Published:Updated:

`ஐ.எஃப்.எஸ் ஃபிராடு பிரதர்ஸ்': லண்டனுக்குத் தப்பி ஓட்டம்?மக்கள் பணம் திரும்பக் கிடைக்குமா?

ஐ.எஃப்.எஸ் - லட்சுமி நாராயணன் சுந்தரம்

ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தை நடத்தி வந்த லட்சுமி நாராயணன் சுந்தரம், ஜனார்த்தனன், வேதநாராயணன் மற்றும் மோகன் ஆகியோர் குடும்ப சகிதமாக வேலூரில் இருந்து தப்பியோடிவிட்டார்கள்...

`ஐ.எஃப்.எஸ் ஃபிராடு பிரதர்ஸ்': லண்டனுக்குத் தப்பி ஓட்டம்?மக்கள் பணம் திரும்பக் கிடைக்குமா?

ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தை நடத்தி வந்த லட்சுமி நாராயணன் சுந்தரம், ஜனார்த்தனன், வேதநாராயணன் மற்றும் மோகன் ஆகியோர் குடும்ப சகிதமாக வேலூரில் இருந்து தப்பியோடிவிட்டார்கள்...

Published:Updated:
ஐ.எஃப்.எஸ் - லட்சுமி நாராயணன் சுந்தரம்

ஐ.எஃப்.எஸ் மோசடி குறித்த செய்திகள் மெள்ள மெள்ள வரத் தொடங்கி இருக்கிறது. காவல் துறையின் பொருளாதாரக் குற்றப் பிரிவு இப்போதுதான் ஒவ்வொரு ஏஜென்டாக விசாரணை செய்துவருகிறது. இவர்கள் யாரிடம் எல்லாம் பணம் வாங்கி இருக்கிறார்கள். அந்தப் பணத்தை யாரிடம் தந்தார்கள் என்பது பற்றி இப்போது கொஞ்சம் கொஞ்சம் விசாரிக்கத் தொடங்கி இருக்கிறது.

ரெய்டு செய்த போலீஸ்
ரெய்டு செய்த போலீஸ்

கண் துடைப்பு நடவடிக்கை...

ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தை நடத்திய லட்சுமி நாராயணன் சுந்தரம், ஜனார்த்தனன், வேத நாராயணன் மற்றும் மோகன் பாபு மீது முதல் தகவல் அறிக்கையை (FIR) உடனடியாகப் பதிவு செய்து, அந்த மோசடி நிறுவனம் பற்றி விசாரியுங்கள் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும், இதுவரை அப்படியொரு நடவடிக்கையைக் காவல்துறை எடுத்த மாதிரியே தெரியவில்லை.

``பொருளாதாரக் குற்றப் பிரிவின் ரெய்டு நடவடிக்கை காலம் கடந்த பின்பு எடுக்கப்பட்ட நடவடிக்கையாக இருக்கிறது. பணம் வாங்கித் தந்த ஏஜென்டுகளின் வீடுகளை ரெய்டு செய்து இப்போது என்ன பிரயோஜனம்? மக்களிடம் இருந்து வாங்கிய பணத்தை அவர்கள் ஐ.எஃப்.எஸ் நிர்வாகிகளிடம் தந்துவிட்டார்கள். கமிஷனாக வந்த பல கோடியை நிலம், பங்களா என்று வாங்கிவிட்டார்கள். இப்போது அவர்களைப் பிடித்து உலுக்கினால், ஒரு ரூபாய்கூட அவர்களிடம் இருந்து திரும்பக் கிடைக்காது. காவல் துறையின் இந்த விசாரணையே கண் துடைப்பு நடவடிக்கைதான்’’ என்று புலம்புகிறார்கள் பணத்தை இழந்தவர்களில் சிலர்.

``காஞ்சிபுரத்தைச் சேர்ந்த முக்கிய ஏஜென்டான மின்மினி சரவணனை முதலில் விசாரித்த காவல்துறை, இப்போது அவரின் முக்கிய நண்பரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்திருக்கிறது. வேலூரைச் சேர்ந்த இன்னொரு முக்கியமான ஏஜென்டான ஜெகந்நாதனை காவல்துறை விசாரித்து வருகிறது. சில நாள்கள் முன்பு வரை இவரும் யாரும் தொடர்புகொள்ள முடியாத நிலையில்தான் இருந்தார். ஆனால், இப்போது காவல்துறையின் விசாரணைக்குள் வந்திருக்கிறார். அதே போல, செல்வம் என்றழைக்கப்படும் செல்லமுத்து என்கிற ஏஜென்ட் சென்னை கோயம்பேட்டில் அலுவலகம் வைத்திருக்கிறார். ஆனால், திருச்சி, கோவை ஆகிய நகரங்களில் இவர்தான் பல நூறு கோடிகளை வசூல் செய்து தந்திருக்கிறார்.

லண்டனுக்குத் தப்பியோடி விட்டார்களா?

இப்படி பல நூறு ஏஜென்டுகளை இப்போது தலைகீழாக வைத்து விசாரித்தாலும் யாரிடம் இருந்து பெரிய தொகை எதையும் திரும்பப் பெற முடியாது. இந்த நிலையில், இந்த நிறுவனத்தில் பணம் போட்டவர்கள் யாருக்கும் எந்தப் பணமும் கிடைக்க வாய்ப்பே இல்லை’’ என்று அடித்துச் சொல்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.

ஐ.எஃப்.எஸ் சகோதரர்கள்
ஐ.எஃப்.எஸ் சகோதரர்கள்

இந்த நிலையில், ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தை நடத்திவந்த லட்சுமி நாராயணன் சுந்தரம், ஜனார்த்தனன், வேதநாராயணன் மற்றும் மோகன் ஆகியோர் குடும்ப சகிதமாக வேலூரில் இருந்து தப்பியோடிவிட்டார்கள். கடந்த மாதம் 25-ம் தேதி வரை இவர்கள் வேலூரில்தான் இருந்திருக்கின்றனர். ஜூன் இறுதி வாரத்திலிருந்தே இந்த நிறுவனம் பற்றி ஜூனியர் விகடனிலும், நாணயம் விகடனிலும் தொடர்ந்து கட்டுரைகள் வரத் தொடங்கின.

இதைப் பார்த்த மக்கள் பணத்தைத் திரும்பத் தரும்படி கேட்கத் தொடங்கினார்கள். இதனால் திகைத்துப்போன ஐ.எஃப்.எஸ் பிரதர்ஸ், `இனி இங்கிருந்தால் மாட்டிக்கொண்டுவிடுவோம்; பேசாமல் தப்பியோடிவிடலாம்’ என்று முடிவு செய்தனர். விஜய் மல்லையா, நீரவ் மோடி தப்பியோடியதைப்போல, நாமும் வெளிநாட்டுக்குத் தப்பியோடுவதுதான் மிகச் சிறந்த வழி’ என்று முடிவு செய்தனர்.

ரூ.9,000 கோடி ஹவாலா மூலம் வெளிநாட்டுக்குப் போனதா?

ஐ.எஃப்.எஸ் பிரதர்களுக்கு இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நல்ல தொடர்பு இருப்பதால், அங்கு தப்பிச் செல்ல முடியுமா என்பது குறித்து விசாரித்துள்ளனர். இதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்த பின்பு, அவர்கள் இங்கிலாந்துக்கு தப்பியோடி இருக்கலாம் என்று சொல்கிறார்கள் சிலர்.

இன்னும் சிலர், ஐ.எஃப்.எஸ் பிரதர்ஸ் சிங்கப்பூருக்குத் தப்பியோடி இருக்கலாம் என்கிறார்கள். இவர்கள் இந்தியாவில் இருக்கிறார்களா அல்லது வெளிநாட்டுக்குத் தப்பியோடி விட்டார்களா என்பது பற்றி எல்லாம் விசாரிக்காமல், ஏஜென்டுகளை மட்டும் தோண்டித் துருவிக்கொண்டிருக்கிறது காவல்துறை.

ஹவாலா பணம்
ஹவாலா பணம்

ஐ.எஃப்.எஸ் பிரதர்ஸ் தலைமறைவாவதற்கு முன்பு ரூ.9,000 கோடி ஹவாலா மூலம் இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வலம் வருகிறது. இது மட்டும் உண்மையான தகவலாக இருக்கும்பட்சத்தில் இது மிகப் பெரிய குற்றமாக இருக்கும். அந்த நிலையில், மத்திய உளவுப்பிரிவுதான் இதை விசாரிக்கத் தொடங்கும். அப்போது இன்னும் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி, பல அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரத்தில் இருக்கும் உயரதிகாரிகளின் முகத்திரை கிழியும் என்கிறார்கள் சிலர்.

காத்திருப்போம்!