Published:Updated:

ரூ 1 லட்சத்துக்கு, 1 லட்சம் வட்டி 150 நாளில் 2 மடங்கு லாபம்... திண்டுக்கல் `தில்லாலங்கடி' கம்பெனி!

திண்டுக்கல் மாநகராட்சி

திண்டுக்கல் பகுதியில், பிரைட் வே என்ற நிறுவனம், '150 நாள்களில் பணத்தை இரட்டிப்பாக்கித் தருகிறோம்' என்று சொல்லி, மக்களிடம் பணத்தை வசூலிக்க ஆரம்பித்துள்ளது. திண்டுக்கல், நிலக்கோட்டை, கோவை என பல ஊர்களில் உள்ளவர்களும் பல கோடி ரூபாயை இவர்களிடம் முதலீடு செய்துள்ளனர்.

ரூ 1 லட்சத்துக்கு, 1 லட்சம் வட்டி 150 நாளில் 2 மடங்கு லாபம்... திண்டுக்கல் `தில்லாலங்கடி' கம்பெனி!

திண்டுக்கல் பகுதியில், பிரைட் வே என்ற நிறுவனம், '150 நாள்களில் பணத்தை இரட்டிப்பாக்கித் தருகிறோம்' என்று சொல்லி, மக்களிடம் பணத்தை வசூலிக்க ஆரம்பித்துள்ளது. திண்டுக்கல், நிலக்கோட்டை, கோவை என பல ஊர்களில் உள்ளவர்களும் பல கோடி ரூபாயை இவர்களிடம் முதலீடு செய்துள்ளனர்.

Published:Updated:
திண்டுக்கல் மாநகராட்சி

வேலூர், ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தின் மோசடி குறித்த செய்திகள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. இந்த நிலையில், இன்னொரு சதுரங்க வேட்டை நிறுவனம் குறித்த செய்திகள் வெளியாகி மக்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. திண்டுக்கல்லில் செயல் பட்டுவரும் பிரைட் வே நிறுவனத்தின் மீது, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் முன்னேற்றச் சங்கத்தினர் புகார் மனு ஒன்றைத் தந்திருப்பது பெரும் பரபரப்பை உண்டாக்கி இருக்கின்றது.

டிஜிட்டல் மோசடி
டிஜிட்டல் மோசடி

பொதுவாக, ஒவ்வொரு மோசடி நிறுவனமும் ஒவ்வொரு பொய்யைச் சொல்லி மக்களிடம் பணத்தை வசூலிக்கும். அந்த வகையில், திண்டுக்கல் 'பிரைட் வே' (BRIGHT WAY) என்ற நிறுவனம், '150 நாள்களில் பணத்தை இரட்டிப்பாக்கித் தருகிறோம்' என்று சொல்லி, மக்களிடம் பணத்தை வசூலிக்க ஆரம்பித்துள்ளது. திண்டுக்கல், நிலக்கோட்டை, கோவை என பல ஊர்களில் உள்ளவர்களும் பல கோடி ரூபாயை இவர்களிடம் முதலீடு செய்துள்ளனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில்தான், பிரைட் வே ஆன்-லைன் நிறுவனம் தன்னை ஏமாற்றிவிட்டதாகத் திண்டுக்கல் மாவட்ட பெண்கள் முன்னேற்ற சங்கத் தலைவர் சகாயராணி, கலெக்டரிடம் புகார் மனு ஒன்றை நேற்று (திங்கள்கிழமை) அளித்திருக்கிறார். நாம் அவரை சந்தித்துப் பேசினோம்.

புகார் தந்த பெண்கள்
புகார் தந்த பெண்கள்

''இந்த பிரைட் வே நிறுவனம், 'பணம் கட்டினால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும்' எனக் கூறி ஏழை எளிய மக்களை ஏமாற்றி வருகின்றனர். இது தொடர்பாக கடந்த மாதம் 4-ம் தேதி கலெக்டரிடமும், எஸ்.பி-யிடமும் புகார் அளித்தேன். இதை அடுத்து சைபர் க்ரைம் போலீஸார் புகார் மனுவை விசாரிப்பார்கள் எனக் கூறினர்கள். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. போலீஸார் தரப்பிலோ, `இந்த வழக்கை விசாரித்தால் எங்களுக்குப் பிரச்னை’ என வெளிப்படையாகவே சொன்னார்கள்.

திண்டுக்கல்லில் பிரகாஷ், டேனியல், சக்திவேல் ஆகிய மூன்று பேர்தான் மக்களை மூளைச்சலவை செய்து பிரைட் வே நிறுவனத்தில் பணம் கட்ட வைக்கின்றனர். முதல்கட்டமாக சிறுதொகையைப் போடவைத்து, அதற்குரிய பணத்தை அவரவர் வங்கிக் கணக்கில் இவர்களே வரவு வைத்து ஆசையைத் தூண்டுகின்றனர். பின்னர், மீண்டும் மீண்டும் சூதாட்டத்தில் பணம் கட்டுவதைப் போல, மக்களைப் பணம் கட்ட வைக்கின்றனர். ஒரு கட்டத்துக்குப் பிறகு, பணம் வருவதற்கான வங்கிக் கணக்கின் ஐ.டி-யை லாக் செய்து மொத்தப் பணத்தையும் சுருட்டிவிடுகிறார்கள். இதேபோல, சில ஆண்டுகளுக்கு முன்பு ஆர்.எம்.டபிள்யூ.சி மற்றும் ஏ.சி.எஸ் என்ற நிறுவனங்கள் பணம் கட்டினால் இரட்டிப்புப் பணம் தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றிவிட்டு காணாமல் போய்விட்டன.

பிரைட் வே நிறுவனத்தில் பணம் போட்டவர்களுக்கு அந்த நிறுவனம் எந்த ஆவணத்தையும் தருவதில்லை. மொபைல் ஆப் மூலம் ஐடி உருவாக்கி அந்தக் குழுவில் பணம் கட்டியவர்களை இணைக்கின்றனர். இதில் மொத்தம் எட்டு வகையான திட்டங்கள் இருப்பதாகக் கூறுகின்றனர். ஒரு நபர் குறைந்தபட்சம் ரூ.3,000 முதல் ரூ.4.80 லட்சம் வரை பணம் கட்டலாம். ரூ.3,000 கட்டினால் 150 நாள்களுக்கு 45 ரூபாய் தினமும் தருவதாகக் கூறுகிறார்கள். அதேபோல தொகை அதிகமாகக் கட்டினால் தினமும் 7,200 ரூபாய் வரை தருவாகக் கூறுகிறார்கள்.

சகாயராணி
சகாயராணி

இந்த நிறுவனத்துக்கு தெலங்கானா, கர்நாடகாவில் அலுவலகங்கள் இருப்பதாகவும், இந்த நிறுவனத்தினர் பள்ளி, கல்லூரி, ரியல் எஸ்டேட், சாஃப்ட்வேர் டெவலப்பிங், ஏற்றுமதி, இறக்குமதி என மொத்தம் 10 தொழில்களில் ஈடுபட்டுள்ளதாகவும் அதன்மூலம் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சரியான முறையில் பணத்தைத் தருவதாகவும் கூறுகின்றனர்.

இதை நம்பியே திண்டுக்கல்லில் மட்டுமே கட்டட வேலைக்கு செல்லும் மக்கள் தொடங்கி, ஆசிரியர்கள், போலீஸார் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் வரை பல லட்ச ரூபாயை இந்த நிறுவனத்தில் போடுகின்றனர். அவ்வப்போது கூட்டம் போட்டு மக்களை ஏமாற்றுகின்றனர். கடந்த மாதம்கூட நிலக்கோட்டையில் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் ரூ.4.80 லட்சம் போட்டவர்களை கோவா டூர், ரூ.2 லட்சம் போட்டவர்களை ஊட்டி டூர்க்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

நான் இந்த நிறுவனத்தில் ரூ.20,000 பணம் கட்டினேன். சில நாள்களுக்கு மட்டுமே தினமும் ரூ.300 வட்டி தந்தார்கள். அதன் பிறகு, பணம் கிடைக்கவில்லை. என்னை இத்திட்டத்தில் இணைத்த சக்திவேல் என்பவரிடம் இது பற்றிக் கேட்டேன். `தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக இந்த நிறுவனம் எவ்வித பிரச்னையின்றி நடக்கிறது. உங்களுடைய ஐடி லாக் ஆகியிருக்கிறது. விரைவில் அதைச் சரிசெய்துவிடலாம்’ என்றார்.

இதேபோல டச் மொபைல் போன்கள் பயன்படுத்தத் தெரியாத மூத்த குடிமக்கள், படிக்காத ஏழைத் தொழிலாளர்களிடம் தாங்களே அவர்களின் கணக்குவழக்குகளைப் பார்த்துக் கொள்வதாகச் சொல்லி, பணத்தைச் சுருட்டிவருகின்றனர்.

ஏஜென்டுகள்
ஏஜென்டுகள்

இந்தத் திட்டத்தில் இணைவோருக்கு எவ்வித ஆவணங்களும் தருவதில்லை. ஆன்-லைன் ஆப் ஒன்று மட்டுமே ஆவணமாக உள்ளது. எத்தனை தொழில் செய்வோராக இருந்தாலும், டிரேடிங், சேர் மார்கெட்டில் ஈடுபட்டாலும் இவ்வாறு இரட்டிப்பு பணத்தை எத்தனை ஆயிரம் பேருக்குத் தர முடியும்? எனவேதான், இந்த நிறுவனம் பற்றி உடனடியாக கலெக்டர் விசாரித்து, மக்கள் கட்டிய பணத்தைத் திரும்பக் கட்டச் செய்வதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்தார்.

மக்களே... ஆகக்கூடி எச்சரிக்கை மணி அடித்திருக்கிறார் சகாயராணி. யார் எப்படி போனால் என்ன, நான் முதலில் பணம் கட்டியதால், என் வரையில் சரியாகத்தான் பணத்தைத் திருப்பிக் கொடுத்தார்கள் என்று சுயநலத்தோடு செயல்படக்கூடியவர்களுக்கு நடுவே, மேற்கொண்டு யாரும் ஏமாந்துவிடக்கூடாது என்று காவல்துறையை நாடியிருக்கிறார். இதேபோல மற்றவர்களும் உடனடியாக காவல்துறையிடம் புகார் செய்வதுதான் இப்போதைக்கு செய்யவேண்டிய முதல் வேலை.

கண்ணுக்கு முன்பாக இருந்துகொண்டே ஏகப்பட்ட தில்லாலங்கடி வேலைகளைச் செய்து, ஏகப்பட்ட கோடிகளைச் சுருட்டிய 'சதுரங்க வேட்டை' பார்ட்டிகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த டிஜிட்டல் யுகத்தில் கண்காணாத இடத்தில் இருந்துகொண்டே பல்லாயிரம் கோடிகளை ஸ்வாஹா செய்ய ஆரம்பித்துள்ளனர். நாம்தான் உஷாராக இருக்க வேண்டும்.

உஷார் மக்களே, உஷார்!