு ஜூன் 3-ம் தேதியுடன் முடிந்திருக்கிறது. கொரோனாவின் கோரத் தாண்டவத்தால், லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்ததைப் போல, 70 ஆண்டுகளாக உயிர் வாழ்ந்த இந்த நிறுவனத்தின் வர்த்தகமும் இப்போது முடிவுக்கு வந்திருக்கிறது.

விட்கோ
விட்கோ
https://witco.in/

``நாங்கள் எங்கள் பிசினசை முற்றிலும் மூடுகிறோம் என்னும் துயரமான தகவலைத் தெரிவித்துக்கொள்கிறோம். கோவிட்-19 தொற்று மற்றும் அதனால் ஏற்பட்ட லாக்டௌனால் முடங்கிய வெளிநாட்டுப் பயணங்களின் தாக்கத்தால் இந்த முடிவை எடுக்கவேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல; எங்களால் இந்த தாக்கத்தை சமாளிக்க இயலாததால் எடுக்கப்பட்டது.

70 ஆண்டுகளாக எங்களின் பிராண்டுக்கு முழு ஆதரவு கொடுத்த அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம் - இப்படிக்கு விட்கோ குடும்பம்" என சோகமான வரிகளுடன் தனது இணையதளத்தின் முகப்பு பக்கத்தை மாற்றியுள்ளது இந்நிறுவனம். இனி இந்த இணையதளத்தை வர்த்தக ரீதியாக பயன்படுத்த முடியாது, இந்த நிறுவனத்தின் சேவையையும் வாடிக்கையாளர்களால் பெற முடியாது.

கொரோனாவால் மூடல்!

கொரோனா தொற்றால், கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் போடப்பட்ட ஊரடங்கு இந்தியாவின் பொருளாதாரத்தையே ஒரு உலுக்கு உலுக்கியது. இன்று வரையிலும், பொருளாதார பாதிப்பிலிருந்து பல நிறுவனங்களால் மீண்டு வர முடியவில்லை.

விட்கோ
விட்கோ
https://witco.in/

இந்தியாவில் போடப்பட்ட ஊரடங்கினால் அத்தியாவசியப் பொருட்களின் விற்பனைத் தவிர, மற்ற அனைத்துக் கடைகள், மால்கள், சினிமா தியேட்டர்கள், சலூன்கள் என் அனைத்தும் செயல்படமுடியாமல் போனது. குறிப்பாக, உலகமெங்கும் லாக்டௌன் அமலில் இருந்ததால், பயணம் சார்ந்த தொழில்கள் பெரும் முடக்கத்துக்கு ஆளாகின.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் அரபு நாடுகள் உள்பட பல்வேறு நாடுகளும் இந்தியாவிலிருந்து பயணிகள் வரக்கூடாது எனக் கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றன. இந்தியாவில் தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை பரவல் உள்ளதாலும், மூன்றாவது அலை குறித்த அச்சம் நிலவி வரும் சூழ்நிலைகளாலும், பல்வேறு நாடுகள் இந்தியாவுக்கான கட்டுப்பாடுகளை மேலும் அதிகரித்துள்ளன.

வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் உள்ளூர் சுற்றுலாக்கள் அனைத்தும் தடைப்பட்டுப் போனதாலும், கொரோனா தொற்றின் அச்சத்தாலும் சுற்றுலா பயணங்களை மக்கள் பெரிதும் தவிர்த்து வருகின்றனர். இதனால், ஹோட்டல்கள், டிராவல் ஏஜெண்ட் நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்கத் தொடங்கியிருக்கின்றன. அதில் சில நிறுவனங்கள் மீண்டும் தொடர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன.

Luggage -Representational Image
Luggage -Representational Image
Image by Free-Photos from Pixabay

பயணம் செய்யத் தேவையான லக்கேஜ்கள் மற்றும் பெரிய அளவு பெட்டிகள், பைகளை பிரீமியம் வகையில் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனமான `விட்கோ’ இதில் பெரிதும் பாதிக்கப்பட்டது. 70 ஆண்டுக் காலமாகப் பயணிகளின் லக்கேஜ் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பிரிவில் கோலோச்சிய விட்கோ நிறுவனத்தால், கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்டிருக்கும் இழப்பைத் தாக்குபிடிக்க முடியவில்லை. இத்துறை சார்ந்த பிசினஸ் எப்போது இயல்பு நிலைக்குத் திரும்பும் எனத் தெரியாத சூழ்நிலையில், தற்போது ஏற்பட்டிருக்கும் நஷ்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் மூடும் நிலைக்கு விட்கோ தள்ளப்பட்டிருப்பது வேதனைக்குரிய விஷயம்.

இந்நிலை இப்படியே தொடர்ந்தால், இது போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் மிகப்பெரிய அபாயத்தை சந்திக்கக் கூடும் எனப் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு