Published:Updated:

`சினிமாவுக்கு வரவில்லை என்றால், நானும் தொழில் செய்ய வந்திருப்பேன்!’’ கமல்ஹாசனின் ஆசை

நாணயம் விகடன் `பிசினஸ் ஸ்டார் ஆவார்டு’ விருது பெற்ற ஒன்பது தொழிலதிபர்களில் ஒருவர்தான் `நேச்சுரல்ஸ்’ நிறுவனத்தின் நிறுவனர்களான சி.கே.குமரவேல்- வீணா குமரவேல். ‘ஃபீனிக்ஸ் ஆந்த்ரபிரினர் அவார்டு’ என்கிற விருது இந்தத் தம்பதிக்கு வழங்கப்பட்டது.

கமல்ஹாசன் - குமரவேல்
கமல்ஹாசன் - குமரவேல்

‘‘நான் சினிமாவுக்கு வராமல் போயிருந்தால், தொழில் செய்ய வந்திருப்பேன்'' என்று தனது கடந்த கால ஆசையினை எடுத்துச் சொல்லியிருக்கிறார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்.

ஆனந்த விகடன் குழுமத்திலிருந்து வெளிவரும் நிதி மற்றும் பிசினஸ் தொடர்பான வார இதழான நாணயம் விகடன் கடந்த 2017 முதல் ஆண்டுதோறும் ‘பிசினஸ் ஸ்டார் ஆவார்டு’ நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது கடந்த 5-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்தது. இந்த ஆண்டு நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் தமிழகம் முழுக்க பிசினஸில் மிகச் சிறந்து விளங்கும் ஒன்பது தொழில்முனைவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. இந்த ஒன்பது தொழிலதிபர்களில் ஒருவர்தான் ‘நேச்சுரல்ஸ்’ நிறுவனத்தின் நிறுவனர்களான சி.கே.குமரவேல் - வீணா குமரவேல். ‘ஃபீனிக்ஸ் ஆந்த்ரபிரினர் அவார்டு’ என்கிற விருது இந்தத் தம்பதிக்கு வழங்கப்பட்டது.

இந்த விருதினைப் பெற்ற சி.கே.குமரவேலை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்துகள் தெரிவித்தார். இது குறித்து ‘நேச்சுரல்ஸ்’ நிறுவனத்தின் நிறுவனரான சி.கே.குமரவேலுவிடம் கேட்டோம்.

‘‘ஆனந்த விகடன் அளித்த இந்த விருதை பெருமைக்குரிய விஷயமாகக் கருதினேன். விகடனிலிருந்து ஒரு விருது கிடைக்காதா என்று நான் ஏங்கிய காலம் உண்டு. அந்த ஆசை இப்போது நிறைவேறியதை நினைத்துப் பூரித்துப் போனேன்.

சி.கே.குமரவேல்- வீணா குமரவேல்
சி.கே.குமரவேல்- வீணா குமரவேல்

எனது பூரிப்பை எனது தலைவர் கமல்ஹாசனிடம் சொல்லி, நான் பெற்ற விருதினை அவரிடம் காட்டி, வாழ்த்துகளைப் பெறவேண்டும் என்று விரும்பினேன். இதற்கான அனுமதியை அவரிடம் கேட்டிருந்தேன். இன்று (வெள்ளிக்கிழமை) காலை எனக்கு அனுமதி கிடைத்தது. விருதினை எடுத்துக்கொண்டு அவருடைய வீட்டுக்குப் போனேன்.

சந்தோஷம் பொங்க என்னை வரவேற்றார். நாணயம் விகடன் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த விருதினைப் பல்வேறு துறைகள் சார்ந்த தொழில்முனைவர்களுக்கு அளித்து, கெளரவித்து வருவதை அவரிடம் எடுத்துச் சொன்னேன். தமிழகத்தின் தொழில் துறை வளர்ச்சி பெற விகடன் அளிக்கும் ஊக்கம் பற்றி நான் சொன்னதை உன்னிப்பாகக் கேட்டார்.

நான் பெற்ற விருதினை அவரிடம் தந்தேன். அதை வாங்கிப் பார்த்தவர், ‘‘பிரமாதமாக இருக்கிறதே’’ என்றார். ‘ஃபீனிக்ஸ் ஆந்த்ரபிரினர் அவார்டு’ என்கிற கேட்டகரியில் எனக்கு விருது தரப்பட்டிருப்பதைப் படித்துவிட்டு, ‘‘இது என்ன பீனிக்ஸ் ஆந்த்ரபிரினர் அவார்டு’’ என்று கேட்டார்.

‘‘பிசினஸில் வெற்றியும் தோல்வியும் சகஜம்தான். நான் சின்னதாக பிசினஸை ஆரம்பித்து, ஓரளவு பெரிதாக வளர்த்தவன். பிற்பாடு சிலபல காரணங்களால், அந்த பிசினஸ் தோல்வியைத் தழுவியது. அந்தத் தோல்வியைக் கண்டு, நான் துவண்டுவிடவில்லை. மீண்டும் முயற்சி செய்தேன், ஜெயித்தேன். எரிந்த சாம்பலிலிருந்து மீண்டும் வருவது பீனிக்ஸ் பறவை. இந்தப் பறவையைப் போல, நானும் தோல்வியிலிருந்து மீண்டுவந்ததால், எனக்கு இந்த விருதினைத் தந்திருக்கிறார்கள்’’ என்று விளக்கினேன்.

விருதுடன் கமல் ஹாசன்
விருதுடன் கமல் ஹாசன்

என்னை மனதாரப் பாராட்டினார். ‘‘நீங்கள் சலூன் தொழிலுக்கே பெருமை தேடித் தந்திருக்கிறீர்கள். பலருக்கும் இந்தத் தொழிலை பெருமையோடு செய்யும் அளவுக்கு அதை உயர்த்தியிருக்கிறீர்கள். நான் சினிமாவுக்குப் போகாமல் இருந்திருந்தால், நானும் உங்களைப் போல ஒரு தொழில்முனைவராக வந்திருப்பேன்’’ என்றார். தொழில்முனைதல் குறித்து அவர் மனதில் இருந்த ஆசையை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

நாணயம் விகடன் அளித்த விருது, என் தலைவர் கமல்ஹாசனின் பாராட்டு என அடுத்த சந்தோஷத்தினால், நான் வானத்தில் மிதந்துகொண்டிருக்கிறேன். நான் செய்யும் பிசினஸை இன்னும் நன்றாகச் செய்ய வேண்டும் என்கிற உந்துதலை விகடன் விருதும், கமல்ஹாசனின் பாராட்டும் எனக்குத் தந்திருக்கிறது. பிசினஸ் வெற்றி என்பது நிலையல்ல; தோல்வி என்பதும் நிலையல்ல. தோல்வியை நினைத்து பயப்படாமல், மீண்டும் மீண்டும் முயற்சி செய்து வெற்றி பெற நம் இந்திய மற்றும் தமிழக இளைஞர்கள் பாடுபட வேண்டும். அதற்கான வழிகாட்டுதலை எல்லோருக்கும் தரவேண்டும் என்பதே என் ஆசை’’ என்று பேசி முடித்தார் சி.கே.குமரவேல்.

குமரவேல் இன்னும் புதிய உச்சங்களை எட்டட்டும்!

நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருதுகள் 2019
நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருதுகள் 2019

நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருதுகள் 2019 விழா, நியூஸ் 18 -ல் வரும் சனிக்கிழமை (14-12-19) காலை 10 மணிக்கு ஒளிப்பரப்பாகிறது, காணத்தவறாதீர்கள்!